11 Sept 2019

ஒரு நாள் பொழுது



செய்யு - 204
            சுப்பு வாத்தியார் வேலைக்கு வந்த நாளிலிருந்து ஒண்ணாப்பு வாத்தியாராக இருக்கிறார். அவரிடம் படித்தப் பிள்ளைகள் ஒண்ணாம் வகுப்பு, ரெண்டாம் வகுப்பு, மூணாம் வகுப்பு என்று போய்க் கோண்டே இருக்கிறார்கள். அவர் பல வருஷங்களாக ஒண்ணாப்பு வாத்தியார்தான். ஒண்ணாப்பில் சேர்த்த பிள்ளைகள் சரியாகப் படிக்காமல் போனால் அந்தப் பிள்ளைகளை ஒண்ணாப்பிலேயே போட்டு விடுவதுண்டு. இந்தச் சுப்பு வாத்தியார் என்னக் காரணத்தாலோ ஒண்ணாம் வகுப்பிலிருந்து ரெண்டாம் வகுப்பில் போகாமல் கிடக்கிறார். அவரது மவன் விகடு படித்த போதும் அவர்தான் ஒண்ணாப்பு வாத்தியார். அவரது மவள் செய்யு ஒண்ணாப்பு படித்த போதும் அவர்தான் ஒண்ணாப்பு வாத்தியார். அவரது மவனுக்கும், மவளுக்கும் இடையே ஒம்போது வருஷ வித்தியாசம். அந்த ஒம்போது வருஷ வித்தியாசத்திலிருந்து அதற்குப் பின்பு வந்த பல வருஷ வித்தியாசத்திலயும் அவர் மாறவே இல்லை. மாற்றம் என்பது சுப்பு வாத்தியாருக்கில்லை என்பதாகி விட்டது. மாற்றம் ஒன்றே மாறாத தத்துவம் என்பதை சுப்பு வாத்தியார் தானும் அப்படித்தான் என்பதை மாற்றத்துக்குத் துணையா நின்னு பாடம் சொல்லிக் கொடுக்குறாரோ என்னவோ!
            திட்டைப் பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கும் வாத்தியார்களில் மூத்த வாத்தியாராக வேறு போய் விட்டார். ஒருமுறை அவரைத் தூக்கி நான்காம் வகுப்புக்குப் போட்டுப் பார்த்தார்கள். அப்போ புதிதாக வந்த வாத்திச்சியம்மாவைத் தூக்கி முதல் வகுப்புக்குப் போட்டார்கள். பள்ளிக்கூடங்களில் அதுதான் அப்போ நடைமுறை. அந்த வாத்தியச்சியம்மா ரண்டு நாட்களில் அழுது கொண்டு வந்து சுப்பு வாத்தியாரின் முன் நிற்கிறது.
            "ஏங்கண்ணு ஒனக்கு இப்டி கண்ணு பொலபொலன்னு கொட்டுதே!" என்று சுப்பு வாத்தியார் நடுங்கிப் போயிட்டார்.
            "இப்போதங்கய்யா நாம்ம இங்கிலீஷ், மேத்ஸ்ல்லாம் டிகிரி லெவல்ல படிச்சிட்டு வேலைக்கு வந்துருக்கேம். இந்தப் புள்ளைங்களுக்கு ஆன்னா, ஆவன்னாவும் ஒண்ணு, ரெண்டு, மூணும் சொல்லிக் கொடுத்தே படிச்சதெல்லாம் மறந்துப் போயிடும் போலிருக்குங்கய்யா!" அப்படிங்குது அழுதுகிட்டே அந்த வாத்திச்சியம்மா.
