4 Sept 2019

காணாமல் போனவர்களின் பட்டியல்



            நம் கிராமத்துத் தெருக்கள்ல மீன் விற்க வரும் தாத்தா, கீரை விற்க வரும் பாட்டி, கொல்லையில் போட்ட காய்கறிகளைப் பறித்துக் கொண்டு வந்து ஐந்துக்கும், பத்துக்கும் விற்க வரும் அக்காக்கள், கருவாடு விற்க வரும் அந்தக் கருவாட்டுக் கிழவி, ஓமத்ராக என்ற சத்தத்தோடு ஓமத் தண்ணி விற்க வரும் மாமா எல்லாரும் எங்க போனாங்க என்று ஒரு நாள் உட்கார்ந்து யோசிச்சுப் பாக்குறேன்.
            எல்லாரும் இருந்தாங்க. இப்போ இல்லே. அவுங்கள எல்லாத்தியும் கொன்னு போட்ட சவக்குழியின் வடிவத்தில நடுவீட்டில ஒரு குளிர்சாதனப் பெட்டி இருக்குது. அந்தக் குளிர்சாதனப் பெட்டிக்குள்ள ரெண்டு நாட்களுக்கு முன்பு வாங்கிய மீனு இருக்குது, ஒரு வாரத்துக்கு முன்னாடி வாங்குன காய்கறிங்க இருக்குது, முந்தா நேத்து வாங்குன கீரைக் கட்டுங்க இருக்குது, இன்னும் நான்கு நாட்களுக்கு முன்னாடி அரைச்சு வெச்ச இட்டிலி மாவு, சட்டினி உட்பட என்னென்னவோ இருக்குது.
            அந்தக் குளிர்சாதனப் பெட்டி மீன் தாத்தா, கீரைப் பாட்டி, காய்கறிகளின் அக்கா என எல்லாரையும் விழுங்கி ஏப்பம் விட்டுடுச்சு. ஒவ்வொரு ஊருக்கும் எல்லாமும் சேர்ந்தது போன்ற கடை ஒண்ணு இருக்கு.
            முன்பு அப்படியா இருந்துச்சு? எண்ணெய் கடை தனி. மளிகைக் கடை தனி. பலகாரக் கடை தனி. கயிறுக் கடை தனி. தேங்காய்க் கடை தனி. காய்கறிக் கடை தனி. மிட்டாய்க் கடை கூட தனியா இருந்துச்சுன்னா நம்புவீங்களா? கடலைக் கடைன்னு கடலை விக்கறதுக்கு தனிக் கடை. வளையல் கடை தனி. அரிசிக் கடை தனி. நம்ம ஊர்ல பேரே அப்படிதாம் கடைகளை வெச்சு சொல்றது. தேங்காய்க் கடை சீனுவாசன், எண்ணெய்க் கடை தங்கராசு, பலகாரக் கடை கல்யாணம், காய்கறிக் கடை சாமியப்பன், வளையல் கடை ஏகாம்பரம் - பேரே இப்படித்தாம். இப்போ எல்லா கடையும் ஒண்ணா இருக்கு. ஒரு கடையிலயே எல்லாத்தையும் வாங்கிக்க முடியுது.
            ஒரு கடை எல்லா கடையையும் இழுத்து உள்வாங்கிக்குதுங்றத நினைக்கும் போது எப்படி இருக்குச் சொல்லுங்க! இப்போ அதுதாம் நெலமை. பால் வாங்குறதுன்னு நெலமை வந்தப்போ பால்காரவங்க தெருவுக்குத் தெரு வந்தாங்க. ஊத்துனாங்க. அந்தப் பாலைக் கூட வுடாம அவங்களுக்குப் பாலு ஊத்திப்புட்டு அதுவும்தான் இப்போ ஒரு கடைக்குள்ள போயிடுச்சு. இப்போ நெனைச்ச நேரத்துல கடைக்குப் போயி பாக்கெட்டுப் பாலை வாங்கிட்டு வந்துட முடியுது. அது கெடக்கட்டும் வுடுங்க! இந்தத் தயிர்காரிங்க சுத்தமா அவுட் இல்ல. அவங்க கொண்டாந்து கொடுக்குற தயிரும், மோரும், வெண்ணெயும் அதோட அவங்க, "ஏங் கண்ணு நல்ல வெண்ணெய்யா இருக்கு! அம்மாவ வாங்கிப் போடச் சொல்லேன்!" என்று பாசத்தை ஒழுக விட்டுப் பேசிக் கொடுத்து விட்டுப் போன எல்லாமும் ஒரு கடைக்குள் போய் முடங்கியாச்சு. இப்போ அந்தக் கடைகளுக்குள்ள ஊத்துக்குளி வெண்ணெய் வரை இருக்கு.
