26 Sept 2019

கண்ணுக்குள்ள போற கண்ணீரு!



செய்யு - 219
            பிச்சை வாத்தியாரும், அந்தோணி வாத்தியாரும் டெஸ்மா சட்டத்துல சிறையில அடைக்கப்பட்டிருந்தவங்க. அவங்க ரெண்டு பேரும் விடுதலையாயிட்டாங்க. ஆனா வேலைக்குப் போக முடியல.
            அந்தோணி வாத்தியாரு கில்பர்ட்டு காபித் தூளுள்ல ஆறுதல் பட்டுக்கிறாரு. பிச்சை வாத்தியாரு குடியில ஆறுதல் தேட ஆரம்பிச்சிட்டாரு. எந்நேரமும் குடிதான். வேலை போனதை ஒரு காரணமாவும், பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லாததை இன்னொரு காரணமாவும் சொல்லிச் சொல்லிக் குடிக்கிறாரு.
            "ஜெயிலுக்குப் போனவன விட்டுப்புட்டு எல்லா பயலும் வேலைக்குப் போயிட்டானுங்க. ஜெயிலுக்குப் போனவங்களையும் வேலையில சேர்த்தாத்தாம் நாங்களும் வேலைக்குப் போவணும்னல்ல இந்தப் பயலுக சொல்லியிருக்கணும். அவனுங்கதாம் நாம் மொதல்ல வேலைக்குப் போறதா, நீயி வேலைக்கு மொதல்ல போறதான்னுல்ல நிக்குறானுங்க. விளக்கம் கேட்டு நோட்டீஸ் வுட்டதுக்கு அவனவனும் போராட்டத்துலயே கலந்துகலன்னுல்ல விளக்கம் கொடுக்க ஓடியிருக்கானுவோ. எம் பொழப்பு இப்படி ஆச்சே. எம் வேல இப்படிப் போச்சே!" எந்நேரமும் இப்படிப் புலம்ப ஆரம்பித்து விட்டார் பிச்சை வாத்தியார்.
            மன்னார்குடி டவுன்லயே குடியும் போதையுமாய்க் கிடக்கிறாரு பிச்சை வாத்தியார். மல்லிக்குடி பக்கமே போறதில்ல. வாத்தியார்மார்க எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்க்கிறாங்க. எதுவும் அவரோட காதுகள்ல ஏற மாட்டேங்குது. காதுல ஏறுனாத்தானே மனசு ஏறும். போதை மட்டும்தான் அவரோட நிலைமையில இப்போ ஏறுது. இப்போ யாரைப் பார்த்தாலும் காசு கேட்க ஆரம்பிச்சிட்டார் பிச்சை வாத்தியார். குடிப்பதற்காகத்தான கேட்கிறார்னு கொடுக்காம போனா கண்டபடி திட்ட ஆரம்பிக்கிறார்.
            பிச்சை வாத்தியார் இப்படித்தான் ஆரம்பிப்பாரு. "எப்பா ஒரு அம்பது ரூவா இருந்தா எடுப்பா. ஒம் பொண்ணு கல்யாணத்துக்கு, பிள்ளை கல்யாணத்துக்கு ஐநூறா மொய்யா சேர்த்து எழுதிப் புடறேம்."