            "இதுக்குப் போயி ஏங்கண்ணு அழுவுறே! நீயி இந்த நாலப்ப எடுத்துக்கோ! நாம்ம ஒண்ணாப்பை எடுத்துக்கிறேம்!" என்று சுப்பு வாத்தியார் ஒண்ணாப்பை நோக்கி மறுபடியும் நடையைக் கட்டியவர்தான். இந்தக் குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சம்பவத்துக்குப் பின் அவர் ஒண்ணாப்பை விட்டு பிரிய மறுத்து விட்டார். பிற்பாடு அவருடைய பணிக்காலத்தின் முடியும் தறுவாயில் தலைமை வாத்தியாராக ஆன போதும் ஒண்ணாப்பு வாத்தியாராகவே இருந்து கொண்டார். இப்படியாக பணிக்காலம் முழுவதுமாக ஒண்ணாப்பு வாத்தியாராக இருந்த பேரு அவரை ஒட்டிக் கொண்டது. எல்லாருடைய நெனைப்பிலும் அவரு ஒண்ணாப்பு வாத்தியாராகத்தான் இருக்குறார். போட்டியில எல்லாரும் ஒண்ணாவது வரணும்னுதான நினைப்போம். அப்படி ஏதும் சுப்பு வாத்தியாரு நெனைச்சுகிட்டு ஒண்ணாப்பு வாத்தியாரா ஒண்ணாவது எடத்துலயே இருக்கணும்னு இருந்துட்டாரோ என்னவோ!
            கடைசி வரை ஒண்ணாப்பு வாத்தியாராக இருந்தது சுப்பு வாத்தியாருக்கு சலிக்கவோ அலுக்கவோ இல்லை என்பது பெரிய விசயந்தான். "என்ன வாத்தியாரே! ஆயுசுக்கு ஒண்ணாப்பு வாத்தியாராவே இருந்திடுவே போலருக்கே. ஒனக்கெல்லாம் சலிப்பே தட்டாதா?" என்று யாராச்சும் கேட்டால், "வகுப்புதாம் ஒரே வகுப்பு ஒண்ணாப்பு. ஒவ்வொரு வருஷமும் வர்ற பிள்ளைகள் வேற வேற பிள்ளைகங்தான. அதுல நமக்கென்ன சலிப்பு!" அப்படிம்பார் சுப்பு வாத்தியார். அதுவும் சரிதான். ஒவ்வொரு நாளும் காலை, மதியானம், சாயுங்காலம், ராத்திரி அப்பிடின்னு மாறாமத்தான் வரப் போவுது. அதுல என்ன மாற்றம் இருக்கப் போவுது? ஆனாலும் ஒவ்வொரு நாளும் வேற வேற நாளுதானே. அவரு வேலை பாக்குற பள்ளியோடத்துக்கு எதுத்தாப்புல தண்ணி ஓடுற வெண்ணாறு ஒரே ஆறா இருந்தாலும் ஒவ்வொரு வருஷமும் வேற வேற தண்ணித்தானே ஓடுது.
            சுப்பு வாத்தியாரிடம் அனா, ஆவன்னா கற்றுக் கொண்டுதான் திட்டைப் பள்ளியோடத்தின் பிள்ளைகள் நகர்ந்தது போல, அந்தப் பள்ளியோடத்தின் அனைத்து விதமான ரிஜிஸ்டர்களும் அவரின் கைபட்டுதான் நகர்ந்து கொண்டிருந்தன. எல்லா ரிஜிஸ்டர்களையும் ஒரே ஆளாக இருந்து பார்த்து விடுவார். அதெப்படி ஒரே ஆளா அப்பிடின்னு கேட்டீங்கன்னா... ஒண்ணாப்புச் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாருக்கு அனா, ஆவன்னா, ஒண்ணு, ரெண்டு, மூணு சொல்லிக் கொடுக்குறத தவிர வேற என்ன வேலை இருக்கப் போவுதுன்னு நெனச்சி எல்லா ரிஜிஸ்டர்களையும் தள்ளி விட்டுடுவாங்களோ என்னவோ! ஆனா அவரு எதுக்கும் சலிச்சுக்க மாட்டாரு. அவரு பாட்டுக்கு எழுதித் தள்ளுவாரு. எழுத்து அப்படியே அச்சில் வார்த்தது போல இருக்கும் அவருக்கு. அவரு வேலை பார்த்த பள்ளியோடத்தைப் பொருத்த வரைக்கும் என்னிக்கு வேணாலும் இன்ஷ்பெக்சன்னு சொல்லுற ஆண்டாய்வைத் தகவல் கொடுக்காம எப்ப வேணாலும் நடத்தலாம். எல்லா ரிஜிஸ்டரும் அப்படி பக்காவா தயார் நிலையில இருக்கும். இப்படி ஒண்ணாப்பு பிள்ளைகங்களோட பழகிகிட்டுக் கெடக்குறதும், ரிஜிஸ்டர்களோட கெடக்குறதுதாம் அவரோட வேலை அங்க.
