செய்யு - 197
காலா காலத்தில் ஒரு கடமை முடிந்து விட்டது
என்று உட்கார முடியாத நிலைமை சரசு ஆத்தாவுக்கு. அது நிற்கிறது, உட்காருகிறது, நடந்துப்
பார்க்கிறது. எதிலும் நிலைகொள்ள முடியாமல் தவிக்கிறது. அது வீட்டில் டீத்தண்ணி, காபித்தண்ணி
போடுவதையும் விட்டு விட்டது. சமைப்பது சுத்தமாய் நின்று போய் விட்டது. சாப்பாடெல்லால்
கடையில் வாங்கித்தான் சாப்பிட்டு ஆகிறது. டீத்தண்ணி குடிப்பது என்றாலும் கடைத்தெரு
பக்கம் தூக்குவாளியை எடுத்துக் கொண்டு போய் வாங்கி வந்துதான் குடித்தாகிறது. ஒரு
சின்ன வேலையைக் கூட சரசு ஆத்தாவால் பண்ண முடியவில்லை. இந்தாண்ட கெடக்குற பொருளை எடுத்து
அந்தாண்ட போட அதுக்கு மூளை வேலை செய்ய மாட்டேங்குது. சதா சர்வ காலமும் இதையே சிந்திச்சு
அதுக்கு தலைசுத்திப் போவுது. கட்டுறப் பொடவையை அதால சரியா கட்டிக்க முடியல. அந்த
அளவுக்கு அதோட நினைவு தப்பிப் போகுது.
எப்படியாக இருந்தாலும் இந்த விசயத்தில்
எதாவது ஒரு முடிவுக்கு வந்துதானே ஆக வேண்டியிருக்கிறது. இந்த விசயத்தையெல்லாம் வைத்துப்
பேச பாக்குக்கோட்டைத் தோதுபடாதுன்னு தஞ்சாவூரு லாலு மாமா வீட்டுக்குப் போறதுதாம்
சரின்னு முடிவாகுது. பிந்துவைப் பக்கத்து வீட்டில் விட்டு விட்டு சரசு ஆத்தாவும், ராசாமணி
தாத்தாவும் சுந்தரியைக் கெளப்பிக்கிட்டு ஜாகையாக வந்தாகிறது. சிம்மக்கல்லுல ஆயுர்வேத
டாக்கடருக்குப் படிப்பை முடிக்கிறு நெலமையில இருக்குற பாலாமணிக்குப் போன் போட்டுச் சொல்லி வரச் சொல்லியாகிறது. லாலு
மாமாவும் குயிலியைத் திருச்சியிலிருக்கும் பெரியப் பொண்ணு ஈஸ்வரி வூட்டுக்கு அனுப்பி
வைத்ததாகிறது.
இப்போ லாலு மாமா வூட்டுல அது, ராசாமணி
தாத்தா, சரசு ஆத்தா, வேலன் எல்லாருக்கும் இருக்காங்க. விசயம் ரொம்ப சிக்கலா இருக்குறதால,
வேலன் இருந்தா தொதுபடும்னு நெனைச்சி அவனுக்குப் போன் போட்டு வரச் சொல்லியிருக்கு
லாலு மாமா. எல்லாரும் பாலாமணி வரதுக்காக வாசல்ல காத்து இருக்காங்க. அவன் சிம்மக்கல்லுலேந்து
வரணுமே. அதுக்குக் கொஞ்சம் நேரமாவுது. அவனுக்கு எல்லாரும் காத்திருக்காங்களே தவிர,
ஒருத்தரும் ஒருத்தர்கிட்ட ஒரு வார்த்தைப் பேசிக்கல்ல. அப்படியே மெளன சாமியாருங்க போல
உக்காந்திருக்காங்க.
அப்போதாம் பாலாமணி ஆட்டோவுல வந்து எறங்குது.
