9 Sept 2019

வானத்தைப் போல!



செய்யு - 202
            மழைக்காலத்துல துணி காயப் போடுறவங்களுக்கு அதோட அவஸ்தை தெரியும். துணியைக் காயப் போடாம இருக்க முடியாது. ஊச நாத்தம் கண்டு போயிடும். காயப் போடுறேங்றதுக்காக மழை வரப்போ அதுல நனைய விட்டுடவும் முடியாது. உடுத்துறதுக்குத் துணியே இல்லாம போயிடும். வெயிலு அப்படி மழைக்காலத்துல போக்குக் காட்டும். எப்போ மழை வரும், எப்போ வெயிலு அடிக்கும்னு சொல்ல முடியாது. அது எப்போ வேணாலும் வரும். எப்போ வேணாலும் அடிக்கும். நம்பி இறங்கிட முடியாது. ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி மழை பெய்ஞ்சிருக்கும். வானத்துல மழையே காட்டாத கணக்கா வெயிலு அப்படி பல்ல இளிச்சிகிட்டு அடிக்க ஆரம்பிக்கும். இதாம் துணி காயப் போடுறதுக்குச் சரியான நேரம்னு துணியைக் கொண்டு போய் கொடியில காயப் போட்டுட்டு வீட்டுக்குள்ள வந்தா, சடசடன்னு மழை அடிக்கும் பாருங்க. மறுபடியும் வெளியில ஓடு, காயப் போட்ட துணியை எடுத்துட்டு வான்னு ஆயிடும்.
            ஒரு மழைக்காலத்து வானத்தோட நிலைமை இப்பிடின்னா மனுஷனோட மனசு அதுக்கெல்லாம் சவால் விடக் கூடியது. ஒரு மனுஷனோட மனசு ஏன் அப்படிச் சிந்திக்குது? ஏன் திடீர்னு அப்படி மாறுனது? அப்பிடிங்றதுக்கான விடைகளை உடனே கண்டுபிடிச்சிட முடியாது. கண்டுபிடிக்காமலே காலப் போக்குல அதுக்கான பதில்கள் தானா வெளியில வரும். அது எப்படின்னா அது அப்படித்தான். அதுக்குத் தகுந்தது போல சம்பவங்களும், போக்குகளும் எப்படியே அமைஞ்சி அது எப்படியோ வெளியில வரும். அதாலதான் எவ்வளவோ அணுகுண்டுகள் உண்டான பின்னும் உண்மைங்ற ஒண்ணு இருக்குல்ல, அது மேல போட்டு அதை மட்டும் அழிக்க முடியல. நிறைய நேரங்கள்ல இந்த உண்மை யாராலும் அழிக்க முடியாத அளவுக்கு எங்கேயோ போயி ஒளிஞ்சிக்குது. நேரம் காலம் பார்த்து அதுவா வெளியில வருது. ஏன் இப்படி உண்மை ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுதுன்னு விளங்கிக்கிறது சாதாரண விசயமல்ல. அது ஆடுற கண்ணாமூச்சி விளையாட்டு முடியறதுக்குள்ள என்னென்னமோ நடந்து போயிடும். இந்தக் கதைக்கு இது ரொம்பவே பொருந்தும். இதோட பொருள் இப்போ உடனடியா உங்களுக்குப் புரியாம போக்குக் காட்டுனாலும் கொஞ்சம் கொஞ்சமா கதை நகர நகர உங்களுக்குப் புரிய ஆரம்பிச்சிடும். இந்த மொத்தக் கதையோட கட்டுமானமே அதுதான்.
            சரியான நேரத்துல சரியான உண்மை தெரிஞ்சிருந்தா இந்தக் கதையே இல்ல. அது வேற ஒரு கதையா ஆயிருக்கலாம். கதையாகவே ஆகாமலேயும் போயிருக்கலாம். ஒரு கதைங்றது அடிப்படையில ஒரு அசாம்பவிதம். அந்த அசாம்பாவித்த சம்பந்தப்பட்டவங்க எப்படி எதிர்கொண்டாங்க அப்படிங்றதுதான். நாட்டுல இப்போ நிறைய அசாம்பவிதங்கள் நடக்க ஆரம்பிச்சிடுச்சு. ஒவ்வொரு அசாம்பாவிதத்தையும் எழுத ஆரம்பிச்சா கதைகளுக்குப் பஞ்சமிருக்காது. இந்த அசாம்பவிதக் கதைகள் ஒரு போதும் அழியாது. அப்படி அழியாம இருக்குறதுக்குக் காரணமே அது நிஜமா இருப்பதுதான். கதை கதையாம் காரணமாம்னு சொல்வாங்களே. ஒரு காரணம் ஒரு கதை.