            கணக்குன்னா அப்படி ஒரு துல்லியமா போடுவாரு சுப்பு வாத்தியாரு. அப்போ திட்டைப் பள்ளிக்கூடம்தான் சம்பள பட்டுவாடா மையம். சுத்தியுள்ள பத்து பதினைஞ்சுப் பள்ளிக்கூடத்து வாத்தியார்மார்களும் மாசக் கடைசி ஆனா சம்பளம் வாங்க திட்டைப் பள்ளிக்கூடத்துக்குத்தான் வந்தாகணும். அத்தனைப் பேரோட சம்பளத்தையும் சரியாக கணக்குப் போட்டு சம்பளப்பட்டி அனுப்புறதிலேந்து, எல்லாருடைய சம்பளத்தையும் நாணயவாரியா கவர்ல போட்டு அவங்கவங்க வர வர பக்காவா எடுத்துக் கொடுத்து கையெழுத்து வாங்குற வரைக்கும் அதுவும் இவரோட வேலைதாம். வேலையில ஒரு சின்ன பெசகு இருக்காது. அப்படிக் கவர்ல போட்டுக் கொடுக்குற சம்பளத்தை எண்ணிப் பார்க்காமலே வாங்கிட்டுப் போவாங்க வாத்தியாருமாருங்க. ஒத்த ரூவாயி அதுல கூடவும் இருக்காது, குறைச்சலாவும் இருக்காது. வாத்தியாருமாருங்க யாருக்காவது சொசைட்டிக் கடன், பிஎப்புல பார்ட்பைனல் போடுறதுன்னாலும் சுப்பு வாத்தியார்கிட்ட சொன்னா போதும். அதுக்கு விண்ணப்பத்த தயாரு பண்ணி, அதுக்குப் போட வேண்டிய கணக்கு வழக்குகள, தவணை முறைகள எல்லாம் ரொம்ப சரியா கணக்குப் பண்ணி எழுதித் தந்துடுவாரு.
            அவரு இருந்த வாத்தியாரு சங்கத்துக்கு இருந்த கணக்கு வழக்குகளையும் சரியா கணக்குப் பண்ணி எழுதிக் கொடுத்துடுவாரு. வாத்தியாரு சங்கத்துல ரொம்பவும் பிடிப்பான ஆளு. எங்க ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதப் போராட்டம்னாலும் மொத ஆளா கெளம்பிடக் கூடிய ஆளு. இத்தனைக்கும் அவரு சங்கத்துல எந்தப் பொறுப்புலயும் இல்ல. உறுப்பினரா இருக்குறதுக்கு அவ்வளவு சரியா இருக்கணும்னு நெனைப்பாரு. அவரு பார்த்த வேலைக்கு சங்கத்துல சில பொறுப்புகள கொடுக்கப் பார்த்தாங்க. ஒண்ணாப்பு வாத்தியார்ரா இருந்த மாரியே உறுப்பினராவே இருக்குறதே போதும்னு இருந்துட்டாரு.
