செய்யு - 203
"நாம்ம இன்னிக்கு சமயல முடிச்சாப்லதாம்!
ச்சும்மா வூட்டுல கெடக்க முடியாம இப்பிடி வந்து வாயக் கெளறி வுட்டுடுறது! இனும நாம்ம
எப்ப சமயல ஆரம்பிச்சு முடிக்கிறது? வர்ற நீ வந்தியா போனீயான்னு இருக்க மாட்டீயாக்கா!"
என்கிறது வெங்கு.
"ன்னா பெரிய சமயலு. கறிகாய எடுத்துப்
போடு. அரிஞ்சுத் தாரேம். அப்டியே பேசிகிட்டே ஒலய வெச்சு, ஒரு சட்டியில புளித்தண்ணிய
கரைச்சு வுட்டீன்னா அர நாழி ஆகுமா சமைக்குறதுக்கு? அப்டியே போறப்ப கிண்ணியில கொஞ்சம்
கொழம்ப மட்டும் வெச்சிக் கொடு. கெழவன் பாவம் தண்ணிய ஊத்தி உப்ப அள்ளிப் போட்டு சோத்தை
வெச்சா மூஞ்சை தூக்கி வெச்சிகிட்டு மொறைச்சுகிட்டு சாப்புடாது!" என்கிறது தம்மேந்தி
ஆத்தா.
"வந்ததுக்கு கதயைக் கேட்டாச்சு. கொழம்புக்கும்
தேத்தியாச்சு. ஒனக்கென்ன. இப்பிடி வூடு வூடா போய்ட்டு ஜாலியா பேசிகிட்டே ஒம்மோட வாழ்க்க
ஓடுது!" என்கிறது வெங்கு.
"அடி கோச்சீக்காதே தங்காச்சி! ஒம்
மாமம் மொவம் ன்னா முடிவுல இருக்காம்? அதக் கேட்டா வேதாளம் விக்கிரமாதித்த மகராசாவுக்குக்
கதை சொன்ன கணக்கால்ல சொல்றே?" என்கிறது தம்மேந்தி ஆத்தா.
"ன்னக்கா நீயி! அதாஞ் சொன்னேனே!
அந்த டாக்கடருப் பய காலுல வுழுந்துட்டாம். இந்தப் பயெ டாக்கடர்ரே காலுல விழுந்துட்டாங்றதுக்காக
ஒண்ணும் பேசாம அவளெ இத்துகிட்டு வர்றதா முடிவுல இருக்காம். இப்போ வெளிநாட்டு போவணும்னு
நிக்குறாம். இதாங் கதெ."
"ஏம்டி தங்காச்சி! மறுபடியும் வந்து
அந்த மவராசி ஒழுங்கா இருப்பாளா? இவளெ இஞ்ஞ வுட்டுப்புட்டு அவ்வேம் அப்பிடி வெளிநாடு
போயி ன்னத்தா பண்ணப் போறானாம்?"
"இப்டியே நடந்து மேற்கால போனீன்னா
தஞ்சாவூரோ, பாக்குக்கோட்டையோ யில்ல வடாதியோ... அஞ்ஞதாம் இருக்கும் ரண்டும். நீயே
போயி கேட்டுக்கோ. இதெல்லாம் அந்த வீயெம் பயெ சொன்ன சேதி. கேட்டத கேட்டீயேன்னு சொன்னாக்கா
துப்பு துலக்குறவேம் மேரில்ல கேட்குறே?"
"அதானப் பாத்தேம்! ஒந் தம்பிக்கும்
அவனுக்கும் எப்டி ஒட்டிக்கிச்சோ?"
"நமக்குத் தெரிஞ்ச சேதி கொஞ்ச நஞ்சந்தாம்.
இந்த வீயெம் பய வந்து அது இதுன்னு சொல்லிட்டுக் கெடக்காம். அவனும் சித்துவீரம் பயலும்
ஒருத்தனுக்கொருத்தம் தோஸ்த்தா கொலாவிட்டுக் கெடக்குறானுவ்வோ. இவனுக்கு ஒண்ணுன்னு
அவங்கிட்ட யோஜன கேட்டுக்கிறாம். அவனுக்கு ஒண்ணுன்னு இவனுகிட்ட யோஜன கேட்டுக்கிறாம்.
