11 Oct 2019

கொடுமைகளுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லே!



செய்யு - 234
            நாட்டுல ஒண்ணு மாமியாக்காரிக மருமகள்ல கொடுமைப்படுத்துறாக. அப்படியில்லன்னா மருமகள்க மாமியாக்காரிகள கொடுமைப்படுத்துறாக. இந்த ரெண்டு பேரும் பொம்பளைகள்தான்னாலும், பொம்பளைக பொம்பளைகளைக் கொடுமைப்படுத்துறது மட்டும் நிக்குறதே இல்ல. கொடும கொடுமன்னு கோயிலுக்குப் போனா அங்க ஒரு கொடும தலைவிரிச்சி ஆடாத கொறதான். அபூர்வமா ஒலகத்துல மாமியாக்காரிய தாங்குற மருமவகளும், மருமவள்கள தாங்குற மாமியக்காரிகளும் கொஞ்சம்தான்.
            சாமியாத்தாவுக்கு கொஞ்ச நாளைக்கு எல்லாம் நல்ல வெதமாத்தான் போச்சு. நல்லது எல்லாம் கொஞ்ச காலம். கெட்டது எல்லாம் ஆயுசுக்கும்ங்றது போல அதோட நெலமை கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சிச்சு.
            ஏட்டிக்குப் போட்டியா எத்தனை நாளுக்கு வெச்சி நல்ல வெதமா பார்த்துப்பாங்க சொல்லுங்க. அப்போ இருந்த நெலமையில சாமியாத்தா மூத்த மருமவ பக்கம் சாய்ஞ்சிடக் கூடாதுன்னு ரெண்டாவது மருமவ சோறு, தண்ணிய போட்டு கொஞ்ச நாளு நல்லாவே வெச்சிக்கிட்டு. போகப் போக கோகிலா மாமிக்கு எல்லாம் புரிய ஆரம்பிச்சிடுச்சு, நாம்ம அடிச்சே தொரத்துனாலும் மாமியாக்காரி மூத்த மருமவ பக்கம் மட்டும் போக மாட்டாங்ற சங்கதி. எதிலயும் உண்மை வெளங்குற வரைக்கும்தான் ஒரு பயம் இருக்கும், அதுல கொஞ்சம் யோசனை, தயக்கமில்லாம் இருக்கும். அது வெளங்கிட்டா அந்தப் பயம், யோசனை, தயக்கமெல்லாம் போயிடுமில்ல.
            இப்போ முன்ன மாதிரியெல்லாம் நேரா நேரத்துக்கு சாமியாத்தாவுக்கு கோகிலா மாமி சாப்பாடு போடுறதில்ல. அப்படியே போட்டு வெச்சாலும் தட்டுல போட்டு வெச்சி அதெ அப்படியே கேரம் போர்டுல காய அடிக்கிறது போல தள்ளி விடுறது, தண்ணி கொண்டாந்து வெச்சா சுத்தியால ஆணிய அடிக்கிறது போல லோட்டாவ நங்குன்னு சத்தம் வர்றாப்புல வைக்கிறது, கொஞ்சம் கொழம்பு ஊத்துன்னு சாமியாத்தா கேட்டாக்க காதுல வாங்கதது போல ஏதாச்சிம் ஒரு வேலய பாக்குறது போல போக்குக் காட்டுறதுன்னு ஆரம்பிச்சிடுச்சு கோகிலா மாமி.
