நெட்வொர்க் கிடைக்காமல் போவது மனிதனைப்
பைத்தியம் ஆக்கும் என்பது நம்ப முடியாத ஒன்றாக இருக்கலாம். வருங்காலத்தில் அதை நம்பித்தான்
ஆக வேண்டும். மனித சமூகம் அப்பா - அம்மாவைச் சார்ந்திருப்பதை விட நெட்வோர்க்கை அதிகம்
சார்ந்திருக்கிறது. அப்பா - அம்மாவை வயது முதிர்ந்த காலத்தில் கைவிடுவதும், நெட்வோர்க்கை
எக்காலத்தும் கைவிடாமல் வாழும் ஒரு வாழ்க்கைக்கு மனித சமூகம் பழகிக் கொண்டிருக்கிறது.
வருங்காலத்தில் வயது முதிர்ந்த தந்தையையும் தாயையும் கவனிக்குப் பொறுப்பை மனித சமூகம்
நெட்வோர்க்கிடம் வழங்கி விடலாம். அதற்கான சூழ்நிலைகள் உண்டாகலாம்.
மனித சமூகத்துக்கு எல்லாம் நெட்வோர்க்தான்.
அது தன்னையே மொபைல் போன்ற தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் புதைத்தும், அமிழ்த்தும்
வைத்திருக்கிறது. பேச வேண்டும் என்றால் அதற்கான தொடர்பு எண்கள் அதில் இருக்கின்றன.
பழக வேண்டும் என்றால் அதற்கான செயலிகள் அதில் இருக்கின்றன. பார்க்க வேண்டும் என்றால்
அதற்கான காணொலிகள் அதில் இருக்கின்றன. கேட்க வேண்டும் என்றால் அதற்கான இசை, பேச்சு
மற்றும் பாடல் கோப்புகள் அதில் இருக்கின்றன. விளையாட வேண்டும் என்றால் அதற்கான அத்தனை
ஆட்டங்களும் அதில் நிரம்பியிருக்கின்றன. சிரிக்க வேண்டும் என்றால், பொழுதுபோக்க வேண்டும்
என்றால் அதற்கான லாகிரி வஸ்த்துகளும் அதில் இருக்கின்றன. அழுவதற்கு, கோபப்படுவதற்கு,
நையாண்டி செய்வதற்கு, எதிர்வினை புரிவதற்கு என்று அத்தனை உணர்ச்சி வசப்படுவதற்கான அத்தனை
எந்திரத் தொடர்புகளும் அதில் இருக்கின்றன. மனித சமூகத்துக்கான பண பரிமாற்ற வர்த்தனைகள்
அத்தனையும் அதன் கைவசம் இருக்கின்றது.
வருங்காலத்தில் மனித சமூகத்தின் சமூகத்
தொடர்பு வாட்ஸஅப், டெலிகிராம், பேஸ்புக், டிவிட்டர் என்று அதில்தான் இருக்கின்றது.
அவைப் போலவும் அதனை விடவும் மேம்பட்ட சமூகத் தொடர்பு சாதனங்கள் அதில் உருவாகிக் கொண்டே
இருக்கப் போகின்றன.
மனித சமூகம் தன்னைப் பற்றிய சுயகுறிப்பைத்
தன்னிலிருந்து அழித்துக் கொண்டிருக்கின்றது. அது தன்னைப் பற்றிய அத்தனைக் குறிப்புகளையும்
அதற்குள் ஏற்றிக் கொண்டு இருக்கின்றது. மறந்துப் போகும் மனிதனது முகம் ஒரு படமாக
அதில் இருக்கப் போகிறது. மனிதனது பிறப்பிலிருந்து இளமை, வாலிபம், முதுமை என அத்தனைப்
பருவங்களும் அதில் தகவல்களாக உள்ளீடு செய்யப்பட போகின்றன. வருங்காலத்தில் மனிதனைத்
தீர்மானிக்குச் சக்திகளாக நெட்வொர்க்குகள் உருவாகப் போகின்றன. நெட்வொர்க்கில் மனித
சமூகம் தன்னை இழக்கப் போகிறது. நெட்வோர்க்கை சாமர்த்தியமாகக் கையாளப் போவதாகச் சொல்லிக்
கொண்டு அதில் தன்னை இழப்பதுதான் மனிதச் சமூகத்தின் இறுதி நிலை. ஏனென்றால் சுயமாக வாழ்வதற்குக்
கொஞ்சம் தற்சார்பு தேவைப்படுகிறது. இப்போதிருக்கும் மனித சமூகத்துக்கு ஒரு கடவுச்சொல்லை
(Pass Word) நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் இல்லை. அதற்கும் அது அதே நெட்வோர்க்
சாதனங்களையே நம்பி இருக்கிறது. மனித சமூகம் தனக்கான அத்தனைத் தற்சார்புகளையும் நெட்வோர்க்கில்
அடகு வைக்க துடியாகத் துடிக்கிறது. தனக்குப் பதிலாக நெட்வொர்க் சிந்திக்கவும் சம்மதம்
என்று மனித சமூகம் எப்போதிலிருந்து சிந்திக்க ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து அதற்கான
அபாயக் குறிகளும் வெளிப்பட ஆரம்பித்து விட்டன.
அந்த அறிகுறிகள் ஒருவருக்கு இருக்கிறதா?
இல்லையா? என்பதைச் சோதித்துக் கொள்ள ஒரு வழியிருக்கிறது. ஒரு நாளிலிருந்து ஒரு வாரம்
வரை நெட்வோர்க் இல்லாமல் உங்களுக்கு எந்தப் பதற்றமோ, பரபரப்போ ஏற்படவில்லை என்றால்
உங்களுக்கு அந்த அறிகுறி இல்லை. ஒரு மணி நேரம் உங்களால் நெட்வோர்க் இல்லாமல் இருக்க
முடியவில்லை என்றால் நீங்கள் அந்த அறிகுறிகளோடு இருக்கிறீர்கள். உங்கள் ஞாபகம், உணர்ச்சி,
எதிர்வினை, சொல், செயல், மனம் எல்லாம் அதில் இருக்கிறது. அதில் உங்களை நீங்களே அடகு
வைத்திருக்கிறீர்கள். அப்படி இருக்கும் நிலையில் உங்களால் பதற்றப்படாமலோ, பரபரப்பு
அடையாமலோ இருக்க முடியாது. நமக்கானப் பதற்றமும், பரபரப்பும் நெட்வொர்க் வடிவில் பரவிக்
கொண்டிருக்கின்றன.
*****
No comments:
Post a Comment