நம்ம சின்னபய வீயெம்முக்கு வெளிநாடு போவணும்னு ஆசெ. அண்ணங்காரம் குமரு பயெ அதெ பண்ணி
விட்டத்தாம் ன்னா? நாம்ம போயி கஷ்டப்பட்டதோட இருக்கட்டும்ங்றான் அவ்வேன். அண்ணங்காரம்
பண்ணி விட மாட்டான்னு இந்தப் பயெ நெனைச்சுகிட்டு அவனோட சுத்துறாம். அந்தப் பயலும்
வெளிநாடு போற ஆசைய காட்டி அவங்கூட தொணைக்கு வெச்சிகிட்டுத் திரியுறாம். இந்தப் பய வெளிநாடு போயிட்டுக் கிடக்குறதால நம்ம
பயெ அவனையும் அழைச்சிட்டுப் போவான்னு நம்புறாம். இதாங் சங்கதி. அதெ வுடு. நாமளும்
ஒரு பொண்ண பெத்து வெச்சிருக்கேம். எப்படிப்பட்டவேம் வாரப் போறானோ?"
"நல்லதோ, கெட்டதோ நம்ம நாட்டுல
வேலை பார்க்குறவனுக்குத்தாம் பொண்ண கட்டிக் குடுக்கணும்டி! வெளிநாட்டுக்குப் போறவனுக்குக்
கட்டிக் கொடுத்தா சிக்கலுதாம். அவம் பாட்டுக்கு விட்டு விட்டுட்டு வெளிநாட்டுக்குப்
போயிட்டே இருப்பாம். அது ஒரு பழக்கமாவே அலும்பாவே போயிடும். அவனுக்குப் பொண்டாட்டி,
புள்ளன்னு எந்த நெனைப்பும் இருக்காது. வெளிநாட்டு நெனைப்புலயே மூணு வருஷத்துக்கு ஒரு
தடவே ஊரு வருவாம். வந்ததும் வராதுமா கெளம்புறதுலயே நிப்பாம். எதாச்சிம் கேட்டா போதும்,
எனக்கா போயி கஷ்டப்படறேம்பாம். போயி சம்பாதிச்சாத்தான பொண்டாட்டிப் புள்ளய நல்ல
வெதமா வெச்சிக்க முடியுமாம்பாம். கஷ்டமோ, நஷ்டமோ பொண்டாட்டிப் புள்ளையோட கெடக்குறதுதாம்
வாழ்க்க!" என்கிறது தம்மேந்தி ஆத்தா.
இந்தத் தெருவுல அப்படி தெருவுக்கு தெரு
வெளிநாடு போயி சம்பாதிக்கிற ஆளுங்க ஒண்ணோ ரெண்டோ இருப்பாங்க. அப்படி வெளிநாடு போயிச்
சம்பாதிக்கிற குடும்பங்கள்ல ஆம்பள இல்லாத கஷ்டம்னா, ஆம்பளை உள்ள வூடுகள்ல வறுமையைச்
சமாளிக்க முடியாத கஷ்டம் இல்லாம இருக்காது. இதுக்கும் ஒரு முன்கதைச் சுருக்கம் இருக்கத்தான்
செய்யுது.
இந்தக் காவிரி டெல்ட்டாவுல வயலுக்குத்
தண்ணி திறந்துப் பாயுற மடையைக் உடம்பைக் குனிஞ்சி, கைகளால அடைக்குற பழக்கமே ரொம்ப
நாளைக்கு இல்லாம இருந்தது. காலாலேயே அப்பிடி இப்பிடி சேற்றைத் தள்ளி விடுறது, அமுக்கி
விடுறதுன்னு அவ்வளவுதான் மடை அடைக்கிறது. தண்ணி அப்படி வளமா பாய்ற பகுதியில் அப்படி
ஒரு அலுப்புக்காத்ததனம் வர்றது இயற்கைதான். வயல விட்டு தண்ணி மடையைத் தாண்டி வெளியில
பாய்ஞ்சாலும் மறுநாளு வெச்சிக்கலாம்ங்ற மதப்புதான் அதுக்குக் காரணம். தண்ணிக்கா இங்க
பஞ்சம். வெண்ணாத்துல தண்ணி வந்து நாத்து விட்டு, நடவு நட்டு, நிமிர்ந்தா வடகிழக்குப்
பருவமழைப் பிடிச்சிடும். வயலுக்கு அது பாட்டுக்கு தண்ணி வைக்குறது போல இருக்கும் அது
பெய்யுறது. வயலப் போயி ஒருக்கா வேடிக்கைப் பாத்துட்டு வந்துகிட்டு இருக்கலாம். நாலு
மா நெலம் இருந்தா போதும். அம்சமா பொழைக்கலாம் இங்க. குறுவை, சம்பா, தாளடி அது முடிஞ்சா
பயிறு, உளுந்து, எள்ளு அதுக்கு ஊடலாயே துவரை, கொட்டமுத்துனு வளர்ந்து செழிச்சிக் கிடக்கும்.
