7 Sept 2019

ஊட்டி வளர்த்த கிளி



செய்யு - 200
            வீட்டுல சமைக்குற நெலமை இல்லை. வேலன் போய் எல்லாருக்குமான சாப்பாட்டைக் கடையில் வாங்கி வர்றான். ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக சோற்றை நியூஸ்பேப்பரு மேல வாழை இலையில வெச்சு பொட்டலமாக் கட்டி, சாம்பார், வத்தல் குழம்பு, ரசம், மோர், ரெண்டு கூட்டுக் கறி அத்தோடு ஊறுகாய் என்று எல்லாத்தையும் தனித்தனி பாலிதீன் பாக்கெட்டுகள்ல கட்டி அது எல்லாத்தையும் சேத்து ஒரு பாலிதீன் பையில் போட்டா அது ஒரு சாப்பாடு. வேலன் அஞ்சு பேருக்கும் சேர்த்து அஞ்சு சாப்பாட்டை வாங்கி வந்திருக்கிறான். ஆளுக்கொரு சாப்பாட்டை வேலன் அவங்கவங்க கையில கொடுக்குறான். எல்லாமும் வாங்கி அப்படியே கீழே வைக்குதுங்க. சுந்தரிக்கு மட்டும் வாங்கத் தோணல. அது மூஞ்சைத் திருப்பிகிட்டு உக்காந்து இருக்கு. அதுக்குப் பக்கத்துல வெச்சுபுட்டு வர்றான் வேலன். எல்லாத்துக்கும் வயித்துல பசி. சாப்பிடுற மனசுதான் எங்கே போச்சுன்னு தெரியல. சரிதான்னு யாரும் சாப்பாட்டைத் தூக்கி அந்தாண்டவும் வைக்கல.
            இப்போ ஒவ்வொருத்தரும் அப்படியே தரையில வெச்ச சாப்பாட்டுக்குப் பக்கத்துல உட்கார்ந்துகிட்டு சோத்தைப் பிரிச்சுகிட்டே அப்படியே கை போன போக்குல சாம்பாரு, குழம்பு, ரசம், மோரு, கூட்டுக்கறின்னு ஒவ்வொண்ணையும் பிரிச்சு வெச்சுக்குதுங்க. இதுல எதையும் பிரிக்காத ஆளு சுந்தரி மட்டுந்தாம். அப்படியே தேமென உட்கார்ந்து இருக்கு. அதோட உதடோரத்தில ரத்தம் கசிஞ்சி உறைஞ்சிப் போயிருக்கு. சரசு ஆத்தா அதைப் பார்த்து விட்டு ஓடி வந்து ரத்தத்தைப் புடவையால் துடைச்சி விட்டு சாப்பாட்டைப் பிரிச்சு சாம்பார பாக்கெட்லேந்து ஊத்துது.
            "எதா இருந்தாலும் பாத்துப்பேம். மொதல்ல சாப்புடு. ஒடம்புக்கு மொதல்ல தெம்பு வேணும்!" என்கிறது சரசு ஆத்தா.
            வேண்டாம் என்பது போல தலையை அசைக்கிறது சுந்தரி.
            "நாட்டுல யாரு செய்யாததை நீயி செஞ்சுபுட்டே சொல்லு? எல்லாம் ஊரு ஒலகத்துல நடக்கறதுதாம். ன்னா எல்லாம் தெரியமா நடக்குது. ஒன்னோட விசயம் கொஞ்சம் தெரிஞ்சுப் போச்சு. அவ்வளவுதாம். ரண்டு வாயி அள்ளிச் சாப்புடு. பாத்துக்கலாம்!" என்கிறது லாலு மாமாவும்.
            முகத்தை ஒரு மாதிரியாக சுளிச்சுகிட்டு அதுக்கும் முடியாது என்பது போல தலையை ஆட்டுது சுந்தரி.
            "இப்போ எதுக்கு அவ்வே சாப்புட முடியாதுன்னு சொல்றா? ஒழுங்கு மருவாதியா சாப்பிடச் சொல்லுங்க! இல்லே நடக்குறதே வேற!" என்கிறான் பாலாமணி.
            "அட! இவ்வேம் வேற! எல்லாத்துக்கும் கோவப்பட்டுகிட்டு. ச்சும்மா கெடடா செத்த நேரம். அது சாப்புடும். நீயி சாப்புடு!" என்கிறது ராசாமணி தாத்தா.
            எதுக்கும் சுந்தரி அசைந்து கொடுப்பதாகத் தெரியல. போங்கடா நீங்களும் ஒங்க சாப்பாடும் என்கிற மாதிரி அலட்சியமா உக்காந்திருக்கு.
