23 Sept 2019

சைக்கிள் தரும் ஞானம்!



செய்யு - 216
            காலையில எழுந்திருக்குற பழக்கமும், எங்க போனாலும் சைக்கிள்ல போற வழக்கமும் இருந்தா மனுசனுக்கு மனசும், உடம்பும் அவ்வளவு தெளிவா இருக்கும். சைக்கிள்ல போறப்ப சிலுசிலுன்னு அடிக்கிற காத்து இருக்கே! அதுவும் வயக்காட்டு வழியா உள்ள பாதையில போறப்ப சைக்கிளயே அப்படி அடிச்சிப் பெரட்டி அந்தாண்ட தள்ளிடுற காத்துல சைக்கிள செலுத்திட்டுப் போற லாவகம் இருக்கே! இதெல்லாம் நிறைய விசயங்கள நம்மள அறியாம நம்ம மனசுக்குக் கத்துக் கொடுக்கும்.
            சைக்கிள அப்போ மனசா நெனைச்சிக்கலாம். சைக்கிள செலுத்துற மனசை, மனசைச் செலுத்துற புத்தியா நெனைச்சுக்கலாம். சைக்கிள நம்ம மனசு எப்படிச் செலுத்துதோ அப்பிடித்தானே சைக்கிளு போவும். அது போல மனசை நம்ம புத்தி எப்படிச் செலுத்துதோ அப்படித்தான நம்ம மனசு போவும். நாம்ம சைக்கிள செலுத்துறப்போ போற ரோட்டுல எவ்வளவு மேடு, பள்ளம், கல்லு, முள்ளு, எதிர்க்காத்து, தாறுமாற எதிருல வர்ற ஆளுன்னு எவ்வளவு இடைஞ்சல். அவ்வளவையும் நம்ம மனசாலே டக் டக்குன்னு முடிவு எடுத்து சமாளிச்சுகிட்டு சைக்கிளை செலுத்திகிட்டு இருக்கோம். அதை அப்படியே மனசைச் செலுத்திகிட்டு இருக்குற நம்ம புத்திக்கும் பொருத்திப் பார்க்கலாம். இந்தப் பொருத்தம் பங்குச் சந்தைன்னு சொல்லப்படுற ஷேர் மார்க்கெட்டுல இருக்குறவங்களுக்கு ரொம்பவே பொருந்தும். இந்த விசயம் விகடுவுக்கு ரொம்பவே பயன்பட்டது. அதால அவன் தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்ல வேலை பார்த்த நாட்கள்ல சைக்கிள்ல போறத விடவே இல்ல. ஒரு பாதை, ஒரே சைக்கிள்தான். ஆனா ஒவ்வொரு நாளும் அந்தப் பாதையும், சைக்கிளும் ஒவ்வொரு பாடத்தை அவனுக்குச் சொன்னுச்சு. எப்போ ஏறி மிதிச்சுப் போவணும், எப்போ மெல்லமா போவணும், எப்போ தணிச்சி எறங்கிப் போவணும் அப்பிடிங்றதை எல்லாம் அந்தச் சைக்கிளு அவங் கூட பேசுறது போலவே இருந்துச்சு.
            சைக்கிள்ல நெதானமா ஒங்களால போவ முடியும்னா அதுக்குப் பிரேக் கூட வாணாம்ங்றது அதுல இன்னொரு பாடம். ஒரே சைக்கிள்ல நீங்க போவப் போவ ஒரு மிதிக்கு அது எவ்ளோ தூரம் போவுங்றது வரைக்கும் ஒங்க மனசுல பதிஞ்சிடும். அழுத்தி மிதிச்சா எவ்ளோ தூரம் போவும், மெதுவா மிதிச்சா எவ்ளோ தூரம் போவும்ங்ற நுணுக்கமான விசயம் வரைக்கும் அத்துப்படியாகிடும். அதுக்குப் பெறவு சைக்கிளும் நீங்களும் வேற வேற இல்ல. ஒங்க ஒடம்பு உறுப்புகள்ல ஒண்ணு போல சைக்கிளும் ஆயிடும். நீங்க நீட்டணும்னு நெனைச்சா கையை நீட்டுறது போல, மடக்கணும்னு நெனைச்சா காலை மடக்குறது போல நீங்க போன்னு சொன்னா போறதுக்கும், நில்லுன்னு சொன்னா நிக்குறதுக்கும் சைக்கிளு தயாராயிடும். இதுல எதுவும் கலந்து கட்டுன பொய் எதுவும் இல்ல. அத்தனையும் நெசமான சங்கதிங்க.
