20 Sept 2019

ஒதை மேல ஒதை ஒதைச்சா...



செய்யு - 213
            தொண்டாமுத்தூர் கேப்பிடலுக்கு விகடு வந்து சேர்ந்த கதையைச் சொல்லாமலே தொண்டாமுத்தூர் கேப்பிடலுக்கு உள்ள போயி ஆராய்ச்சி பண்ணிப்புட்டோமில்ல.
            எட்டாம் நம்பரு பஸ்ஸூ நெட்டுக்குத்தா விழுந்ததிலேந்து எழுந்து வந்து நின்னவனுக்கு வீட்டுக்குத் திரும்பிடலாமான்னு ஒரு யோசனை வருது. இருந்தாலும் போகக் கூடாதுன்னு இன்னொரு பக்கமும் வைராக்கியமும் வருது. எதாவது ஒரு வேலையைத் தேடிகிட்டுத்தான் வீட்டுப்பக்கம் அடியெடுத்து வைக்கிறதுங்ற முடிவோட கவுத்து விட்டுப் போன பஸ்லேந்து கிளம்புனவன் நிமுந்து நடக்குறான். அவனெப் பாக்குறவங்க, "நீயி சுப்பு வாத்தியாரு மவம்தானே! எஞ்ஞ இந்தப் பக்கம் போறே? வூட்டுப் பக்கமா கெளம்பு!" அப்பிடிங்றாங்க. இவன் அவங்க முகத்தைக் கூட பார்க்க விருப்பம் இல்லாதவனைப் போலவும், அவுங்களோட பேச்சையெல்லாம் கேட்க விரும்பாதவனைப் போலவும் நடக்குறான் நடக்குறான் அப்படி நடக்குறான். சின்னமாவூர் ரயில்வே கேட்டுலேந்து அப்படியே நடந்து சித்திரையூரைத் தாண்டுனா மாவூரு. அங்கப் போயி நின்னவன் திருவாரூருக்குப் போற பஸ்ஸைப் பிடிச்சு திருவாரூரு பஸ் ஸ்டாண்டுல வந்து இறங்குறான்.
            இவன் அப்போ படிச்சிருந்த படிப்புக்குப் பாடம் சொல்லிக் கொடுக்குற வேலையைத் தவிர வேற எதுவும் தெரியாது. ஜாக்டோ ஜியோ போராட்டத்தால அரசாங்க பள்ளிக்கூடங்க எல்லாம் பூட்டிக் கிடக்குது. தனியார் பள்ளிகள் மட்டும்தான் இயங்கிகிட்டு இருக்கு. அங்க சேரணும்னா ஜூன் மாசத்துக்கு முன்னாடியே போயி வேலை வேணும்னு நின்னிருக்கணும். பள்ளிக்கூடம் ஆரம்பிச்சு சில மாசங்கள் ஆன பின்னாடி அவங்க எப்படிச் சேர்த்துப்பாங்க? அதை விட்டா வேற வழி? இப்போதுதான் அவனுக்கு யோசனை நாலாப்பக்கமும் சிதறி ஓடுது. திருவாரூர்ல எவ்வளவு கடைங்க இருக்கு? ஏதாவது ஒரு கடையில கணக்கு வழக்கு எழுதித் தர்ற வேலையாவாது இல்லாமலா போயிடும்? நாலைஞ்சு கடை ஏறி இறங்கி வேலை இருக்கான்னு கேட்டா சொல்லிடப் போறாங்க. தயங்காம, கூச்சப்படாம கடைகள்ல ஏறி இறங்கி வேலை கேட்டுதாம் ஆகணும்னு ஒரு முடிவு பண்ணிக்கிறான்.