            "சாப்புடு. ஒன்னய அப்படியே வுட்டுடவா போறேம்?" என்கிறான் வேலன் தன் பங்குக்கு.
            "கொண்டு போயி ஒடைப்புல போடுங்க! சாப்புட்டாத்தான் இன்னும் ந்நல்லா போட்டு அடிக்கலாம்னு சாப்புடச் சொல்றீங்களா? நாம்ம சாப்புடாமலே கெடந்து செத்துப் போறேம். அதானே ஒங்க எதிர்பார்ப்பு. நாம்ம சாப்புட்டா ன்னா? சாப்புடாட்டியும் ன்னா? நாம்ம எக்கேடு கெட்டா ன்னா?" என்கிறது அதுக்கு சுந்தரி.
            "நீயி ன்னா கொலையா பண்ணிப்புட்டே?" என்கிறது லாலு மாமா.
            சுந்தரிக்கு அழுகைப் பொத்துக் கொண்டு வருது. அதை அழுகைன்னு வெறுமனே சொல்லிட முடியாது. பேரழுகைன்னுதான் சொல்லணும். "ஆமா! அதையுந்தாம் பண்ணேம். கொழு கொழுன்னு கொழந்த எப்டி இருந்துச்சுத் தெரியுமா? சுகப் பெரசவம். அதப் போயி ஒங்க பேச்ச கேட்டுகிட்டு, அந்த நாதாரிப் பயலோடு குடும்பம் நடத்தணும்னு மாரை அமுக்கிக் கொன்னேம்ல. இந்தா உக்காந்து இருக்காளே சண்டாளி. இவளுந்தான தொண! கொலையையும் பண்ண வெச்சிப்புட்டு கொலையா பண்ணிப்புட்டேன்னு கேள்வி கேட்டா ன்னா அர்த்தம்? நம்மள கொலகாரியாவும் ஆக்கிப் புட்டீங்க! அடுத்த ன்னா ஆக்கப் போறீங்களோ? யாருக்குத் தெரியும்?" என்று சுந்தரி சொல்ல அதன் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து கன்னம் வழியே வழிந்து கொட்டுது.
            "கொலையே பண்ணதா வெச்சிப்போம்! நீயி பண்ணதுதாம் ஒலகத்துல மொதக் கொலையா? எத்தனையோ பேரு பண்ணிட்டாம். நீயி பண்ணது லட்சத்துல எத்தனையாவது கொலைன்னு யாருக்குத் தெரியும்? கோடியில எத்தனையாவது  கோடின்னு யாருக்குத் தெரியும்?" என்கிறது லாலு மாமா.
            "நாம்ம பண்ணதுதாம் மாமா மொத கொல. எம்ம மொதக் கொழந்தையே கொன்னேம்ல அந்தக் கேடு கெட்ட பயலோட வாழணுமேன்னு நெனச்சிகிட்டு. பெத்தக் கொழந்தய எந்தத் தாயி கொல்லுவா? நாம்மப் பண்ணேம். பெத்தக் கொழந்தய பெத்தத் தாயே நம்மள பெத்தத் தாயோட சேந்து கொன்னது ஒலகத்துல இதுதாம் மொத மொறை! நமக்கெல்லாம் நல்ல சாவே கெடையாது மாமா! அதுக்குதாம் இப்பிடி கெடந்து வதெ படறேம். நொக்குப் படறேம். சின்னா பின்னா படறேம். நொந்து நூலாவுறேம்." என்று சுந்தரி கதறிக் கதறி கேவலாய் அழுகிறது.
            "இவ்வே ஒருத்திப் போதும். நம்ம எல்லாரையும் காட்டிக் கொடுக்க. வாயை மூடு மொதல்ல. நடந்தது நடந்துப் போச்சி. அதுக்கு யாரு ன்னா பண்ண முடியும்? ஒனக்கென்ன வயசா இல்லே? கொழந்தைகளா பெத்துப் போடு. வூடு முழுக்க கள்ளு புள்ளு கள்ளு புள்ளுன்னு ஓடித் திரியுட்டும். எங்க காலத்துல பத்து இருவது பொறந்தா ஆறெழு பொழைக்கிறது பெரிய விசயம். அதுக்கு ன்னா பண்ண முடியும்?" என்கிறது லாலு மாமா.
