22 Sept 2019

வேலைக்குக் கிளம்புதல்



செய்யு - 215
            காலையில சீக்கரமே எழுந்திருக்க பழக்கம் விகடுவுக்கு உண்டு. அஞ்சு அஞ்சரை வாக்குல எழுந்திரிச்சிடுவான். இன்னிக்கு இன்னும் சீக்கிரமே நாலு மணிக்கே எழுந்திரிக்கிறான்.
            திடீர்னு வூட்டுல பொழுது விடியாத நாலு மணிக்கெல்லாம் லைட்டைப் போட்டுட்டு வீட்டுல ஓர் உருவம் எழுந்து நடமாடற அரவத்தைக் கேட்டு வெங்கு முழிச்சுக்குது. இந்தப் பயெ ஏம் இப்பிடி பண்றாங்ற கேள்வி அதுக்குள்ளாற ஓடுது. ராத்திரி இந்தப் பயெ வந்து படுத்ததும் தாமசம். ராத்திரி சாப்பாடும் இல்ல. இப்போ எழுந்திரிச்சு நடமாடுறது ரொம்ப சீக்கிரம். என்ன நெனைச்சுகிட்டு இவன் இப்பிடி பண்றாங்ற யோசனையில, ஒருவேளை பசியா இருக்குமோங்ற சந்தேகம் வர, "ஏம்ப்பா! பசிக்குதா? சோத்துல தண்ணி ஊத்தி வெச்சு இருக்கேம். பிழிஞ்சிப் போடவா?" என்குது வெங்கு.
            அம்மா கேட்டதுக்கு ஒண்ணுமே சொல்லாம அவம் பாட்டுக்குப் போறான். வெங்கு எழுந்திரிச்சுக்குது. "ஏம்ய்யா ன்னா பண்ணுது?" என்கிறது கிட்டே வந்து.
            "இனிமேல் இதுதான் நாம்ம எழுந்திரிக்கிற நேரம்!" அப்பிடிங்றான் விகடு.
            "ஏம்ய்யா இப்பிடிப் பண்றே? போயி நல்லா படுத்துத் தூங்குய்யா! ராத்திரி வந்து படுத்ததும் தாமசம். இப்பிடி சாப்பிடாம, தூங்காம கொள்ளாம இருக்கக் கூடாதுய்யா!" என்கிறது வெங்கு.
            விகடு அதைக் கேட்டுக் கொள்கிற மாதிரி தெரியல. வெங்கு என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறது. அதெல்லாம் செவிடன் காதுல ஊதுன சங்குன்னு சொல்வாங்களே! அந்தக் கதையா இருக்கு. இது தோதுபட்டு வராதுன்னு அது தூங்கிட்டு இருக்குற சுப்பு வாத்தியார எழுப்புது. அவரு எழுந்திரிச்சு வந்து, "போயி படுடா!" அப்பிடிங்றார்.
            விகடு பய அதுக்கும் மல்லுகட்டிகிட்டு எதுவும் காதுல விழாதது போல அவன் வேலையைப் பார்த்துட்டு இருக்கான்.
            "இவ்ளோ சீக்கிரம் எழுந்திரிச்சி ன்னா பண்ணப் போறே?" அப்பிடிங்றார் சுப்பு வாத்தியார்.
            "நாம்ம வேலைக்குக் கிளம்பியாகணும்!" அப்பிடிங்றான் விகடு.
            "ன்னடா வேல? எங்க போயிப் பாக்கப் போறே?" அப்பிடிங்றார் சுப்பு வாத்தியார்.
            "நேற்று திருவாரூரில் வேலையில் சேர்ந்துட்டேன். தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்ங்ற அலுவலகத்தில வேலை!" அப்பிடிங்றான் விகடு.
            "அதுக்கு?"
            "வேலைக்குக் கிளம்ப வேண்டும்!"
            "பஸ்ஸூ கவுந்துப் போயி கெடக்குடா! அது சரியாயி ஓட பத்து பாஞ்சி நாளாவும். அது சரியாயி ஓடுனாவும் அதுல ஒன்னய அனுப்ப இஷ்டமில்ல. நீயி வேலைக்கும் போவ வாணாம், ஒண்ணும் வாணாம். வூட்டுல இரு. ஒனக்கு வேல வரும். அப்போ போவலாம்."
            "முடியாது! நாம்ம கிளம்பியாகணும்!"
