7 Sept 2019

சிறுகுடும்ப முறை ஏற்படுத்தியிருக்கும் சிக்கல்கள்



            குடும்ப வாழ்க்கையில் செலுத்தும் கவனம் ஓரளவாவது சமூக வாழ்க்கையில்  பிரதிபலித்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும். குடும்ப வாழ்வில் செலுத்தும்  கவனம் தாய், தந்தை, மகன் / மகள் என்ற சிறுகுடும்ப அளவோடு சுருங்கிப் போகிறது. இதன் விளைவாக சமூகத்தின் மாபெரும் அங்கமான முதியோர்கள் புறக்கணிக்கதக்க பிறவிகளாக விடுகிறார்கள்.
            இந்த முதியோர்கள் ஒரு காலத்தில் சிறுகுடும்பத்தின் அங்கமாக இருந்து சிறுகுடும்பத்துக்கு ஒவ்வாத தாத்தா - பாட்டிகளாக ஆகும் போது அவர்கள் துண்டிக்கப்பட்டு விடுகிறார்கள்.
            ஒரு சிறுகுடும்ப கட்டுமானத்தில் தாத்தா - பாட்டிக்கு இடம் இல்லை என்பதான நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அதிகபட்சம் தம்பி, தங்கைகளுக்கு உரிய இடமும் குறைந்து ஒரு குழந்தை என்ற பரிமாணத்தைச் சிறுகுடும்பங்கள் அடைந்தாயிற்று. மூன்று நபர்களைத் தாண்டி நான்காம் நபருக்கு அங்கே இடமில்லை. இதை அரசின் சிறுகுடும்ப நெறிக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்ப்பதா? அல்லது சமூக நெறிக்கு அடிக்கப்பட்ட சாவுமணியாகப் பார்ப்பதா?
            மக்களைச் சிறுகுடும்ப அளவைத் தாண்டிச் சிந்திக்க விடாமல் தடுப்பவைகள் எவை என்று யோசிக்கும் போது அது கல்விக்கான பொருளாதாரத் திட்டமிடலாக இருக்கலாம், திருமணச் செலவுக்கான சேமிப்பாக இருக்கலாம், வீட்டுக்கான கனவாக இருக்கலாம், வாங்கிய கடனை அடைப்பதற்கானப் போராட்டமாகவும் இருக்கலாம். ஒரு வகையில் பொருளாதாரக் கொள்கைகளும் சிறுகுடும்பத்தைத் தாண்டிச் சிந்திக்க முடியாத அளவுக்குக் கழுத்தை இறுக்கிப் பிடிக்கின்றன என்பதை எப்படி மறுப்பது?
            அதாவது அதையே மீண்டும் சுருக்கமாகக் கூறினால், கல்விக்கானச் செலவும் சேமிப்பும், திருமணத்துக்கானச் செலவும் சேமிப்பும், வீட்டுக் கட்டுமானத்துக்கான செலவும் சேமிப்பும், இன்ன இது போன்ற சேமிப்புக்கான செலவும் மற்றும் அது சார்ந்த கனவுகளும் மனதை இழுத்துப் பிடிக்கிறது. சுயநலம் என்ற அளவைத் தாண்டிச் சிந்திக்க விடாமல் தடுக்கிறது.
            சிறுகுடும்பம் என்ற வார்த்தையில் தாத்தா - பாட்டிக்கு இடமில்லை என்ற அளவுக்கு அது சிறுகுடும்பமாக இருக்கும் போது அதைத் தாண்டியும் சிறுகுடும்பத்தோடு அவர்களை ஒன்ற விடாமல் தடுப்பது எதுவாக இருக்க முடியும்? அது அநேகமாக அவர்கள் வளர்த்த, வளர்த்தெடுத்த குடும்பக் கொள்கையாகவும் இருக்கலாம். தனது குடும்பத்தில் நான்காவதாக ஒரு நபரைச் சேர்த்து அவரோடு ஒன்றுவதில் இருந்த தடை அவருக்கு அதே போலே சமூகத்திலும் இருந்திருக்கலாம். அவரைச் சமூகத்தோடு ஒன்றச் செய்வதில் குடும்ப அமைப்பானது சமூகத்தில் உருவாக்கி வைத்திருக்கும் கல்வி, திருமணம், வீடு குறித்த கருத்தாக்கங்கள் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
            குடும்ப முறைகள் சமூக முறைகளுக்கு அடிப்படையாக அமையும் என்கிற விதத்தில் சமூக அமைப்புக்கு நாம் கட்டமைத்து வைத்திருக்கும் சிறுகுடும்ப முறையை விட, கூட்டுக்குடும்ப முறை பெருமளவில் உதவக்கூடியதாக இருக்கும். நமது கூட்டுக்குடும்ப முறையானது மாமா, மாமி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, தாத்தா, பாட்டி என்ற பரந்து பட்ட அளவில் இல்லாமல் போனாலும் தாத்தா, பாட்டி என்ற அளவிலாவது இருக்குமாறு பார்த்துக் கொள்வது குடும்ப நலத்துக்கும், சமூக நலத்துக்கும் உகந்ததாக இருக்கும்.
            உண்மையை உரக்கச் சொல்வதென்றால் முதியோர்களுக்கு சமூகத்தோடு ஒன்றுவதில் அவர்கள் பழகிய, பழக்கி வைத்த சமூகப் பழக்க வழக்கங்கள் தடையாக இருக்கலாம். அவைப் புதிதாக உருவாக்கப்பட்ட பழக்க வழக்கங்கள் அல்ல. அவர்கள் இளையோர்களாக இருந்த போது கடைபிடித்த அதே பழக்கவழக்கங்கள்தாம் எனினும் அவர்கள் முதியோர்களாக ஆகி விடுவதால் அவை அவர்களுக்கு எதிரிடையாக மாறி விடுகின்றன. அந்த வகையில் குடும்பப் பழக்க வழக்கங்கள் மற்றும் சமூகப் பழக்க வழக்கங்களில் எதார்த்தமான அரவணைத்துச் செல்லும் அன்பான மாற்றம் தேவைப்படுகிறது.
            வருங்காலத்தில் முதியோர்களுக்கு ஏற்படும் தனிமை குறித்து அவர்கள் சிந்திப்பதை விடவும் இன்று இளையோர்களாக இருந்து நாளை முதியோர்களாக இருக்கப் போகும் இளையோர்கள் அது குறித்து சிந்திக்க வேண்டும். அப்படிச் சிந்திக்கும் போது அவர்களால் தனிமைக்கு உள்ளாக்கப்படும் முதியோர்களின் பிரச்சனை தீர்வதோடு, அவர்கள் முதியோர்கள் ஆகும் போது அவர்களுக்கு ஏற்படப் போகும் தனிமைப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு கிடைத்தாகி விடும்.
            இங்கு உண்டாகியிருக்கும் பிரச்சனைகளுக்குக் காரணம் நாமாக இருக்கும் போது அதற்கான தீர்வும் நம்மிடமிருந்துதான் வர வேண்டும். தீர்வுகளை மற்றவர்கள் மேல் சுமத்துவது நியாயமாக இருக்காது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...