10 Oct 2019

என்ன சத்தம் அந்த நேரம்?



செய்யு - 233
            ஒரு நிலை மாறுறப்போ ஏற்கனவே உள்ளதை விட நெலமை கொஞ்சம் நல்லதா மாறுனா அதுதாங் நல்ல காலம் பொறக்குறதுக்கான அறிகுறி. அதுவே எதிர்மாறா ஆயிடுச்சுன்னா அதுதாங் கெட்டக் காலம் பொறக்குறதுக்கான அறிகுறி.
            இந்த நிலைமாற்றங்கள் ஒருத்தருக்கு நல்ல காலமாவும், இன்னொருத்தருக்குக் கெட்ட காலமாவும் மாறுறது காலம் முழுக்க நடந்துகிட்டே இருக்கு.
            ரெண்டு நாளுல்ல மேகலா மாமி குமரு மாமாவோட அவங்க சொந்த பந்த செட்டு சனங்களோட வடவாதி வந்து பார்க்குறப்போ, குமரு மாமா வீட்டுக்குப் பக்கத்துல வீயெம் மாமாவுக்காக கட்டுன வீட்டுல அங்கங்கயும் போர்வையும், பொடவையுமா தொங்குது. சன்னல்கள்ல எல்லாம் புடவைத் துணிங்க. நிலைகள்ல எல்லாம் போர்வைத் துணிங்க. வீயெம் மாமா ஜாகையா அங்க குடி மாறிகிட்டு. நல்லதோ, கெட்டதோ இனுமேலும் மூத்த மருமவகிட்ட கெடந்து சின்னாபின்ன பட வேணாம்னு சாமியாத்தாவும் அங்கயே போயிக் கெடக்கு.
            அழைச்சிகிட்டு வந்த ஆட்களுக்கு வேலையில்லாம போயிடுச்சேன்னு மேகலா மாமி நெனைச்சுகிட்டு இருக்குறப்பதாம் அந்த சத்தம் வருது.
            "மானம், மருவாதி உள்ளவ சொன்னபடி செஞ்சிருக்கதைப் பாத்துக்கணும். சோத்துல உப்புப் போட்டு திங்குறவ்வோ அந்த உப்புக்குப் பங்கமில்லாம சூடு சொரணையோட நடந்துக்கணும். அஞ்ஞ அந்த வூடு எப்படி இருக்கோ, அதே கணக்கா இஞ்ஞ இந்த வூட்ட மாத்தித் தந்துப்புடணும். மாமனாரு, மாமியாரு சம்பாதிச்ச சொத்து அல்லாத்தியும் அவ்வே ஒருத்தியே ஆட்டைய போட நெனைச்சுப்புடக் கூடாது. வந்த மொய்யிப் பணம் இருபதாயிரமோ, முப்பதாயிரமோ அது எஞ்ஞ கலியாணத்துக்கு வந்தது. அதெ மொதல்ல எடுத்து வைக்கணும். ஒங் கல்யாணத்துல வுழுந்த மொய்ய நாஞ்ஞ கேக்கல. இது எஞ்ஞ கல்யாணத்துல வுழுந்தது. ஒனக்குக் கொழந்த வேணும்ன்னா அதெ ஒம் புருஷங்கிட்ட பெத்துக்கோ. எதுக்கு இன்னொருத்தம் புருஷங்கிட்டேயிருந்து அதெ எதிர்பாக்குற. ரோஷக்காரின்னா அவ்வே இதைத்தாம் நாம சொன்னபடி செய்யணும்." அப்பிடின்னு சன்னமா ஆரம்பிச்ச குரலு ஆக்கிரோசமா பெருக்கெடுக்குது. யாரோட குரலு அதுன்னு பார்த்தா, அது கோகிலா மாமியோட குரலுதாம்.
            அதானே பார்த்தேம், அழைச்சுட்டு வந்து ஆட்களுக்கு வகையா வேலை கெடைச்சிடுச்சுன்னு இப்பதாம் மேகலா மாமியோட முகத்துல ஒரு கலை கட்டுது. இதுக்குத்தாம் ஒங்கள அழச்சிட்டு வந்தோமா? பேச வேண்டிய பேசுங்க! ஆவ வேண்டிய பண்ணுங்க அப்பிடிங்கிற மாதிரி மேகலா மாமி ஒரு பார்வை பார்க்குது.
