செய்யு - 236
பள்ளியோடம் விட்டு வந்த அன்னைக்கு சாயந்தரமே
விசயம் கேள்விப்பட்டு சுப்பு வாத்தியார் டீத்தண்ணிய கூட குடிக்காம எதாச்சிம் பண்ணணுமேன்னு
வீயெம் மாமா வீட்டுக்குப் போறாரு.
சாமியாத்தா கூடத்துல ஒரு மூலையில குந்தியிருக்கு.
கோகிலா மாமி அடுப்படியில ஏதோ ஒரு வேலையா இருக்கு. வீயெம் மாமா கொல்லையில வெறக அள்ளிப்
போட்டு வேலைய பாத்துட்டு இருக்கு. சாமியாத்தா சுப்பு வாத்தியார பார்த்ததும் எழுந்திரிச்சி
வந்து "வாங்க! வாங்க!" அப்பிடிங்குது. உள்ள ஓடிப் போய், "வெங்கு வூட்டுக்காரரு
வந்திருக்காரு!" அப்பிடிங்குது.
"இத்தினி நாளா வூட்டுப்பக்கம் வாராம
இன்னிக்கு ன்னா வர வேண்டிக் கெடக்கு? கல்யாணத்தப்ப மண்டபத்தோடு போனவங்க! இருக்கோமா,
செத்தோமான்னு வந்துப் பாக்காதவங்களுக்கெல்லாம் இப்போ ன்னா வந்து பாக்க தோணியிருக்கு?"
அப்பிடிங்குது கோகிலா மாமி. இதெ மெதுவா கூட சொல்லல கோகிலா மாமி. கூடத்துல வந்து
நிக்குற சுப்பு வாத்தியாரு காதுல சங்க வெச்சு ஊதுனா எப்படிக் கேட்குமோ, அப்படிக் கேட்குறது
போல பேசுது.
வீயெம் மாமா மட்டும் அள்ளிப் போட்டுகிட்டு
இருந்த வெறக அப்படியே போட்டுட்டு ஓடி வருது. உள்ள ஓடி வந்து, "வாங்க அத்தாம்!"
அப்பிடிங்குது. ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலிய எடுத்துப் போட்டு, "உட்காருங்க அத்தாம்!"
அப்பிடிங்குது.
"கோகிலா! அத்தாம் வந்திருக்காங்க!
டீத்தண்ணிப் போடு!" அப்பிடிங்குது வீயெம் மாமா.
"அதல்லாம் அவங்க வூட்டுல போட்டு
ந்நல்லா குடிச்சிப்புட்டுத்தாம் வந்துருப்பாங்க. இஞ்ஞ டீத்தண்ணிப் போடுறதுக்கு பாலு
இருக்கா? டீத்தூளுதாம் இருக்கா? வந்தா வெசயம் ன்னான்னு கேட்டுப்புட்டு வெளில அனுப்புறீங்களா?
ச்சும்மா டீத்தண்ணிய போடு, காப்பித் தண்ணிய போடுன்னா ன்னா அர்த்தம்? இஞ்ஞ ன்னா சும்மாவா
கெடக்கேம்? கைவேலையா கெடக்கேம். யாரு வந்து எம்மட வேலையப் பாக்குறா? எல்லாம் நாந்தேம்
பாக்க வேண்டிக் கெடக்கு. வேல பாத்து வேல பாத்து ஒடம்பெல்லாம் முறியுது. இஞ்ஞ நமக்கு
ஒரு வாயி டீத்தண்ணிப் போட்டுக் கொடுக்க யாரு இருக்கா சொல்லுங்க!" அப்பிடிங்குது
கோகிலா மாமி.
இதெ கேக்குற வீயெம் மாமாவுக்கே ஒரு மாதிரியாப்
போவுது. "கல்யாணத்துக்குப் பெறவு யாரும் வந்து பாக்கலங்ற கோபத்துல பேசுறா அத்தாம்.
நீஞ்ஞ மனசுல ஏதும் வெச்சுக்காதீங்க அத்தாம்!" அப்பிடிங்குது வீயெம் மாமா.
"நம்மள ன்னா வேணா பேசட்டும். எப்படி
வாணா நடத்தட்டும். பரவாயில்ல. பெத்தவங்கள ந்நல்ல வெதமா பாத்துக்கணும். அதாங் வேணும்."
அப்பிடிங்றாரு சுப்பு வாத்தியாரு.
"ஓ! பஞ்சாயத்துப் பண்ண வந்திருக்காரோ!