            நாம்ம நெனைக்குறது போல சைக்கிளு ஒரு வாகனம் மட்டும் அல்ல. அதோட இருந்து அதோட பழகிட்டா அது நம்மோட ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆயிடும். அது போல பழகுனவங்க சைக்கிள விட மாட்டாங்க. அது நம்மோட கன்னுகுட்டி, நம்மோட நாய்க்குட்டி, நம்மோட பூனைக்குட்டி அப்பிடின்னு சொல்லலாம். அப்படி ஒரு பழக்கம் வந்த பின்னாடி நாம்ம இல்லாம அதுவும் இருக்காது. அது இல்லாம நாமளும் இருக்க முடியாது. விகடுவுக்கு அப்படித்தான் சைக்கிளு ஆயிப் போச்சு. அதுவும் இல்லாம சைக்கிள்ல போறப்ப நெறைய யோசனைகள் வரும். பிடிக்காத விசயங்கள் எல்லாம் படம் போல ஓடி அத்தோட அணைஞ்சிப் போவும். சைக்கிள அன்பா, ஆத்திரமா, பரிவா, இதமான்னு பல பல உணர்வுகள்ல மிதிக்கிறப்ப அது ஒவ்வொண்ணும் மறைஞ்சிப் போயி எதுவுமில்லாத ஒரு மனநிலையோட மிதிக்குற பக்குவம் வந்துடும். அப்போ பாத்தீங்கன்னா நிர்சலனமான ஒரு மனசு வந்துடும். ஆமா போடா இதாங் வாழ்க்கைங்ற மாதிரி அப்போ தோணுற எண்ணங்கள் இருக்கே! அது எல்லாம் சேர்ந்து எவ்வளவு கனமான மனசையும் லேசா ஆக்கிப்புடும். இப்படிப் பல செளகரியங்கள் இருக்கு சைக்கிள்ல போறதுல.
            ஷேர் மார்க்கெட்டுல இருக்கறவங்களுக்கு மனசு ஒரு பெரிய பிரச்சனை. அவங்க மனசு எந்நேரமும் இயங்கிகிட்டே இருக்கும். புதுசு புதுசா கணக்குப் போட்டுகிட்டே இருக்கும். அவங்க நெனைச்சாலும் அவங்களால அதிலேர்ந்து விலக முடியாது. அதிலேர்ந்து கொஞ்சம் மனசு விலகி வந்துச்சுன்னா அதப் பத்தின முழு விசயமும் புலப்படும். அதுதாங் முடியாது. விகடு சைக்கிள்ல ஏறி மிதிக்க ஆரம்பிச்சான்னா ஒரு நாலு மிதியில எல்லாம் மறந்து அவனும் சைக்கிளும் ஒண்ணா ஆயிடுவாங்க. யாருமில்லாத பாதையில போறப்ப ஒருத்தருக்கொருத்தர் பேசிக்க ஆரம்பிச்சிடுவாங்க. அப்போ அவனோட சைக்கிளு அவங்கிட்டேயிருந்து ஷேர் மார்க்கெட்ட பத்தி கேட்டுக்கும். ஷேர் மார்க்கெட்டுல எப்படி இருக்கணும், அதுகிட்ட எப்படி எப்படி நடந்துக்கணும்னு அது அவனுக்கு தன்னை வெச்சி நிறைய விசயங்கள சொல்லும். வெயில், மழை, குளிருன்னு மாறி மாறி வந்த எவ்வளவோ நாட்கள்ல அவனும் சைக்கிளும் ஒரே பாதையில ஒண்ணா, ஆனா வெவ்வேறு அனுபவங்களோட பயணிச்சிருக்காங்க.
