22 Sept 2019

அம்மாவின் கவலையும், தமிழர்களின் கவலையும்



            இன்று இரண்டு விதமான கவலைகள் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். கவலையின் முடிவில் நீங்கள் சிரித்தால் நான் மகிழ்வேன். அந்த இருவித கவலைகளையும் இப்போது பார்த்து விடுவோம்.
1. அம்மாவின் கவலை
            காஞ்சிவரம் அத்திவரதரைத் தரிசிக்க அழைச்சிகிட்டுப் போவலைன்னு எங்கம்மாவுக்கு ரொம்ப நாளு வருத்தம் இருந்துகிட்டே இருந்துச்சு. அந்த வருத்தத்தைப் போக்கிப்புடணும்னு நானும் வாட்ஸப், யூடியூப்ல வந்த அது தொடர்பான வீடியோக்களை, போட்டோக்களை எடுத்து போட்டுப் போட்டுக் காட்டிகிட்டே இருந்தேன். வருத்தம் தீர்ந்த பாடில்லை. "ஏம்மா! இதுக்கு மேல அங்க கூட்டத்துல போயி நீ என்னத்த பாத்திருக்கப் போறே?"ன்னு ஒரு வேகத்தில் கேட்டு விட்டேன். "அடப் போடா! ஒரு புடவை நூறு ரூபாய்க்கு வித்துருக்கான். போயிருந்தேன்னா பத்து இருவது புடவைங்கள அள்ளிட்டு வந்திருப்பேன். அழச்சிட்டுப் போவாம கெடுத்திட்டீயேடா பாவி!" அப்பிடின்னுச்சு அம்மா. "சாரிம்மா!" என்றேன் நான். "அதைத்தான்டா நானும் சோல்றேன்! நூறு ரூவா சாரி போயிட்டேடா!" என்றது அம்மா.
*****
2. தமிழர்களின் கவலை
            தமிழர்க்கு தமிழ் குறித்த வரலாற்று அறிவு இல்லை என்பது பல பேரின் குறையாக இருக்கிறது. புலம்பலாகவும் இருக்கிறது.
            அப்படிக் குறைபடுபவர்களை, புலம்புபவர்களைப் பிடித்து, "உங்க பிள்ளையை எந்த வழியில படிக்க வைக்கிறீங்க அய்யா?" என்று கேட்டால், சிரித்துக் கொண்டே, "இங்கிலீஷ் மீடியத்துலதாம் சார்!" என்று சொல்கிறார்கள்.
            அப்புறம் எப்படிடா தமிழ் குறித்த வரலாற்று அறிவு வளரும்? என்று கேட்க நரம்புகள், எலும்புகள், சதைகள் எல்லாம் சேர்ந்து துடித்தாலும், ஆங்கில வழியில் படித்து, ஆங்கிலம் மூலமாக தமிழ் கற்று, அதன் மூலமாக தமிழ் குறித்த வரலாற்று அறிவை அறிந்து கொள்ளவும் வாய்ப்பு இருக்கலாம் இல்லையா என்று நமக்கு நாமே சமாதானப்படுத்திக் கொள்வது எந்த வகைச் சமாதானத்தில் வரும் என்பது புரியவில்லை.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...