அதான்னே பாத்தேம்! யாரோட குடுமியும் சும்மா ஆடாதுன்னுல்ல சொல்லுவாங்க! அத்து உண்மையாத்தாம்
இருக்கு. இந்த விடியாமூஞ்சு சூத்த சூத்த ஆட்டிகிட்டு வாத்து கணக்கா கெளம்பிப் போனப்பவே
நெனச்சேம். ஆள வாரச் சொல்லி ஞாயம் வைக்கத்தாம் போவுதுன்னு. அத்து மாதிரில்ல அப்படியே
நடக்குது. இத்து எஞ்ஞ வூடு. இஞ்ஞ யாரும் ஞாயம் வைக்க வாணாம்." அப்பிடிங்குது கோகிலா
மாமி.
"இந்தா சித்தே சும்மாயிரு! நையி நையின்னுகிட்டு!"
வீயெம் மாமா கோபமாய்க் குரல விடுது.
"இதுக்கொண்ணும் கொறச்சலு இல்ல.
ஞாயம் வைக்க வர்றாரே! ஞாயம் தெரிஞ்சுத்தான்னே வாராரு? ஆயோ, அப்பனோ ஆரு வூட்டுல இருக்கணும்?
மூத்தவங் வூட்டுலத்தான்னே? அந்த வூட்டுல ஒரு கொழந்த குட்டிக இருக்கா? பொறந்தவுடனே
அப்பங் வூட்டுல கொண்டு போயி விட்டுப்புட்டு ஜாலியா கெடக்காக. அஞ்ஞ ரண்டு பேருதானே.
அஞ்ஞ இத்தே வெச்சிகிட்டா ன்னா? ஞாயம் வைக்க வர்றவரு மொதல்ல அதெ ஞாயம் வெச்சிட்டு வந்தா
அவரு காலக் கழுவி அந்தத் தண்ணிய நாம்ம குடிப்பேம். இத்து ன்னா இந்த வூட்டுக்கு ஒரு
ஞாயம், அந்த வூட்டுக்கு ஒரு ஞாயம்ன்னு அநியாயம் வைக்க வந்தவருக்கு ன்னா மருவாதி வேண்டிக்
கெடக்கு? இத்து நம்மட வூட்டு சமாச்சாரம். இதுக்கு வெளியிலேந்து வந்து யாரும் எந்த ஞாயமும்
வைக்க வாணாம். மருவாதிய்யா சொன்னா புரிஞ்சிக்கணும். இதுக்கும் மேல ஞாயம் வெக்கிறேம்னு
நின்னா மருவாதிக் கெட்டுப்புடும். பெறவு நாம்ம பொம்பளயாவே இருக்க மாட்டேம். பின்னாடி
நம்மாள அது கெட்டுச்சின்னு, இது கெட்டுச்சின்னு சொன்னா நல்லா இருக்காது பாத்துக்கோங்க!"
அப்பிடிங்குது கோகிலா மாமி.
"நாம்ம சண்டையெல்லாம் வளக்க வரல்லம்பீ!
பெத்தவங்க! நல்ல வெதமா வெச்சிப் பாத்துக்குங்க. ஊரு சிரிக்குற மாதிரி நடந்துக்க வேணாம்பீ!
அதெச் சொல்லத்தாம் வந்தேம்!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு பவ்வியமா.
"ஆரு நாம்ம சண்டெ வளக்குறோம்மா?
நாங்க நல்ல வெதமா வெச்சிப் பாத்துக்கிலையாம்மா? ஆரு ஊரு சிரிக்குற மாதிரி நடந்துக்குறா?
ஓம் வூட்டு சங்கதிதாம்ய்யா இப்போ ஊரே சிரிச்சிக் கெடக்கு. என்னெம்மோ பெரிய இத்து
மாரில்ல பேசுறாரு. இத்து எஞ்ஞ குடும்ப வெவகாரம். அப்படி பெரிய இத்துன்னா நீஞ்ஞ மருமவ்வேம்தான்னே.
கொண்டு போயி வெச்சுக்கோ. ஆரு கேக்கப் போறா? வுட்டேம் வுட்டேம் பாத்துக்கோ. இனுமே
இந்த மாரி பேசிகிட்டு வூட்டுப் பக்கம் வர்ற வேலெ வெச்சிக்க கூடாது." அப்பிடிங்குது
கோகிலா மாமி.
சுப்பு வாத்தியாருக்கு இதுக்கு மேல ப்ளாஸ்டிக்
நாற்காலியில உக்கார முடியல. எழுந்திரிச்சிடறாரு.