ஆட்டோலேந்து எறங்குனதும் எறங்காதுமா பாலாமணி சுந்தரியைப் பார்த்ததும் அப்படியே பாய்ஞ்சுகிட்டு
கோபத்துல அத்தே நோக்கி ஒரு ஓட்டம் ஓடுது பாருங்க. அது மின்னலு வேகந்தான். கண்ணு மூடி
கண்ணு தொறக்குறதுக்குள்ள அப்படியே சுந்தரியப் போட்டு விளாசித் தள்ளுது. திடீரென பாலாமணி
அப்படிப் போட்டு சுந்தரியை அடிக்கும்னு யாரும் எதிர்பார்க்காததால் எல்லாருக்கும் ஒரு
நிமிஷம் அதிர்ச்சியும், தெகைப்புமா போவுது. எல்லாரும் சுதாரித்து முடிப்பதற்குள் சுந்தரி
சுருண்டு விழுகிறது. லாலு மாமா முதல் ஆளாய் ஓடிப் போய் தடுக்கிறது.
"நீயி வுடு மாமா! உண்ட வூட்டுக்கு
ரண்டகம் பண்ணிருக்கா! அவளேப் போயி அடிக்கக் கூடாதுன்னு தடுக்குறே. நல்ல எண்ணத்தோட
அவளே இஞ்ஞ அழச்சாந்து வெச்சா சோறு போட்டா... சோறு துன்ன வூட்டுலயே செல்போன ஆட்டயப்
போடுவாளா? ஐநூறு ரூவா பணம் வேற காணும்னு சொன்னீல்ல. இந்த நாயீத்தான் எடுத்திருக்கும்.
எம்மாம் தெகிரியம் இருந்திருந்தா இந்த வேலயப் பண்ணும் இந்த நக்குப் பொறுக்கி?"
என்கிறது பாலாமணி.
ப்ளாஸ்டிக் நாற்காலில் உட்கார்ந்திருந்த
வேலன் அப்படியே உட்கார்ந்திருக்கிறது. முன்பு பார்த்த உடம்பு இல்லை இப்போ அதுக்கு.
எப்படி சில மாதங்களில் இப்படி ஊதிப் போச்சோ தெரியல. உருவம் கனத்துப் போயிக் கிடக்கு.
பார்ப்பதற்கு பூதங் கணக்காய் இருக்கு. "இப்போ அடிச்சு ன்னா பண்ணப் போறே? வூட்டுலயே
திருடன வெச்சிகிட்டு வெளியில போயி புகாரு குடுப்பீயா? வூட்டுல வெச்ச செல்லு எப்டிக்
காணாமப் போவும்? இது மேலயும் அப்ப லேசா சந்தேகம். இருந்தாலும் வெளியில எஞ்ஞயாவது வுட்டுட்டேன்னாங்ற
சந்தேகம் வேற. இல்லேன்னா அப்பயே ஒதைச்சு வுட்டு வாங்கியிருப்பேம்." என்கிறது வேலன்.
"ஒனக்குச் சந்தேகம் வந்தப்பவே மெரட்டியிருந்தீன்னா
கொடுத்திருப்பா திருட்டு நாதாரி. மெரட்டணும். அடிக்கக் கை ஓங்கணும். அதுக்குதாம் பயப்படுவா.
இல்லேன்னா நாம்ம திருடவே இல்லேன்னு தலையில அடிச்சுச் சத்தியம் பண்ணுவா திருட்டு முண்டச்சி.
இப்படித்தாம் வூட்டுலயும் பண்ணுவா. ஒண்ணு வைக்க முடியாது. எல்லாத்தியும் திருடுறது.
திருடுறத யாருக்கும் தெரியாம விக்குறது. இதெ வேலைய்யாப் போச்சு இவளுக்கு. அதுக்குன்னு
சொந்தக்காரங்க வூட்டுலயா திருடுறது? இவளெப் போயி ஏம் அழச்சிட்டு வந்து சங்கடப்பட்டுப்
போறீங்க?" அப்படிங்து பாலாமணி.
"அய்யோ அந்தக் கதையெல்லாம் ஏம்டாப்
போட்டுக் கெளறுறீங்க? ஆக வேண்டியதப் பாருங்கடா!" அப்பிடிங்குது இப்போ முதல்
முறையா வாயைத் திறந்து ராசாமணி தாத்தா.