            சமூகத்துல ஒரு ஆண் ஆண்மையோட இருக்குறதும், ஒரு பெண் பெண்மையோட இருக்குறதும் அவசியமாப் போகுது. நாம்ம இங்க ஆண்மை, பெண்மைன்னு அதோட தன்மைகளைப் பேசல. அந்தத் தன்மைகள் இணைஞ்சு ஓர் உயிரை உருவாக்குறதுக்கு இருக்க வேண்டிய தகுதியைப் பத்தின்னு வெச்சிப்போமே. அப்படி ஒரு தகுதி இல்லங்றதையும் பெரிய விசயமா எடுத்துக்க வேண்டியதில்ல. இயற்கையாவே சில உடம்புக்கு அப்படி ஒரு தன்மை எப்படியே ஏற்பட்டுப் போயிடுது. அதுக்கு யாரைப் போயி என்ன குத்தம் சொல்ல முடியும்? நம்மோட வாழ்க்கையில மாறிப் போன உணவு, வாழ்க்கை முறை, பழக்க வழக்கம்னு நிறைய விசயங்களால அப்படி ஒரு பாதிப்பும் ஏற்பட்டுப் போவுது. அதை வேணும்னூ முடிஞ்ச அளவுக்குத் தடுத்துக்கலாம். அதுவும் முடிஞ்ச அளவுதான். மத்தபடி அப்படி ஒரு தன்மை எப்படியோ ஏற்பட்டுப் போயிடுது. அதை ரொம்ப பெரிசு பண்ண வேண்டியதில்ல. நம்ம நாடு குழந்தைகளோட நாடு. விருப்பப்பட்டா தத்து எடுத்து வளர்க்கலாம். இல்லையா ஏழை பாழை குழந்தைகளுக்கு முடிஞ்ச உதவிய பண்ணி அதுகள நம்ம குழந்தைகளா மனசுக்குள்ள பாவிச்சி நல்லது பண்ணலாம். குழந்தை குட்டிங்க நிறைய வெச்சிருக்கிற நம்ம சொந்தக்காரங்ககிட்ட சொன்னா தூக்கிக் கொடுக்குறவங்களும் இருக்காங்க. எப்படியோ ஒரு தம்பதிக்குக் குழந்தை இல்லைங்றது அவங்கவங்க மனசப் பொருத்து பெரிய விசயமா இருக்கலாமே தவிர மற்றபடி எல்லா குழந்தைகளையும் நம்மோட குழந்தைகளா பாவிச்சுக்கிறதுக்கு எந்தத் தடையுமில்ல.
            எல்லா மனசும் குழந்தைங்க இல்லாத குறையை இப்படிப் பாத்துட்டா எந்தக் குடும்பத்துலயும் குழந்தைங்க இல்லேங்றதால ஒரு பிரச்சனை உண்டாவப் போறதில்ல. சொல்லப் போனா கணவனுக்கு மனைவி ஒரு குழந்தை. மனைவிக்கு கணவன் ஒரு குழந்தை. அதை இல்லேன்னு சொல்லிட முடியுமா? இந்த விசயத்துல ஒவ்வொரு மனசும் பாக்குற விதம் இருக்கே! அங்கேதான் கதையோட முடிச்சு விழுவுது. அந்த முடிச்சு பலபேரோட கழுத்தை நெரிச்சுப்புடுது. அந்த முடிச்சு இறுகாம அதில மாட்டுனவங்களோட கழுத்த வெளியில கொண்டு வர்றது இருக்குப் பாருங்க! அதுலதான் ஒரு மனுஷன் மனுஷனாவும், மிருகமாகவும் தெரியுறான். இத கொஞ்சம் இப்படியே நிறுத்திகிட்டு தஞ்சாவூரு போயிட்டு இருக்குற சித்துவீரனையும், லாலு மாமாவையும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடுவோம்.
            தஞ்சாவூரு இராமநாதன் ஆஸ்பிட்டலு ஸ்டாப்பிங்ல இறங்கி அப்போ முப்பது ரூபாய்க்கு ஒரு ஆட்டோ பிடிச்சிட்டுப் போனா லாலு மாமாவோட வீட்டுக்குப் போயிடலாம். ஆட்டோவுல போயி லாலு மாமாவும் சித்துவீரனும் இறங்குன உடனே வேலனும், பாலாமணியும் ஓடி வந்து கையைப் பிடிச்சுகிட்டுக் கூட்டிட்டுப் போறாங்க. ராசாமணி தாத்தாவும் ஓடி முடியாம ஓடி வந்து, "வாய்யா மாப்பிள்ளே!" என்றபடி அழைத்துக் கொண்டு வருது.
