செய்யு - 201
லாலு மாமா வடவாதிக்கு வந்து சித்துவீரனைத்
தஞ்சாவூருக்கு அழைத்து வந்தது. பெரிதாக இந்த விசயங்கள் ஊருக்குள் கசியவில்லை. அதற்காக
கசியாமலும் இருக்கவில்லை. என்னதான் தண்ணீரை அணைப் போட்டுத் தடுத்தாலும் கொஞ்சம் கசிவு
இருக்கத்தானே செய்யும். இங்கே திட்டையில்
வெங்குவும், தம்மேந்தி ஆத்தாவும் பேசிக் கொள்வது போல அங்காங்கே கொஞ்சம் ரகசியமாகப்
பேசிக் கொண்டார்கள்.
முருகு மாமா வீட்டுக்கும் அரசல் புரசலாக
செய்தி போயிருந்தது. சித்துவீரன் பொறப்பிலிருந்தே சொன்னதைக் கேட்கும் ஜென்மமில்லை
என்பது முருகு மாமாவுக்குத் தெரியும். நாம்ம ஒண்ணு சொன்னால் அவன் ஒண்ணு சொல்வான்னு
அதுக்கு நல்லாவே புரியும். அதுக்காக புள்ளைய விட்டுட முடியுமா? ஒரு எட்டுப் போய் பார்க்க
மனசு துடிக்குது. போறதுக்கு முன்னாடி நீலு அத்தைகிட்ட யோசனை கேக்குது முருகு மாமா.
"பையனோட சங்கதி அப்பிடி இப்பிடிங்ற
மாரி இருக்கே! எதாச்சிம் யோசிச்சு வெச்சு இருக்கீயா?" அப்டிங்றார் முருகு மாமா.
"நல்லா இருந்த வூட்டைப் பிரிச்சுக்
கொண்டுப் போன பயெ எப்பிடி நல்லா இருப்பாம்? அவ்வேம் பேர்லதாம் கடையெல்லாம் போட்டீங்க.
புள்ளைங்கள்ல அவனையும், தேசிகாவையும் தூக்கிக் கொஞ்சுவீங்க. அதுல கெளம்புன மண்டைக்கனம்தான்
அந்தப் பயலுக்கு. யாரயும் மதிக்கிறதில்ல. எல்லாத்தையும் வுடுங்க. கொல்லைய ரண்டா பிரிச்சு
வேலி வெச்சாம் பாருங்க. எனக்கு அப்டியே ச்சீன்னுப் போயிடுச்சி. இவம்லாம் புள்ளையே
இல்லன்னு. இன்னிக்கு ன்னா புதுசா வந்திருக்குப் புள்ளைப் பாசம்? ஒங்க தங்காச்சிப் பெத்த
சிறுக்கி மவளெ கட்டிக்க வாணாம்னு தல தலயா அடிச்சிக்கிட்டோம் இல்லியா? கேட்டானா பாவிப்
பய மவென்? அதாங் இப்ப அனுபவிக்கிறாம். அந்தச் சிறுக்கிப் பய மவதாம் ன்னா கேள்வி கேட்டா?
அப்பிடிக் கேட்டவ புருஷன வெச்சி எப்பிடி இருந்துருக்கணும்? ஒரு புருஷம் இருக்கிறப்பவே
இன்னொரு புருஷம் தேவையா இருக்கு அவளுக்கு. இந்தக் கூத்தையெல்லாம் எஞ்ஞப் போயி சொல்றது?
பெத்த வயிறு பத்தி எரியுது. இப்பிடிப் போறதா? அப்பிடிப் போறதா? ஒண்ணும் புரியல. அந்த
நாயீ நாம்ம சொன்னாத்தாம் கேக்குமா? ஒண்ணும் சுய புத்தி இருக்கணும். இல்லே சொல்புத்தி
இருக்கணும். ரண்டும் இல்லாத மோடுமுட்டிகிட்ட போயி என்னத்த பேசப் போறீங்களோ? ஏத்தோ
பண்ணித் தொலைங்க! வெளங்காம போயிடுவான் அவ்வேன்! கட்டையில போயிடுவா அவ்வே!"
என்கிறது நீலு அத்தை.
"ந்த்தா நீயி ன்னா சொல்றே? அத்தே
தெளிவா சொல்லு. ஒரு யோஜனைன்னு கேட்டா ரண்டும் பக்கமும் கொழப்பி வுடுறதே வூட்டுல
இருக்குற பொண்டுங்களோட வேலையா இருக்கே!" என்கிறது முருகு மாமா.
"பெத்தக் கடமைன்னு ஒண்ணு இருக்கே.