            முகத்த கோணிகிட்டு சோத்த போட்டாலே மனுசருக்கு அதெ சாப்பிடப் பிடிக்காது. ஒடம்பு முழுசையும் கோணிகிட்டுச் சாப்பாட்ட போட்டா அதெ எப்படிச் சாப்பிட முடியும்? ரெண்டாவது மருமவளோட மூணு மாசமோ, நாலு மாசமோ வூட்டோட கெடந்து ஒத்தாசையா இருந்த சாமியாத்தாவுக்கு இப்போ வெறுத்துப் போவுது. ரெண்டாவது மருமவ்வே வூட்டுக்கு வந்த இதுவரைக்கும் வூட்டை வுட்டு வெளிய கெளம்பாத அது மெல்ல மெல்ல அக்கம் பக்கத்து வூடுக, கோனாரு வூடுன்னு மறுபடியும் போயி உட்கார ஆரம்பிக்குது. அப்படி போற அது அங்கயே உக்காந்து கெடக்கிறது, அவங்க வூடுகள்ல சின்ன வேலைகள செஞ்சிக் கொடுக்குறது, அவங்க சாப்புடுற நேரத்துல போடுற ரவ்வ சோத்த வாங்கிச் சாப்பிடுறது, சாயுங்காலமா வூடு வர்றதுன்னு மாற ஆரம்பிக்குது. ராத்திரி நேரத்துல சோத்த போட்டு வெச்சா சாப்புடுறது, போடலேன்னா பட்டினியாவே படுத்துகிறதுன்னு அதுகளோட நாட்கள் ஓட ஆரம்பிக்குது. அதில கூட அப்படியே நாட்கள ஓட விட மாட்டேங்குது கோகிலா மாமி.
            சில நாட்கள்ல ராத்திரி நேரத்துல பசியால தூக்கம் வாரத போது கொஞ்சம் சோத்த போட்டுக் கொடுன்னு சாமியாத்தா கேட்டாக்கா, "அதாங் வூடு வூடா போயி தின்னுறீயே! அஞ்ஞயே போயித் தின்னுட்டு வா! நாலு வூட்டு நாக்கு ருசி கண்டவளுக்கு ஒரு வூட்டுச் சோறு பிடிக்குமா? நாயே குளிப்பாட்டி நடுவூட்டுல வெச்சாலும் அது வால கொழச்சிகிட்டு போற எடத்துக்குத்தாம் போகுமாம்!" அப்பிடின்னு ஆரம்பிச்சிடும் கோகிலா மாமி. இந்தப் பேச்சுக்குப் பசியால குடலு சுருங்கிக் கெடக்குறதே உத்தமம்னு அதுக்குப் பிற்பாடு கண்ணுலேந்து தண்ணி வழிய அது பாட்டுக்கு மொடங்கிக் கிடந்துக்கும் சாமியாத்தா. வூட்டுல இப்படியெல்லாம் நடக்குதே! இதெல்லாம் ஒரு விசயமாங்றது போல நடந்துக்கும் வீயெம் மாமா. கண்டும் காணாதது போல நடந்துக்கிறதுல அது ஒரு கில்லாடிதாம்.
            மனுஷனோட மனசு இருக்கே. அது தினுசா தினுசா மாறக் கூடியது. எத்தனை தினுசா மாறும்னு அதுக்குத் தெரியாது. அம்புட்டு வகையில அது மாறிகிட்டே இருக்கும்.
            "மருமவ ரெண்டு பேரு. மாமியாக்காரி ஒத்த ஆம்பள புள்ளையயா பெத்தா? ஒண்ணுக்கு ரெண்டாத்தாம்னே பெத்தா. ஒண்ணுக்கு ரெண்டா பெத்துப்புட்டு ஒண்ணு தோளுல சொமையா தொங்கிக்க நெனைக்குறாளே! இது எந்த ஊரு நியாயம்? இது அடுக்குமா ஊரு ஒலகத்துல?" அப்பிடின்னு யோசிக்க ஆரம்பிக்குது கோகிலா மாமி.
