11 Sept 2019

தொடர்பு எல்லைக்கு அப்பால்...



            என் உடலுக்கான ஓய்வை என்னால் கொடுக்க முடிகிறது. என் மனதுக்கான ஓய்வை செல்போனை அணைத்து வைக்கும் போதுதான் கொடுக்க முடிகிறது. செல்போன் விழித்திருக்கும் நேரமெல்லாம் என் மனம் இயங்கிக் கொண்டிருக்கிறது. உறக்கத்தின் கனவிலும் அதன் ரிங்டோன் ஒலிக்கிறது. நான் பேசிக் கொண்டு இருக்கிறேன். என் கை விரல்கள் அதன் விளையாட்டுச் செயலிகளில் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கின்றன. வாட்ஸப்பில் பொதிந்த கண்கள் இமைக்க மறந்து கிடக்கிறது. என் கனவு முழுவதும் செல்போன்கள் நிரம்பிக் கிடப்பதை நான் விசித்திரமாகச் சொல்ல முடியாது. என் செல்போன் எண்ணோடு தொடர்பு கொண்டுள்ள எல்லாரின் கனவுகளிலும் அதுதான் நிரம்பிக் கிடக்கிறது. அவர்கள் கனவுகளிலிருந்து தொடர்பு கொள்கிறார்கள். தூக்கத்திலும் இடைவிடாமல் நாங்கள் நெட்வோர்க்குகளில் பேசிக் கொண்டு இருக்கிறோம்.
            செல்போன் தொலைந்து போன ஒரு நாளில் நெட்வொர்க் வலையிலிருந்த எல்லாரும் தொலைந்து போனார்கள். ஒருவரின் எண்ணும் என் நினைவிலில்லை. எல்லாரும் எண்ணோடு தொடர்பு கொண்டவர்கள். எவரையும் நான் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களாலும் என்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. என் கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு, என் உடம்பு எல்லாம் செல்போனில் இருக்கிறது. அது இருந்தால்தான் அவர்கள் எண்ணைப் பார்க்க முடியும். என்னோடு பேச முடியும். என்னைத் தழுவ முடியும். கை குலுக்க முடியும். எனக்கும் அப்படியே. அவர்களை நான் அதிகம் மிஸ் செய்தேன். அவர்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அவர்களைப் பொருத்தவரையில் அவர்களின் தொடர்பில் என்னுடைய ஓர் எண் விடுபட்டு விட்டது. ஆனால் எனக்கு அப்படியில்லை. என்னுடைய எல்லாருடைய தொடர்பு எண்ணும் விடுபட்டு விட்டது. அவர்களை நேரில் பிடிக்க முடியாது. அவர்களோடு நேரில் உரையாட முடியாது. அவர்களுடன் நேரில் பழக முடியாது. அவர்கள் அலைவரிசையில் வரக் கூடியவர்கள்.
            நான் யாரோடு பேச முடியும்? நான் யாரோடு பழக முடியும்? நான் யார் சொல்வதைக் கேட்க முடியும்? என்னிடம் செல்போன் இல்லை. என் காது அதுதான். என் வாய் அதுதான். என் மூளை கூட அநேகமாக அதுதான். எனக்குப் பசிக்கிறதா என்பதை அதுதான் சொல்ல வேண்டும். எனக்கு ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, கொழுப்பு இருக்கிறதா என்பதை அதுதான் சொல்ல வேண்டும். நான் எத்தனை மணிக்கு முழிக்க வேண்டும் என்பதை அதுதான் அலாரம் அடித்துச் சொல்ல வேண்டும். ஓர் அவசரம் என்றால் 108க்குப் போன் போட்டு அதன் வழிதான் பேச வேண்டும். என் மேலதிகாரி அதன் மூலமாகத்தான் என்னோடு தொடர்பு கொண்டாக வேண்டும்.
            ஒரு செல்போனை இழந்த அந்த நொடியில் நான் கற்கால மனிதனாகி விட்டேன். என்னிடம் இப்போது எதுவுமில்லை. நான் நிராயுதபாணி. கவச குண்டலங்களோடு பிறந்த கர்ணனைப் போல செல்போனோடு நான் பிறந்திருக்கிறேன் என்பது புரியவே நாட்களாகி விட்டன.
            செல்பேசியை இழந்து தூரதேசியாகி விட்ட நான் அதிசயப் பிரயாணி ஆகி விட்டேன். எனக்கு ஒரு செல்போனை வாங்கிக் கொடுக்க எல்லாரும் முயற்சி செய்கிறார்கள். அதை வாங்கிக் கொள்வதா? வேண்டாமா? என்ற யோசனையில் இருக்கிறேன். வருங்காலத்தில் அந்தச் செல்போனைத் திருட நிச்சயம் ஒருவர் வருவார் என்றோ, அல்லது அதை நான் இழப்பேன் என்றோ எனக்கு நம்பிக்கையில்லை.
இப்படிக்கு
அன்புடன்
எஸ்.கே.
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...