23 Sept 2019

குணமாக்கல் எனும் ரகசியம்



            உடம்பே இந்த உலகின் ஆகப் பெரிய மருத்துவர். நாம் அறிவு என்ற தளத்தில் இயங்கி உடம்பைச் சாதாரணமாக நினைத்து விடுகிறோம். உடம்பைப் பற்றி உடம்புக்குத் தெரியாதா சங்கதிகளா?
            உடம்பிடம் விட்டு விட்டால் உடம்பே உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள்கிறது. உடம்பே தன்னைக் குணப்படுத்திக் கொள்வதற்கு அதற்கு ஓய்வு தேவைப்படுகிறது. அதற்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்த இரண்டையும் உடம்புக்கு உங்களால் கொடுக்க முடியாது. அதற்குக் காரணங்கள் இரண்டு இருக்கிறது.
            1. நாம் பரபரப்பான யுகத்தில் இருக்கிறோம். ஓய்வுக்கெல்லாம் இங்கு நேரமில்லை.
            2. நாம் அவசரமான வாழ்க்கை முறையில் இருக்கிறோம். கால அவகாசம் என்ற பேச்சுக்கெல்லாம் இங்கே இடமில்லை.
            இந்த இரண்டையும் தாண்டி ஓய்வுக்கோ, கால அவகாசத்துக்கோ மனம் இடம் தராது. அது சதா இயங்கிப் பழக்கப்பட்டு விட்டது. மனதால் நொடி நேரத்துக்கு தகவல் தொடர்பு சாதனங்களின் தொடர்பு இல்லாமல், எதையாவது சிந்திக்காமல், எதற்காகவது உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியாது.
            நோயைக் குணப்படுத்துவதில் உடம்பு ஓய்வு, அவகாசம் என்ற உத்தியைத்தான் காலம் காலமாகப் பயன்படுத்துகிறது. நாம் அதை அவசரப்படுத்தலாம். துரிதப்படுத்த முயற்சிக்கலாம். உடம்பு அதற்கு ஒத்துழைக்காது. அப்போதைக்கு அடங்கி பின்னால் அது தனக்கான ஓய்வையும், அவகாசத்தையும் எடுத்துக் கொண்டே தீரும்.
            நம்மிடம் மருந்துகள் இருக்கின்றன. அது நாம் நினைக்கின்ற நேரத்துக்கு ஓய்வோ, அவகாசமோ இல்லாமல் குணப்படுத்துகிறேன் என்ற பெயரில் அம்மருந்துகள் உடம்பில் எதையோ செய்யலாம். உடம்பு இப்போது மருந்துக்கும் வினைபுரிய வேண்டும், நோய்க்கும் வினைபுரிய வேண்டும். காரணம் உடம்போடு ஒத்து வேலை செய்யும் மருந்துகள் நமது உலகில் மிகவும் குறைவு.
            உடம்புக்கான ஓய்வை நாம் தரத் தயார் என்றால் உடம்பும் நோயைப் புரிந்து கொள்ளவும், அதைக் குணப்படுத்தித் தரத் தயார்.
            நோய் - அது எந்த நோயாக இருந்தாலும்... மூன்று வேளை ஆகாரத்தை இரண்டு வேளை ஆகாரமாய் மாற்றுவது முதல் கட்ட ஓய்வு. அதாவது மூன்று வேளையில் ஒரு வேளை பட்டினி.
            அதற்கும் குணமில்லை என்றால் மூன்று வேளை ஆகாரத்தை ஒரு வேளை ஆகாரமாய் மாற்றுவது இரண்டாம் கட்ட ஓய்வு. அதாவது மூன்று வேளையில் இரண்டு வேளை பட்டினி.
            அதற்கும் குணமில்லை என்றால் மூன்று வேளை ஆகாரத்தையும் நிறுத்தி விட்டு தேவையான போது மட்டும் எளிய உடல் இயக்கத்துக்கு மட்டுமான நீர் ஆகாரத்தையோ, பழங்களையோ மட்டுமே எடுத்துக் கொள்வது மூன்றாம் கட்ட ஓய்வு.
            இந்த மூன்று ஓய்வுகளுக்குள்ளாகவே நோய் அகன்று விடும். இவ்வித மூன்று வித ஓய்வுகளையும் தரும் போது நாம் உடல் அளவில், மனதளவில் அமைதியாக இருப்பது அவசியம். பட்டினியோடு அலைவதோ, உடல் வருந்த இயங்குவதோ, மனம் பரபரக்க செய்வதோ ஆகாது. அதுதான் உடம்புக்குத் தேவையான ஓய்வும், அவகாசமும். இந்த இரண்டும் கிடைக்கும் போது உடம்புக்கு தன்னைக் கவனிக்கவும், உற்றுநோக்கவும் வாய்ப்புக் கிடைக்கிறது. அதற்குத் தெரியும் தன்னை எப்படிக் குணப்படுத்திக் கொள்வது என்று. அது குணப்படுத்திக் கொள்ளும். தொடர்ந்து எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனைகளையும் அதுவாக மனதில் உருவாக்கும்.
            உடம்பு உடம்பைக் கவனிக்க வைப்பதில் பட்டினி முக்கிய பங்காற்றுகிறது. பட்டினியில் உடம்பு உள்ளுக்குள் ஓய்வாக இருக்கிறது. அந்த ஓய்வில் அது சும்மா இருப்பதில்லை. உடம்பு முழுவதையும் உடம்பே அலசி ஆராய்ந்துப் பார்த்துக் கொள்கிறது. பட்டினிக்குப் பின் உணரப்படும் புத்துணர்ச்சி உடம்புக்குக் குறுக்கீடாக உள்ள நோய்களை உடம்பே அறிந்து அதைச் சரிசெய்து கொள்வதால் உண்டாவது.
            உடம்புக்குள்ளே இருக்கும் மருந்தை உடம்பு கண்டுபிடிக்க அதற்குத் தேவையான ஓய்வையும், அவகாசத்தையும் கொடுக்க வேண்டியது அவசியம். அது நாம் கொடுக்கும் மருந்தை விட வேகமாக குணப்படுத்தும் என்பது இதில் அடங்கியிருக்கும் மற்றொரு ரகசியம்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...