12 Oct 2019

வந்து கேக்க சொல்லு!



செய்யு - 235
            வடவாதியில புறப்பட்ட சாமியாத்தாவோட காலுக திட்டையில இருக்குற சுப்பு வாத்தியாரு வீட்டுல வந்து நிக்குது. இங்க வந்து புகார் சொன்னாக்க, "நீயி ஏம் அஞ்ஞ கெடந்து நாறிப் போறே? இஞ்ஞ வந்து கெட! அவனுங்ககிட்ட மனுசேம் பேச முடியுமா? அதுக்குன்னே வந்திருக்குங்களே ரெண்டு. அதுங்ககிட்ட வாயக் கொடுத்து வாயி மீள முடியுமா?" அப்பிடிங்குது வெங்கு.
            "ஏம்டியம்மா! வயசான காலத்துல புள்ள வூட்டுல இல்லாம, மருமகேன் வூட்டுல வந்து கெடக்குறேன்னே ஊருல நாலு பேரு நாக்குல நரம்பில்லாம பேசுனா நாம்ம எங்க போயி நாண்டுகிட்டுச் சாவுறது? அவனெ வந்து வூட்டுக்காரர வுட்டு ரண்டு வார்த்தை கேக்கச் சொல்லுவியா? அதெ விட்டுப்புட்டு இஞ்ஞ வா, இஞ்ஞ வான்னா என்னாடி அர்த்தம்? நாம்ம மான மருவாதியோட வாழக் கூடாது, போயிச் சாவுன்னு சொல்றீயா?" அப்பிடிங்குது சாமியாத்தா.
            "ஏ யம்மா! ஒன்னயெல்லாம் திருத்தவே முடியாதா? எந்தக் காலத்துல இருக்குறே நீயி? ஒம்மட மருமவ்வேன் ஒன்னய ஒம் மவ்வேன விட நல்லா வெச்சித்தாம் பாத்துப்பாரு. பேயாம இஞ்ஞ கெட. அதாங் ஒனக்கு நல்லது. அவனுங்ககிட்ட எம்மட வூட்டுக்கார அனுப்பி அசிங்கப்பட வைக்க நம்மால முடியா பாத்துக்கோ!" அப்பிடிங்குது வெங்கு.
            "கெளரவத்தோட இருக்கணும்னு நெனைக்கிறேம்! அவ்வளவுதாம் சொல்லுவேம்! நீயி அவர வாரச் சொல்லு. வந்துப் பேசச் சொல்லு. பெத்த பொண்ணுகள்ல நீதாங் பக்கத்துல இருக்கே. மித்த எல்லாம் காரு ஏறி பாக்குற தூரத்துல கெடக்குதுங்க. அதாங் நீயும் ஒம்மட வூட்டுக்காரரும் வந்து பாப்பீங்க, கேட்பீங்கன்னு ஓடி வார்ரேம். ஒண்ணு தெரிஞ்சுக்க அவனுங்க நம்மள கொன்னே போட்டாலும் அஞ்ஞதாங் கெடந்து சாவேன்னே தவிர உசுருக்காக வந்து ஒம்மட வூட்டுல வந்து கெடப்பேன்னு நெனைச்சிப்புடாதே. எப்படிக் குடும்பத்துல இருக்கணும்னு நமக்குத் தெரியும். அதெ நீயி நமக்குச் சொல்லித் தாராதே ஆயி!" அப்பிடின்னு சுருக்குன்னு கோபம் வந்த கணக்காப் பேசுது சாமியாத்தா. பேசிப்புட்டு கண்ணுல தண்ணி பொல பொலன்னு கொட்டுற அளவுக்கு அழுவது. "என்னம்மோ நாம்ம வாங்கி வந்த வரம்! ஒங்க அப்பனுக்கு முன்னாடி நாம்ம போயிச் சேரக் கூடாது? பூவும் பொட்டுமா போயிச் சேந்திருப்பேம். அவரு மவராசம்டி. நமக்கு முன்னாடிப் போயிச் சேந்துட்டாரு. இதெல்லாம் பாக்கக் கூடாதுன்னு தெரிஞ்சிக் கெடக்கு. ஒங்க அப்பன் வரம் வாங்கி வந்தவருடி. இருந்த வரைக்கும் ராசா கணக்கா இருந்தாரு. செத்தும் ராசா கணக்காப் போனாரு. நமக்கு அந்த கொடுப்பினை இல்லையே. மேலே போயிக் கெடக்குற ராசா! நம்மட நெல தெரியுதா? நம்மள பாக்குறீங்களா? நம்மள இப்படி விட்டுப்புட்டு போயிட்டீயேள்ளே! விட்டுப்புட்டுப் போயிட்டீயேள்ளே!" ஒப்பாரி வைக்கவே ஆரம்பிச்சிட்டு சாமியாத்தா. வெங்குவுக்கு என்ன சொல்லித் தேத்துறதுன்னு புரியாம நிக்குது.