            எந்தப் பக்கம் நடையைக் கட்டலாம்னு யோசனைப் பண்ணிகிட்டே பஸ் ஸ்டாண்டுலேர்ந்து இடது பக்கமா ஒதுங்கி தெற்கு வீதி பக்கமா காலடியை எடுத்து வைக்குறான். அங்க ரோட்டு ஓரத்துல ஒருத்தரு கேபஜாஜ் வண்டியை வெச்சுகிட்டு ஸ்டார்ட் பண்ண முடியாம கிக்கரைப் போட்டு உதை உதைன்னு உதைச்சுகிட்டு இருக்காரு. ரொம்ப நேரமா வண்டியைப் போட்டு உதை உதைன்னு உதைச்சுகிட்டு இருப்பாரு போலருக்கு. பஸ் ஸ்டாண்டுல நின்னுகிட்டு இருந்த சில பேருங்க அவரையே அதிசயமாக வேடிக்கை பாத்துட்டு நிக்குறாங்க. வேலை தேடணும்னு காலடி எடுத்து வெச்ச விகடுவுக்கும் அதைப் பார்க்க வேடிக்கையா இருக்கு. வேடிக்கைப் பார்க்கறதுன்னு நம்ம பயலுக்குத்தாம் சொல்ல வேண்டியதில்லையே. என்னதாம் நடக்குதுன்னு செத்த நேரம் நின்னு பார்ப்போம்னு தோணுது அவனுக்கு. இந்த மனுஷன் கேபஜாஜை ஸ்டார்ட் பண்ணிட்டுப் போவாரா? இல்லையான்னு? அவனும் பார்த்துகிட்டு வண்டிக்கு ரொம்ப பக்கத்துல நிக்குறான்.
            அடி மேல அடி அடிச்சா அம்மியும் நகரும்ன்னு சொல்லுவாங்க! இங்க ஒதை மேல ஒதைச்சு வண்டி அப்பிடியே நகராம இருக்குறது ஆச்சரியமாத்தான் இருக்கு.
            வண்டியில உக்கார்ந்து ஸ்டார்ட் பண்ணிகிட்டு இருந்தவரு சுத்திலும் எல்லாரும் பார்க்குறதை உணர்ந்துகிட்டு வண்டியிலேர்ந்து இறங்குனாரு. வண்டியை ஸ்டாண்டு போட்டுகிட்டு, "ஸ்ஸ் யப்பாடா! இதோட பெரிய ரோதனையா போச்சு!"ன்னு பெருமூச்சு விட்டுக்குறாரு. விகடுவுக்கு அவரைப் பார்க்க பாவமா இருக்கு. அவரை அப்படியே பரிதாபமா பாக்குறான். அந்த ஆளும் இப்போ விகடுவைப் பார்க்குறாரு. பார்த்தவரு, "தம்பீ!" அப்பிடிங்றாரு.
            இவன், "என்னா?"ங்றது போல பாக்குறான்.
            "இந்த வண்டி நம்ம உதைக்கு ஸ்டார்ட் ஆகாது. வெளியாளு யாராவது உதைச்சா ரோஷப்பட்டுகிட்டு ஸ்டார்ட் ஆயிடும். கொஞ்சம் இந்த கிக்கரை நாலு ஒதை ஒதைச்சு ஸ்டார்ட் பண்ணித் தர முடியுமா?"ன்னு கேட்குறாரு.
            நம்மள நாலு ஒதை ஒதைச்சுகவான்னு கேட்டாத்தாம் நமக்குப் பயமா இருக்கும். வண்டியோட கிக்கரை நாலு ஒதை ஒதைச்சு வுடுன்னா நமக்கென்ன பயம்னு இந்த விகடு பய கிக்கரை ஒதைக்கிறான். ஒரே ஒதையில ஸ்டார்ட் ஆவுது.
            "நெனைச்சேம். இதாங் தம்பீ இந்த வண்டியோட பெரச்சனை. ரொம்ப தேங்க்ஸ்!" அப்பிடின்னு ஸ்டார்ட் ஆன வண்டியில ஸ்டாண்டை எடுத்து விட்டுகிட்டு ஏறி உக்காந்துகிட்டு கிளம்பி ரண்டு அடி வண்டிய நகர்த்துனவரு, என்ன நெனைச்சாரோ தெரியல. விகடு பக்கம் திரும்பி, "தம்பீ! எங்க போகணும்?" அப்பிடிங்றாரு.
