11 Oct 2019

3.01



            ஓர் அத்தியாயத்துக்கு குறைந்தது நான்கரைப் பக்கங்கள். அதிகபட்சமாக அறுபத்து ஏழரைப் பக்கங்கள் எழுத வேண்டும். நான் எழுதுவது மிகவும் குறைவு. சில அத்தியாயங்கள் இரண்டே பத்திகளில் முடிந்து விடுகிறது. சில அத்தியாயங்கள் ஏழோ, எட்டோ பத்திகள் இருக்கக் கூடும். ஒரு நவீன நாவலை உணர்ந்து கொள்வதன் கஷ்டத்தை உணர்ந்தே குறைவாக எழுதுகிறேன்.
            விகடுவுக்குக் கல்யாணம் ஆகி குழந்தை பிறந்திருக்கிறது. அந்தச் செய்தியைக் கைபேசியில் பலருக்கும் அழைத்து பேனர் வைத்துக் கொண்டிருக்கிறார் விகடு. தவறுதலாக பத்திரிகையாளர் ஒருவரின் எண்ணை அழுத்தி விடுகிறார். எவ்வளவோ எண்களை அழுத்தி எடுக்காதவர்கள் அநேகம். பத்திரிகையாளர் எடுத்து விடுகிறார். பத்திரிகையாளர்களின் விழிப்புணர்வு அப்படி. அழுத்தியது அழுத்தியாகி விட்டது. விசயத்தைச் சொல்லி விட வேண்டியதுதான் என்று விகடு விசயத்தைப் போட்டு உடைக்கிறார். அது ஒரு பெரிய சாதனை இல்லை என்பது போல உச் கொட்டி விட்டு வைத்து விடுகிறார் பத்திரிகையாளர். பத்திரிகையில் பிரசுரமாகும் அளவுக்கு அது ஒரு செய்தி இல்லை. அதே குழந்தை இந்திய மக்கள் தொகையின் இருநூறாவது கோடி குழந்தை என்றால் அது ஒரு செய்தி. அவ்வளவு எண்ணிக்கைக்கு பத்திரிகையில் செய்தி வர வேண்டும் என்பதற்காக குழந்தைகளைப் பெற்றெடுப்பது அசாத்தியம். பாட்டியார் எட்டும் ஒன்றும் ஒன்பது குழந்தைகளின் தாய். குந்திக்கு ஐந்தும் ஒன்றும் ஆறு. காந்தாரிக்கு ஒரு நூறு. இந்தக் காலத்தில் ஒன்று, ‍இரண்டு, மூன்று. ஒன், டூ, த்ரி. நல்ல ரைமிங்காக இருக்கிறது.
            இந்திய மக்கள் தொகைக் கட்டுபாடு முகமை என்ன சொல்கிறது தெரியுமா? அது ஒரு கவிதை.
            நாம் இருவர். நமக்கு இருவர். எண்ணிக்கை 2 - 2
            நாம் இருவர். நமக்கு ஒருவர். எண்ணிக்கை 2 - 1
            நாம் இருவர். நமக்கு ஏன் ஒருவர்? எண்ணிக்கை 2 - 0
கவிதைப் பார்வை பார்த்தது போதும். கணிதப் பார்வையும் பார்க்க வேண்டும். இரண்டு ஒன்றாகுமா? இரண்டு சுழியம் ஆகுமா? என்று கேட்டால் கணிதவியாளர்கள் இல்லை என்பார்கள். அதெப்படி ஆகாமல் போகும்? நாம்தான் மேலே நிறுவி விட்டோமே! ஆக தேற்றம் நிரூபிக்கப்படுகிறது.
            தரவு என்னவென்றால்... இந்திய மக்கள் தொகையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஒரு குழந்தையோடு நிறுத்துவது உத்தமம். அது இந்திய மக்கள் தொகைக் கட்டுபாட்டு முகமைக்குச் செலுத்த வேண்டிய நன்றிக்கடன்.
            குழந்தையை நிறுத்தலாம். தாம்பத்தியத்தை? டாஸ்மாக்கை திறந்து வைத்து விட்டு, மதுப்புட்டியில் குடி குடியைக் கெடுக்கும் என்று எழுதுவது போல இருக்கிறதா? அது அப்படித்தான் இருக்கும்.
            தாம்பத்தியம் வேண்டும். குழந்தை வேண்டாம். அதற்கு மாத்திரைகள் இருக்கின்றன. உறவு கொள்வதில் நாள் கணக்கு இருக்கின்றது. மாத்திரை உடலுக்கு உபாதை. நாள் கணக்கு வரும் வரை தாம்பத்திய உணர்வு காத்திருக்காது. கண்ணியம், கட்டுபாடெல்லாம் அதற்குத் தெரியாது. ஏழாம் வகுப்போ, எட்டாம் வகுப்போ புத்தகத்தில் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். நான் படித்த போது இதை பத்தாம் வகுப்பில் படித்தேன். இப்போது ஏழு, எட்டுகளிலே பிள்ளைகள் வாசித்து விடுகிறார்கள். கல்வி அட்வான்ஸாக போவதாகச் சொல்கிறார்கள். போகட்டும். நல்ல விசயம். இப்போதாவது என்ன வாசித்தீர்கள் என்பது ஞாபகத்துக்கு வருகிறதா?ஞாபகம் வராதவர்கள் மட்டும் கீழே படியுங்கள். ஞாபகம் வந்தவர்கள் கீழே படிக்க வேண்டாம். அவர்கள் நாளை நேரடியாக அத்தியாயத்திற்கு அல்லது கண்டத்திற்கு வந்து விடுங்கள்.
            "காண்டம்".
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...