போயித் தொலைங்க! எல்லாம் நாம்ம வாங்கி வந்த வரம். தென்னைய போட்டிருந்தா தண்ணீரா
தந்துருக்கும். இந்தத் தொன்னைய பெத்ததுக்குக் கண்ணீரா அவிஞ்சு கொட்டுது." என்கிறது
நீலு அத்தை.
அதற்கு அப்புறம்தான் முருகு மாமா வடவாதி
பஸ் ஸ்டேண்ட் பக்கத்தில் இருந்த சித்துவீரன் வீட்டுக்குப் போயிப் பார்த்தது.
வடவாதி பஸ் ஸ்டேண்டு கடைத்தெருவில் இருக்கும்
உலகநாதன் கடையில் காலையில் எழுந்தவுடன் டீ குடித்து வரும் முருகு மாமா. அப்படிக் குடிக்கும்
போதெல்லாம் ஒரு எட்டு சித்துவீரன் வீட்டைக் கடையில் இருந்தபடியே ஒரு எட்டுக் கண்ணைச்
சுழற்றிப் பார்க்காமல் இருக்காது. சில நேரம் ஒரு எட்டுப் போய் வருவோமா என்று தோன்றும்
அதுக்கு. டீக் கிளாஸில் ஒரு மிடறு டீயைக் குடிப்பதற்குள் மனசு மாறி விடும். டீயைக்
குடித்து விட்டு, காசை எடுத்துக் கொடுத்து விட்டு இங்கே வீட்டை நோக்கித் திரும்பி
வந்து விடும்.
பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட
பின் முருகு மாமா உலகநாதன் கடையில் ஸ்ட்ராங்காகப் போடச் சொல்லி ஒரு டீ அடித்தது.
நாலு இனிப்பு போண்டாவை மடித்துக் கட்டச் சொல்லி வாங்கிக் கொண்டது. சித்துவீரனுக்கு
இனிப்பு போண்டா என்றால் அம்புட்டு இஷ்டம். சித்துவீரன் சின்ன வயதாக இருக்கும் போது
எங்கு போனாலும் இனிப்புப் போண்டா வாங்காமல் வராது முருகு மாமா.
நாட்டுல எந்தப் பிள்ளைங்க அப்பன் சொத்தைப்
பிரிச்சுக் கொடுன்னு சண்டை வளர்க்காம இருந்திருக்கு? இதுக்காக அடிதடி சண்டை, கொலை
வரை எல்லாமும் நடக்குது. நம்ம புள்ள அந்த அளவுக்காப் போனான்? போவல. ஏத்தோ அந்தச்
சிறுக்கிச் சொல்லி என்ன செய்யணும்னு தெரியாம செஞ்சிப்புட்டான். இப்போ வெவரம் தெரிஞ்சுகிட்டான்.
இந்த நேரத்துல கூட தொணையா நிக்கலன்னா எப்புடி? இப்படியெல்லாம் நெனைச்சுகிட்டுதான்
முருகு மாமா சித்துவீரன் வீட்டுக்குள் நாலு இனிப்புப் போண்டாவோட நுழையுது.கதவெல்லாம்
நல்லா தொறந்து கெடக்கும். எவனாவது இப்படிக் கதவைத் தொறந்து போட்டுகிட்டு நடுக்கூடத்துல
பப்பரைக்கான்னு படுத்துக் கெடப்பானான்னு அது வேற மனசுல ஓடுது முருகு மாமாவுக்கு.
சித்துவீரன் நடுக் கூடத்துக்குள் ஷோபா
மேல் படுத்துக் கிடக்கு. படுத்தபடியே அதோட வாயில அப்பைக்கப்போ உள்ளே போயி வெளிய
வந்து புகையைக் கக்கிட்டு இருக்கு ரசூலு பீடி. கூடம் முழுக்க பீடி நாத்தமா இருக்கு.
அந்த நாத்ததுக்கு தொண்டையைக் கனைச்சாரோ இல்லே தான் வந்திருக்கிறதைக் காட்டணும்ங்றதுக்காகத்
தொண்டையைக் கனைச்சுகிட்டாரோ தெரியல முருகு மாமா. அவரு கனைச்ச கனைப்புல சித்துவீரன்
கதவுப் பக்கமா நோக்கி திரும்பி பார்க்குது.
அப்படி சட்டுன்னு ஒரு கேள்விய சித்துவீரன்
கேட்கும்னு முருகு மாமாவேஎதிர்பார்க்கல. "எஞ்ஞ வந்தே?" அப்பிடிங்குது சித்துவீரன். முருகு மாமாவுக்கு அப்படியே மூஞ்சுல
அடிச்ச மாதிரி ஆயிடுச்சு. ஒரு கனம் மூச்சே நின்னுடும் போல இருக்கு. ஏம்டா வந்தோம்னு
ஆயிப் போகுது. மானங்கெட்டதனமா வந்தது வந்தாச்சி. இனுமே யோசிச்சு ன்னா பண்றதுன்னு
முருகு மாமா பேச ஆரம்பிச்சிச்சு. "ஊருல அரசலு புரசா என்னென்னமோ பேசிக்கிறாங்கடா.