            "அத்தெல்லாம் அதுவா செத்துப் போனது மாமா! யாரு கொன்னா? எங் கதெயெப் பாருங்க. பெத்தத் தாயே கொல்ற மாரி ஆயிப் போச்சி! கல்யாணம் கட்டிக் கொடுத்த அப்பவே ஓடிப் போயிருக்கணும். நாந்தாம் தப்புப் பண்ணிட்டேம். அப்படிப் போயிருந்தா எங் கொழந்த இந்நேரம் உசுரோட இருந்திருக்கும். அப்படி ஓடிப் போயிருந்தா குடும்ப கெளரவம் ன்னா ஆவும்? நீங்கள்லாம் ன்னா நெனைப்பீங்கன்னு நெனைச்சே நெனைச்சே இப்பிடியும் போவ முடியாம? அப்பிடியும் போவ முடியாமா நாந் தவிச்ச தவிப்பு இருக்கே... யேய் யப்பாடி யம்மாடி அது அந்த ஆண்டவனுக்கும் வாரக் கூடாது. எல்லாம் போச்சி. இனுமே நமக்கு எங்க கொழந்தைப் பொறக்குறது? அவ்வேம் வந்து படுத்தாத்தான கொழந்த பொறக்குறதுக்கு? அவனுக்குப் படுக்கவும் தெம்பில்ல. எழுந்திரிக்கவும் தெம்புல்ல. வேற பொண்ணக் கட்டுனா அத்து ஓடிப் போயிடும்னு திட்டம் போட்டு அத்தைப் பொண்ணா பாத்து திட்டம் போட்டு கட்டியிருக்காம். அத்துத் தெரியாமா தேடி வந்த மாப்பிள்ளைன்னு நீங்க நெனைச்சுக் குழியில தள்ளி வுட்டுப்புட்டீங்க. இப்பப் பாருங்க நம்ம நெலமையை. ஆயுசுக்கும் புள்ள பாக்கியத்துக்கு வழியில்லாமப் போவப் போவுது. எல்லாந் எந் தலயெழுத்து." என்று தலையில் அடித்துக் கொள்கிறது சுந்தரி.
            "அய்யோ சொன்னா கேளுடி. பொம்பள புள்ள தலையில அடிச்சிக்கக் கூடாதுடி. குடும்பத்துக்கு ஆகாது. நிறுத்தித் தொலயடி." என்கிறது சரசு ஆத்தா.
            "நீயி அடிச்சா மட்டும்தாம் குடும்பத்துக்கு ஆகும்? நாம்ம அடிச்சுக்கக் கூடாதுல்ல!" என்கிறது சுந்தரி.
            "இவளுக்கு எப்டி புரிய வைக்கிறதுன்னே தெரியல. ஏம்டி இப்டி கோட்டித் தனமா பண்றே? ஒனக்கென்னடி கொற. எந் ராசாத்தி. நீயி ந்நல்லா இருப்படி. ரண்டு வாயி எடுத்து ரவ்வ சாப்புடுடி எங் கண்ணுமணில்ல!" என்கிறது சரசு ஆத்தா.
            "ச்சீய் பே! எதுக்கெடுத்தாலும் சாப்புடு சாப்புடுன்னுகிட்டு. இனுமே நாம்ம உசுரோட இருந்து ன்னா புண்ணியம்? செத்துப் போறேம் போ. நம்மள இப்பிடியும் வாழ வுட மாட்டீங்க. அப்பிடியும் வாழ வுட மாட்டீங்க. தொலைஞ்சிப் போறேம்! பொறந்த பச்ச மண்ணு. அது ன்னா பாவம் பண்ணுச்சி?கள்ளங் கபடம் யில்லாத கொழந்தயப் போயி கொல்ல வெச்சீங்களே! ஏம் படு பாவி மக்கா! நமக்குலாம் ந்நல்ல சாவே வாராது. வாரக் கூடாது." என்று பெருங்குரலெடுத்து அழுவுது சுந்தரி.
            பாலாமணிக்கு கண்ணெல்லாம் கட்டிக் கொண்டது போல இருக்கு. பொல பொலவென கண்ணீரு தாரைத் தாரையாய்க் கொட்டுது. அவன் அப்பிடியே சுந்தரியோட பக்கம் போறான். வேலன் இடையில் புகுந்து தடுக்கிறான். "வுடு கொஞ்சம் அழுது நிக்கட்டும். அப்பதான் மனசு ஆறும். மனசு வடிஞ்சாத்தான் பேசுறதுக்கு வசதியா இருக்கும். நீயி வேற எடையில பூந்து அடிச்சுத் தொலயாதே! இருக்கற நெலமையில ஒன்னய சமாளிக்கிறது வேற கஷ்டமா இருக்கு!" என்கிறான்.
