உப்பு விற்க போனா மழை பெய்யுது! மாவு
விற்க போனா காத்தடிக்குது! அப்பிடின்னு கிராமத்துல துரதிர்ஷ்ட்த்தப் பத்தி ஒரு சொலவம்
வெச்சிருக்காங்க! இந்த உப்பையும், மழையையும் பத்தின துரதிர்ஷ்டமான ரெண்டு விசயங்களைத்தான்
இன்னிக்குப் பார்க்கப் போறோம். இந்த உப்பும் மழையும் நம்மகிட்டு கிடந்து படுற பாடும்,
நாம்ம அதுகிட்ட கிடந்து படுற பாடும் இருக்கே! அதெ ரெண்டாப் பிரச்சுதான் சொல்லணும்!
1)
டுத் பேஸ்ட்டுல உப்பு இருக்கா? காரம் இருக்கா?ன்னு
பார்த்து அதை ஒரு சமையல் வஸ்து ரேஞ்சுக்குக் கொண்டு வந்தாச்சு. யோசிச்சுப் பார்த்தா
இதுல ஒரு குழந்தை உளவியல் இருக்குறதா படுது. சின்ன வயசுல டூத் பேஸ்ட்ட கொடுத்து பல்
துலக்க சொன்னப்ப அதுதான் நடந்துச்சு. இந்த பேஸ்ட்டு நாம்ம தின்னுற தின்பண்டத்த விட
சுவையா இருக்கேன்னு அதை அப்படியே பல் துலக்குறேம்ங்ற பேர்ல பேஸ்ட்டைப் பிதுக்கிப் பிதுக்கித்
தின்னது ஞாபகம் இருக்கு. என்னடா வாங்கிப் போடுற டூத் பேஸ்ட்டு நாலு நாளைக்குக் கூட
வர மாட்டேங்குதேன்னு அப்பாவுக்குப் பெரும் குழப்பமா இருக்கும். அது ஒரு காலம். அப்போ
இந்த மாதிரி உப்புப் போட்டு, காரம் போட்டெல்லாம் டூத் பேஸ்ட் வரல. ஒருவேளை அப்படி
வந்திருந்தா இன்னும் நல்லவே தின்னுருப்போம் இல்ல.
பேஸ்ட்ல் உப்பு போட்டு, உப்புல அயோடினைப்
போட்டு எவ்வளவோ மாறிடுச்சு இல்ல. சோத்துல உப்புப் போட்டுச் சாப்பிடாட்டாலும் நாம்ம
பேஸ்ட்டுல உப்பப் போட்டுதான் துலக்குறோம்னு பெருமையா மார் தட்டிக்கலாம் இல்ல. நினைச்சபடியா
சாப்பாட்டுல உப்போ சர்க்கரையோ போட்டுச் சாப்பிட முடியுது? வியாதிங்க மனுஷனைப் பாடால்ல
படுத்துது!
2)
எந்த வீட்டுல போயி நின்னும் தாகத்துக்குத்
தண்ணி கேக்கலாம். செம்பு நிறையவோ லோட்டா நிறையவோ ஊத்திக் கொடுத்து குடிக்கச் சொல்லி
கண்ணார பார்த்து நின்னுட்டு, "போதும்மாய்யா! இன்னும் ஒரு செம்பு கொண்டு வாரட்டா!"
என்று கேட்கும் பாட்டிகள் வாழ்ந்த காலம் அது. தவிச்ச வாய்க்குத் தண்ணிக் கொடுத்தா
புண்ணியம்னு நினைச்ச காலம் அது. இப்போ அதெல்லாம் முடியுமா? அந்தப் பாட்டிங்க எல்லாம்
எந்த முதியோர் இல்லத்தலு இருக்கோ? யாருக்குத் தெரியும்! தாகமா இருக்குன்னு தண்ணி
கேட்டா... "அந்தோ இருக்குப் பாரு பொட்டிக்கடை! ரண்டு ரூவா காசை எடுத்துக் கொடு!
தண்ணிப் பாக்கெட்டு தருவாங்க! வாங்கிக் குடிச்சுக்கோ"ன்னு அசால்ட்டா சொல்றாங்க
வீட்டுக்குள்ள பூட்டப் போட்டுகிட்டு உள்ளே இருக்குற பெண்மணிங்க. வீட்டுக்கு வீடு காசு கொடுத்து தண்ணிக் கேனை வாங்கி
வைக்கிற காலத்துல தவிக்குதேன்னு தண்ணியெல்லாம் கேட்டு எந்த வீட்டுக் கதவையும் இப்போ
தட்ட முடியாது. அதே நேரத்துல வீட்டுக்கு வீடு தண்ணிக் கேனை சப்ளை பண்ணியே இன்றைய நிலைக்கு
நீங்க ஒரு கோடீஸ்வரனா ஆயிட முடியும்! ஓட்டல்கள்ல பாருங்களேன்! ரெண்டு வாட்டி சோத்தைக்
கேட்டா கூட முகம் மலர போடுறாங்க. வெச்ச ஒரு டம்பளரு தண்ணிய குடிச்சிட்டு இன்னொரு
டம்பளரு தண்ணிக் கேட்டுப் பாருங்க! அப்படியே மொறைச்சுகிட்டு தண்ணிய ஊத்துறாங்க.
"இப்படி மொறைச்சுப் பாத்துக்கிட்டா வானத்துலேந்து மேகம் மழையா பொழியுது?!"ன்னு
கேட்டா... "இனுமே மழை பெய்யறப்ப வெளியில உட்காந்து சாப்பிட்டுகிட்டு அண்ணாந்து
வாயைப் பொளந்துக்கோ... மழை பெய்யாதப்ப சாப்பிடவே சாப்பிடாதே"ன்னு நக்கல் பண்ணிட்டுப்
போறாங்க!
சரிதான்! இந்த மழை பெய்ய வேண்டிய நேரத்துல
பெய்யுதான்னு பார்த்தா... பல்ல இளிச்சுகிட்டுப் போயிடுது. பெய்யுற காலத்துல கொஞ்சம்
அளவா பெய்யுதான்னு பார்த்தா... ஊரு உலகத்தையே வெள்ளக்காடா அடிச்ச பிற்பாடும் நிப்பாட்ட
மாட்டேங்குது. இப்படி மாபெரும் மழையா பெய்யுறதாலதான் சிலப்பதிகாரத்தில இளங்கோவடிகள்,
'மாமழைப் போற்றுதும்! மாமழைப் போற்றுதும்!'னு பாடுனாரான்னு யோசிக்க வேண்டியிருக்கு.
*****
No comments:
Post a Comment