"அவங்கள அஞ்ஞ வூட்டுல தங்க எவ்வளவோ
சொல்லிப் பாத்தாச்சி. அவுங்க என்னவோ மகன் வூட்டுல தங்குனாத்தாம் கெளவரம் அது இதுன்னு
வறட்டுக் கெளரவமா இருக்காங்க. காலம் போன கடசியில அவங்கள நல்ல வெதமா வெச்சிக்க வேண்டியது
நம்ம பொறுப்புத்தாம். அதுக்கு ன்னா பண்ணலாம் சொல்லுங்க!" அப்பிடிங்றார் சுப்பு
வாத்தியாரு.
"ஒண்ணும் பண்ண வாணாம். போய்யா மொதல்ல
வெளியே. போயி பக்கத்துல வூடு இருக்கே. அஞ்ஞப் போயி கேளுய்யா. சோறு போட்டா தின்னுபுட்டுக்
கெடக்குறத வுட்டப்புட்டு இத்து ஊரு ஊரா போயி அலயுமாம். அதெ கேட்டுட்டு அதெ கேக்குறதுக்கு
இப்படிக் கிளம்பி வருவாங்களாம்!" அப்பிடிங்குது இப்போ ஆக்ரோஷமாய் கோகிலா மாமி.
"ன்னாடி பேச்சுத் தடிக்குது. நானும்
பாக்குறேம். அந்த மனுஷம் வந்ததிலேந்து ன்னம்மோ வூங்க வூட்டு வேலக்காரம் மாரி அவ்வேம்,
இவ்வேம், வாய்யா போய்யா அப்பிடி இப்பிடிங்றே! ஏம்டா நீயி ஆம்பளப் பயதான்னே இதெல்லாம்
கேக்க மாட்டே? நாமளே அவரு முன்னாடி நிக்க மாட்டேம், பேச மாட்டேம். ஒம் பொண்டாட்டி
ன்னடா இப்பிடிப் பேசுறா? அதெ கேட்டுகிட்டு நீயும் நிக்குறே? ஒனக்கு அத்தாம்தானடா! அவரு
வூட்டுல போயி எத்தன நாளு கெடந்துருக்குறே! சோத்தத் தின்னுருக்குறே! இப்போ அவரெப்
பத்தி இப்பிடி பேச வுட்டுப்புட்டு கேட்டுகிட்டு நிக்குறீயேடா?" அப்பிடிங்குது
சாமியாத்தா. அப்பிடிப் பேசுறப்போ அதோட குரலு எல்லாம் நடுங்குது.
"பாத்தீங்களா! இந்தக் கெழட்டு மூதிக்கு
எம்மாம் கொழுப்புன்னு? எங் கையால சோத்தா வாங்கிச் சாப்புட்டுப்புட்டு எங் கண்ணுலயே
குத்துது? இதுக்குல்லாம் சோத்த போட்டா ன்னா? போடாட்டியும் ன்னா?" அப்பிடிங்குது
கோகிலா மாமி.
"அத்தாம்! இஞ்ஞ பேசுன்னா சரிபட்டு
வாராது. வாங்க ரோட்டுப்பக்கமா போவேம்!" அப்பிடின்னு சுப்பு வாத்தியார்ர கெளப்பிக்கிட்டு
வெளியில வருது வீயெம் மாமா. அப்படிக் கெளப்பிக்கிட்டு வந்ததும் வராதுமா, "எனக்கொண்ணும்
இல்ல அத்தாம்! மூத்தவனயும் ஒரு வார்த்த கேளுங்க. நீஞ்ஞ ன்னா முடிவு பண்ணாலும் ஒத்துக்கிறேம்.
எம்மட வூட்டுக்காரிப் பேசுனதயெல்லாம் மனசுல வைச்சுக்காதீங்க. இந்தக் காலத்து பொம்பளைகளே
அப்படித்தாம் ஒண்ணுகெடக்க ஒண்ணு பேசுறாளுங்க. ஒண்ணும் கன்ட்ரோல் ஆவ மாட்டேங்றாளுங்க.
ஒண்ணும் பண்ண முடியல. எதாச்சிம் சொன்னாக்கா மூஞ்சிய தூக்கி வெச்சிகிட்டு ஒரு மாதிரியா
பண்ணுறாளுங்க!" அப்பிடிங்குது வீயெம் மாமா சுப்பு வாத்தியார்கிட்ட.
