2 Sept 2019

மனிதன் ஏன் அடித்துக் கொள்(ல்)கிறான்?



            சின்னச் சின்னதாக எழுதுவது மிகவும் பிடித்திருப்பதாக மின்னஞ்சல் எழுதுபவர்கள் இருக்கிறார்கள். அதிகம் இது போல எழுதவும் என்று அவர்கள் கேட்டுக் கொள்வார்கள். அதில் ஒரு வசதி இருக்கத்தான் இருக்கிறது. சீக்கிரம் எழுதி விட முடிகிறது. நச்சென்று விசயத்தையும் விளங்கிக் கொள்ள முடிகிறது. இதையெல்லாம் யோசித்து எழுதுவதில்லை. எழுதும் போது அது கொள்ளும் அளவுதான் அதன் அளவு, வடிவம் எல்லாம். அவ்வபோது சின்னச் சின்ன பத்திகளைத் தொகுத்து எப்போதாவது ஏதேனும் ஒரு தலைப்பில் பதிவிடுவதுண்டு. தலைப்புக்கும் அதன் ஏதேனும் ஒரு பத்திக்கு மட்டும் தொடர்பிருக்கும். மற்ற பத்திகளுக்குத் தொடர்பு இருக்காது என்றாலும் அது ஒரு வகை கதம்பம் போல. அப்படிச் சில...
எண் 1 :
            மனிதன் அடித்துக் கொண்டுதான் சாவானா என்றால் அப்படியும் சாவான். வரலாற்று நெடுக இதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. அவனால் அடித்துக் கொள்ளாமல் இருக்க முடியாது. ஏனென்றால் அது அவன் பழக்கமாகி விட்டது. தொட்டில் பழக்கம் சுடுகாட்டு மட்டும் என்று சொல்வார்களே! அதனால் சுடுகாடு போகும் அளவுக்கு அவன் அடித்துக் கொள்கிறான்.
எண் 2 :
            பெண்களை மட்டும் நகையால் ஏன் அலங்கரிக்கிறோம் என்று யோசித்திருக்கிறேன். அவர்களை அவ்வபோது மகிழ்ச்சிப்படுத்தி அந்த மகிழ்ச்சி நீங்குவதற்கு முன்னே அதை அவர்களிடமிருந்தே வாங்கி பாதுகாப்பாக இருக்கட்டும் என்று குடும்ப கஷ்டத்துக்கு அடகு வைப்பதற்காகவும் இருக்கும்.
எண் 3 :
            இரண்டாயிரமாவது ஆண்டு எங்கே இருக்கிறது என்று இந்த 2019 இல் பார்த்தால் தோராயமாக இருபது ஆண்டுகளுக்கு முன்புதான் இருக்கிறது. ஆனால் என்னவோ அது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருப்பது போன்ற மனத்தோற்றத்தை அதிகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியான மனத்தோற்றம் இருப்பவர்கள் யாரேனும் எழுதுங்கள். நம்மைப் போல ஒருவர் இருக்கிறார் ஆறுதல் பண்ணிக் கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
எண் 4 :
            நமது ஊருக்கென்று ஒரு வரலாறு இருக்கும். சில ஊர்களுக்கு தலபுராணங்களே இருக்கும். அதெல்லாம் தெரியுமா என்றால் ம்ஹூம்தான். உலக வரலாறு கொஞ்சம் தெரியும். இந்திய வரலாறு கொஞ்சம் தெரியும். தமிழக வரலாறு பற்றியும் கொஞ்சம் கொஞ்சம் தெரிகிறது. இந்த சொந்த ஊர் வரலாறுதான் கொஞ்சம் கூட தெரியவில்லை. நாம் தலைகீழாகப் படித்துக் கொண்டிருக்கிறோம். அதாவது உலகம் - இந்தியா - தமிழகம் - மாவட்டம் என்று. முதலில் நம் ஊர் வரலாறைப் படிப்பது, அதன் பின் மாவட்ட வரலாற்றைப் படிப்பது, அதைத் தொடர்ந்து தமிழக வரலாறு, இந்திய வரலாறு, உலக வரலாறு என்று நீளலாம். ஆனால் அதிலும் துரதிர்ஷடம் பாருங்கள் உள்ளூர் வரலாறு தவிர மற்ற வரலாறுகளைப் படிக்க புத்தகங்களும், தரவுகளும் இருக்கின்றன. உள்ளூருக்கு...? அதுதான் இல்லை. யாராவது எழுதினால்தானே இருக்கும்? யார் எழுதுவது? நாம்தான் எழுத வேண்டும். உள்ளூர் வரலாற்றைப் படிக்க விரும்புபவர்களுக்காகவது எழுதி வைக்க வேண்டியதாகத்தானே இருக்கிறது. வரலாறு முக்கியம் இல்லையா நண்பர்களே! நம் உள்ளூர் என்றாலும் அதற்கும் ஒரு வரலாறு இருக்கத்தானே செய்யும். அதை விட நம் குடும்ப வரலாறு - குறிப்பாக நம் பாட்டன் பாட்டி பெயராவது நமக்குத் தெரியுமா? நம் வரலாறை ஆரம்பிக்க வேண்டிய இடம் தெரிந்தால் நாம் ஏன் முதியோர்களைத் தவிக்க விடப் போகிறோம்? நமது ஆரம்பம் என்பதே உலகமயமாக்கல் என்பதிலிருந்துதாமே தொடங்குகிறது. தொடங்கும் இடத்தை மாற்றினால் பல நன்மைகள் உண்டாகக் கூடும். நல்ல தொடக்கம் பாதி முடிந்தது போன்றது என்பார்களே! முதற் கோணல் முற்றும் கோணல் என்றும் சொல்கிறார்களே! யோசிக்க வேண்டியிருக்கிறது!
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...