            "ஏம் இந்த வூட்டுலயே கெடந்துகிட்டு எம் மொகத்தயும், இந்த வூட்டையும் பாத்துகிட்டு சலிச்சுப் போயிக் கெடக்கணும்? பக்கத்துலதாம் மூத்த மருமவ்வே இருக்காளே. அஞ்ஞ போயி அந்த மொகத்தயும், அந்த வூட்டயும் பாத்துகிட்டு கொஞ்சம் அலுப்பு சலிப்ப போக்கிக்கிறது? இஞ்ஞ வூட்டுல சோறு ஆக்குனாத்தாம் புடிக்கிறதில்லயே. அஞ்ஞ போயி கொஞ்சம் நாக்கு ருசியா நக்கிட்டு வாரதுதானே? ஏம் இஞ்ஞ ஒரு பத்து நாளு, அஞ்ஞ ஒரு பத்து நாளுன்னு இருந்தா ன்னா கொறைஞ்சா போயிடும்? இஞ்ஞ ன்னா காசு பணம் கொட்டியா கெடக்கு? இஞ்ஞயும் கட்ட அடிச்சுதாங் சம்பாதிக்கிறாங்க. அஞ்ஞயும் கட்ட அடிச்சிதாம் சம்பாதிக்கிறாங்க. அதுல பட்டற வேற வெச்சில்ல சம்பாதிக்கிறாங்க. இஞ்ஞ பத்து நாளுன்னா அஞ்ஞ இருவது நாளே இருந்துட்டு வாரலாம். வயசு ஆனவங்க, அனுபவப்பட்டவங்க இதையெல்லாம் யோஜிச்சுப் பாக்கணும். சில மரமண்டைகளுக்கு இத்தெல்லாம் எஞ்ஞ புரியுது? சொன்னாலும் எஞ்ஞ வெளங்குது?" அப்பிடின்னு சாடையா ஆரம்பிக்குது கோகிலா மாமி. சாமியாத்தாவுக்கு அதோட உள்குத்துப் புரியாம இல்ல. மூத்த புள்ள, மூத்த மருமவ்வே வேணாம்னு இங்க வந்தாச்சு. இதுக்கு மேல போவ மூணாவது புள்ளய பெத்துக்கலேங்ற யோசனையில அது ஒண்ணும் பேசாம அமைதியா இருக்கு.
            சாமியாத்தா அமைதியா இருக்க இருக்க, கோகிலா மாமிக்கு அப்படியே பத்திகிட்டு வருது. என்னா சொன்னாலும் இத்து வூட்டு விட்டுக் கெளம்பாது போலருக்கேங்ற யோஜனையில, சாமியாத்தா போயி உட்காந்துட்டு வர வூடுகள்ல அதுவா போயி சண்டைய வளர்த்து விட்டு வருது. அதுவும் எப்படி வளக்குதுன்னா, "எவடி அத்து எம்மட மாமியரா அவ்வோ வூட்டுல வெச்சி சோறாக்கி, கொழம்பு வெச்சி, வெஞ்சனம் வெச்சிப் போடுறது? ஏம் இஞ்ஞ சோறாக்கலையா? கொழம்பு வைக்கலையா? வெஞ்சனந்தாம் பண்ணலையா? அப்படி ஆக்கிப் போடுறவளுவோ அஞ்ஞயே வெச்சுக்க வேண்டியத்தானே. ராவான்னா ஏம் தொரத்தி விட்டுப் புடுறாளுவோ நாடுமாறிச் சிறுக்கிங்க. எவளாவது இனுமே எம்மட மாமியாக்காரிய வெச்சுகிட்டு சோறாக்கிப் போடுறது, காப்பி தண்ணி வெச்சுக் கொடுக்குறதுன்னு பண்ணட்டும், அவ்வே கொண்டய அறுத்துக் கையில கொடுக்கிறேம்!" அப்பிடின்னு என்னமோ மாமியாக்காரிய வகை தொகைய வெச்சுப் பாக்குறது போல அந்த வூட்டு முன்னாடிப் போய் சத்தம் போடுது.
            அதோட கணக்கு, இப்படி ரெண்டாவது மருமவ போடுற சத்தத்துக்கு மொத மருமவளே பரவாயில்லன்னு அங்கப் போயிடணுங்றதுதாம். சாமியாத்தா அங்கயிருந்து எழும்புது. கிளம்புது. அது நடையைக் கட்ட கட்ட கோகிலா மாமிக்கு பார்க்கறதுக்கு ஆசையா இருக்கு. மூத்த மருமவ வூட்டுக்கு நடையை கட்டுதுன்னு நெனைச்சு கோகிலா மாமி பாத்தா, சாமியாத்தா அது பாட்டுக்குக் கெளம்பி வடக்கால போயிக் கெழக்கால திரும்புது. இது எங்கடா புது தெசையில போவுதுன்னு கோகிலா மாமிக்கு இப்போ குழப்பமா போவுது.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...