            வீட்டிலேர்ந்து சைக்கிள எடுத்தான்னா விகடு ஒன்றரை மணி நேரத்துக்குள்ள திருவாரூர் தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்ல இருப்பான். மூணு கம்ப்யூட்டர்ல நடுவுல இருக்கறது அவனோடது. இடது பக்க ஆபரேட்டரு பேரு சுபா. நல்லா நெடுநெடுவென வளர்ந்த புள்ள. சுரிதார்ல வர்ற புள்ள. அதுக்கு வீடு திருவாரூர்ல இருந்துச்சு. ஒரு கட்ட சைக்கிள்ல வரும் அது. அந்த சைக்கிளு இருக்குற உயரத்துக்கு, இது இருக்குற உயரத்துக்கும் அது வர்றதப் பாக்குறதுக்கு ரொம்ப வேடிக்கையா இருக்கும். யாருக்கு ஆர்டர் போட்டு லாஸ் ஆயிடுச்சுன்னா அதுக்கு கண்ணு கலங்கிடும். வலது பக்க ஆபரேட்டரு கோபி. ஆளு கருப்பான்னாலும் பார்க்க களையா இருப்பாரு. டார்க் கலரு பேண்ட், லைட் கலரு சட்டைன்னு அவரு இளையாங்குடியிலேந்து பஸ்ல வருவாரு. எல்லாத்தையும் சிரிச்சே சமாளிக்குற ஆளு. எத பத்தியும் கவலைப் படாத ஆளு. நாம்ம வேறென்ன சார் பண்ண முடியும்? அப்பிடின்னே அசால்ட்டா எல்லாத்தையும் பார்த்துட்டுப் போயிட்டே இருப்பாரு. மேனேஜரு லெனின் ஆபீஸ்க்குப் பக்கத்துலயே ஒரு மாடியில ரூம் எடுத்து தங்கியிருந்தாரு. மேனேஜரு இல்லையா அவரு. அதால ஷீ போட்டுகிட்டு, இன் பண்ணிகிட்டு, டையெல்லாம் கட்டிகிட்டு நீட்டாத்தான் வருவாரு. அவருக்கு ஆபீஸ்ல தனி ரூம் இருந்துச்சு. ஆனா பெரும்பாலான நேரம் டிரேடிங் நடக்குற ரூம்லதான் இருப்பாரு. கிளையண்ட்ஸ்கிட்ட அப்பைக்கப்போ பேசிப் பேசியே டிரேட் பண்ண வெச்சாகணும். அப்படி பண்ண வெச்சத்தாம் கம்பெனிக்கு கமிஷன் கிடைக்கும். அவங்களுக்குக் கமிஷன் கிடைச்சாத்தான் சம்பளம் போட்டுக் கொடுக்க முடியும். ஆபீஸூக்குச் செலவு பண்ண முடியும்.
            ஷேர் டிரேடிங் ஆபீஸ்றது காஸ்ட்லியான ஒரு ஆபீஸூ. ஏ.சி. பண்ணி, கண்ணாடியால அழகு பண்ணி, தடையில்லாம நெட் கனெக்சன் கிடைக்கறதுக்காக தனியா அதுக்குன்னு ஒரு குடைய மாடியில வெச்சி அதுக்கு ரிசீவரை ரெடி பண்ணி, நாலு போன் கனெக்சன்களை வெச்சி, வர்ற கிளையண்ட்ஸூக்கு ரண்டு வேளை டீயோ, காபியோ, பட்சணத்தோட வாங்கித் தந்து, பிசினஸ் லைன், தலால் ஸ்ட்ரீட்ன்னு எத்தனை ஜர்னல் இருக்கோ அத்தனையும் வாங்கிப் போட்டு, ஆபீஸ்ல எல்லாரும் பார்க்க டி.வி.யை வெச்சு அதுல வேற ஷேர் மார்க்கெட் லைவ் நியூஸ் சேனல்கள்ல போட்டு வெச்சி, அதுக்கெல்லாம் சேர்த்து கரண்டு பில்லு கட்டி, வேலை பார்க்குறவங்களுக்கு சம்பளம் கொடுத்துன்னு அது ஏகப்பட்ட செலவு பிடிக்கிற சமாச்சாரம்.
            இங்க யார் லாஸ் பண்ணி தூக்கு மாட்டித் தொங்குனாலும், டிரேட் ஆவுற ஸ்டாக்கோட கம்பெனி திவாலே ஆனாலும் ஆபீஸ்ல வேலைப் பார்க்குறவங்களுக்கு அது மனசுல ஏறவே கூடாது. எப்பவும் அவங்க முகத்துல ஒரு சின்ன சிரிப்பு இருந்துகிட்டே இருக்கணும். வர்ற கிளையண்ட்ஸ்கிட்ட நம்பிக்கைக் கொடுத்து அடுத்தடுத்து ஆர்டர்களைப் போட வெச்சுகிட்டே இருக்கணும். அவங்களுக்கு தகுந்தபடி பேசிகிட்டே இருக்கணும். சில ஸ்டாக்குகளை கிளையண்ட்ஸ் ஆர்டர் போடறப்ப அது தேறாதுன்னு ஆபரேட்டருக்குத் தெரிஞ்சாலும் அதைச் சொல்லக் கூடாது. ஆர்டர் போட்டு வாங்கவோ, விக்கவோ வைச்சாகணும்.