வடவாதிக்கு சர்க்கரை ஆலை வந்த பெறகு ஊரு
அப்போ நின்ன நிலையே வேற. வெளியிலேர்ந்து பஞ்சம் பொழைக்க வந்தவங்க இங்க அதிகம். எப்படியும்
விவசாயம் பண்ணிப் பொழைச்சுக்கலாம்னு இருந்த பூமி. அதெல்லாம் ஒரு காலம். சர்க்கரை ஆலைப்
போனதுக்கு அப்புறம் வெண்ணாத்துல தண்ணி வரதும் வரேன்னா இல்லையான்னு வருஷா வருஷத்துக்குப்
போக்கு காட்ட ஆரம்பிச்சிடுச்சு. முப்போகம்னு இருந்த விவசாயம் ஒரு போகம்னு சுருங்கிப்
போயிடுச்சு. சில வருஷங்கள்ல அதுவும் இல்லாமப் போயிடுச்சு. இந்தக் கொடுமைய எங்கப்
போயி சொல்றது சொல்லுங்க! கொழுத்து இருந்த புள்ளைங்க இளைச்சுப் போன கதைதான். போரு
போட்டு விவசாயம் பண்ணிப் பாக்கலாம்னு முயற்சி பண்ணவங்களுக்கு எல்லாம் உப்புத் தண்ணியா
வர வர, போரு போட்டவங்க கண்ணுலேந்தும் உப்புத் தண்ணியா ஊத்த ஆரம்பிச்சுச்சு.
இந்தக் கூத்துல ஓ.என்.ஜி.சி.ன்னு எரியெண்ணெய்
எடுக்குறவங்க அங்கங்க போரு மாதிரி என்னத்தையோ போட்டு இளஞ்சிவப்பு ஒயரை அனுமாரு வாலு
போல ஊருக்கு ஊருப் போட்டு வெடி வெடின்னு வெடிச்சுத் தள்ளுனாங்க. அப்படி வெடிச்சுப்புட்டு
ஒரு சில வயல்கள வளைச்சி இங்க பூமிக்குக் கீழே எரி எண்ணெய் இருக்கான்னு பாக்கணும்ங்றாங்க.
நிலத்தை வளைச்சதுக்குப் பத்தி கவலைப்பட வாணாம்னு சொல்லி, எத்தனை வருஷம் வெள்ளாமைப்
பார்த்து என்ன வருமானம் பார்ப்பீங்களோ அத்தனைப் பணத்தைத் தருவோம்னு சொன்னவங்க ரெண்டு
மூணு வருஷம் பாத்துப்புட்டு இந்த வயலு வேணாம்னு போட்டுப்புட்டுப் போறாங்க. போட்டுப்புட்டு
போனவங்க எப்படி வயல வாங்குனாங்களோ அப்படிப் போட்டுப்புட்டுப் போனா சிக்கலில்ல.
அந்த வயல சிவப்பு மண்ணப் போட்டு தூர்த்துப் போட்டுப்புட்டுப் போறாங்க. அந்த வயலுக்குச்
செலவு பண்ணி நெலத்தை வயலாக்குறதுக்குச் சும்மா கெடக்கலாம்னு நெலத்துச் சொந்தக்காரங்க
அப்படியே போட்டுறாங்க.