            "எப்பிடிடா போவே? ஏம்டா இப்பிடிப் படுத்துறே?"
            "சைக்கிள்ல!"
            "திருவாரூரு வரைக்கும் சைக்கிள மிதிச்சிட்டே போயிடுவீயா? பாஞ்சி கிலோ மீட்டருக்கு மேல இருக்கும்டா!"
            "போவேன்!"
            "அதெப் பத்தி ஒனக்குத் தெரியாதாடா? ஆதங்கத்துல பேசுனதெ மனசுல வெச்சிகிட்டு ஒண்ணு கெடக்க ஒண்ணு பண்ணாதடா? குடும்பம் இப்போ இருக்குற நெலையில நேரமே சரியில்லைடா!"
            "நாம்ம அப்படியே உட்கார்ந்திருந்தால் நேரம் எப்போ சரியாகும்?" என்கிறான் விகடு.
            "அவங்கிட்ட பேசாதீங்க! ஒண்ணு கெடக்க ஒண்ணு பேசுவாம். ஒண்ணும் சொல்றத கேக்குற நெலமையில அவ்வேம் இல்ல. அவ்வேம் புத்திக்குப் போயித்தாம் நிப்பாம் அவ்வேம்!" என்கிறது வெங்கு.
            "கொஞ்சம் கூட யோஜனை வாண்டாமா? எத்தினி நாளுக்கு சைக்கிளு மிதிச்சிப் போவாம்?" என்கிறார் சுப்பு வாத்தியார்.
            "ஒங்க டிவியெஸ்ஸூ வண்டியத்தாம் எடுத்துட்டுப் போவச் சொல்லுங்களேம்! யில்ல நீங்க வேலையில்லாம ச்சும்மாத்தான படுத்திட்டு இருக்கீங்க. வேலைக்குப் போறேங்கற அவனையாவது அழைச்சிட்டுக் கொண்டு போயி விட்டுட்டு அழைச்சிட்டு வாங்களேம்!" அப்பிடிங்குது வெங்கு.
            இப்படி வெங்கு பேசுவது பணிநீக்கம் செய்யப்பட்டு வீட்டில் இருக்கும் சுப்பு வாத்தியாருக்கு பொட்டில் அடித்தது போல இருக்கு. அவருக்குக் கொஞ்சம் கோபம் வரத்தான் செய்யுது. இருந்தாலும் நாம்ம எதையாவது கோவத்துல சொல்லி, அதுக்கு வெங்கு ஒண்ணு கெடக்கச் சொல்லி புதுப் பிரச்சனை வேற எதாச்சிம் கெளம்பிடுமோங்ற யோஜனையில, ரொம்ப ஜாக்கிரதையா அதைக் கண்டுக்காதது போல, "அதெல்லாம் சரிபட்டு வாராது. அவனெ வூடு தங்கச் சொல்லு!" அப்பிடிங்றார் சுப்பு வாத்தியார்.
            "அதாங் அப்பா சொல்றார்லய்யா! நாம்ம வாணாலும் வேலைக்கிப் போயிச் சம்பாதிச்சி போடுறேம்யா! அப்பா சொல்றதெ கேளுய்யா!" அப்பிடின்னு கெஞ்சுது வெங்கு.
            "இதுக்கு மேல பேசுனீங்க அவ்வளவுதாம்! திருவாரூருக்கு வேலைக்குப் போக மாட்டேம். சென்னைக்குக் கிளம்பிடுவேம்." அப்பிடிங்றான் விகடு.
            "அய்யோ யய்யா! அவனெ விடுங்க! பேசாம உள்ள போங்க நீங்க! அவ்வேம் இஞ்ஞ திருவாரூல வேலைய பாத்துகிட்டு கண்ணு முன்ன வந்து போயிட்டுக் கெடக்கட்டும். நீயி இஞ்ஞயே வேலயப் பாருய்யா! அவரு கெடக்குறாரு. நாம்ம பாத்துக்கிறேம்!"னு ஒரே நேரத்துல விகடுவுக்கும், சுப்பு வாத்தியருக்கும் அப்படியும் இப்படியுமாக பேசுது வெங்கு.
            சுப்பு வாத்தியார் ஒண்ணும் சொல்லாமல் திண்ணைக்குப் போய் லைட்டைப் போட்டுக் கொண்டு உட்கார்றாரு. அவர் மனசுக்குள்ள கவலை அப்பியது போல இருக்கு.