            திட்டைப் பள்ளியோடத்துல பன்னெண்டு நாப்பதுக்கு மதியானச் சாப்பாட்டு மணி அடிச்சா அந்தச் சத்தம் திட்டையில இருக்குற அவரு வூடு வரைக்கம் கேக்கும். அப்பவே திட்டையில வூட்டுல இருக்குற வெங்கு புரிஞ்சிக்கணும். தம்மேந்தி ஆத்தாவோட கதையடிச்சதுல வெங்குவுக்கு பள்ளியோடத்துல மத்தியான சாப்பாட்டு மணி அடிச்ச சத்தம் கேட்டது வேற வயித்துல சொரசொரன்னு இருக்கு. வர்றதுக்குள்ள சாப்பாட்டைத் தயாரு பண்ணிப்புடணுமேன்னு அலமலங்குது. மணி அடிச்சதிலேந்து ஐம்பது நிமிஷத்துல சுப்பு வாத்தியாரு வூட்டுல இருப்பாரு. அது ஒரு கணக்கு. மதியான மணி அடிச்சதுன்னா புள்ளைங்க சத்துணவு சாப்பிட்டு, தட்டு அலம்பி, வாய்ப்பாடு படிக்க உட்கார்ற வரைக்கும் அவரு அங்க இருந்து ஒரு மேம்பார்வைப் பார்துட்டு கிளம்பி வர்றதுக்கு ஐம்பது நிமிஷத்துக்கு ‍மேல ஆயிடும். அதாவது ஒண்ணரை வாக்குலதாம் வூட்டுக்கு வருவாரு.  வந்தார்னா இருபது நிமிஷத்துக்கு மேலயாவது உக்காந்து சாப்பிடுவாரு அவ்வளவு மெதுவா. சாப்புட்டு முடிச்சு கொஞ்சம் பேசிட்டு இருந்தார்னா திட்டையில மத்தியானம் பள்ளியோடம் ஆரம்பிக்குறதுக்கான மணி அடிக்குற சத்தம் கேட்கும்.
            வூடு கட்ட ஆரம்பிச்சதிலேர்ந்து முன்ன மாரில்லாம் ரொம்ப பேச வேற மாட்டேங்றாரு சுப்பு வாத்தியாரு. அவரு வூடு கட்ட வாங்குன கடனை எப்படி அடைக்குறதுங்ற கவலையில ஓடிட்டு இருக்காரு. ஏதோ உட்காருராரு, சாப்பிடுறாரு. சமயத்துல கொழம்பு வேணாம்னு, கறிகாயக் கூட தொட்டுக்காம வெறும் பச்சத்தண்ணியை ஊத்தி உப்பை மட்டும் போட்டுச் சாப்பிட்டுப் போறாரு. வெங்கு எதாச்சும் கேட்டா எந்தப் பதிலும் பேசுறது இல்ல. மெளனகுரு கணக்கா அப்படியே ஒரு பார்வைப் பாத்துகிட்டு கீழே எறக்கிக்கிறாரு. இந்த ஆளுக்குப் பேசுறது மறந்துப் போச்சான்னு நெனைச்சுக்குது வெங்கு. அப்படியே பள்ளியோடத்துலயாவது வாயத் தொறந்து பாடம் நடத்துறாரா இல்லையா அப்பிடின்னு ஒரு சலிப்பு சலிச்சுக்குது. அதுக்குள்ள பள்ளியோடத்து ரண்டு மணி பெல்லு அடிக்குற சத்தம் கேட்டதுன்னா... ஒடனே டிவியெஸ்ஸை எடுத்துகிட்டு கெளம்பிடுவாரு. கெளம்பிப் போனார்னா நாலு பத்துக்கு மணி அடிச்சு பள்ளியோடம் விட்டதும் இருக்குற ரிஜிஸ்தர்களையெல்லாம் ஒரு மேம்பார்வைப் பார்த்துபுட்டு ஏதாவது முடிக்கிற வேல இருந்தா உக்காந்து ஒரு இருவது நிமிஷத்துல கடகடன்னு எழுதித் தள்ளுவாரு. எழுதித் தள்ளிப்புட்டு பள்ளியோடத்த பூட்டிகிட்டு கெளம்புறதுக்கு நாலே முக்காலு அல்லது அஞ்சு ஆயிடும். அது வரைக்கும் அவருக்குத் தொணையா பள்ளியோடத்துக்குப் பக்கத்துல வீடு இருக்குற பெரிய பசங்களா பார்த்து ரெண்டு புள்ளைங்கள போட்டு வெச்சிருப்பாரு.