            "பொட்டச்சிப் பேச்சின்னா சரியாத்தாம் இருக்கு. எவ்வேடி அவ்வே? வெளியில வந்து பேசாம வூட்டுக்குள்ள இருந்துகிட்டு நாயி மாரி கொழச்சிகிட்டு இருக்கா?" அப்பிடின்னு மேகலா மாமி அழைச்சுகிட்டு வந்து ஆட்கள்ல ஒண்ணு குரலு கொடுக்குது. இது போதாதா சண்டைய சலம்பிக்க.
            கோகிலா மாமி வீட்டுக்குள்ளேயிருந்து வெளியில வர்ருது. கூடவே அதோட அம்மா, அப்பா, தம்பி, வீயெம் மாமவும் சேர்ந்து வெளியில வாராங்க.
            "எந்தப் பயந்தாங்கொள்ளி சிறுக்கிடி அவ்வே குரலு கொடுக்காம ஆள விட்டு குரலு கொடுக்குறது? ஒரு அப்பனுக்குப் பொறந்தவளா இருந்தா ஒத்தைக்கு ஒத்தை வாடி. மசுர அறுத்துக் கையில தார்ரேம்!" அப்பிடிங்குது கோகிலா மாமி.
            மேகலா மாமிக்குச் சுர்ருன்னு ஏறுது. அது அழைச்சிட்டு வந்த ஆட்கள்ல கையைக் காட்டி வாராதீங்கன்னு சமிக்ஞைப் பண்ணிபுட்டு, நடுரோட்டுக்கு வந்து நிக்குது.
            "சண்டெயல்லாம் வாணாம். பேயாம வா. அதாங் வூடு காலியாயிடுச்சுல்ல. கொரைக்குற நாயிக்குக் காரணமா வேணும். அது பாட்டுக்குக் கொழச்சிகிட்டு கெடக்கட்டும். நமக்கென்ன வந்துச்சு?" அப்பிடிங்குது குமரு மாமா.
            "நீஞ்ஞ ச்சும்மா கெடங்க. பேச்சா பேசுறீங்க? இப்பிடி வுட்டு வுட்டுத்தாம் எல்லாம் இப்படி ஆயிக் கெடக்கு. ஒங்க ஆயி மூத்த மருமவ்வளே நேத்தி வந்தவ்வே இப்பிடிப் பேசுறாங்களேன்னு ஒரு வார்த்த கேட்குதா. பேசட்டும்னு வுட்டுப்புட்டு உள்ள ரசிச்சுகிட்டு அமுங்கிக் கெடக்குப் பாருங்க. எல்லாத்தியும் பார்த்துப் புரிஞ்சுக்கோங்க. இன்னும் ஒலகம் தெரியாம கெடந்துகிட்டு எம்மட பிராணனய எடுக்காதீங்க." அப்பிடிங்குது மேகலா மாமி.
            "யம்மாடி! மாப்பிள்ள சொல்றதுதாம் செரி. அத்து எஞ்ஞப் போயி கெடக்கணுமோ அஞ்ஞ போயிக் கெடக்கு. நாம்ம ஒதுங்கிப் போயிடுறதாம் நல்லது. சாக்கடையில கல்லெடுத்து எறிஞ்சா அது நம்ம மேலல்ல தெறிக்கும். சாக்கடையில கெடக்குற பன்னி கர்புர்ன்னு கெடந்தா நமக்கென்ன? தர்புர்ருன்னு கெடந்தா நமக்கென்ன? அதுகிட்ட சண்டைக்கி நின்னா நம்ம மேலதாம் சகதியாகும் பாத்துக்கோ!" அப்பிடிங்கிறாரு அழச்சிட்டு வந்து ஆட்கள்ல ஒருத்தரு.