"இப்பிடிப் பேசிப் பேசி எல்லாத்தியும்
அமுக்கி அமுக்கித்தாம் இவளெ இப்பிடி ஆக்கிப் பூட்டீங்க! வூட்டுல கெடந்து நல்ல சோறு
சாப்பிடாம கெடக்கறாளேன்னு, நம்ம பிரெண்டோட அண்ணங் கல்யாணத்துக்கு இவளெ அழச்சிட்டுப்
போனேம். அஞ்ஞ எப்பிடி திருடுனாளோ, என்னம்மா திருடுனாளோ கல்யாணப் பொண்ணு வெச்சிருந்த
கேமராவக் காணும். மண்டபமே அல்லோகலப்படுத்து. இந்த நாற முண்டைத்தாம் எடுத்திருக்கா.
கல்யாணப் பொண்ணு ரூமுக்குள்ள அப்போ போயிட்டு வந்தவ இவ ஒருத்திதான்னு எல்லாரும் பேசிக்குறாங்க.
இருந்தாலும் வேற ஒண்ணும் சொல்லல. எனக்கா மானம் போவுது. கல்யாணத்துலேந்து சாப்புடாம
எழுந்திரிச்சி வந்திட்டேம். ரண்டு நாளு கழிச்சி இவ்வே திருடிட்டு வந்த கேமராவ ரேடியோ
பஜாரு கடைத்தெருவுல வித்து காசாக்க முயற்சி பண்ணிருக்கா. கடைக்காரனுக்குச் சந்தேகம்
வந்து நோண்டிருக்காம். இவ்வே சொன்ன பதிலுல்ல அவனுக்குச் சந்தேகம் வந்துப் போச்சு.
ஓங்கி ஒரு அறை வுட்டுருக்காம். இவளுக்குப் பயம் கண்டுப் போயி உண்மைய ஒளறியிருக்கா.
அந்தக் கடைக்காரன் பிரெண்டோ அண்ணன் கல்யாணம் பண்ணானே அந்தப் பொண்ணு வூட்டுக்குச்
சொந்தக்காரன் வேற. ஒடனே போன அடிச்சி வரச் சொல்லிருக்காம். வந்தவனுங்க நல்லவங்க.
இவளே ரண்டு மெரட்டு மெரட்டி வுட்டுப்புட்டு பொருளே வாங்கிட்டுப் போயிருக்கானுங்க.
இன்னிக்கு வரைக்கும் எம் பிரெண்டோட மூஞ்சுல முழிக்க முடியல இந்த திருட்டுச் சிறுக்கிப்
பண்ண வேலையால. இவளுக்குல்லாம் எந்த பாஷையில சொன்னாலும் புரியாது. அடி, உதைங்ற பாஷைத்தாம்
புரியும். அடிச்சாத்தாம் விசயம் வெளியில வரும்." என்கிறான் பாலாமணி.
"அதெ வுடு. நடந்தது நடந்துப் போச்சி.
பொண்ணு நம்ம வூட்டுப் பொண்ணு. பெருமைன்னாலும் நமக்குத்தாம். அசிங்கம்னாலும் நமக்குத்தாம்.
நல்லது கெட்டது எதுவா இருந்தாலும் நாமத்தான் சொமந்து ஆகணும். மேக்கோண்டு என்ன பண்ணலாம்ங்றத
அண்ணங்கற மொறையில ஒங் கருத்தச் சொல்லு!" என்கிறது லாலு மாமா.
"அத்து வுட்டுடுங்க மாமா! அதாங் இவளுக்குச்
சரியான தண்டனெ. டைவர்ஸூ கேஸைப் போட்டு காலிப் பண்ணுங்க! இத்தையெல்லாம் திருத்த முடியாது!"
என்கிறது பாலாமணி.
"டேய் லூசு! இத்தையெல்லாம் கேஸூப்
போட்டு அத்து விட முடியாது. கேஸூப் போட்டீன்னா வயசு பதினெட்டு முடியலேன்னு நம்மளயெல்லாம்
தூக்கி உள்ள வெச்சிப் புடுவாம் பாத்துக்கோ! அதால ஏற்கனவே இத்து அத்து விட்ட கேஸூதாம்.
கல்யாணமே செல்லுபடியாகாது. செல்லுபடியான கல்யாணத்துக்குத்தாம் டைவர்ஸ்ல்லாம்!"
என்கிறது வேலன்.
"ஏங் சரசு! ஒங் கருத்து ன்னா? ஒங்க
வூட்டக்காரரு மச்சாங்காரரு கருத்து ன்னா? சொன்னாத்தான அதுக்கு ஏத்த மாரி பண்ண முடியும்."
