6 Sept 2019

பச்ச மண்ணு பாவம்டா!



செய்யு - 199
            பாலாமணிக்கு தலை கொண்ட ஆத்திரமாய் இருக்கிறது. மனுஷனுக்குத் தலை எவ்வளவு அளவு இருக்குன்னு சொல்லிட முடியும். மனசோட அளவைச் சொல்லிட முடியுமா? அது எவ்வளவுக்குப் பெரிசுன்னு யாருக்குத் தெரியும்? அது அவ்வளவு பெரிசு. அவ்வளவு பெரிசா இருக்குறதாலதான் அதுல கோபம், பொறாமை, வன்மம், பழி வாங்குற உணர்ச்சி, கோபம், அன்பு, நெகிழ்ச்சி, நன்றியுணர்வு, மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணை, கயவாளித்தனம், கன்றாவித்தனம், பெருந்தன்மை, நியாயம் அப்பிடி இப்பிடின்னு ஏகப்பட்ட உணர்வுகள அதுல வெச்சிக்க முடியுது. இதுல எல்லா உணர்வும் கூடவோ, குறைச்சலோ ஒவ்வொரு மனசுலுலயும் முன்ன பின்ன இருக்கு. இந்த மனசு பூராவும் கோபமா மட்டும் நிறைஞ்சிருந்தா எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கு பாலாமணியோட மனசு. ஆத்திரம் எவ்ளோ பெருசா இருந்தாலும் ரெண்டு நிமிஷம் தள்ளிப் போட்டா அது இருந்த இடம் தெரியாமா போயிடும். அந்த ரெண்டு நிமிஷம் தள்ளிப் போட முடியாததுதாம் மனுஷனோட பிரச்சனை. அந்த ரெண்டு நிமிஷத்துல ஒரு பூகம்பமே நடந்துடுது. ஒரு ரெண்டு நிமிஷ பூகம்பம் என்ன பண்ணும்னு சொல்ல வேண்டியதில்ல. அது அத்தனை வருஷமாக காபந்து பண்ணி வெச்ச அத்தனையையும் மண்ணோட மண்ணா போட்டு மூடிட்டுப் போயிடும்.
            பாலாமணிக்கு யாரும் அப்பிடி இப்பிடின்னு கருத்துச் சொல்லிட முடியாது. கருத்துச் சொல்லவும் கூடாது. இப்பிடி இருக்கலாமே, அப்பிடி இருக்கலாமேன்னு யோசனையும் சொல்லிடக் கூடாது. எவ்வளவு நாசுக்கா சொல்றதா இருந்தாலும் அறிவுரையும் சொல்லிடக் கூடாது. கோபம் பொத்துகிட்டு வந்துடும். தான் செய்யுறதெல்லாம் சரிதாங்ற நெனைப்பு பாலாமணிக்கு ரொம்பவே அதிகம். வெசன கடுப்பெடுத்த ஆளு அவ்வேம். பேசுறத கொஞ்சம் தணிச்சுப் பேசுங்கன்னு ஆதிகேசவன் சொன்ன சொல்லு பாலாமணிக்கு அப்படியே சுர்ருன்ன ஏறுது. ஊரு சுத்துற பொறுக்கிப் பயலெல்லாம் ஒரு டாக்கடருக்கு அட்வைஸூ பண்றதாங்றதுதாம் அந்த ஆத்திரத்துக்குக் காரணம்.
            அந்த ஆத்திரத்துக்குப் பேசிட்டு இருந்த செல்போனு பலியானதுதாம் மிச்சம். பேசிட்டு இருந்த செல்போன அப்டியே தூக்கிப் போட்டு தரையில ஓங்கி ஒரே அடியா அடிச்சாம் பாருங்க! அது அப்படியே சுக்கு நூறா சிதறிப் போய்க் கெடக்கு. உடைஞ்சதுதாம் உடைஞ்சுப் போயிக் கெடக்கு. அத்தோட விடலாமில்ல. அதயும் போயி சிகரெட்டைப் பிடிச்சு முடிச்சு கீழே போட்டு காலால நசுக்குற கணக்கா அதைப் போட்டு நசுக்குறாங் பாலாமணி. மனுஷனுக்குப் பலியாவுறதுக்குன்னே பொறப்பெடுத்து வந்திருக்குங்க இந்தச் செல்போனுங்க. யாருகிட்டேயும் காட்ட முடியாத கோவத்தையெல்லாம் செல்போனுகிட்ட காட்டலாம். அது என்ன செய்ய முடியும்? பாவம்! உடைஞ்சிப் போயி கெடக்கும்.