            இப்போல்லாம் சுப்பு வாத்தியாருக்கு வீட்டுக்கு வந்தா வூடு பத்தின கவலெ வந்துடுது. வீட்டுக்கு வாங்குன சொசைட்டிக் கடன், பார்ட்டு பைனலு, பெத்து வெச்சிருக்காரே மூத்தப் பயெ விகடு - அவனெப் பத்தின கவலைன்னு கொஞ்ச நேரத்துக்கு அப்படியே உக்காந்துடுவாரு. கட்டியிருக்குற வூட்டுல பூச்சு வேல ஒண்ணு கூட ஆகல. திண்ணைக் கதவும், கொல்லைக் கதவும் போட்டதோட இருக்கு. பாக்கி சன்னலுக்கெல்லாம் கிழிஞ்ச போர்வைகள கட்டித் தொங்க விட்டு வெச்சிருக்காரு. வூட்டைக் கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணணும்னு யோசிச்சுகிட்டு இருக்காரு. வர்ற சம்பளம் வாங்குன கடனுக்கான தவணைகள்ல கரைஞ்சிப் போய்ட்டு இருக்கு. அங்க இங்க கைமாத்தா சுத்துப்பட்டியில வாங்குனதை ஏதோ அடைச்சி முடிச்சிருக்காரு. அது ஒண்ணுதாம் ஆறுதலா இருக்கு.
            சுப்பு வாத்தியாரு இப்படி இருக்குற நெலமையில வேலையில இருக்குறவங்க இப்பவே விருப்ப ஓய்வு வாங்கிட்டுப் போறது நல்லதுன்னு வேற பேசிக்கிறாங்க. அரசாங்கம் வர்றப் போற காலத்துல ஓய்வுக்குப் பின்னாடி கொடுக்க வேண்டிய பணத்தையெல்லாம் மொத்தமா கொடுக்காம பாண்டுன்னு சொல்ற பத்திரங்கள்ல போட்டுக் கொடுக்கப் போறதாவும், அதை அஞ்சு வருஷம் கழிச்சுதாம் எடுத்துக்கலாம்னு பேசிக்கிறாங்க. இப்போ கையில கிடைக்க வேண்டிய பணத்தை அஞ்சு வருஷம் கழிச்சுப் பாண்டுலேந்து எடுத்தா பெருகிகிட்டுப் போற பணவீக்கத்துல அது அப்போ இப்போ இருக்குற அளவுக்கு மதிப்பா இருக்குமா அப்பிடின்னும் வாத்தியாருங்க, அரசு வேலை பாக்குறவங்க மத்தியில பேச்சு அடிபட்டுகிட்டுக் கிடக்குது. கொஞ்ச காலமா மாசச் சம்பளம் வாங்குற அரசு வேலையில இருக்குறவங்க எல்லாமும் இதப் பத்தித்தான் பேசிகிட்டு கெடக்குறாங்க. சுப்பு வாத்தியாரு அதப் பத்தியும் யோஜிச்சுகிட்டு நெத்தியைச் சுருக்கிகிட்டு கெடக்குறாரு. அவரோட ஒவ்வொரு நாளுப் பொழுதும் இப்போ இப்படித்தான் கொஞ்சம் வேலையிலயும், கொஞ்சம் கவலையிலயும் போய்க்கிட்டு இருக்கு.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...