            எவ்வளவு இளம் பெண்கள் அந்த ஒரு கடைக்குள்ள கால் கடுக்க காலையில ஏழு மணிக்கு ஆரம்பிச்சு ராத்திரி பத்து மணி வரை நிக்குறாங்க தெரியுமா!
            காணாம போக செஞ்சுபுட்ட மீன்காரத் தாத்தாவும், கீரைக்கார பாட்டியும், காய்கறிக்கார அக்காவும், மோர்க்காரிகளும், பால்கார மாமாவும் அவங்களோட வடிவில அங்கே நிற்பதாகத்தான் படுது. என்ன ஒண்ணு... கீரையைக் கொடுத்த பாட்டிக்கும் கீரைக்கும் ஒரு உறவு இருந்துச்சு. இவங்க எடுத்துக் கொடுக்கும் பொருட்களுக்கும் அவங்களுக்கும் எந்த உறவும் இல்லே. எங்கேயோ விளைஞ்சு ஒட்டு மொத்தமா கொண்டு வந்ததைப் பாக்கெட்டுல அடைச்சுப் போட்டு வெச்சி எடுத்துக் கொடுக்குறாங்க. யாரு அதெ உற்பத்திப் பண்ணாங்க? எங்க அது விளைஞ்சிருக்கும்?னு எதுவும் அவங்களுக்குத் தெரியாது. அதெ தெரிஞ்சிக்கவும் அவங்களுக்கு நேரம் இருக்காது. அடுத்தடுத்து கடைக்கு வர்றவங்கள கவனிச்சி அனுப்பிகிட்டே இருக்கணும். என்னப் பண்றது? அவங்க கொடுப்பினை அவ்வளவுதான். அதெ வாங்கிட்டு வர்ற நம்ம கொடுப்பினையும் அவ்வளவுதாம்.
            நமக்குப் பக்கத்துல வெளைஞ்ச கீரை இப்போ தூரமாப் போயி விளைய ஆரம்பிச்சிடுச்சு. நமக்குப் பக்கத்துல கறந்து வந்த பாலு எங்கேயிருந்தோ இப்போ வாகனம் வாகனமா ஏறி பல கிலோ மீட்டரு தூரம் யாத்திரைப் பண்ணி நம்மள வந்து சேருது. துவரை, மல்லி, மிளகாய்னு பக்கத்துல வெளைஞ்சது எல்லாம் இப்போ எந்தத் தேசத்துல விளைஞ்சு வருதுன்னே தெரியல. எல்லாத்துக்கும் இடையே ஒரு தூரம் வந்துப் போச்சுல்ல. பழக்கவழக்கம், உறவுங்க, அக்கம் பக்கம்னு எல்லாத்திலேயும்தான் ஒரு தூரம் வந்துடுச்சு. அது இல்லேன்னு சொன்னாக்கா... ஒங்களுக்குத் தெரிஞ்ச ஒரு விவசாயியோடப் பேரைச் சொல்லுங்க! அப்படி இல்லேன்னு நான் ஒத்துக்கிறேன். சொல்ல முடியல இல்லே! எப்படிச் சொல்ல முடியும்? நம்ம பக்கத்துலதான் விவசாயிங்களே இல்லையே! எப்படி இருப்பாங்கச் சொல்லுங்க? கடைசி விவசாயியும் தற்கொலைப் பண்ணி நாளாச்சி! விவசாயம் இப்போ கொஞ்சம் கொஞ்சமா கார்ப்பரேட் வடிவம் எடுத்துகிட்டு இருக்குது. அதனாலதான் அந்த விவசாயப் பொருட்களும் இப்போ கார்ப்பரேட் வடிவம் எடுத்த கடைகள்ல கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. இப்போ தெரியுதா ஒங்களுக்கு எதோட அறிகுறி இதுன்னு?!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...