            இந்த பாலாமணி திடீருன்னு இப்பிடி வெறி பிடிச்சாப்புல நடந்துக்குறானேன்ன எல்லாருக்கும் ஒரே தெகைப்பா இருக்கு. நடக்குற கதையே சரியில்ல. இதுல இவ்வேம் வேற இப்பிடி நடந்துகிட்டா அதெ வேற எப்பிடிச் சரி பண்றதுன்னு எல்லாருக்கும் இப்போ தலைவலியா இருக்கு. பாலாமணி இருக்குற ஆத்திரத்துக்கு இப்பவே ஒரு கொலை விழுந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லேங்ற அளவுக்கு இருக்கு அங்க சூழ்நிலை.
            "இத்து ஆவுற கதையில்ல. அவனும் வெச்சிக்கத் தயாரா இருக்காம். இதுவும் ஓட தயாரா இருக்கு. அத்து வுடுறதுன்னாலும் இப்பைக்கு முடியாது? மனுஷன நிம்மதியா இருக்க வுட மாட்டீங்களா? எங்கப்பன் நாடுமாறி சூதாடியே குடும்பத்த அழிச்சாம். ஒண்ணும் இல்லாம கெடக்கோம் இப்ப. இந்தத் தேவிடியா சிறுக்கி எவனயோ ஒருத்தனோட தொடுப்பு வெச்சிகிட்டு, இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதியும் அழிக்குறா. இப்பிடி ஆளாளுக்குக் குடும்பத்த அழிச்சா... இந்தக் குடும்பத்த யாரு தூக்கி நிறுத்துறது? யாரும் தூக்கி நிறுத்த வாணாம். தூக்கி நிறுத்துற நமக்கு தொந்தரவு பண்ணாம இருக்கணுமா இல்லீயா? இந்தக் குடும்பத்துக்குல்லாம் நல்ல கதியே வாராது. இது நாசமாத்தாம் போவும். அழிஞ்சுப் போவும். நல்லாவே இருக்காது." என்று வெறி கொண்ட வேகத்தில் கத்துறான் பாலாமணி.
            சுந்தரியின் முகத்தில் சோகமோ, வருத்தமோ, ஒரு துளி பயமோ இல்லை. செல்போன் உடைந்து விட்டதே என்ற கோபத்தோடு முறைத்துக் கொண்டு இருக்கிறது. அதைப் பார்க்க பார்க்க போதை தலைக்கேறுவதைப் போல கோபம் தலைக்கு ஏறுகிறது பாலாமணிக்கு. இந்தச் சுந்தரி வாயை வெச்சுகிட்டுச் சும்மா இருக்காம அது வேற, "ஏம் வாழ்க்கையில ஏம் அநாவசியமா தலையிட்டு ஆளாளுக்கு முடிவு எடுக்குறீங்க? ஏம் வாழ்க்கைய எப்படி அமைச்சிக்கணும்னு நமக்குத் தெரியும். ஒங்க இஷ்டத்துக்கு மறுபடியும் கொண்டு போயி அவனோட விட்டீங்கன்னா இந்த தடவே ஓடிப் போயிடுவேம். நீங்க நெனைக்குற மாரி அவனோட இருந்துகிட்டு இவனெ வெச்சிக்க மாட்டேம் ஆமா. நாம்ம என்ன தப்புப் பண்ணேம்? பயந்து பயந்துகிட்டு அவங்கிட்ட இருந்துகிட்டு இவனெ வெச்சிக்கிறதுக்கு? இல்லேன்னா நல்ல ஆம்பளயா பாத்து கட்டி வையுங்க. அவனோட மட்டும் குடுத்தனம் நடத்துறேம்." என்கிறது சுந்தரி. சுந்தரி இப்படிப் பேசுவது செல்போன் உடைந்ததற்கான பிரதிவினையா? பாலாமணியின் கோபத்துக்குப் பதில் கோபமா? என்று இருப்பவர்களுக்குக் குழப்பமாக இருக்கு. இப்படித்தாம் ஆளாளுக்குக் கோபப்பட்டு இருக்குறவங்களோட நிம்மதிய அபேஸ் பண்ணிடுறாங்க.