வீயெம் மாமா சொன்ன அண்ணங்காரனான மூத்தவன்
வூடு பத்து பர்லாங்கு தூரமா இருக்கு என்ன? இத்தோ பக்கத்துலத்தான்னே இருக்கு. அதுவுஞ்
சரிதான்னு வீயெம் மாமாவ அங்கயே நிறுத்தி வெச்சப்புட்டு சுப்பு வாத்தியாரு குமரு மாமா
வூட்டுப்பக்கம் போறாரு. வெளியில கிரிலு கேட்டுப் போட்டு உள்ளாக்கப் பூட்டிக் கெடக்கு.
அதுக்குள்ளார திண்ணைக்கு அப்புறம் நிலைக் கதவு. அதுவும் பூட்டிக் கெடக்கு. உள்ளேயிருந்து சாவிய போட்டு பூட்டத் தொறந்தாத்தாம்
ஆளு உள்ள போவ முடியும். சுப்பு வாத்தியாரு வெளியில இருக்குற காலிங் பெல்லை அழுத்துறாரு.
உள்ள சத்தம் கேட்குற சத்தம் நல்லா வெளியில கேட்குது. ஆனா உள்ளேயிருந்து யாரும் வரக்
காணும். மறுபடியும் காலிங் பெல்ல அழுத்திகிட்டு உள்ளேயிருந்து யாராவது வருவாங்களான்னு
பாத்துகிட்டு கெடக்குறாரு சுப்பு வாத்தியாரு. அவரு காத்துக் கெடக்குறது இலவு காத்த
கிளி கணக்கா இருக்கு. மறுபடியும் காலிங் பெல்ல அழுத்த அழுத்த சத்தம் வந்து வந்து அமைதி
மரண அமைதியா போயிகிட்டே இருக்கு.
இனுமே காலிங் பெல்லாம் சரிபட்டு வாராதுன்னு,
"குமரு தம்பீ! குமரு தம்பீ! அத்தாம் வந்திருக்கேம்!" ன்னு சத்தமா குரலு கொடுத்துப்
பாக்குறாரு சுப்பு வாத்தியாரு. ஒண்ணும் அசமடங்குறது மாதிரி தெரியல. குரல உசத்திப் பாக்குறாரு
சுப்பு வாத்தியாரு. ம்ஹூம் அதுக்கும் ஒண்ணும் அசைஞ்சுக் கொடுக்குறதா தெரியல. எட்டு
ஊருக்குக் கேக்குற கணக்கா இப்போ இன்னும் சத்தமா குரலு கொடுக்குறாரு சுப்பு வாத்தியாரு.
அந்தக் குரலு எட்டு ஊரத் தாண்டியும் பத்து ஊருக்கும் கேட்குது. ஆனா வூட்டக்குள்ள இருக்குற
சனங்களுக்கு மட்டும் கேக்க மாட்டேங்குது.
சத்தம் போட்டுகிட்டே உள்ளார பூட்டியிருக்குற
கிரிலு கேட்ட இப்படியுமா அப்படியுமா ஆட்டுறாரு சுப்பு வாத்தியாரு. அதுலேந்து வேற இப்ப
சத்தம் வருது சரக் சரக்குன்னு.
இப்பத்தாம் வூட்டுல இருக்குறவங்களுக்கு
காது கேட்டிருக்கும் போலருக்கு. "அவுங்க இல்லீயே! உள்ள வேலையா இருக்கேம். போயிட்டு
பெறவு வாங்க!" அப்பிடின்னு உள்ளேயிருந்து குரலு வருது. அது மேகலா மாமியோட குரலுதாம்.
வெளியில வந்து கூட பதிலு சொல்லக் கூடாதுன்னு அது அப்படி சொல்லுது. சுப்பு வாத்தியாரு
வெறுத்துப் போறாரு. "தம்பீய கொஞ்சம் பாத்துப் பேசணும்!" அப்பிடிங்றாரு
சுப்பு வாத்தியாரு.
"அவுங்க இஞ்ஞ இல்ல. பட்டறையிலேந்து
இன்னும் வாரல! ச்சும்மா தொந்தரவு பண்ணாம கெளம்புங்க!" அப்பிடிங்குது மேகலா மாமி
முகத்த வெளியில காட்டாம, கதவ வந்து தொறந்து விடாம.
இதுக்கு மேல அங்க நிக்குறதுல்ல பிரயோஜனம்
இல்லேன்னு சுப்பு வாத்தியாரு கெளம்புறாரு. இதெ பாத்துட்டு வீயெம் மாமா, "செரி
அத்தாம்! நீங்க அவனெ கலந்துகிட்டுச் சொல்லுங்க. எத்தா இருந்தாலும் நாம்ம பக்கம் ஓ.கே.த்தாம்!"
அப்பிடிங்குது.
