10 Sept 2019

எழுத்தாளர் இறந்து விடுகிறார்! எழுத்துப் பிறக்கிறது!



            எழுத்தாளருக்கு மனநிலை எப்போதும் ஒரு பிரச்சனை. ஒரு நிலையான மனநிலையால் எழுத்தாளரால் இருக்க முடியாது. அலைகின்ற அவரது மனதுதான் வார்த்தைகளை அப்படியும் இப்படியுமாக எழுத வைக்கிறது. ஒரு நிலையிருந்து மறுநிலையில் பார்க்கும் போதுதான் ஒரு கோணம் கிடைக்கிறது. அந்தக் கோணம்தான் எழுத்தின் ஆதாரம். அப்படியாக இப்படியும் அப்படியும் அலைபாய்ந்து கொண்டிருப்பது எழுத்தாளரின் மனம்.
            எழுத்தாளரின் மனம் எப்போது நின்று விடுகிறதோ அப்போதுதான் அவரின் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று நடக்கிறது. அத்துடன் எழுத்து நின்று விடுகிறது. அதற்கு மேல் எழுத ஒன்றுமில்லை என்று சூன்யமாகி விடும் நிலையில் அவர் முதல் முதலாக மனிதராகிறார். அதுவரை அவர் வாழ்வது ஒரு வாழ்க்கையில்லை. அவர் ஒரு மனிதரும் இல்லை. ஒரு நிலையற்ற பைத்தியகாரர் ஒருவரின் சற்றே மேம்பட்ட மனநிலையில்தான் அவர் இருக்கிறார். எழுத்து நின்று விடும் அந்த நிலைக்குப் பிற்பாடு அவர் மனிதர்.
            அதற்குப் பின் அவரது பேச்சு, எழுத்து எதுவும் அவருக்கானதல்ல. ஒரு செயலுக்கான பிரதிவினை அவ்வளவே. அந்த இடத்தில் வெளிப்படும் பேச்சும், எழுத்தும் இருக்கிறதே அது அபாரமான சுதந்திரம் வாய்ந்தது. அதுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்புமில்லாத எழுத்து. அது அவர் வழியாக வெளியாகும் எழுத்து. அதுதான் நிஜமான எழுத்து. அதை எழுதியது அவர் என்று சொல்லிக் கொள்ள மாட்டார். அவருக்குத் தெரியும் அதற்கான அனுபவம் நூற்றாண்டுகளாக வாழ்ந்த மனிதர்களின் மரபுநிலை வழியாக தன்னிலிருந்து பிரவகிக்கிறது என்பது. ஆறு என்ற ஒரு வழி இருப்பதால் தண்ணீர் அது வழியாக ஓடுகிறது. இல்லாவிட்டாலும் அது ஏதோ ஒரு வழியாகத்தான் ஓடும். அப்படித்தான் அவரின் நிலைமை ஆகி விடுகிறது.
            எழுத்தாளர் என்ற அடையாளம் எவ்வளவு மோசமானது என்பது அவருக்குத் தெரியும். அவரிடம் ஓர் எழுத்தை எதிர்பார்த்து எழுதி வாங்குவார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். அதற்கான மனநிலைக்காக அவர் தன்னை வருத்துக் கொள்ள வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். ஓர் உண்மையான எழுத்து வருத்திக் கொள்வதல்ல. அதுவாக நிரம்பி வழிவது. அதற்கு முதல் வழி வாழ்க்கையை வாழ்வது. வாழ்ந்து முடித்த பின் அதுவாகவே பிரவகிக்கும். அதற்குள் அவசரப்படுபவரே எழுத்தாளர். அவர் அந்த அவசர நிலையைக் கடந்த பிறகே எழுத ஆரம்பிக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த நிலையைக் கடந்த பிறகு அவர் தன்னை எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ள மாட்டார். அப்போது எழுதுவது என்பது கடமையன்று, வேலையன்று, எதுவுமன்று. அது ஒரு சுவாசம். ஓர் உயிரி ஏன் சுவாசிக்கிறது என்று அதற்குத் தெரியும். அதே போலத்தான் சற்றேறக்குறைய அவர் ஏன் எழுதுகிறார் என்பது அவருக்குத் தெரியும்.
*****

No comments:

Post a Comment

குழு அமைக்கும் நேரம்!

குழு அமைக்கும் நேரம்! முடியும் என்றும் சொல்ல முடியாது முடியாது என்றும் சொல்ல முடியாது அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள் “அப்பாவிடம...