26 Sept 2019

ஷேரிங் முக்கியம் தலைவா!



            அண்மையில் படித்த நல்ல புத்தகங்களை மட்டுமல்லாது, நல்ல சினிமாக்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பார்கள் நண்பர்கள்.
            ஒரு நாளைக்கு இருநூறு பக்கங்களாவது படிக்க வேண்டும் என்று சபதம் எடுத்து அது வற்றி வறண்டுப் போய் இருபது பக்கங்களுக்கு வந்து தற்போது அதுவும் வெகுவாக குறைந்து போய் விட்டது.
            நியூஸ் பேப்பரை எடுத்தால் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியில் தொடங்கி, கடைசிப் பக்கத்தில் All rights reserved. Reproduction in any manner, electronic or otherwise, in which or in part, without prior written permission is prohibited வரை படித்து முடித்து விடுகிறேன். இதுவும் ஒரு வகை வாசிப்புதான் என்று சொல்கிறார்கள். அது அந்த ஒரு பேப்பரோடு முடிந்தால் பரவாயில்லை. நகர்ப்புறம் போகும் போது இன்னும் ரெண்டு பேப்பரை வாங்கி வைத்து அது போலவே படிக்கும் போது இந்தப் பழக்கத்தை நினைக்கையில் பயமாக இருக்கிறது.
            இதிலிருந்து மீள்வதற்காக அவ்வபோது திரையரங்கம் பக்கம் ஒதுங்க வேண்டியிருக்கிறது. அப்படி ஒதுங்கி சீட் பிடித்து உட்கார்ந்தால் படம் ஆரம்பிக்கும் வரைக்கும் மனசு சும்மா இல்லாமல் கையில் வைத்திருக்கும் பேப்பரை விரித்து படிக்க ஆரம்பித்து விடுகிறது. சுற்றியிருப்பவர்கள் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். இதனாலே வீட்டில் பெண்டு, பிள்ளைகள் என்னோடு சினிமா பார்க்க என்றால் ஆப்சென்ட் ஆகி அப்செட் செய்து விடுகிறார்கள்.
            அப்படிப் பார்த்த சில திரைப்படங்களில் சிலவற்றைச் சொல்ல வேண்டும். வரிசைகட்டிச் சொல்வதுதான் சரியென்று நினைக்கிறேன்.
            1.
            ராட்சசி - இந்தப் படத்தை அழுது கொண்டே பார்த்தேன். வீட்டில் பெண்டு, பிள்ளைகள் வராமல் இருந்தது நல்லதாகப் போய் விட்டது. இல்லையென்றால் என்னை ஓட்டித் தள்ளியிருப்பார்கள். எல்லாவற்றுக்கும் ராணுவ ஆட்சிதான் தீர்வு என்பதாக அதைப் புரிந்து கொள்கிறேன். மூன்று கேள்விகள் என்ன? முந்நூறு கேள்விகள் கேட்கக் கூட தயார். ராட்சசிப் படத்தில் இருப்பவர்கள் போல எல்லாரும் நடந்து கொள்வார்களா? என்று தெரியவில்லை. அப்படிக் கேட்டு அதனால் வரும் அடி உதைகளை ராட்சசி போல சமாளிக்க முடியுமா என்றும் தெரியவில்லை. மற்றபடி ஒன்பதாம் வகுப்பில் பெயிலான பிள்ளைகளைப் பாஸ் போட்டு விட்டு பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத வைத்தது எனக்குப் பிடித்திருந்தது. பிள்ளைகளை ஆடச் சொல்ல வேண்டும், பாடச் சொல்ல வேண்டும் என்று இன்னொரு கருத்தை அந்தப் படத்தில் சொல்லியிருந்தார்கள். அதுவும் பிடித்தமான சங்கதிதான்.
            2.