            வேலனின் கைகளைத் தட்டி விட்டு விட்டு, பாலாமணி சுந்தரியின் பக்கம் போயி அதைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுகிறான் அழுகிறான் அப்படி அழுகிறான். இது யாரும் அங்க எதிர்பார்க்காத ஒண்ணு. என்னடா இவன் இப்பிடிப் பண்றான்னு எல்லாருக்கும் ஆச்சரியமா இருக்கு.
            "நீயி ன்னா பண்ணுவே? நீயி ஏம் அழுவுறே? ஒரு சண்டாளப் பயெ வந்து நம்ம குடும்பத்த கெடுத்துட்டு இருக்காம். நாம்ம கஷ்டப்பட்டோம்தாம், இல்லேன்னு சொல்லல. இப்பிடிப் போயி மாட்டிப்பேம்னு நெனைக்கலையே!" என்று சுந்தரியின் கதறி அழும் சத்தம் கேவலாய்ப் போய் நிற்கிறது. அடித்துத் துவைச்ச அண்ணனுக்கு இப்பிடிச் சாதகமா சுந்தரி பேசுதான்னு அது வேற அங்க இருக்கறவங்களுக்கு நெஞ்சடைச்சும் போலருக்கு.
            பாலாமணி ஒன்றும் பேசவில்லை. அவன் சரசு ஆத்தா பிரித்து வைத்த சோற்றில் இன்னும் கொஞ்சம் சாம்பாரை ஊற்றி பிசைஞ்சு ஒரு கை எடுத்து சுந்தரியின் வாயிக்கு நேராக நீட்டுறான். சுந்தரியால் மறுக்க முடியல. அவ்வேன் ஊட்டி விட அது வாங்கிக் கொள்கிறது. சாம்பார் முடிந்ததும், வத்தல் குழம்பை ஊத்துறான். சோத்தைப் பெசையுறான். ஊட்டி வுடுறான். அது முடிஞ்சதும் ரசத்தை ஊத்துறான், பெசையுறான், ஊட்டி வுடுறான். அது முடிஞ்சதும் மோரை ஊத்துறான், பெசையுறான், ஊட்டி வுடுறான். இடைஇடையில் கறியையும் கொஞ்சம் சோத்தோடு சேத்து ஊட்டி வுடுறான். இப்படியே அவ்வேன் ஊட்டி விடுறான் பாலாமணி.
            இதைப் பார்க்குற எல்லார் கண்களிலும் கண்ணீர் பொத்துக்கிட்டு வருது.
            "நீயி ஒண்ணும் கவலப் படாதே. ஒன்னய எப்பிடி வாழ வைக்கிறதுன்னு நமக்குத் தெரியும். ஒங் கொறையெல்லாம் எப்பிடிப் போக்குறதுன்னும் நமக்குத் தெரியும். நீயி ஒண்ணுத்தையும் மனசுல வெச்சுக்காத ஆயி. நாம்ம சொல்றத மட்டும் கேட்டு நடந்துக்கோ. வேற ஒண்ணும் பண்ண வாணாம். கொஞ்ச காலத்துக்குத்தாம். பெறவு எல்லாமே ஒங் கையில வந்துடும் பாரு!" என்கிறான் பாலாமணி.
            சுந்தரி தலையை அதற்கேற்றாற் போல் தலையை அசைக்கிறது.
            "இப்டி ஒரு அண்ணம் இருக்க நீயி ஏம்டி கவலப்படுறே? படிக்கிறப்பவே நம்ம குடும்பத்தெ தூக்கி நிறுத்தியிருக்காம்டி அவ்வேம். வேலைக்கிப் போயிட்டான்னா ஒன்னய ராணி மாரில்ல வெச்சுக்க வைப்பாம். அவ்வேம் சொல்றத கேளுடி. நீயி ந்நல்லா இருப்பே!" என்கிறது சரசு ஆத்தா.
            சுந்தரி அதற்கும் சேர்த்து தலையை ஆட்டிக் கொள்ளுது.
            "மாமா! என்னென்னமோ நடந்துப் போச்சி. ஊருல பத்துக் குடும்பம் இருந்தா அதுல நாலு இப்பிடித்தாம் நடக்குது. நீஞ்ஞ சித்து மச்சான இஞ்ஞ வர வையுங்க! நாம்ம பேசிக்கிறேம்!" என்கிறது பாலாமணி.
            "இவ்வேம் சொல்ற மாதிரியே பண்ணிப்புடு லாலு. இல்லே அதுக்கு வேற இவ்வேம் கெடந்து ஆடற ஆட்டத்த நம்மாள பாக்கவும் முடியாது, சமாளிக்கவும் முடியாது! எல்லாம் கெரகச்சாரம். அப்பிடித்தாம் நடந்து முடியுனும்னு இருக்கு!" என்கிறது ராசாமணி தாத்தா.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...