            "வேண்டாம்ண்ணே! வாங்க ஒரு டீ அடிப்பேம். அப்படியே வூட்டுக்குக் கிளம்புவேம். நாம்ம கொண்டாந்து வண்டியில விடறேம்!"ன்னு சொன்னா போதும், "அட கொன்னியான்..."அப்பிடின்னு ஆரம்பிச்சார்ன்னா லெப்ட் ரைட்டு வாங்கிடுவார். அந்தப் பேச்சுக்கு பயந்தே பிச்சை வாத்தியாரைப் பார்க்குறவங்க ஒளிஞ்சு மறைய ஆரம்பிக்கறாங்க. பிச்சை வாத்தியாரும் விடுற பாடில்ல. ஒளிஞ்சாம் பிடிச்சு விளையாடுறதுல ஒளிஞ்சிருக்கிறவங்கள கண்டுபிடிக்கிற கணக்கா சாமர்த்தியமா கண்டுபிடிச்சு அவங்க முன்னாடி போயி நிக்குறாரு. யாரையும் பார்க்க முடியலன்னா ரோட்டுல உட்கார்ந்துகிட்டு போற, வர்ற பஸ்களை எண்ணிகிட்டு இருக்காரு. வானத்துல பறவை பறந்து போனாக்கா அதையும் எண்ணுறாரு. அந்நேரம் யாராவது தட்டுப்பட்டா போதும், "இந்த ரோட்டுல இந்நேரத்துக்கு நாப்பத்து ஒண்ணு பஸ்ஸூ போயிருக்கு. அறுபத்து மூணு ஆட்டோ ஓடியிருக்கு. டூ வீலரு நூத்து எழுபத்து ரெண்டு. சைக்கிளு எண்பத்து ஆறு. லாரி எட்டு. டிராக்டரு ரெண்டு. போயிருக்குத் தெரியுமா? வானத்துல பாஞ்சிக்கு மேல பறக்கல. மனுஷப் பய பறவைகள கொன்னுப்புட்டாம்யா. முன்னாடில்லாம் பறவைங்கதாம் அதிகம். வண்டிக கம்மி. இப்போ வண்டிக அதிகம். பறவைக கம்மி. இந்த ஒலகத்துல வண்டிங்கத்தாம் வாழப் போவுது. மனுஷப் பய சாவப் போறாம். மனுஷனுக்கு மனுஷனுக்கு வேல கொடுக்க மாட்டேங்றாம். கொடுத்து வேலய தூக்குறாம். ஜெயிலுல்ல போடுறாம். மூச்சுத் திணறி சாவக் கெடக்குற பொண்டாட்டிய ஏம் ஆஸ்பத்திரியில சேத்து காப்பாத்துறேன்னு அரெஸ்ட் பண்றாம் சார்! ஏம் பொண்டாட்டி செத்துப் போனா இவனுங்க உசுர கொடுப்பானுங்களா சார்! எப்படியோ பொழச்சிகிடுச்சு. வேல போனா மசுரு போச்சு. எப்படியும் நிப்பாம் சார் இந்தப் பிச்சை!" அப்பிடின்னு பேச ஆரம்பிச்சிடுறாரு. அவரோட பேச்சுல இருக்குற கோர்வை அறுபட்டுப் போவுது. முடிச்சு கண்டபடி விழுவுது. எதையெதையோ இணைச்சுப் பேசுறாரு.
            மாசக் கணக்கா டவுன்ல இருக்குற பிச்சை வாத்தியாரு சங்கம் சார்பா மாசப்பணம் கொடுக்குற சங்கதி தெரிஞ்சா வூட்டுப்பக்கம் எட்டிப் பார்க்குறாரு. அந்தப் பணத்தை மொதல்ல வாங்கிக் குடிச்சிட்டுத்தாம் மறுவேல பார்க்குறாரு. பிச்சை வாத்தியாரு இப்படி குடிக்குற ஆளுல்லாம் இல்ல. அவருக்குக் குடிப் பழக்கமும் கெடையாது. ஜெயிலுக்குப் போயிட்டு வந்து, வேலையில சேர முடியாத விரக்தியில குடிக்க ஆரம்பிச்சு அதுக்கு இப்படி அடிமையாயிக் கிடக்கறாரு.