மான்ஸ்டர் - பார்த்தப் படங்களில் மிகவும் பிடித்திருந்தது. மகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். அவள் சோட்டா பீமில் பிஸியாக இருந்ததால் முடியாமல் போய் விட்டது. கோட்பாட்டின் அடிப்படையில் சுவாரசியமான கதை சொல்லல் இந்த அளவுக்குத் தமிழ்ச் சினிமாவில் நிகழ்ந்திருக்கிறதா எனத் தெரியவில்லை. முதன் முறையாக அது இந்தப் படத்தில் நிகழ்ந்திருப்பதாக நினைக்கிறேன். வள்ளலாரின் சிந்தனைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் அருமையாக வடிவம் கொடுத்திருக்கிறார்கள். என்னுடைய கணிப்புச் சரியாக இருந்தால் அழகிய அஞ்சனப் பிள்ளை வால்ட் டிஸ்னியின் பாத்திர பிரதிபலிப்பு. அவர்தான் மெளஸைக்  (கம்ப்யூட்டர் மெளஸ் அல்ல. சுண்டெலி) கொண்டாடியவர். அந்த எலியை நினைத்து நினைத்து நான் எங்கள் வீட்டின் பெருச்சாளியைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறேன். காலையில் எழுந்து நாலரைக்குக் (அதிகாலை நாலரை) குளிக்கச் செல்லும் போது, கருப்பாக, அந்தக் கருப்பில் என்ன ஒரு பளபளப்பாக, அந்தப் பளபளப்பில் என்ன ஒரு கொழுகொழுவாக குடுகுடுவென்று ஓடுகின்றது தெரியுமா! இதை வீட்டில் சொல்லி ரசிக்க முடியாது. ஏன்டா அடிக்காமல் விட்டாய் போக்கத்தப் பயலே என்பார்கள். அதனால் உங்களிடம் சொல்லி ரசிக்கிறேன். வாய்ப்பிருந்தால் புகைப்படம் எடுத்தும் போடுகிறேன். அன்று ஒரு நாள் அப்படி ஒரு வாய்ப்பு வந்தது. நூலிழையில் தவற விட்டு விட்டேன். இப்படி கிளிக்குவதற்குள் அது அப்படி ஓடி விட்டது. ஏன் இப்படி என்று கேட்காதீர்கள். வரலாறு முக்கியம்.
            3.
            என்.ஜி.‍கே. - இயக்குநர் செல்வராகவனுக்காவே பார்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு போயிருந்தேன். ஒரு பத்து நிமிடம் பார்த்திருப்பேன். என்ன ஆனது என்று தெரியவில்லை. தூங்கி விட்டேன். எழுந்து பார்த்த போது 'கத்துக்கிறேன்! கத்துக்கிறேன்!' என்கிறார் சூர்யா. 'இனி என்.ஜி.கே. ஆட்சி' என்பது போல திரையில் ஒளிர்கிறது. படம் முடிந்து விட்டதற்கான அறிகுறி. நானும் தூங்காமல் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்ற முடிவோடு எழுந்து வந்து விட்டேன். படம் பார்த்தவர்கள் இருப்பின் அப்படம் துவங்கி பத்து நிமிடத்துக்குப் பின், திரையில் ஒளிரும் அந்த வாசகத்துக்கு முன் வரையுள்ள கதையை அவசியம் சொல்ல வேண்டும் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
            இன்னும் கொஞ்சம் படங்கள் இருக்கின்றன. ஒரே நேரத்தில் அவிழ்த்து விட்டால் உங்களுக்கும் இன்று ஒரே நாளில் எல்லாவற்றையும் படிப்பது அலுத்துப் போய் விடும். இன்னொரு நாள் அவசியம் பார்த்துக் கொள்வோம்.
            சினிமாவைப் பற்றி எழுதியதும் உங்கள் முகத்தில் தெரியும் பிரகாசத்தை என்னால் இங்கிருந்தே பார்க்க முடிகிறது.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...