மானம் போவுது. அதாம்டா என்ன ஏதுன்னு ஒண்ணும் புரியல. ஒன்னய பாத்துட்டுப் போவலாம்னு..."
என்று முருகு மாமா முடிப்பதற்குள், "அவ்வே எம் பொண்டாட்டி. அவளெப் பத்தி நமக்குத்
தெரியும். அதெப் பத்தி நீயி ஏம் விசாரிக்க வர்றே? ஒம் பொண்டாட்டியப் பத்தி நாம்ம எதாச்சிம்
விசாரிக்கிறேனா? அதாங் அப்பனும் இல்ல, மவனும் இல்லேன்னு ஆயிப் போச்சி. அப்புறமென்ன?
வந்து நின்னுகிட்டு குலாவிகிட்டு இருக்கே?" என்கிறது சித்துவீரன்.
"ஏம்டா இப்பிடிப் பேசுறே? புத்திப்
பெசவிப் போயிட்டாடா?" என்கிறது முருகு மாமா.
"ஒனக்குத்தாம் பெசவிப் போயிடுச்சு.
ஊருல ஆயிரம் பேசட்டுமேய்யா. ஒம் மருமவ மேல ஒனக்கு நம்பிக்கை வாணாமா? என்ன நெனச்சிகிட்டுய்யா
விசாரிக்க வர்றே நீயி? இன்னொரு வார்த்த எம் குடும்பத்தப் பத்தியோ, எம் பொண்டாட்டியப்
பத்தியோ ஒரு வார்த்த கேட்ட செருப்பக் கெழட்டி அடிப்பேம்!" என்கிறது சித்துவீரன்.
"அய்யோ! அந்தச் சிறுக்கி ன்னா மாய
மந்திரம் பண்ணாளோ? எஞ்ஞ இவனெ முடிஞ்சாளோ? இப்பிடிப் பேசுறானே எம் பயெ!" என்கிறது
முருகு மாமா.
"யோவ் பேசுறத மரியாதியாப் பேசு.
போன்னு சொன்னா போவீய்யா! அத்தெ விட்டுப்புட்டு ஒப்பாரி வெச்சுகிட்டு நிக்குறே? ஏம்
ஒம் பொண்டாட்டி ஒன்னய மாய மந்திரம் பண்ணி எஞ்ஞ ஆத்தாவை வெரட்டி அடிக்கலையா? லாலு மாமாதான
அப்ப வெச்சி பாத்துக்கிச்சி. ஒன்னய மடியில வெச்சி முடிஞ்சிக்கலையா ஒம் பொண்டாட்டி?"
"ஏலே அத்து ஒங்க அம்மாடா!"
"அம்மாவோ நொம்மாவோ! ஒங் குடும்ப
வெவகாரத்துல நாம்ம வந்து நிக்குறேன்னா? இல்லேல்ல. பெறவு நீயி வந்து ஏம் ஏங் குடும்ப
வெவகாரத்துல வந்து நிக்குறே? ஏய் கெழட்டு மூதி! வெளியில போயித் தொல. இல்லே அசிங்கமாப்
போயிடும். நாறிப் போயிடுவே!"
"கெட்டு சீரழிஞ்சு வந்து நிப்பேடா!
அப்ப வந்து நிக்குறேம். இப்ப வந்தேம் பாரு. எம் புத்திய செருப்பாலதாம் அடிச்சுக்கோணும்!"
என்றபடி போன முருகு மாமாதான். அதன் பிற்பாடு சித்துவீரன் எக்கேடு கெட்டாலும் கெட்டுப்
போகட்டும் என்று விட்டு விட்டது.
முருகு மாமாவை இப்பிடிப் பேசியதைக் கேட்டு,
நீலு அத்தை நாக்கைப் பிடுங்கிக்கிற மாரி நாலு வார்த்தைச் சித்துவீரனைக் கேட்க வேணும்
என நினைத்தது. ஆனால் சித்துவீரன் அதை விட நாக்கைப் பிடிடுங்கிக்குற அளவுக்குக் கேள்வி
கேட்பான் என்று சொல்லி முருகு மாமா நீலு அத்தையைத் தடுத்து விட்டது.
இப்போ லாலு மாமா வந்து தஞ்சாவூருக்கு
அழைத்துப் போகும் போது சித்துவீரன் மனசுக்குள் என்னென்னமோ எண்ணங்கள் ஓடுது. என்ன
மாதிரியான முடிவு வரும்? எப்பிடிப் போகும் வெவகாரம்? என்றெல்லாம் மனசு கிடந்து அடிச்சுக்குது.
