8 Sept 2019

சிறுகல் நகர்த்தல்



            நதிகளை நம்பி நாமில்லை என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் குளங்களையும், குட்டைகளையும், ஏரிகளையும் வெட்டி வைத்தார்கள். தற்போது முன்னோர்களை நம்பி நாமில்லை என்றாகி விட்டப் பிறகு அவர்கள் வெட்டி வைத்த குளமாவது குட்டையாவது, மண்ணாவது மட்டையாவது என்றாகி விட்டது. எல்லாவற்றையும் இழுத்து வைத்து மூடி அதன் மேல் கட்டடங்கள் கட்டியாகி விட்டது.
            நம் ஆறுகள் நிறைய எத்தனை எத்தனை பாலங்கள் இருக்கின்றன. பாலத்திற்குக் கீழ் ஆற்றில் தண்ணீர்தான் இல்லை. எப்போதாவது பெருமழைப் பொழிந்து வெள்ளமாகப் போகும் போது ஆற்றில் பாலத்திற்கு அடியில் தண்ணீர் போகிறது. சமயத்தில் பாலத்தைத் தாண்டிப் பொழிந்தும் தண்ணீர் போகிறது. மற்ற நாட்களில் ஆறு வறண்டு கிடக்கிறது. வறட்சியிலும் வெள்ளத்திலும் சிக்கிக் தவிப்பவைகள் மனிதர்கள் மட்டுமா? ஆறுகளும்தான்!
            நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஆறுகளில் இவ்வளவு பாலங்கள் இல்லை. ஆறுகளில் தண்ணீர் ஓடியது. அதனால் ஆற்றை அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கடக்க பாலங்கள் தேவையாக இருந்தன. பாலங்களைக் கட்ட வேண்டும் என்று போராட்டங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. பாலம் இல்லாமல் ஆற்றைக் கடப்பவர்கள் சட்டை துணி மணிகளை அவிழ்த்து ஒரு பையில் வைத்து அதைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு, இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு கடந்திருக்கிறார்கள். பள்ளிப் பிள்ளைகளான நாங்கள் அப்படிக் கடந்ததெல்லாம் இப்போதும் ஞாபகத்தை விட்டு அகலாமல் இருக்கிறது. புத்தகப் பையில் சட்டைத் துணி மணிகளை அவிழ்த்து வைத்துக் கொண்டு புத்தகப் பையைத் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு கடந்து போய் பின் சட்டைத் துணிமணிகளைப் போட்டுக் கொண்டு சென்றிருக்கிறோம்.
            அப்படியும் இப்படியுமாக பாலங்களைக் கட்டி விட்டுப் பார்த்தால் இப்போது ஆறுகளில் தண்ணீர் இல்லை. இருந்தாலுமென்ன? பாலங்கள் கட்டுவது பழகி விட்டதால் சில இடங்களில் நன்றாக இருக்கும் பாலங்களையும், மதகுகளையும் உடைத்து விட்டுப் புதிததாகக் கட்டும் புதிய பழக்கம் உண்டாகி விட்டது. முன்பு உடைந்து கிடந்த எத்தனையோ மதகுகளைக் கட்டாமல் மாதக் கணக்கில் போட்டு வைத்திருந்ததைப் பார்த்து இப்போது இதைப் பார்க்கும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
            அப்படி உடைத்துக் கட்டும் மதகுகள் அதிகபட்சமாக ஐந்தாண்டுகளுக்குள் கட்டப்பட்டவைகளாக இருக்கின்றன என்பது கவனிக்க வேண்டிய விசயம். ஆதாயம் என்றால் மனிதன் எதையும் எடுத்துப் போட்டுக் கொண்டு கட்டுகிறான். ஆதாயம் இல்லை என்றால் அப்படியே போட்டு விடுகிறான். அவ்வளவுதான் விசயம். அண்மை காலங்களில் மதகுகள் கட்டுவதிலும், பாலங்கள் கட்டுவதிலும் பெரும் பணம் புரள்கிறது என்று நினைக்கிறேன். பணம் புரள்கிறது என்றால் வானத்தையும், பூமியையும் இடித்துப் போட்டு விட்டு புதிதாக கட்ட மனிதர்கள் தயாராக இருக்கிறார்கள். பணம் புரளாது என்றால் இவர்கள் ஏன் வழியில் கிடக்கும் சிறு கல்லை நகர்த்திப் போடப் போகிறார்கள்?
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...