என்கிறது லாலு மாமா.
"எப்டிண்ணே இந்தப் பய சொல்ற மாரி
பண்ண முடியும்? அதுக்காக எம் பொண்ணு பண்ணத ஞாயம்னு சொல்ல வரல. போன திருடுனா நாற
முண்டை. அவங் கூட பேசுறதுக்காகத்தாம்ண்ணே திருடியிருக்கா. பேசுனவே பேசிப்புட்டு இருந்த
எடத்துல போட்டுட வேண்டியத்தானே. அதுலதாம்ண்ணே தப்புப் பண்ணிப்புட்டா." என்கிறது
சரசு ஆத்தா.
"ச்சேய்! அத்தே வுடு. நாம்ம ன்னா
கேட்குறோம்? நீயி ன்னா சொல்றே? இத்தே அந்தச் சித்துப் பயலோடு வாழ வைக்கிறதா? அத்து
வுடுறதா? ஒம் முடிவு ன்னா? அத்தெச் சொல்லு!" என்கிறது லாலு மாமா.
சரசு ஆத்தா என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்
தலையைச் சொரிய ஆரம்பிக்கிறது.
"பொண்ண பெத்தவ அவ்வே! அவளால ஒரு
முடிவுக்கு வார முடியாது. தெகைச்சிப் போயி நிக்குறா அவ்வே. நாமத்தாம் பார்த்து ஒரு
முடிவுக்கு வாரணம். நம்மள கேட்டீங்கன்னா கெரகச்சாரம் சரியில்லே. சித்தே ஆறப் போட்டீங்கன்னா
எல்லாஞ் சரியா வந்துடும்." என்கிறது ராசமாணி தாத்தா.
"அது வரைக்கு இத்தே யாரு வூட்டுல
வெச்சிருக்கிறது?" என்கிறது பாலாமணி.
"ஒம் மாமங்காரம்தான் பாத்துக்கணும்."
என்கிறது ராசாமணி தாத்தா.
"யேய் யப்பா! ஆள வுடுங்க. இத்தே வூட்டுல
வெச்சிகிட்டு நம்ம வூட்டுக்கு நாம்மலே காவலு காத்துகிட்டு இருக்க முடியாது. இப்டியா,
அப்டியான்னு பேசித்தாம் வுடலாம். அத்தேத் தாண்டி ஒண்ணும் பண்ணுற நெலமையில நாம்மயில்ல.
இஞ்ஞ பொருள ஆட்டயப் போடுறத வுட்டுத் தள்ளுங்க. நாம்ம வெச்சிருக்குற நாள்ல இது பாட்டுக்கு
அந்தப் பயலோட ஓடிப் போயிடுச்சுன்னு வெச்சுக்குங்க. நாளைக்கு யார்கிட்ட வந்து கேள்விக்
கேட்பீங்க? அதுக்கு ஒங்களுக்கு நாந்தாம் கெடைச்சனா?" என்கிறது லாலு மாமா.
மேற்கொண்டு என்ன பேசுவது? எப்படிப் பேசுவது?
என்று புரியாமல் எல்லாரும் இப்போது மெளனமாக இருக்கிறார்கள். லாலு மாமா இப்படி சம்பந்தம்
இல்லாதது போல பேசியது ஒரு மாதிரியாக இருக்கிறது ராசாமணி தாத்தாவுக்கும், சரசு ஆத்தாவுக்கும்.
வேலன் நிலைமையைப் புரிந்து கொள்கிறது.
ஒரு கனைப்பு கனைத்துக் கொண்டு, "பேச வந்துபுட்டு அப்டியே மெளனமா உக்காந்தா எப்பூடி?
ஆளாளுக்கு முடிவு பண்றத வுட அத்துகிட்டயே ஒரு வார்த்தைக் கேளுங்க!" என்கிறது வேலன்.
"ஏய் மூதேவி என்னதாம்டி நெனைச்சிட்டு
இருக்கே? அதையாச்சிம் சொல்லித் தொலையேண்டி!" என்கிறது இப்போ சரசு ஆத்தா பல்லைக்
கடித்துக் கொண்டு.