            மன்னார்குடியில அவரு குடிச்சிட்டு எங்க விழுந்து கிடந்தாலும் பார்க்குறவங்க ஆட்டோ பிடிச்சி அவரை வூட்டுல கொண்டாந்து போடுறாங்க. வேலை கிடைச்சிடுச்சுன்னா மனுஷன் சரியாயிடுவாருங்றது எல்லாருக்கும் தெரியுது. ஆனா எப்படி வேலை வாங்குறது? அது தொடர்பான கேஸூம் போய்ட்டு இருக்கு. பேச்சு வார்த்தையும் நடந்துகிட்டு இருக்கு. எப்படியும் வேலையை வாங்கிடாம விட மாட்டாங்கதான். ஆனா அவரு இருந்த விரக்தியில இதெ எடுத்துச் சொன்னா எடுபட மாட்டேங்குது. சொல்றவங்கள கண்ட மேனிக்கு, சகட்டு மேனிக்கு வாயில வர்ற வார்த்தையிலல்லாம் போட்டுத் திட்டுறாரு. பேச ஆரம்பிச்சார்ன்னா நான் ஸ்டாப்னு சொல்லுவாங்களே! அப்படித்தாம் அரை மணி நேரம், ஒரு மணி நேரம்னு பேசுறாரு. எதிரே கேட்குறவங்கள ஒரு வார்த்தையும் பேச வுட மாட்டேங்றாரு.
            சமயத்துல என்னா இப்படிக் கண்டமேனிக்குத் திட்டுறாரேன்னு மனசுக்குள்ள ஆத்திரம் வரப்பவே அப்படியே அதுக்கு நேர்மாறா திடீர்னு குழையுறாரு. "எப்பா கோச்சுக்காதீங்கப்பா! கையெல்லாம் நடுங்குதுப்பா. காலு நிக்க முடியல. ஒடம்புக்கு என்னவோ பண்ணுது. என்னான்னு சொல்லத் தெரியல. நெஞ்சு படபடன்ன வருது. ஏதோ பண்ணுதுப்பா. என்னான்னு வார்த்த வர மாட்டேங்குது. ஒன்லி பிப்டி ரூபீஸ் கொடுங்கப்பா. நம்மள சரிபண்ணிக்கணும். வேல கெடக்குற வரைக்கமாவது உசுர கையில பிடிச்சிட்டு இருக்கணும்ப்பா. பிப்டி... பிப்டி... பிப்டிய எடுங்க!" அப்பிடிங்றாரு.
            கேட்குறவங்களுக்கு எப்படி இருக்கும்! அம்பது ரூவாயைக் கொடுக்குறாங்க. பிச்சை வாத்தியாரு குடிக்கிறாரு. குடிச்சிகிட்டே இருக்காரு. வேலை கிடைக்குற வரைக்குமாவது உசுரைக் கையில பிடிச்சிட்டு இருக்கணும்னு சொன்ன பிச்சை வாத்தியாரு வேலையில சேரலாம்னு அரசாங்கம் ஆர்டர் போடுற ஒரு வாரத்துக்கு முன்னாடி செத்துப் போறாரு. அந்தோணி வாத்தியாரு மட்டுந்தான் திரும்ப வேலையில சேருறாரு.
            பிச்சை வாத்தியாரோட துக்கத்துக்கு வாத்தியார்மார்க எல்லாம் மல்லிக்குடி போயிருந்தப்போ அவரோட மனைவி சொல்லிட்டு அழுத அழுகை இருக்கே. அதெ காலத்துக்கும் மறக்க முடியாது. "மூச்சுத் தெணறி சாவக் கெடந்த நம்மள காப்பாத்திட்டாரு. நல்லா இன்னும் நூறு வருஷம் இருக்க வேண்டிய மவராசன் போயிச் சேர்ந்துட்டாரே. அன்னிக்குன்னு பார்த்தா நமக்கு மூச்சுத் தெணறணும்? அன்னிக்குன்னு பார்த்தா ஆஸ்பிட்டலுக்கு எதுக்கே போலீசு வாரணும்? ஆஸ்பத்திரி போற பாதி வழியில நாம்ம செத்திருக்கக் கூடாதா? எம்ம மவராசன் வூட்டுலயே இருந்திருக்கக் கூடாதா? அவரு உசுரோட இருக்க நாம்ம பூவோடயும் பொட்டோடயும் போயிச் சேந்திருக்கக் கூடாதா? அவருப் போயிச் சேர்ந்து பூவழிஞ்சு, பொட்டழிஞ்சி நிக்குறன்னே!" அப்பிடின்னு அந்த அழுத அழுகய பார்த்தவங்களுக்கு அது அப்படியே கண்ணுக்குள்ளயே நிக்குது.