            வீட்டுக்குள்ள நொழைஞ்சதும் சரசு ஆத்தா, "வாங்க! வாங்க! எங்க அண்ணம் பெத்த மவனே! எங்க குடும்பம் வெளங்க வந்த மருமவனே!" அப்பிடிங்குது. சுந்தரி மட்டும் வெளியில வரல. அது அங்க வலது பக்கமா இருக்குற ஓர் அறைக்குள்ள போயி உட்கார்ந்தது உட்கார்ந்ததுதான். சரசு ஆத்தா சித்துவீரன் வாரதுக்கு முன்னாடி எவ்வளவு சொல்லிப் பார்த்தும் கேட்குறாப்புல தெரியல. சரின்னு அதோட போக்குக்கு விட்டுட்டாங்க.
            நடுஹாலுல்ல ஒரு ஷோபா செட்டு கிடக்கு. மூணு பேரு உட்காருற மாதிரி இருக்குற ஷோபா நீள வாக்குல கெடக்கு. அதுக்கு ரெண்டு பக்கமும் ஒத்த ஆளு உட்கார்ற ஷோபா ஒண்ண ஒண்ணு பாத்த மாதிரி கிடக்கு. ஷோபாவ லேசா கையால ஒரு தட்டு தட்டுன்னா தூசியா பறக்குது. லேசா ஒரு மாதிரியான வாடையும் அந்த ஷோபாலேந்து வருது. அதோட அங்கங்க அதோட துணிகளும் கிழிஞ்சிக் கிடக்கு. அது மேல துண்டையோ துணியையோ போட்டு வெச்சிருக்காங்க. இந்த ஷோபா ஷெட்டுக்குன்னு வாங்கிப் போட்ட டீப்பாய் சமையல்கட்டுல மிக்ஸி வெச்சிக்கிறதுக்கு வசதியா அங்கக் கிடக்கு. பாலாமணியும், வேலனும் நீட்டு ஷோபாவுல பக்கத்துப் பக்கத்துல உட்காந்துகிறாங்க. அவங்கப் பக்கத்துல லாலு மாமா உட்கார்ந்திருக்குது. ஒத்த ஆளு உட்கார்ற ஷோபாவுல ஒரு பக்கம் சித்துவீரனும் மறு பக்கம் ராசாமணி தாத்தாவும் உட்கார்ந்திருக்கு.
            எல்லாருக்கும் சரசு ஆத்தா டம்பளர்ல காபியும், ஒரு சின்ன தட்டுல வாழைக்காயி பஜ்ஜியும் போட்டு சுடச் சுட தயாரா வெச்சிருந்ததைக் கொடுக்குது. அதை வாங்குனவங்க கையிலயும், தரையிலயுமா மாத்தி மாத்தி வெச்சி கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட ஆரம்பிக்கிறாங்க. கொடுத்து முடிச்சிட்டு சரசு ஆத்தா மொசைக் போட்ட தரையில பச்சக்குன்னு உக்காந்துக்குது. எல்லாரும் காபியையும் பஜ்ஜியையும் சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் அங்க ஒரு அமைதி நிலவுது. அதைச் சாப்பிட்டு முடித்ததும், தொண்டையைச் செருமிகிட்டு, "அது வந்து விசயம் என்னான்னா மாப்ளே!" என்று ராசாமணி தாத்தா ஆரம்பிக்குது.
            "கண்ணால பார்த்தது பொய்யி, காதல கேட்டது ‍பொய்யி, நடந்ததெல்லாம் பொய்யி. எதுவும் நிசம் இல்லேன்னு சொல்லப் போறீங்க! அதானே!" அப்பிடிங்குது சித்துவீரன். ஆரம்பமே தகராறாக இருக்கிறதே என்று அதற்கு மேல பேசாமல் இருக்கிறது ராசாமணி தாத்தா.