மன்னார்குடி போற வரைக்கும் லாலு மாமா
எதுவும் பேசல. "வா தஞ்சாவூரு வரைக்கும்!" அப்பிடின்னு சொன்னதோட சரி. மன்னார்குடிய
எறங்கி பஸ் ஸ்டாண்டு டீக்கடையில் ஆளுக்கொரு டீ அடிச்சிகிட்டு தஞ்சாவூருல பஸ்ல ஏறி
உக்காந்தப் பெறவுதான் பேச ஆரம்பிக்குது.
"ஏலே சித்து! அத்து ரொம்ப நல்ல பொண்ணுடா.
சின்ன வயசுல்ல. அதாங் தடுமாறிப் போவுது. நீயி கேட்டவுடனே ஒங்க மாமனும் அத்தையும் பொண்ணத்
தூக்கிக் கொடுக்கலையா?" அப்பிடின்னு லாலு மாமா பேசுறதுக்குள்ள சித்துவீரன் கண்ணு
ரெண்டு பொல பொலவென கண்ணீரைக் கொட்டுது.
"நம்மால சுந்தரியப் பிரிஞ்சி இருக்க
முடியாது சித்தப்பா!" என்று வார்த்தைகள் குழறுகிறது சித்துவீரனுக்கு.
"நமக்குத் தெரியும்டா! நீயும் நாம்ம
தூக்கி வளத்தப் பயெ. அதுவும் நாம்ம தூக்கி வளத்தப் பொண்ணு. யாரும் நம்மல மீறிப் போவ
மாட்டீங்கன்னு. அஞ்ஞ தஞ்சாவூருல பாலாமணி, வேலனெல்லாம் வந்துருக்காங்க. ரண்டு பேரும்
டாக்கடருங்கடா. ஒனக்கு ன்னா கஷ்டம்னாலும் நின்னுத் தீப்பானுங்க. காசா பணமா என்ன கொறைச்
சொல்லு? ரண்டு பயணம் போயி வந்தீன்னா ஊருல ஒரு பட்டறையப் போட்டுகிட்டு ராசாவா பொழைச்சிக்கலாம்.
நாம்மல்லாம் இருக்குறப்ப ஒனக்கு ன்னடா கவலே?" என்கிறது லாலு மாமா.
"ஒன்னயத்தான் நம்பி இருக்கேம் சித்தப்பா!"
என்கிறது சித்துவீரன் லாலு மாமாவின் தோளில் சாய்ந்தபடி.
வாழ்க்கையில் சாதாரண பிரச்சனைகள் கொஞ்சம்
கொஞ்சமாகப் பெரிதாகி தீர்க்க முடியாத அசாதாரணப் பிரச்சனைகளாகி விடுவதுண்டு. அசாதாரணப்
பிரச்சனைகள் சர்வ சாதாரணமாகத் தீர்ந்து விடுவதும் உண்டு. பிரச்சனைகள் சாதாரண தன்மையிலிருந்து
அசாதாரணமான தன்மைக்கு மாறுவதும், அசாதாரண தன்மையிலிருந்து சாதாரண தன்மைக்கு மாறுவதும்
மதில் மேல் பூனை என்பார்களே அப்படித்தான். எந்தப் பக்கத்தில் அந்த பூனை தாவிப் போகும்
என்பது அந்தப் பூனைக்கே வெளிச்சம். இப்போது ஒரு பெரிய பாரம் தன்னை விட்டு இறங்குவதைப்
போல இருக்கிறது சித்துவீரனுக்கு. இதுநாள் வரை மனசுக்குள் பற்றியிருந்து பத்திகிட்டு
எரிந்த பிரச்சனை பிரச்சனை எல்லாம் அணைஞ்சுப் போய் இல்லாமல் போனதைப் போல இருக்கிறது.
அவர்கள் ஏறியிருந்த பஸ்ஸூ காளவாய்க்கரையைத் தாண்டியதும் வேகம் பிடிக்கத் தொடங்குகிறது.
மனசு என்னமா பாரமா இருந்தாலும் தஞ்சாவூரு பஸ்ல ஏறிப் போயி திரும்பி வந்தாப் போதும்.
மனசுல இருக்குற எல்லாம் எறங்கிப் போயிடும். இப்போ போறப்பவே அப்படித்தான் இருக்கு
சித்துவீரனுக்கு. என்ன ஆகும்? எப்படிப் போகும்னு சந்தேகத்தோட வடவாதிக்கு வந்த லாலு
மாமாவுக்கும் பிரச்சனையை எப்படியும் சமாளிச்சுப்புடலாம்னு நம்பிக்கை வந்து இருக்கு.
*****
No comments:
Post a Comment