            "இந்த யம்மா! நிறுத்தித் தொல. நாம்ம பள்ளியோடம் விட்டு வந்ததும் அவர வாரச் சொல்றேம்! அழுவாதே. சித்தே குந்து. ஒரு வாயி டீத்தண்ணி போட்டுத் தர்றேம்!" அப்பிடிங்குது வெங்கு.
            "வந்து எங் கதெயையே பேசிட்டு இருக்கேன்னே! ஒம் வூட்டுக் கதைய ஒண்ணாவது கேட்டேன்னா? எந் நெலம இப்படி இருக்கே! ஒம் மவ்வேன் எப்படி இருக்காம்? நாம்ம கும்புடுற பொன்னியம்மா அவனுக்கு நல்ல புத்திய கொடுத்திருக்காளா? மவ்வே எப்படி இருக்கா? ஆளாயி நிக்குறாளே! நக நெட்டுச் சேத்துட்டு இருக்கீயா? என்னாடியம்மா பண்ணிட்டு இருக்கே?" அப்பிடிங்குது வெங்கு.
            "இந்தா! மொதல்ல இந்த ராகம் போட்டு அழுதுட்டே கேக்குறத நிறுத்து! இப்ப என்னாச்சி? எல்லாம் நல்லாத்தாம் கெடக்குங்க. இந்தப் பயலுக்கும் அவருக்கும்த்தாம் ஒத்துக்க மாட்டேங்குது. இவ்வேம் என்னம்மோ வேலைக்கிப் போறாம். அத்து நல்ல வேல இல்லேன்னு அவரு வேலைக்கிப் போகக் கூடாதுங்றாரு. இந்தப் பயெ வேலக்கிப் போவணும்னு ஒத்தக் கால்ல நின்னு போயிட்டு இருக்காம். ரெண்டும் பேசிக்கிறதில்ல. இத்து பாட்டுக்கு இத்து போவும். அத்து பாட்டுக்கு அத்துப் போவும். அதாங். மித்தபடி ஒண்ணுமில்ல." அப்பிடிங்குது.
            "ஏம்டி வூட்ட இப்படி பூசாம போட்டு வெச்சிருக்கே? வூட்டு வேலய முடிச்சித் தொலைடி. சாயுங்காலமா அவ்வேம் வந்தான்னா வாரச் சொல்றீயா? துன்னூரு அடிச்சி விடுறேம்! சரியாப் போயிடும்!" அப்பிடிங்குது சாமியாத்தா.
            "ம்! அடிச்சி விடு! அவ்வேம் திருப்பி ஒம் மூஞ்சில அடிச்சி வுடட்டும்! அவ்வேம் வேற சாமியில்ல, கத்திரிக்கா இல்லேன்னு வூட்ட ரண்டு பண்ணிகிட்டுக் கெடக்குறாம். நீயி துன்னூரு அடி! அதெ ஒம் மவ்வேனுங்க ரண்டு பேரு மூஞ்சில மொதல்ல அடிச்சி விடு. பொண்டாட்டிப் பித்து தெளிஞ்சித் தொலயட்டும். புள்ளைகளையா பெத்து வெச்சிருக்கே. ரண்டும் ரண்டு பிசுனாரிங்க, மொள்ளமாரிங்க. என்னத்த அள்ளிக் கட்டிட்டுப் போவப் போறானுவளோ? நாசமாத்தாம் போவப் போறானுவோ! வெளங்காம போவப் போறானுவளா இல்லையான்னு பாரு!" அப்பிடிங்குது வெங்கு.
            "ஏம்டியம்மா! கூடப் பொறந்தவ்வே நீயி! வவுறு எரிஞ்சு எதயும் சொல்லித் தொலயாதடி. பலிச்சிடப் போவுது. ஏத்தோ தெரியாம செஞ்சிகிட்டுக் கெடக்குறானுவோ. எடுத்துச் சொன்னா புரிஞ்சிக்கப் போறானுவோ!" அப்பிடிங்குது சாமியாத்தா.
            "பச்ச புள்ள பாரு! ஒண்ணும் தெரியாது! எடுத்துச் சொல்லணும் அதுகளுக்கு! என்னம்மோ போ! நீயி இப்படி இருக்குற வரைக்கும் ஒந் தலையில மொளகா அரைக்காமா வுட மாட்டேன்னுவோ! அவனுங்க அரைக்க அரைக்க இஞ்ஞ வந்து தலய எரியுது, கொடையுதுன்னு புலம்பு. நீதாங் ன்னா சென்மமோ? நீயி பெத்துப் போட்டுருக்கீயே அதுங்க ன்னா சென்மமோ?" இப்படிப் பேசிகிட்டே டீத்தண்ணிய லோட்டாவுல கொண்டு வந்து கொடுக்குது வெங்கு. அதெ எடுத்து நாலு மடக்குல குடிச்சி முடிக்குது சாமியாத்தா. குடிக்கும் போது மொடக் மொடக்குன்னு சத்தம் வேற வருது.