"சரம்பீ! பெரியம்பி பட்டறையிலத்தாம்
இருக்காம். இஞ்ஞ பேசுறத விட அஞ்ஞ பேசுறதுக்கும் தோதுபடும். நாம்ம கெளம்புறோம்பீ!"
அப்பிடின்னு சொல்லிட்டு டிவியெஸ்ஸைக் கெளப்பிகிட்டுக் குமரு மாமாவோட பட்டறைக்குப்
போறாரு சுப்பு வாத்தியாரு. அங்கப் போனாக்க பட்டறைப் பூட்டிக் கெடக்கு. அக்கம் பக்கத்துல
விசாரிச்சா, அரை மணி நேரத்துக்கு மின்னாடித்தாம் பட்டறையப் பூட்டிட்டு குமரு மாமா வூட்டுக்குப்
போனதா சொல்றாங்க. சுப்பு வாத்தியாருக்கு இதெ கேட்க கேட்க கோபமா வருது. கோபப்பட்டு
என்ன பிரயோஜனம் சொல்லுங்க!
பெத்தவங்க புள்ளைங்களுக்கு எவ்வளவோ விசயங்களைக்
கத்துக் கொடுக்குறாங்க. ஆயிரம் விசயங்கள கத்துக் கொடுத்தா என்னா? அந்தப் புள்ளைங்களுக்கு
பெத்தவங்கள வெச்சிக் காப்பாத்தணுங்ற விசயத்த மட்டும் அவங்களால கத்துக் கொடுக்க முடியாம
போயிடுது.
பொதுவா ஆம்பளப் புள்ளைங்க அப்பா, அம்மாவை
வெச்சி காப்பாத்துறது இல்ல. அதுக்குப் பதிலா மாமனாரு, மாமியார வெச்சிக் காப்பாத்துதுங்க.
அதே போல பொதுவா பொம்பளப் புள்ளைங்க மாமனாரு மாமியார வெச்சிக் காப்பபாத்துறதில்ல.
அதுக்குப் பதிலா அப்பா, அம்மாவ வெச்சிக் காப்பாத்துதுங்க. இந்த ஆம்பளப் பிள்ளைங்க அப்பா,
அம்மாவ மாமனாரு, மாமியாருன்னு நெனச்சிட்டா - பொம்பள புள்ளைங்க மாமனாரு, மாமியார அப்பா,
அம்மாவ நெனச்சிட்டா இந்தப் பிரச்சனை தீர்ந்துடுச்சி. உலகத்துப் பிரச்சனைங்க அப்படிச்
சுலுவா தீருற சங்கதிகளா? அதாலே புள்ளைங்கள பெக்குறவங்க ஆம்பள புள்ள ஒண்ணையும், பொம்பள
புள்ள ஒண்ணையும் பெத்துத் தொலைச்சிக்கிறது நல்லது. ஆம்பள புள்ளைங்க மாமனாரு மாமியார
காப்பாத்தவும், பொம்பள பிள்ளைங்க பெத்தவங்கள காப்பாத்துறதுக்கும்ன்னு இப்படி ரெண்டா
பெத்துக்குறதுதாங் நல்லது போலருக்கு.
சாமியாத்தாவுக்கு ரெண்டே ரெண்டு ஆம்பளப்
புள்ளைங்கதாம். பொம்பளப் புள்ளைங்க அதப் போல மூணு மடங்கு. அதாவது ஆறு பொம்பளப் புள்ளைங்க.
ஒவ்வொண்ணும் தன்னோட வீட்டுக்கு வந்துடுன்னுத்தாம் சொல்லுதுங்க. அதுக்குன்னு ஒரு
மனக்கிறுக்கு சாமியாத்தாவுக்கு. ஆம்பளப் புள்ள வூட்டுல இருந்தாத்தாம் கெளரவம்ன்னு.
அந்த ரெண்டு ஆம்பளப் புள்ளைங்களும் கெளரவத்த காத்துல பறக்க விட்டதுக்கு அப்புறமும்
சாமியாத்தாவுக்கு அந்த மனக்கிறுக்கு அடங்காதுதாம் ஆச்சரியம். வயசாயிட்டாவே ஏதோ ஒரு
விசயத்துல ஒரு பிடிவாதம் வந்து மனசுல ஒட்டிக்கும் இல்லையா! சாமியாத்தாவுக்கு அப்படி
ஒரு பிடிவாதம் வந்து ஒட்டிக்கிச்சு மவ்வேன் வூட்டுலத்தாம் இருக்கணும்னு.
*****
No comments:
Post a Comment