காலப் போக்குல காவிரி டெல்ட்டாவான வெண்ணாத்துப்
பாசனப் பகுதியில முடிஞ்சவங்க விவசாயம் பண்றாங்க. முடியாதவங்க அப்படியே நெலத்தைத் தரிசா
போட்டுடுறாங்க. இங்க விவசாயம்ந்தானே வேலை வாய்ப்பு. அது இல்லேன்னா என்ன பண்ணுவாங்க
இங்க இருக்குறவங்க? வேலை வாய்ப்பு இல்லேன்னா அப்படியே பட்டினி கெடந்து செத்துடவா முடியும்?
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு யோசனையில டவுனு பக்கம் போறதும், வெளிநாட்டுக்கு வேலைக்குப்
போறதும்னு மாற ஆரம்பிச்சாங்க. இதுல வெளிநாடு போனவங்களோட கதி நல்லா இருக்க ஆரம்பிச்சது.
வெளிநாடு போறத இங்க 'பயணம் போறது'னு சொல்லுவாங்க. நாலு பயணம், அஞ்சு பயணம் போனா
வாழ்க்கையில கெட்டியாயிடலாம். அப்படி நெனைச்சு பயணம் போக ஆரம்பிச்சி வாழ்நாளு முழுக்க
பயணம் போன ஆட்களுக்கும் இங்க இருக்காங்க. அளவா நாலு அஞ்சு பயணத்தோட முடிச்சிகிட்டு
ஊருக்குள்ள ஒரு கடையை வெச்சிகிட்டு இருக்குற ஆளுங்களும் இருக்காங்க.
வெளிநாட்டுக்கு வேலைக்குப் போனவங்கதான்
இங்க மச்சு வூடு கட்டியிருக்காங்க. கடை வெச்சிருக்காங்க. காரு, டிராக்கடரு, வேனு, லாரின்னு
வாங்கி ஓட வுட்டு இருக்காங்க. அப்படியே நெலத்த வாங்கிப் போட்டு அவங்க பொழுது போக்கா
விவசாயமும் பண்ணிகிட்டு இருக்காங்க. ஆமா! அவங்க பண்ணது பொழுதுபோக்கு விவசாயந்தான்.
வயல்லேர்ந்து விளைஞ்சு வந்தாலும், வராட்டாலும் அதப் பத்தியெல்லாம் கவலப்பட மாட்டாங்க.
ஒரு கெத்துக்காக விவசாயம் பண்ணுவாங்க. இங்கயே கெடந்து பாடுபடுற விவசாயி அது போல இருந்துட
முடியுமா? அதோட விளைவு பாருங்க! நெலத்த வெச்சிக்கிட்டு முழுநேர விவசாயிகளா இருந்தவங்க
நெலத்த வித்துப்புட்டு கொஞ்ச நாளு விவசாயத் தொழிலாளிகளா இருந்துப் பாத்தாங்க. இப்போ
இருக்குற வெவசாயம் வருஷம் முழுமைக்குமா வேலை கொடுக்குது? அதால அவங்க அப்படியே கட்டடத்
தொழிலாளிகளா மாற ஆரம்பிச்சாங்க. விவசாயத் தொழிலாளிகளாவும், கட்டடத் தொழிலாளிகளாகவும்
மாறி மாறி வேல பார்க்க ஆரம்பிச்சாங்க. உடம்பு கஷ்டப்பட்டு உழைக்க முடியாதவங்க டவுனுல
கடைப்பக்கம் போயி எடுபிடி வேலை பார்க்க ஆரம்பிச்சாங்க. இது எல்லாத்தியும் விட வெளிநாடு
போயி வந்தா தப்பிச்சிகலாம்ங்றதுதாம் இங்க எல்லாரோட எண்ணம். அதால வெளிநாடு போறதுதாம்
இங்க எல்லாரோட கனவும். வெளிநாடு பயணம் போய்ட்டு வந்தா அந்தத் தெருவுக்கு அவருதான்
ராசா.