            "வர வர இந்த நாயிக்கு வாயி ரொம்ப கொழுத்துப் போச்சி. இத்தையெல்லாம் வாயில்லன்னா நாயி தூக்கிட்டுப் போயிடும்! பேசுறத நிப்பாட்டுடி மானங்கெட்ட கழுதே!" என்கிற பாலாமணி அத்தோடு ஓடிப் போய் சுந்தரியின் தலை மயிரைக் கையில் பிடித்து அப்படியே கொண்டு போய் தலையில் மோதுறான். பாலாமணி மோத சுந்தரியும் தலையை சுவரில் மோதிக் கொள்கிறது. இதென்னடா நாம்ம ஒண்ணு நெனைச்சா? தெய்வம் ஒண்ணு நெனைக்குதுன்னு அடுத்த அதிர்ச்சி உண்டாகுது. ஒண்ணு, பாலாமணி சுந்தரிய அடிச்சா... அடிக்காதேன்னு ஓடிப் போயித் தடுக்கலாம். இல்ல சுந்தரியப் பிரிச்சு அந்தாண்ட வுடலாம். இவன் அடிக்க... அதுவும் போயி சுவத்துல மோதிக்கிட்டா... இந்த நெலமையை எப்பிடிச் சமாளிக்கிறது?
            "இப்பிடிச் சின்ன சின்னதா சித்திரவதைப் பண்றதுக்கு ஒரே அடியா அடிச்சிக் கொன்னுப் புடுங்க. நாந்தாம் சொல்றேம்ல. பெறவு ஏம் நம்மள புரிஞ்சிக்கவே மாட்டேங்றீங்க? வெசத்தை வாங்கிக் கொடுங்க. குடிச்சிட்டுச் செத்துப் போறேம். கயித்தை வாங்கிக் கொடுங்க. தொங்குறேம். மண்ணெண்ணெயை ஊத்தியாவது கொழுத்தி வுடுங்க. எரிஞ்சிச் சாம்பலாப் போறேம். நாம்ம உசுரோட இருக்கக் கூடாது. அதான ஒங்க எண்ணம். நமக்கும் இந்த உசுரு வாணாம். ஒண்ணு நீங்கக் கொன்னு போட்டுடுங்க. யில்ல நாமளே நம்மள கொன்னுப்பேன். ஒங்ககிட்ட கிடந்து அணு அணுவா சாவணும்னு ஏம் தலையில ஒண்ணும் எழுதியில்லே! இப்பவே இந்த ஒடம்புலேந்து உசுரு போவணும். கொல்லுங்கடா கொலகாரப் பாவிகளா! கொன்னுப்போட்டுட்டு சந்தோஷமா இருங்கடா!" என்று காட்டுக் கத்தலாக கத்துகிறது சுந்தரி.
            இதைக் கேட்க கேட்க லாலு மாமாவுக்கு சுருக்கென்று இருக்கிறது. "அய்யோ அத்து சின்ன பொண்ணுடா! வெவரம் புரியாத வயசுடா! ன்னா பேசுறதுன்னு தெரியாம பேசுதுடா! அதெ வுட்டுப்புடுங்கடா! அத்து இஷ்டப்படி இருக்கட்டும்! அது எப்பிடி நெனைக்குதோ அப்பிடி வாழ்க்கைய அமைச்சுக் கொடுத்துப்புடுவோம்! ஏலே மோடிமுட்டிப் பயலே அடிச்சே கொன்னுடாதடா! ஏட்டி கோட்டிச் சிறுக்கி மண்டைய உடைச்சிகிட்டு செத்துப் போயிடாதடி! அய்யே தெய்வமே! நாம்ம தூக்கி வளத்தப் பொண்ணுடா! எங் கையால ஊட்டி வளர்த்தப் பொண்ணுடா! ஏம் கொழந்தய வுட்டுப்புடுங்கடா! அத்து பச்ச மண்ணுடா! ஏதோ ஏவலு பண்ணிப்புட்டாம்டா அந்தப் பயெ. அந்தக் கிறுக்குல அத்து என்ன பேசுறதுன்னு தெரியாம பேசுதுடா. மந்திரம் பண்ணிப்புட்டாம்டா அந்த நாதாரிப் பயெ. அவனெ ஒதைச்சா சரிப்பட்டு வந்துடும்டா. அந்தப் பயலே கொன்னுப்புட்டா சரியாயிடும்டா! ஏம் தங்கத்த வுட்டுப்புடுங்கடா! ஒங்களுக்குப் புண்ணியமாப் போவும். இத்துப் பாவம்டா! சூன்யம் வெச்சிப்புட்டாம்டா! நாம்ம சொல்றத கேளுங்க. நாம்ம சொல்றது புரியுதா? தகடு வெச்சிப்புட்டாம். தகடு வெச்சிப்புட்டாம். அதாங் இது இப்பிடி நிக்குது. ந்நல்ல மந்திரவாதியா, மலையாள மாந்திரீகனா சொட்டாணிக்கல்லுலேந்து கொண்டாந்தா... எல்லாத்தியும் சரி பண்ணிப்புடலாம்டா!" என்று தலையில் அடித்துக் கொண்டு அழுகிறது லாலு மாமா.
