காண்டம் ஆண்களுக்கானது. அதன் அட்டைப் பெட்டிகளின்
முகப்புகளில் பெண்களின் படங்கள். பேன்டியோடு, பிரசியரோடு இருக்கும் படங்கள். அது
இல்லாமல் இருக்கும் அட்டைப் பெட்டிப் படங்களும் இருக்கின்றன. பொதுவாக ஆண்களுக்கானப்
படங்களில் பெண்கள் இருக்கிறார்கள். பெண்களுக்கான படங்களில் பெண்களே இருக்கிறார்கள்.
ஆண்களுக்குப் பெண்களைப் பிடிக்கும். பெண்களுக்கு ஆண்களைப் பிடிக்காது போல.
திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து
பழைய பேருந்து நிலையச் சாலையில் நகர்ந்தால் காய்கறிக் கடைகள், பழக்கடைகள், இரும்புச்
சாமான்கள் விற்கும் கடை, பரிசுப் பொருட்கள் விற்கும் கடை, மளிகைக் கடைகள் இருக்கின்றன.
அவைகளுக்கு இடையே மெடிக்கல்ஸூம் இருக்கின்றது, பாயாசத்தில் தட்டுப்படும் முந்திரி,
திராட்சைகளைப் போல. உவமை நன்றாக இருக்கிறதா? கூட்டம் கசா முசா என்று இருக்கும். அங்கே
ஒரு கடையைப் பிடிக்கிறார் விகடு.
அங்கேயும் அதே வழக்கமான ஏ4 சீட்டு. எண்கள்
விட மாட்டேன்கிறது பாருங்கள். ஹஸ்கி வாய்ஸ். கடைக்காரர் / விற்பனை ஆள் நான்கு வகை பிராண்டுகளையாவது
எடுத்து வைக்கிறார்.
விகடு மறுபடியும் வாங்காமல் அங்கிருந்து
நகர ஆரம்பிக்கிறார்.
"சார்! உங்களுக்கு என்னதான் பிரச்சனை?
அதுக்கும் டேப்லேட் இருக்கு!" என்கிறார் கடைக்காரர் / விற்பனை ஆள் ஹஸ்கி வாய்ஸில்.
விகடு ஒரு நொடி நின்று திரும்பி கடையை
நோக்கி நகர்கிறார்.
காண்டம் பொக்கிஷங்களின் அட்டைப் பெட்டிகளின்
மேலிருக்கும் படங்களைச் சுட்டிக் காட்டி அதுதான் பிரச்சனை என்கிறார். அது என்ன படங்கள்
என்று அறிந்து கொள்வதற்கு நீங்கள் இந்த அத்தியாயத்தின் / கண்டத்தின் முதல் பத்தியைப்
படித்திருக்க வேண்டும். அதைப் படிக்காமல் இந்த அத்தியாயம் / கண்டத்தின் கடைசி பத்திக்கு
வந்திருந்தால் அவசியம் அதைப் படித்து விட்டு வந்து பின்தொடரவும். போன அத்தியாயம்
/ கண்டத்தைப் படித்திருப்பதும் பயனுள்ளது. ஒரு நாவலைத் தொடர்ச்சியாக வாசிக்க வேண்டியதன்
அவசியத்தை நீங்கள் இந்நேரம் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
கடைக்காரர் / விற்பனை ஆள் பொக்கிஷ அட்டைப்
பெட்டியிலிருந்து அத்தனை பொக்கிஷங்களையும் வெளியே எடுக்கிறார். அந்த அட்டைப் பெட்டியைக்
கசக்கி பக்கத்தில் இருக்கும் குப்பைத் தொட்டியில் கடாசுகிறார். கடாசலில் பெண்கள் காணாமல்
போகிறார்கள். பொக்கிஷங்கள் ஒவ்வொன்றையும் மாத்திரைகள் போட்டுக் கொடுக்கும் காக்கிக்
கலர் கவர் ஒன்றில் இருப்பதில் பெரிதாக ஒன்றை எடுத்து போட்டுக் கொடுக்கிறார். உறை
மேல் உறை. உறையிடையிட்ட காப்பு.
விகடு அதைப் பயபக்தியோடு வாங்கி சூட்கேஸைத்
திறந்து அதில் வைத்துக் கொள்கிறார்.
மன்னிக்கவும், விகடு சூட்கேஸ் எடுத்துப்
போன சங்கதியைச் சொல்ல மறந்து விட்டேன். மறந்ததும் நல்லதாகப் போய் விட்டது. இல்லையென்றால்
அதை எடுத்துச் சென்றது, அதை வைத்துக் கொண்டது என்று அதற்கு ஒரு அத்தியாயம் / கண்டம்
எழுத வேண்டும். நாவலின் ஒரு அத்தியாயம் / கண்டம் தப்பித்தது. உங்களுக்கும் வாசிப்பதில்
ஒரு அத்தியாயம் / கண்டம் குறைந்தது.
*****
No comments:
Post a Comment