நம்ம திட்டையில, மணமங்கலத்துல வயலு வரப்பு
ஒவ்வொண்ணும் எப்படி இருக்கும்றீங்க? நீங்க நடக்குற சாலையில பாதி இருக்கும். சாலையளவுக்கு
இருந்த வரப்புகளும் இருந்துச்சு. இங்க ஊரு பயணங்கள்லாம் அப்போ வயலுக்குக் குறுக்காத்தானே.
விவசாயம் நடக்கறப்ப வரப்புக வழியா போறப் பயணம், விவசாயம் முடிஞ்சு அறுத்தாச்சுன்னா
வயலுக வழியா மாறிடும்.
மோட்டா மோட்டாவா இருக்கற வரப்புகள்ல
கத்திரி, வெண்டை, கொத்தவரை, துவரைன்னு போட்டு வைப்பாங்க. பரங்கிக் கொடியும், சொரைக்
கொடியும் மண்டிக் கெடக்கும். மார்கழி மாசம் ஆச்சுன்னா வயலைப் பாத்துட்டு பரங்கிப்
பூவோட கையில ஒரு பரங்கிப் பிஞ்சோ, சொலைப் பிஞ்சோ இல்லாம ஆளுங்க வராது. இந்தப் பிஞ்சுகள
அப்படியே சமைக்காம சாப்பிடலாம். அப்படிச் சாப்பிட்டா சிறுநீரகக் கல்லு, பித்தக்கல்லு
இதெல்லாம் வரவே வராது. அதே வரப்புல 'வரப்பு உளுந்து' போடுவாங்க. அது அப்படியே கொடி
கொடியா மண்டிக் கிடக்கும்.
இந்த வரப்பு ஓரத்துல மண்டிக் கிடக்குற
கரிசாலையும், முடக்கத்தானும் ரொம்ப பயங்கரமான மூலிகைங்க. வயலுக்குப் போறவங்க இந்தக்
கரிசாலையைக் கொஞ்சம் பறிச்சி அப்படியே கையில வெச்சே கசக்கித் தலையில தேய்ச்சுகிட்டு
வந்துடுவாங்க. அவங்க வயலுலேந்து வீட்டுக்கு வரதுக்கு எப்படியும் பத்து பதினைஞ்சு நிமிஷம்
ஆயிடும். வந்த ஒடனே குளியல போடுவாங்க. அவங்களுக்கு முடி நரைக்கவே நரைக்காதுன்னு சொன்னா
நம்புவீங்களா. அப்படி எண்பது வயசுல சாவுற ஆளங்களப் பார்த்தாலும் இங்க முடி நரைக்காம
என்னமோ ஐம்பது வயசு ஆளுங்க கணக்கா கட்டையில கெடக்கும்ங்க.
கரிசாலையைத் தலையில தடவிகிட்டு வாரப்பவே
கையில முடக்கத்தான் கொடியை ஒரு அரி அரிச்சிட்டு கொண்டாந்துடுவாங்க. அதுல ரசம் வெச்சோ,
துவையல் அரைச்சோ சாப்புடணுமே. உச் கொட்டிட்டே நாலு படி அரிசி கூட திம்பீங்க. அப்படிச்
சாப்பிட்டீங்கன்னா மறுநாளு காலையில மலம் பிரியுற சுகம் இருக்குப் பாருங்க. அது சுகம்தான்.
மலம் பிரியுறது தெரியாம பிரியும். ஒடம்புல மலம் தங்குனாத்தானே வியாதின்னு இந்த முடக்கத்தான்
வயித்துல மலத்தைத் தங்க விடாது. மலம் வயித்துல தங்கலன்னா வாயுக் கோளாறாவது, வயித்துக்
கொளாறாவது? வாயிக் கோளாறும், வயித்துக் கோளாறும் இல்லேன்னா ஒடம்புல வேற என்ன கோளாறு
வர முடியும் சொல்லுங்க!
இதையெல்லாம் கேட்க எவ்வளவு நல்லா இருக்கு!
இப்போ வயலு பக்கமே போவ முடியாத அளவுக்கு நம்ம ஆளுங்க வரப்புகள வெச்சிருக்கு. வரப்பே
சுத்தமா இல்ல. சின்ன புள்ளைங்க மண்ண வெச்சி விளையாண்டு வரப்புக் கட்டுன்னா எப்படி இருக்கும்?
ச்சும்மா தக்கனோன்டு இருக்கும் பாருங்க. அந்த அளவுக்குத்தாம் வரப்பு இருக்கு. கொஞ்சம்
வரப்பு தாட்டியமா இருக்குற இடத்துல நம்ம ஆளுங்க உக்காந்து குவார்ட்டரு அடிச்சுப் போட்டு
பாட்டிலை ஒடைச்சுப் போட்டு வெச்சு இருக்குங்க.
அடேய் மக்களா! இந்த வழியாத்தாம் நம்ம முன்னவங்க
நடந்து கரிசாலையையும், முடக்கத்தானையும் பறிச்சிட்டு வந்து சாப்புட்டு எண்பது தொண்ணூறு
வயசு வரைக்கும் வாழ்ந்து செத்தானுங்கன்னு சொன்னா குவார்ட்டரு அடிக்குற ஆளுங்க நம்புவாங்களா?
அடேய் மனுஷ வயசு முப்பது அல்லது நாப்பாதுதாம்டான்னு
குடிபோதையில வர்ற கோபத்துக்கு அப்படியே வாயில அடிச்சி வரப்பு சரியில்லாதததால வயலுல்லல
தூக்கிப் போட்டுடுவாங்க.
வரப்பு சரியில்லாததால தண்ணி இந்தப் பக்கமும்,
அந்தப் பக்கமும் பூந்து அடிக்குது. எங்கயும் தண்ணி நிக்க மாட்டேங்கது. வரப்பு சரியில்லன்னா
அப்படித்தாம். வரப்பும் சரியில்ல. நம்ம குடிமக்களோட வரம்பும் சரியில்ல. இதுல எது சரியில்லன்னாலும்
பூந்துதான அடிக்கும். வரப்பு, வரம்பு ரெண்டு வார்த்தைக்கும் தொடர்பு இருக்குப் பாருங்க!
வரப்பு அது வயலுக்கு. அப்பதாம் வயலு வயலா
இருக்கும்.
வரம்பு அது வாழ்க்கைக்கு. அப்பதாம் வாழ்க்கை
ஒரு வரம்புல நிக்கும். வரம்பு இல்லாம குடிச்சா அதெ தாங்குறதுக்கு வாழ்க்கை என்னதாம்
பண்ணும்?
*****
No comments:
Post a Comment