            "இந்தக் குடும்பத்துக்கு ஒன்னய வுட்டா யாரு இருக்கா? நீந்தாம் தூக்கி நிறுத்தணும்யா! ஒன்னய விட்டா வேற நாதி இல்லயா! அதெ நம்பித்தாம் நீயி கேட்டவுடன எதுவும் சொல்லாம தூக்கிக் கொடுத்தோம். எதுக்குன்னா முன்ன பின்னன்னா நீந்தாம் வந்து நிப்பே. தோளுள போட்டுத் தாங்குவேன்னுதாம். இவளுக்கு பதினெட்டுக் கூட முடியல. எல்லாம் தெரிஞ்சுதாம் கொடுத்தேம். ஒன்னய நம்பித்தாம் இந்தக் குடும்பம் இருக்கு. நீயி நினைச்சா தூக்கி நிறுத்தலாம். இல்லன்னே தூக்கிப் போட்டு மிதிச்சிட்டுப் போயிட்டே இருக்கலாம். ரண்டும் ஒங் கையிலதாம்யா இருக்கு. இந்தக் குடும்பத்துக்கு எல்லாமும் நீதாம்யா! வேற ன்னா சொல்றதுன்னே நமக்குத் தெரியல! எம் புள்ளே பாலாமணி! பேருக்குத்தாம் அவ்வேம் இந்த வூட்டோ புள்ளே. நீந்தாம் இந்த வூட்டுக்கு எல்லாமும். நீயி சொல்றபடித்தாம் இந்தக் குடும்பமே கேக்கும். நீயி சொல்றதுதாம் இந்தக் குடும்பத்துக்கு வேத வாக்கு." என்கிறது சரசு ஆத்தா.
            "நாம்ம கேட்டவுடனே சுந்தரிய தூக்கிக் கொடுத்தீங்க. இல்லேன்ன சொல்ல!" என்று சித்துவீரன் சொல்லி முடிப்பதற்குள்,
            "ஒண்ணுஞ் புதுசா சொல்றதுக்கு எதுவுமில்ல. நீயி சொல்ற வார்த்தைலதாம் ஒம் மாமம் குடும்பம் இருக்குறதும், இல்லாம போறதும். குடும்பத்தய ஒங் காலடியில போட்டுதாம் கேக்குறாங்க. ந்நல்ல பதிலா நீதாம்டா சொல்லணும் சித்து!" என்கிறது லாலு மாமா.
            இப்போது சித்துவீரனின் கண்கள் பாலாமணியை நோக்கிப் போகிறது. தன்னை மச்சாங்காரன் பார்ப்பதைப் புரிந்தும் பாலாமணி எதுவும் பேசவில்லை. அப்படியே வேலனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாலாமணி எழுந்திருக்கிறது. எழுந்து வந்து சித்துவீரன் காலில் விழுந்தது விழுந்ததுதான்.
            "யேய் யப்பா! ன்னா காரியம் பண்றே? நீயி டாக்கடருக்குப் படிக்கிறவேம். டாக்கடருக்கப் படிச்சவேம். எங் காலுலப் போயி விழுவுறீயே? எம் மச்சாம்னா கெத்தால்ல இருக்கணும். இப்டியா காலுல வுழுவுறது?" என்கிறது சித்துவீரன்.
            ராசாமணி தாத்தா, லாலு மாமா, சரசு ஆத்தா, வேலன் உட்பட யாரும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எல்லாருக்கும் பூமியே ரண்டாகப் பிளந்தது போன்று ஆச்சரியமாக இருக்கிறது. புலிப் பசித்து புலிக்குட்டியைத் தின்னது போல இருக்கிறது. ஒந் தங்காச்சியக் கட்டிக்கிட்டவன், வயசுல மூத்தவன், குடும்பத்தோட மூத்த மருமவன்னு எவ்வளவோ ராசாமணி தாத்தா சொல்லிக் காலில் விழச் சொன்ன போதெல்லாம் விழாத பாலாமணியா இது என்று அதுக்கும் கெரகச்சாரமே தாறுமாறாகச் சுற்றுவது போல இருக்கிறது. இது இயற்கையில் நடக்காத காரியம்தான். மழைக்காலத்துல பெய்யுற மழை மாதிரிதான். எப்போ மழை வரும்? எப்போ வெயிலு அடிக்கும்? யாருக்குத் தெரியும். எப்போ வேணாலும் என்ன வேணாலும் நடக்கும். சமயத்துல மழையே பெய்யாம வெயில்லாவே இருந்த மழைக்காலமும் இருந்திருக்கு. சமயத்துல வெயிலே அடிக்காம மழையாவே பேஞ்ச கொடைக்காலமும் இருந்திருக்கு. அப்படித்தான் நடக்குது இங்க நிலைமை. மனுசனோட மனசு வானத்தைப் போலங்றது இங்க எப்படி அர்த்தம் பண்ணிக்கிறது? வானம் போல பெரிசுன்னா? வானத்துல பெய்யுற மழையப் போல இஷ்டத்துக்கு ஒரு தினுஷா மாறும்னா?
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...