            "மெதுவாத்தாம் குடிச்சித் தொலயேம். டீயும் லோட்டாவும் எஞ்ஞ ஓடிப் போகப் போவுது?" அப்பிடிங்குது வெங்கு.
            "மனசே சரியில்லடிம்மா! படபடன்னு வருது. வேக வேகமா எண்ணங்களா போவுது. ஒண்ணும் கட்டுல நிக்க மாட்டேங்குது. ராத்திரி தூங்க முடியல, கனவு கனவா வருது. நம்மள சீக்கிரம் அழச்சிட்டுப் போயிடுய்யான்னு ஒங்கப்பாருகிட்டே அழுதுகிட்டே படுத்துக் கெடக்குறேம். ஊருல யாரு யாருக்கோ சாவு வருதே! நமக்கு ஒரு நல்ல சாவு வாராதா?" சொல்லிப்புட்டு லோட்டாவைப் படக்கென கீழே வைத்து விட்டு மூசு முசுன்னு மறுபடியும் அழ ஆரம்பிக்குது சாமியாத்தா.
            "அழுவாதே! சித்தே கிடந்து கண்ண மூடு. அரிசிய கலஞ்சு ஒலையில போட்ருக்கேம். சுடச்சுட ரவ்வ சாப்புடலாம்!" அப்பிடிங்குது வெங்கு.
            "டீத்தண்ணியே போதும்! மவ்வேன் வூட்ட வுட்டுப்புட்டு மவ்வே வூட்டுல கெடக்கணும்னு ஓடிட்டான்னு அஞ்ஞ பொரணி பேசிட்டுக் கெடப்பாளுங்க. நீயி அவரு வந்ததும் வாரச் சொல்லு. வந்து கேக்கச் சொல்லு. நாம்ம கெளம்புறேம். ஒம் மவ்வேம், மவ்வேகிட்டே எதுவுஞ் சொல்லிப்புடாதடி! ஒண்ணு கெடக்கு ஒண்ணு வந்து கேட்டுப்புடும்! பெறவு காரியம் கெட்டுப்புடும்!" அப்பிடிங்குது சாமியாத்தா.
            "இதுக்கு ஒண்ணும் கொறச்சலில்ல. ஒம்மட வகெ அப்படி. கீழே வுழுந்து மீசையில நரகல்ல அப்புனாலும் ஒண்ணுமில்லன்னு சொல்லுற ஆளுதானே நீயி. ஒட்டலேன்னு வார்த்தையில சொல்லலாம். நாத்தத்த ன்னா பண்ணுவே! அஞ்ஞ ஊரே சிரிச்சிப் போயிக் கெடக்காம். இதுக்கு நாட்டுல எதுவுமே நடக்கலன்னு நெனைப்பாம். நெனப்புத்தாம் பொழப்பக் கெடுக்குதாம்!" அப்பிடிங்குது வெங்கு.
            "ஒங்கிட்ட பேசி நமக்கு மாளாதுடியம்மா! நாம்ம கெளம்புறேம்!" என்று அது பாட்டுக்கு சாமியாத்தா எழுந்து ஒண்ணும் சொல்லாம கொள்ளாம கெளம்பிப் போயிட்டே இருக்கு.
            "போ! போ! எம் மவ்வனெ வுட்டு அவனுங்க ரண்டு பேரையும் ஒதைச்சாத்தாம் சரிபட்டு வருவானுங்க!" அப்பிடிங்குது வெங்கு.
            "எம்மாடி ஒனக்குக் கோடி கும்புடு. அவருகிட்ட சொல்லி வாரச் சொல்றதுன்னா வாரச் சொல்லு. இல்லேன்னா ஒண்ணும் வாணாம். நாம்ம அஞ்ஞயே அப்டியே கெடந்து சிக்கிச் சீரழிஞ்சுப் போறேம்!" வேகமா கெளம்பிப் போன சாமியாத்தா திரும்ப வந்து வெங்குவோட காதுகிட்ட சொல்லிட்டு மறுபடியும் திரும்ப வேக வேகமா அடி வெச்சு நங்கு நங்குன்னு போவுது. அந்த குட்டையான உருவம் விடுவிடுவெனப் போவதைப் பார்க்கும் போது வெங்குவுக்கு கண்ணுல தண்ணிக் கட்டிக்குது. "ஊரு சனங்களே சாமியம்மான்னோ, சாமியாத்தான்னோ எவ்வளவு மருவாதியாப் பாக்குது! பெத்த புள்ளைங்க ரண்டும் அப்படி நெனைக்கவே மாட்டேங்குங்களே!"ன்னு நெனச்சி மனசுக்கு ஆத்தாமையா போவுது வெங்குவுக்கு.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...