            "ஒரு டாக்கடருக்குப் படிச்சிருக்கே. அடிக்காதேன்னு கையப் பிடிச்சு நிறுத்தி வெச்சிருக்கேம். ஒரு உசுர காப்பாத்த வேண்டிய நீயி உசுர எடுத்துப் புடுவீயே போலருக்கே. பாத்து பக்குவமா பதனமாத்தாம் இதெ சரி செய்யணும். ஆளாளுக்கு அவரசப்பட்டா எப்பிடி?" என்கிறான் வேலன்.
            "இந்த நாயிக்குத் தாலி கட்டுன நாயிக்கு அத்து எழும்ப மாட்டேங்குதுன்னா அதுக்கு மருந்து எழுதித் தர மாட்டேம்னா? அப்டியே நிலைச்சி நிக்க வெச்சிட மாட்டேம்? கொழந்தப் பொறக்காதுன்னா கொழந்தய பொறக்க வைக்க மாட்டேனா? நாம்ம மருந்து தயாரிப்பேம். நாம்ம கடவுளு. மருத்துவம் பண்ற கடவுளு. எத்து இல்லேன்னாலும் அத்தே படைப்பேம். ஏந் இந்த நாயீ இந்த மாரிப் பண்ணுது. அத்தே கேட்டுச் சொல்லு! என்னா கொறைன்னு சரியா சொல்லச் சொல்லு! மருந்தால சரி பண்றேம்! எத்தா இருந்தாலும் அத்தே சொல்லச் சொல்லு. சரி பண்றேம்!" என்கிறான் பாலாமணி.
            "கிழிப்பே!" என்கிறது சுந்தரி.
            பாலாமணிக்கு வந்தேதே கோபம். ஓங்கி சுந்தரியை அப்படியே எட்டி உதைக்கிறான். அது நிலை தடுமாறிப் போயி சுவரில் மோதிக்கொண்டு விழுகிறது. வேலன் தூக்க முடியாத கனத்த உருவத்தைப் ப்ளாஸ்டிக் நாற்காலியிலிருந்து தூக்கிக் கொண்டு எழுந்து வந்து பாலாமணியை இறுகப் பிடித்துக் கொள்கிறான். சரசு ஆத்தா ஓடிப் போயி விழுந்து கிடக்கும் சுந்தரியைத் தூக்கிக் கொண்டு,  "அய்யோ எம் பொண்ணு இப்படி நிலையழிஞ்சு நிக்குதே. ஏம் ஈரக்கொலையெல்லாம் நடுங்குதே. எம் புள்ள இப்பிடி நிலைகொலைஞ்சு நிக்குறானே. ஏம் உசுரே போகு‍தே. அந்த தேப்பய குடும்பத்துக்கு ஒரு சாவு வாராதா? அவ்வேங் குடும்பம் நிலையழிஞ்சி, நிலைகொலைஞ்சு நடுத்தெருவுல நிக்காதா? ஏம் வயிறு எரியுதே! ஏம் வயிறு எரியுற மாரி அவ்வேம் குடும்பம் எரியாதா?" என்று தலையிலும் மாரிலும் அடித்துக் கொண்டு அழுகிறது சரசு ஆத்தா.
            "அவ்வளே ஒழுங்கு மரியாதியாப் பேசச் சொல்லு! கொன்னே புடுவேம்!" என்கிற பாலாமணியின் குரல் குழறுகிறது. கை, கால்கள் நடுங்குகின்றன. பற்கள் வெடவெடவென அடித்துக் கொள்கின்றன.
            "எல்லாம் கெரகச் சாரம். அப்பிடித்தாம் இருக்கும்! அததே ஏவி விட்டத்தாம் சரிபெட்டு வரும்!" என்கிறது ராசாமணி தாத்தா.
            "ஒண்ணுமில்லே. பேசாம இருங்க மொதல்ல. இனுமே இத்தேப் பத்திப் பேச வாணாம். பசிக்கி. தாங்க முடியல. சாப்புட்டுப்புட்டு ரெஸ்ட்டா இருந்துட்டுப் பெறவு இத்தேப் பத்தி என்ன வாணாலும் பண்ணிக்கலாம்! யில்லே ஒரு ரண்டு நாளிக்கு இத்தே பத்தியே பேச வாணாம்! அப்டியே கெடக்கட்டும். பாத்துக்கலாம். எவ்ளோ பாத்தாச்சி. பண்ணியாச்சி. இத்தப் பண்ண முடியாதா? சமாளிக்க முடியாதா? பாத்துப்பேம்!" என்கிறான் வேலன் அந்த சூழ்நிலையைக் கொஞ்சம் மாத்திப் போடுற மாதிரி.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...