"இனுமே அந்த ஒட்டடைக்குச்சிப் பயலோட
நம்மால இருக்க முடியாது..." என்று சுந்தரி ஆரம்பிக்க, "பல்ல ஒடைச்சிப் புடுவேம்
பொறுக்கி நாயே! யார ஒட்டடைக்குச்சிப் பயல்ங்றே. ஒன்னய தேடி வந்து கட்டிட்டுப் போனா
இப்படித்தாம் எளக்காரம பேசுவீயோ?" என்கிறது பாலாமணி.
"அவ்வேம் நம்மள தேடி வந்து கட்டிக்கவே
வேண்டியதில்லே. சாமியாருப் பயெ. ஒனக்குத் தெரியாதுண்ணே! நீயி பேசாதே!" என்கிறது
சுந்தரி அதட்டும் தொனியில்.
"கொழுப்பப் பாத்தியம்மா! ஒன்னையே
ஒதைக்கணும்மா!" என்கிறது பாலாமணி.
"செத்தச் சும்மாருடா! அத்து என்னத்தாம்
சொல்லுதுன்னு கேப்போம்!" என்கிறது ராசாமணி தாத்தா.
"நமக்கு அவனெப் பிடிக்கல. அவனோடல்லாம்
வாழ முடியாது. பேசி அத்து வுட்டுடுங்க. கதெ முடிஞ்சதுன்னா நாம்ம பாட்டுக்கு நமக்குப்
பிடிச்சவனோட வாழப் போறேம். பெற்பாடு ஒங்க மூஞ்சுல கூட முழிக்க மாட்டேம். நாம்ம உண்டு,
நம்ம வாழ்க்கை உண்டுன்னு போயிட்டே இருப்பேம்!" என்கிறது சுந்தரி.
"ன்னா நெஞ்சழுத்தம் பாத்தீங்களா?
இவளே பெத்தப்பவே கழுத்தத் திருகிக் கொன்னு போட்டுருக்கணும். அதுக்கு இப்போ நம்ம
உசுர எடுக்குறா? தாலியக் கழட்டி வீசுன நாடுமாறிதானே இத்து!" என்கிறது சரசு ஆத்தா.
"ஆளாளுக்குச் சத்தம் போடாதீங்க!
அத்துச் சொல்ல வேண்டியத்த அத்துச் சொல்லுது. அத்து மாதிரி நீங்க சொல்ல வேண்டியத
சொல்லுங்க. அத்த வுட்டுப்புட்டு திட்டுறதாலயோ, ஆத்தரப்படுறதாலயோ ஒண்ணும் ஆயிடப்
போறதில்ல. இந்தா சுந்தரி! இவ்ளோ அழுத்தமா சொல்றேயில்ல... ஒன்னய இந்த நெலமையில அவ்வேம்
ஏத்துப்பானா? காலம் முழுக்க ந்நல்லா வெச்சுக் காப்பாத்துவானா? நாங்க பாட்டுக்கு ஒன்னய
அவங் கூட வுட்டுப்புட்டு நீ பாட்டுக்கு நடுவுல அவனயும் புடிக்கலேன்னு வந்து நின்னேன்னு
வெச்சுக்கோ... எங்க பாடு திண்டாட்டம் ஆயிடும். டவுசரு அந்துப் போயிடும். நல்லா யோஜனப்
பண்ணிச் சொல்லு!" என்கிறது வேலன்.
"எம் முடிவுல மாத்தம் இல்லே மாமா!
நீங்க மறுபடியும் பஞ்சாயத்துப் பண்ணி வடவாதியில கொண்டு வெச்சாலும் நாம்ம அஞ்ஞ இருக்க
மாட்டேம், அவங் கூட ஓடிப் போயிடுவேம்! இதுல மாத்தமில்லே!" என்கிறது சுந்தரி.
"அடிச்சேன்னா பல்லு மொகரையெல்லாம்
பேந்துப் பூடும் பாத்துக்கோ!" என்று பாலாமணி சுந்தரியை அடிக்க ஓட, இந்த முறை
சாமர்த்தியமாக ப்ளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்தபடியே பாலாமணியின் கையைப் பிடித்துக்
கொள்கிறது வேலன். இதற்கு மேல் எப்படிப் போட்டு அடிப்பது என்று யோசனையில் பாலாமணியின்
கால்களும் அப்படியே நிற்கின்றன.
*****
No comments:
Post a Comment