            வெங்கு அவசர அவரமாக வாளி‍யை எடுத்து தண்ணீரைப் பிடித்து வாசல் தெளித்து கூட்டத் தயாராகிறது. விகடு பல்லைத் துலக்கி, குளித்து முடித்து விட்டு வந்து பார்க்கும் போது வெங்கு சமையல்கட்டில் வேலையை ஆரம்பித்து இருக்கிறது. விகடுவைப் பார்த்ததும், "எத்தனை மணிக்குய்யா கிளம்புவே?" அப்பிடிங்குது.
            விகடு, "எட்டு மணி!" அப்பிடிங்றான்.
            "அதுக்கு ஏம்யா இவ்ளோ சீக்கிரத்துலயே எழுந்திரிச்சி வீட்டையே அமளிதுமளி பண்றே? எதுலய்யா போவப் போறே?" அப்பிடிங்குது வெங்கு.
            "சைக்கிள்!" என்று அழுத்தமாய்ச் சொல்றான் விகடு.
            "அவரு டிவியெஸ்ஸூ வண்டி சும்மாத்தான கெடக்கு! அதுல போயேம்யா! பாஞ்சி கிலோ மீட்டருல்லாம் சைக்கிளு மிதிச்சேன்னா ஒடம்பு தாங்காதய்யா!"ங்குது வெங்கு.
            "சைக்கிள்! சைக்கிள்தான்!"  வெளியே வர்ற விகடுவோட குரல்ல அழுத்தம் முன்னயக் காட்டிலும் கூடுது.
            "யய்யோ! இவனுக்கு வர்ற கோவம் இருக்கே! செத்துப் போன எஞ்ஞ அப்பனெ தாண்டிப்புடுவாம் போலருக்கே! நீயி எதுலயாவது போய்யா! ஒன்னய இனுமே நாம்ம ஒண்ணும் சொல்லல. வூட்டுல எதாச்சிம் நடந்தா அதுக்குக் காரணம் நாம்மதான்னு ஒங்க அப்பம் நம்மள போட்டுப் புடிபுடின்னு புடிக்குறாரு. ஒங்க ரண்டு பேருக்கும் இடையில நாம்ம மொத்துப்பட்டு சாவ முடியாதுய்யா!" அப்பிடிங்குது வெங்கு.
            இதையெல்லாம் திண்ணையிலேர்ந்து கேட்டுகிட்டே உக்காந்திருக்குற சுப்பு வாத்தியாருக்கு மவனோட மனசை மாத்த முடியாதுன்னு புரிஞ்சிப் போவுது. அவரு எழுந்திரிச்சி டிவியெஸ்ஸூக்குப் பக்கத்துல கெடக்குற பழைய சைக்கிளை எடுத்து வாகா நிப்பாட்டிக்கிட்டு ஒரு பழைய துணிய தேடி எடுத்து தொடைக்க ஆரம்பிக்கிறாரு. வூட்டுக்கு உள்ளார இருக்குற சைக்கிளு பம்பை எடுத்துட்டுப் போயி காத்தை அடிச்சி டயர்ர விரலால சுண்டி விட்டுப் பார்த்து காத்து சரியா இருக்கான்னு பாக்குறாரு. சைக்கிளு பெடலை அழுத்தி சக்கரம் சரியா சுத்துதான்னு பார்த்துட்டு, உள்ளே வந்து தேங்கா எண்ணெயைப் போட வேண்டிய எடத்துக்கெல்லாம் போட்டுட்டு அப்படியே சைக்கிளு ஸ்டாண்டை எடுத்து விட்டுட்டு சைக்கிளை வெளியே கொண்டு போறாரு. ஒத்தப் பெடல்ல கால வெச்சி அழுத்தி சைக்கிள மிதிச்சி அதுல ஏறி உட்கார்ந்துட்டு இருட்டு விலகாத தெருவுல ஒரு ரவுண்டு போயிட்டு வர்றாரு. பரவாயில்ல சைக்கிளு நல்ல ஓட்டமாத்தான் போவுதுன்னு அவருக்கு ஒரு திருப்தி வருது. திரும்ப சைக்கிளைக் கொண்டாந்து ஸ்டாண்ட் போட்டு திண்ணையில நிறுத்துனவரு திரும்பவும் வண்டியை ஒரு துடை துடைக்கிறாரு. துடைச்சிட்டு பெடலை கையால அழுத்தி சக்கரம் சுத்துறதைப் பார்க்குறாரு. அது நேரா சுத்துதா, சாய்ஞ்ச மாரி சுத்துதான்னு இப்படியும் அப்படியுமா அதை நோட்டம் வுடுறாரு. வுட்டாக்கா சைக்கிளு சக்கரம் சுத்துறதை வெச்சி ஆராய்ச்சியே பண்ணிடுவாரு போலருக்கு.