            "ச்சேய்! எல்லாம் ச்சும்மா கெடங்க. இதுக்குத்தாம் ஒங்கள அழச்சிட்டு வந்தேமா? பேசுறவ்வே நாக்க இழுத்து வெச்சி அறுக்குறதில்லே. வெரல நீட்டி நீட்டிப் பேசுற கையெ வெட்டுறதில்ல. அவ்வே ஒத்த அப்பனுக்குப் பொறந்தவளான்னு கேட்குறா? வெட்கமில்லாம அத்தே கேட்டுகிட்டு இருக்கச் சொல்றீங்களா? ஆரும் வர வாணாம். நாமளே போயிப் பாத்துக்கிறேம். யாராவது தடுத்தீங்க... கூட வந்தீங்க... மனுஷியா இருக்க மாட்டேம் பாத்துக்குங்க." அப்பிடின்னு சொல்லிப்புட்டு மேகலா மாமி, "வாடி! எம் ஒண்ட வந்த பிடாரி! ஒம் மசுர அறுத்து எங் கொண்டையில முடிஞ்சாத்தாம் நாம்ம ஒத்த அப்பனுக்குப் பொறந்தவாளா ன்னாங்றது ஒனக்குத் தெரியும்!" அப்பிடின்னு சேலையைக் கொஞ்சம் தூக்கி இடுப்புல செருகிகிட்டு வரிஞ்சு கட்டிகிட்டுக் கெளம்புது.
            அங்க நாம் மட்டும் என்னா இளைச்சாப் போயிக் கெடக்குறேம்னு கோகிலா மாமியும் அதே லாவகத்துல சேலையைக் கொஞ்சம் தூக்கி இடுப்புல செருகிகிட்டு வரிஞ்சு கட்டிகிட்டுக் கெளம்புது. இங்க கோகிலா மாமிய யாரும் தடுக்குறதா தெரியல. அது இருக்குற உருவத்துக்கு அதுகிட்ட மோதி யாரு ஜெயிக்க முடியும்னு நெனைச்சிருந்துப்பாங்க போலருக்கு.
            ரெண்டும் நடுரோட்டுல ஒண்ணுக்கொண்ணு எதிரு எதிரா சந்திக்கிறத பாக்குறப்போ நடுரோட்டுக்கு ஒரு யுத்தகளத்துக்கான தோற்றம் வந்துப் போவுது. ரெண்டு மாமிகளும் கைகள பிடிச்சுகிட்டு அது இங்க தள்ளுது. இது அங்க தள்ளது. கொஞ்ச நேரம் தள்ளுமுள்ளா ஆவுது. யாருக்கும் வந்து தடுக்கணும்னு தோணல. கோகிலா மாமி தள்ளுற தள்ளுக்கு மேகலா மாமி ஈடு கொடுக்க முடியல. அதால தள்ளிகிட்டு இருக்குறப்பவே மேகலா மாமி ஒத்த கால கோகிலா மாமியோட காலுக்கு இடையில கொடுத்து தடுமாறி வுடுது. கோகிலா மாமி தடுமாறி விழ அது மேல மேகலா மாமி வுழுவுது. அப்படியே கோகிலா மாமி மேகலா மாமிய கீழே தள்ளிவிட்டு அது மேல ஏறிப் பொரளுது. ரெண்டும் நடுரோட்டுல கட்டிகிட்டுப் பொரளுதுங்க. அப்படிப் பொரளுறப்பவே ரெண்டும் கைகளால முடியைப் பிடிச்சி வேற பிய்ச்சி வுடுற கணக்கா பண்ணிக்குதுங்க. மேகலா மாமி மேல உருளுறத கோகிலா மாமியால தாங்கிக்க முடியுது. ஆனா கோகிலா மாமி மேல வந்து உருளுறப்ப மேகலா மாமிக்கு உசுரே போயிடுறாப்புல இருக்குது. அது, "ய்யயோ! யப்பா! யம்மா! நம்மள உருட்டி உருட்டியே கொல்லப் பாக்குறாளே! கொலகாரச் சிறுக்கி! யாராச்சும் வந்து எம்மட உசுரே காப்பத்துங்களேம்!" அப்பிடின்னு சத்தம் போடுது.
            கோகிலா மாமியோட கூட வந்த ஆளுங்களும், குமரு மாமாவும் ஓடிப் போயி மேகலா மாமிய பிரிச்சுத் தூக்கி வுடுதுங்க. கோகிலா மாமி மேகலா மாமிய விடக் கூடாதுன்னு அது மேல பாயுது. அது தடுத்துப் பிரிச்சி அந்தாண்ட வுடுறது பெரும்பாடா போவுது.