            ஒரு லட்ச ரூபாய்க்கு டே டிரேடிங்னா முப்பது ரூபாயும், அதுவே டெலிவரின்னா ஒரு லட்ச ரூபாய்க்கு முந்நூறு ரூபாயும் கிடைக்கும். அதால டே டிரேடிங்கைப் பொருத்த வரைக்கும் ஒரு நாளைக்கு குறைஞ்சது ஐம்பது லட்ச ரூபாய்க்கும், டெலிவரி டிரேடிங்கைப் பொருத்த வரைக்கு அஞ்சு லட்ச ரூபாய்க்கு நடக்குற அளவுக்கு ஒரு கணக்குப் பண்ணி வேலை பார்த்தாகணும். திருவாரூர்ல தொண்டாமுத்தூர் கேப்பிட்டலுக்கு அது ஒரு பெரிய பிரச்சனையே இல்ல. அதுக்குக் காரணம் திருவாரூர்ல ஷேர் டிரேடிங்ல ரொம்ப கம்மியான கமிஷன் இங்க மட்டும்தான். மற்ற டிரேடிங் ஆபீஸ்கள்ல டே டிரேடிங்ன்னா நூத்துக்கு அஞ்சு பைசாவும், டெலிவரி டிரேடிங்ன்னா நூத்துக்கு அம்பது பைசாவுமா இருந்துச்சு. அதால நிறைய கிளையண்ட்ஸ் இங்கதான் வருவாங்க. அதால இங்க கூட்டத்துக்கு எந்தக் கொறையும் இருக்காது. கம்பெனியோட தினசரி டார்க்கெட்டான டே டிரேடிங்ல அம்பது லட்சம், டெலிவரி டிரேடிங்ல அஞ்சு லட்சங்றதல்லாம் சர்வ சாதாரணமா ஆயிடும். இதுல சுணக்கமாயிடுச்சுன்னா சாயுங்காலமே ஹெட் ஆபீஸ்லேந்து மேனேஜர் லெனினுக்குப் போன் பண்ணிடுவாங்க. நல்லா செமத்தியா காய்ச்சி எடுத்துடுவாங்க. அவங்க லெனினைக் காய்ச்சி எடுத்து பிற்பாடு லெனினு வேலை பாக்குற விகடு, கோபி, சுபான்னு எல்லாரையும் பார்த்து காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சி எடுத்துடுவாரு. அதால வர்ற கிளையண்ட்ஸ வயித்துல அடிச்சாவது அவங்கள யேவாரம் பண்ண வைச்சாகணும். அதுல மனசாட்சி பார்த்து வேலை பார்த்தா சீட்டைக் கிழச்சி வெளிய அனுப்பிடுவாங்க. டெய்லி டார்கெட், வீக்லி டார்கெட், மன்த்லி டார்கெட்டுன்னு எவ்வளவு யேவாரம் நடக்கணும்ன அதுல ஒரு கணக்கு இருக்கு. அந்த டார்க்கெட்டை எட்டிப் பிடிச்சாவணும். வேற வழியில்ல.
            அதே நேரத்துல இங்க வேலை பார்க்குறது இருக்கே. அது வேலை பார்க்குறது போலவே இருக்காது. எந்நேரமும் கூத்தும் கும்மாளமுமா இருக்கும். எல்லாம் இளஞ்செட்டுக வேறயா. கேலிக்கும், கிண்டலுக்கும் குறைவே இருக்காது. ‍டிரேட் பண்ற கிளையண்ட் பெரிசா லாபம் பார்த்திட்டார்னா அன்னிக்குச் சொல்லவே வேணாம். செம ரகளையா இருக்கும். அன்னிக்கு மத்தியான சாப்பாட்லேர்ந்து ஸ்வீட், காரம், பப்ஸ், ஐஸ்கிரீம்னு அன்னிக்கு முழுக்க வயித்துப் பாட்டுக்குக் குறைவே இருக்காது. போறப்ப லாபம் பார்த்த சந்தோஷத்துல அந்தக் கிளையண்ட் ஐம்பது நூறுன்னு பைகள்ல திணிச்சி விட்டுட்டுப் போவாரு. இங்க திருவாரூர்ல இருக்குற ஹோட்டல் செல்வீஸ்லயோ, ராயர் பார்க்லயோ பார்ட்டி வேற வெச்சிட்டுப் போவாரு. பார்ட்டின்னு போனா அங்க இஷ்டத்துக்கு நாம்ம ஆர்டர் பண்றதுதாம். காசு இங்க ஒரு பெரிய பிரச்சனையில்ல. அதாவது ஷேர் மார்க்கெட்டுல. காசு ஒரு பெரிய பிரச்சனை இல்லன்னா அது ரெண்டு பக்கத்துக்கும் இங்க பொருந்தும். அதெ ஒரு நிமிஷத்துல இங்க சம்பாரிக்கிறதுக்கும் அது பொருந்தும். அதெ அடுத்த நிமிஷத்துல இங்க இழக்குறதுக்கும் அது பொருந்தும்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...