            கண்ணீர்ன்னா கண்ணை விட்டு கண்ணுக்கு வெளியில வரதுதானே. ஆனா அந்த அம்மா அழுத கண்ணீரு அப்படியே பார்த்தவங்களுக்கு கண்ணுக்குள்ள போகுது. புள்ளைக்குப் பாலு கொடுக்க முடியாம மாரு அடைச்சிகிட்ட தாய்மாரு கணக்கா பார்த்தவங்க கண்ணுல கண்ணீரு அடைச்சிகிட்டு அதெ பார்த்தவங்க பட்ட பாடு இருக்கே! ஒரு மனுஷனோட உசுரைப் பறிக்கிறதுக்கு அவனைக் கொலை பண்ண வேண்டியதில்ல. அவனோட வேலையைப் பறிச்சிட்டாவே போதும்னு புரிய வெச்ச சம்பவம் அது.
            அன்னிக்கு அந்தோணி வாத்தியாரு பிச்சை வாத்தியாரு ஒடம்பு மேல விழுந்து அழுத அழுகை இருக்கே. "யண்ணே நீயிப் போயிச் சேந்து என்னய காப்பாத்தியிருக்கீய்யா யண்ணே. நாமளும் ஒன்னோட வார வேண்டிய ஆளுதாண்ணே. ஒன்னய மட்டும் மேல உள்ளவன் அழச்சிகிட்டு நம்மள வுட்டுப்புட்டான்னே. வேல போனா என்னாண்ணே! இப்டி அநியாயத்துக்கு உசுர வுட்டுப்புட்டீயேண்ணே! இத்தோ வேலய வாங்கப் போறோம்ண்ணே! ன்னா வாங்கப் போறேம்? வாங்கிட்டோம்ண்ணே! எப்போண்ணே வந்து சேரப் போறே? எப்போண்ணே பள்ளியோடத்துல வந்து கையெழுத்துப் போடப் போறே? வாண்ணே! எழுந்திரிச்சு வாண்ணே! வேலய வாங்கியாச்சுண்ணே. ஆம்மா வேலய வாங்கியாச்சுண்ணே! வாண்ணே! கையெழுத்துப் போட வாண்ணே!" என்று சவமா கெடக்குற பிச்சை வாத்தியாரோட நெஞ்சைப் பிடிச்சு உலுக்கி உலுக்கி அழுவுறாரு. அவரு உலுக்கி உலுக்கி அழுவுறது பார்க்குறவங்க மனச அப்படியே உலுக்கி உலுக்கி எடுக்குது.
            "ஒலகம் தெரியாதவம்ப்பா பிச்சை. கொழந்தை மனசுக்காரேம். வேலைதாம் அவனோட உசுரு. பள்ளியோடம்தாம்பா அவனோட ஒலகம். அவனால தாங்கிக்க முடியல. போயிச் சேந்துட்டானப்பா!"ன்னு புலம்பிகிட்டே வாத்தியார்மாருக ஆறுதல் கொள்ள முடியாம தவிக்குறாங்க.
            அன்னிக்கு மல்லிக்குடி மட்டுமா, மன்னார்குடி வட்டாரமே கண்ணீருல நனைஞ்சு நின்னுதுன்னு சொல்றது கம்மி. கண்ணீரு வெள்ளத்துல கிடந்துதுன்னு சொல்றதுதாம் சரி. அந்த கண்ணீரு வெள்ளம் வடிய ரொம்ப நாளு ஆச்சு. ஆனா, இன்னும் ஒரு வாரம், ஒரே வாரம். பிச்சை வாத்தியாரு உசுரப் பிடிச்சிட்டு இருந்தார்ன்னா... அதுக்குப் பெறவு அவரோட உசுர எமனே எடுக்க வந்தாலும் எடுத்திருக்க முடியாது. நடக்க வேண்டிய நல்லது கால காலத்துல நடந்தா அகாலத்துல எந்த மனுஷன் சாவப் போறான்? அப்படி நடக்காமத்தான்னே அகாலத்துல நெறைய பேரு செத்துப் போறாங்க!
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...