            "யாருட்டே! மசுர அறுத்து உசுர எடுத்து கொடுத்துப்புடுவேம்டி!" அப்பிடிங்குது இப்போ கோகிலா மாமி ஆங்காரத்தோட. இதுக சண்டெ போடுறது கொஞ்சம் கொஞ்சமா பரவி தெரு முழுக்கவும், ஊரு முழுக்கவும் வந்து வேடிக்கைப் பார்க்குது இந்தக் கூத்தை.
            "கலியாணம் முடிஞ்சு நாளு நாளு ஆகல. அதுக்குள்ள சக்களத்தி சண்டெ கணக்கா இப்பிடியா? வைத்தி இருந்த வரிக்கும் எவ்ளோ கெளரவமா குடும்பம் நடத்துனாரு. இதுங்க ன்னா சொரி நாயி மாரில்ல வுழுந்து பெரண்டுக்குதுங்க. உக்காந்து பேசித் தீத்துக்குங்கப்பா. ஒங்க யப்பா, யம்மாவோட மானம், மருவாதிய காத்துல பறக்க வுட்டுப்புடாதீங்கப்பா!" அப்பிடின்னு கூடி நின்ன கூட்டம் ரெண்டு மாமாக்களுக்கும் மூஞ்சுல காறித் துப்பாத கொறையா சொல்லுது.
            குமரு மாமா வீயெம் மாமா வூட்டுப்பக்கம் போயி நிக்குது. "சித்தே இஞ்ஞ நீயி மட்டும் வாடா!" அப்பிடிங்குது.
            "ஒத்தையால்லாம் அனுப்ப முடியாது!" அப்பிடின்னு வீயெம் மாமாவோட மாமானாரு முறுக்குக் காட்டுறாரு.
            "நீஞ்ஞ செத்தெ ச்சும்மா இருங்க மாமா!" அப்பிடின்னு வீயெம் மாமா குமரு மாமாகிட்ட வருது. ரெண்டு பேரும் ஓர் ஓரமா போயி குசுகுசுன்னு பேசிக்கிறாங்க. ஒரு முடிவு வந்துட்டாப்புல போல தெரியுது.
            அன்னிக்கே அவசரம் அவசரமா ரெண்டு வீட்டுக்கும் இடையில வேலி கட்டியாவுது. ஒருத்தருக்கு ஒருத்தரு பேசிக்கக் கூடாதுன்னு முடிவாவுது. கல்யாணத்துல விழுந்த மொய்யிப் பணத்துல பாதிய கொடுக்குறதாவும், வூட்டு வேல பாக்குறதுக்கு மேக்கொண்டு நாப்பதஞ்சாயிரம் கொடுக்குறதாவும், வலது பக்கம் இருக்குற வூடு குமருக்கும், இடது பக்கம் இருக்குறது வீயெம்முக்கும்னும், இதுல மாத்திச் சொந்தம் கொண்டாடக் கூடாதுன்னும் அவங்க ரெண்டு பேருமே ஒரு முடிவு பண்ணிக்கிறாங்க. அதே போல ஒருத்தரு தொழில்ல இன்னொருத்தரு குறுக்கே தலையிடக் கூடாதுன்னும், ஒருத்தருக்கு வர்ற ஆர்டர இன்னொருத்தரு தட்டிப் பறிக்கக் கூடாதுன்னும் முடிவு பண்ணிக்கிறாங்க.
            அன்னையிலேர்ந்து பார்த்தீங்கன்னா ரெண்டு வூடும் உள்ளுக்குத் தாழ்ப்பாள் கொடுத்துப் பூட்டித்தாம் கெடக்கு. புருஷங்காரன் வர்றப்போ மட்டும் கதவெத் திறக்குறதும், மத்த நேரங்கள்ல கதவ பூட்டிக்கிட்டு வூட்டக்குள்ள என்னமோ பொக்கிஷத்த அடை காக்குறதாவும்தாம் ரெண்டு மாமிகளோட பொழப்பு ஓடுது. இப்படி ரெண்டு பேரும் வூட்டைப் பூட்டிகிட்டாலும் சன்னலு வழியா பக்கத்துப் பக்கத்து வூட்ட கள்ளப் பார்வைப் பார்க்குறதுக்கு மட்டும் ஒண்ணும் கொறைச்சல் இல்ல.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...