            குளிச்சு முடிச்ச அஞ்சு மணிக்கெல்லாம் வந்த விகடு புத்தகங்களை ஒரு பார்வை பாத்துட்டு, நோட்டுல என்னென்னமோ எழுதிகிட்டுக் கெடக்குறான். அங்க சமையலை வெங்கு ஆறரை மணிக்கெல்லாம் முடிச்சிட்டு இவன் உட்காந்திருக்குற ரூமை எட்டிப் பார்க்குது. அது சமையலு முடிஞ்சிட்டுங்றதுக்கான குறியீடு அப்பிடிங்றது விகடுவுக்குப் புரியுது.
            விகடு எழுந்திரிச்சிப் போயி சமையலுகட்டுல உக்காந்ததுமே அது தட்டை எடுத்து வெச்சி அவசரம் அவசரமா செஞ்சு வெச்ச சாப்பாட்டைப் போடுது. இந்தப் பயெ சாப்பிட்டு முடிக்க எப்படியும் அரை மணி நேரத்துக்கு மேல ஆவும். அவன் சாப்பிட்டு முடிச்சு சட்டை, பேண்டை மாட்டிட்டு வெளியே வந்தா ஒரு ஒயர் கூடையில ஒரு சாப்பாடு டப்பாவைப் போட்டு இவ்வேன் கையில கொண்டு வந்து கொடுக்குது வெங்கு.
            "அண்ணே! எங்க போவுது?" அப்பிடின்னு கண்ணைக் கசக்கிகிட்டு அப்போதாம் எழுந்திரிச்சி வந்து கேட்குறா செய்யு.
            "ம்ஹூம்! வூட்டுல இந்நேரத்துக்கு ஒரு பூகம்பமே நடந்துப் போயிக் கெடக்கு. இப்பதாம் எழுந்திரிச்சி எங்கப் போறேன்னு கேளு!" அப்பிடிங்குது வெங்கு.
            செய்யு விகடுவின் பக்கத்தில் ஓடி வந்து, "எங்கண்ணே போறே?" அப்பிடிங்குது.
            "ஏம்டி வெளியில கெளம்புறவன எங்க போறன்னு கேட்கக் கூடாதுன்னு தெரியாது ஒனக்கு? வாடி உள்ளாற!" அப்பிடிங்குது வெங்கு.
            "அண்ணே! எங்க போவுதுன்னுதான கேக்குறேம்! நீயும் சொல்ல மாட்டேங்றே! அண்ணனயும் கேக்க வுட மாட்டேங்றே?" அப்பிடிங்குது செய்யு.
            "ஏம் ஒங்க அப்பம் ஒங் கண்ணுக்குப் படயலயா? அவருகிட்டப் போயிக் கேளேம்!" அப்பிடிங்குது வெங்கு.
            எட்டு மணிக்குக் கிளம்புவதாய்ச் சொன்ன விகடு ஏழு இருவதுக்கு எல்லாம் அம்மா கொடுத்த ஒயர்கூடையை சைக்கிளின் ஹேண்டில்பாரில் மாட்டிக் கொண்டு சைக்கிளைக் கிழக்கு நோக்கி மிதிக்கிறான். அதுவரை திண்ணையிலேயே உட்கார்ந்திருந்த சுப்பு வாத்தியார் இவன் சைக்கிளைக் கிளப்பியதும் வெளியே வந்து பார்க்கிறாரு. மவன் சைக்கிளில் சென்று பார்வைியிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே நிற்கிறார்.
            செய்யு சுப்பு வாத்தியாரின் பக்கத்தில் ஓடி வந்து, "அண்ணே! எங்கப்பா இவ்ளோ சீக்கிரமா சைக்கிள்ல போவுது?" அப்பிடிங்றா.
            "வேலைக்கு!" என்று சுரத்தே இல்லாமல் சொல்கிறார் சுப்பு வாத்தியார்.
            "எங்க?"
            "திருவாரூக்கு!"
            "திருவாரூக்கு சைக்கிள்லயா!" அப்பிடின்னு வாயைப் பிளக்குறா செய்யு.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...