வைத்தித் தாத்தா குடும்பம் அப்படித்தான்
குமரு மாமா வெளிநாடு போயி வந்ததுல பொருளாதாரத்துல தலை நிமுந்துச்சு. அந்தத் தெருவுக்கு
மொத மச்சு வீட்டைக் குமரு மாமா கட்டுனுச்சு. வெளிநாட்டுப் பயணத்துல கஷ்டம், நஷ்டம்
ஆயிரம் இருந்தாலும் ரெண்டு தடவ போய்ட்டு வந்தா கூட போதும். கொஞ்சம் ஆசுவாசமா தலை
நிமுந்து உக்காந்துக்கலாம். இந்த வெளிநாட்டுப் பயணத்தப் பத்தி ஆளாளுக்கு ஒரு கருத்து
இருக்கும் இங்க. ஒரு சில ஆளுங்க உள்ளூர்ல சம்பாதிக்கிறதுதாம் சம்பாத்தியம்பாங்க. ஒரு
சில ஆளுங்க பெண்டாட்டி, பிள்ளைக் குட்டிகளைப் பிரிஞ்சி வெளிநாட்டுல சம்பாதிக்குறதாம்
சம்பாத்தியம்பாங்க.
தம்மேந்தி ஆத்தாவோட ரெண்டாவது புள்ளை
சின்னதுரை அப்படித்தாம் வெளிநாடு போனுச்சு. அங்க சவூதியில டிரக்கு ஓட்டுற வேலை அதுக்கு.
தம்மேந்தி ஆத்தாவும், வெங்கிட்டு தாத்தாவும் முப்பத்தஞ்சாயிரத்த அங்க இங்க வட்டிக்கு
வாங்கி பயணத்துக்குத் தோது பண்ணி அனுப்பி விட்டாங்க அதை. அனுப்புன ஏஜென்ட்டு, போயி
சேர்ந்த கம்பெனி எல்லாம் வகை தொகையா அமைஞ்சிருந்தும் சின்னதுரைக்கு அங்க அம்மா அப்பாவைப்
பிரிஞ்சி இருக்க முடியல. தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளைக்கு இப்பிடில்லாமா இருக்கும்னு
ஊரே மூக்கு மேல வெரலு வெச்சு ஆச்சரியத்தோடு விசயத்த கேள்விப்பட்டு யோசிச்சுகிட்டு
இருக்கிறப்பவே, பயணம் போன மூணாவது மாசமே ஊரு திரும்பிடுச்சு சின்னதுரை. வட்டிக்கு
வாங்குன கடன எப்படி அடைக்கிறதுன்னு தம்மேந்தி ஆத்தாவுக்கும், வெங்கிட்டு தாத்ததாவுக்கும்
தெகைப்பா இருந்தாலும் போன பயெ நல்லபடியா திரும்பி வந்துட்டாங்றதுல மனச தேத்திக்கிட்டு
அதை அத்தோடு விட்டுடுச்சுங்க ஆத்தாவும், தாத்தாவும். இது தம்மேந்தி ஆத்தாவோட வூட்டுக்
கதை.
அந்த நெனைப்பு தம்மேந்தி ஆத்தாவுக்கு இப்போ
வருது. "என்னதான் வெளிநாடு வாணாம்னு சொன்னாலும், ஒவ்வொண்ணும் என்னமா பொழைக்குதுடி
வெங்கு! நம்ம வூட்டுலயுந்தான் இருக்கே! எல்லாத்துக்கும் ஒரு யோகம் வேணும்டி. நம்மகிட்ட
அதுயில்ல!" என்கிறது தம்மேந்தி ஆத்தா.
"யே யக்கா! நீயி மொதல்ல வாய முடீட்டு
நடய கட்டு. கொழம்ப வாணாலும் கறிகாய நாமளே அரிஞ்சுப் போட்டு கொதிக்க வெச்சி ஒம்மட
வூட்டுக்குக் கொண்டு வர்றேம். நீயி இஞ்ஞ நிமிஷ நேரம் நின்ன ஆவுற வேலயும் ஆவாதுக்கா!"
என்கிறது வெங்கு.
"அட போங்கடி தங்காச்சிகளா! ஒங்க
வயசுல நாங்க பாக்காத வேலைகளா? ன்னம்மோ இதுக்குப் போயி இம்மாம் அலுப்பு அலுத்துக்குறே.
வேண்டாதவ வூட்டுல நாம்ம ஏம் இருக்கணும். நடயக் கட்டுறேம். கொழம்பு அதெ மறந்துடாதுடி.
கெழவம் ஒரு பருக்கைய எடுத்து வாயில வைக்க மாட்டாரு! எம் பொழப்பு நாறிப் போயிடும்!"
என்றபடியே வீட்டை நோக்கி நடக்கிறது தம்மேந்தி ஆத்தா.
*****
No comments:
Post a Comment