12 Oct 2019

3.02



            தேரோடும் திருவாரூரின் பேருந்து நிலைய வரிசைக் கடைகளில் ஐந்து மருந்து விற்பனைக் கடைகள் இருக்கின்றன. இப்போது கூட்டுறவு பண்ட சாலைக் கடை சார்பாக ஒரு மருந்தகக் கடை இருக்கிறது. பேருந்து நிலையத்துக்கு வெளியே லாட்ஜூகள் மாடியில் இருக்கும் கட்டடங்களுக்குக் கீழே கட்டாயம் ஒரு மருந்தகக் கடை இருக்கிறது.
            வரிசையாக ஒவ்வொரு கடையாக பார்த்துக் கொண்டே வர வேண்டியிருக்கிறது விகடுவுக்கு. எல்லா கடைகளிலும் கட்டாயம் ஒரு பெண் இருக்கிறார். பெண்களுக்கு அதில் ஒரு செளகரியம் இருக்கிறது. சானிட்டரி நாப்கினைக் கூச்சமில்லாமல் கேட்டு வாங்கி விடலாம்.
            லாட்ஜ் ஒன்றின் கீழே இருக்கும் ஒரே ஒரு மருந்து கடையில் மட்டும் இரண்டு ஆண்கள் இருக்கிறார்கள். இரண்டு ஆண்கள் ஒருவராக இருந்தால் நன்றாக இருக்கும். அதற்கான மருந்து மருந்துக் கடையில் இருக்கிறதோ என்னவோ! அந்தக் கடை கொஞ்சம் வசதியாக இருக்கிறது.
            ஒரு திருட்டுப் பயலின் முழி வந்து விடுகிறது விகடுவுக்கு. கை, கால்களிலும் கொஞ்சம் நடுக்கம். முதன் முதலில் மைக் பிடித்த போது அப்படித்தான் இருந்தது. நடுக்கத்திற்குப் பிடித்துக் கொள்வதற்கு மைக்கும் மிக உதவியாக இருந்தது.
            கடையில் இருந்தவர்களில் ஒருவர் முன் வந்து கண்களால் பேசுகிறார், இமைகளை மேலே தூக்கிக் காட்டி. அதற்குப் பதிலாக இமைகளைக் கீழே இறக்கிப் பதில் சொன்னால் புரியாது. வேறு எப்படி பதில் சொல்வது என்ற யோசனையில் இருக்கிறார் விகடு.
            "என்ன சார் வேணும்?" என்கிறார் கடைக்காரர் / விற்பனை ஆள்.
            "நான் ஆசிரியர் என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?" என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்கிறார் விகடு.
            "நீங்க டீச்சரா?" என்கிறார் கடைக்காரர் / விற்பனை ஆள்.
            "டீச்சரில்ல. சார்!" என்கிறார் விகடு மறுபடியும் ஹஸ்கி வாய்ஸில்.
            "என்ன வேணும்?" என்கிறார் கடைக்காரர் / விற்பனை ஆள். அவரும் இப்போது ஹஸ்கி வாய்ஸில்.
            விகடு பிரஸ்கிரிப்ஷன் சீட்டை எடுத்துக் கொடுப்பது போல எட்டாக மடித்து சட்டைப் பையில் வைத்திருந்த ஏ4 சீட்டை எடுத்துக் கொடுக்கிறார்.
            கடைக்காரர் / விற்பனை ஆள் அதைப் பிரித்துப் படித்துப் பார்த்தால், 'காண்டம்' என்று எழுதி இருக்கிறது.
            கடைக்காரர் / விற்பனை ஆள் ஏ4 சீட்டை விகடுவிடம் திருப்பிக் கொடுக்கிறார். நடுங்கிய கரங்களோடு அந்தச் சீட்டைப் பயபக்தியோடு வாங்கி பையில் வைத்துக் கொள்கிறார் விகடு.
            "என்ன பிராண்ட்?" என்கிறார் கடைக்காரர் / விற்பனை ஆள்.
            இதில் எல்லாமா பிராண்ட் என்ற யோசனையில் இருந்த விகடுவின் அறியாமை இருளை விரட்ட கடைக்காரர் / விற்பனை ஆள் கீழே உள்ளிருந்து கை விட்டு வரிசையாக எடுத்து வைக்கிறார்.
            காம சூத்ரா
            மூட்ஸ்
            பிங்
            ஸ்கோர்
            கோகினூர்
            மென்ஸ் போர்ஸ்.
            விகடு வேண்டாம் என்பது போல தலையாட்டி விட்டு செல்கிறார்.
            கடைக்காரர் புரியாமல் பார்க்கிறார். "சார்! எனி பிராப்ளம்?" என்கிறார்.
            "நோ பிராப்ளம்!" என்றபடி நகர்ந்து கொண்டே இருக்கிறார் விகடு.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...