            திருவாரூரைத் தெரு தெருவா சுத்தி வேலை தேடணும்னுனா சொல்ல முடியும் இவன். உத்தேசமா, "தெற்கு வீதி!" அப்பிடிங்றான்.
            "ஓ! தெற்கு வீதியா? நானும் அங்கதாம் போறேம்! ஏறுங்க வண்டியில!" அப்பிடிங்றார் அவரு.
            ஒரு நேரம் ஒரு வண்டி நம்ம உருட்டித் தள்ளி விட்டாலும், இன்னொரு வண்டி வந்து அள்ளிப் போட்டுகிட்டு ஏத்திகிட்டுப் போவுதேன்னு நெனைச்சுகிட்டு ரெண்டே தப்படியில ஓடிப் போயி அவரோட வண்டியில பின்னாடி ஏறிக்கிறான். அவரு வண்டியை விடுறாரு தெற்கு வீதியை நோக்கி.
            வண்டியை ஓட்டிகிட்டே அந்த ஆளு, "தம்பீ! எம் பேரு வெங்கடேசன்! தம்பீயோட பேரு?" அப்பிடிங்றாரு.
            "விகடு!" அப்பிடிங்றான் இவன்.
            "இப்பிடி ஒரு பேரா? பரவால்ல நல்லாத்தாம் இருக்கு! நமக்குத் திருவாரூர்தான். மன்றல் நகர்ல இருக்கேம். ஒங்களுக்கு எந்த ஊரு?" அப்பிடிங்றார்.
            "வடவாதி பக்கம் திட்டை!" அப்பிடிங்றான் இவன்.
            "ஓ! சர்க்கர ஆலெ இருந்துச்சே! அந்த ஊரு பக்கமா? அதாங் பார்க்க ஸ்வீட்டா இருக்கீங்க! ஸ்வீட்டா ஹெல்ப் பண்றீங்க!"
            இவனுக்கு வெட்கம் வந்து மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் மெளனமாக இருக்கிறான்.
            அதற்குள் தெற்கு வீதி மொனங்கு தொண்டாமுத்தூர் கேப்பிட்டலுக்கு முன்னாடி வண்டியை நிறுத்தியவர், "சரி! நீங்க வாங்க தம்பீ! இதாம் நாம் வர வேண்டிய எடம்!" என்று இறக்கி விடுகிறார்.
            விகடு இறங்கி அப்படியே மேற்கொண்டு எங்கு நகர்வது என்று யோசனையில் குழப்பமாய் காலடிகளை எடுத்து வைக்கிறான்.
            வண்டியை விட்டு இறங்கி ஸ்டாண்ட் போட்ட வெங்கடேசன் முகத்தில் ஒரு நெற்றிச் சுருக்கம் உண்டாயி, உதடு முன்னோக்கிக் குவியுது.
            "தம்பீ! ஒரு நிமிஷம்! வாங்க ஒரு டீ அடிச்சிட்டுப் போவலாம்!" அப்பிடிங்றாரு.
            அவர் அப்பிடிக் கூப்பிட்டதும் முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்த விகடு திரும்பிப் பார்த்து, "வேண்டாங்கய்யா! டீ சாப்புடறது இல்ல!" அப்பிடிங்றான்.
            "என்னடா இது! திருவாரூருக்கு வந்த சோதனே! இந்த ஊர்ல டீ குடிக்காத ஓர் ஆளா? அப்போ காப்பி குடிங்க!" அப்பிடிங்றார் வெங்கடேசன்.
            "அதுவுங் குடிக்கிறது இல்லைங்கய்யா!"
            "அப்போ என்னதாங் குடிப்பீங்க தம்பீ? ஒரு குவார்ட்டரு அடிச்சிட்டு வருவோமா?" என்கிறார்.
            விகடு பதில் சொல்லாமல் அவரைப் பார்த்துச் சிரிக்கிறான்.
            "திருவாரூர்ல இருந்துகிட்டு இந்த மாரில்லாம் இருக்கக் கூடாது. வாங்க எங் கூட கொஞ்சம்!" அப்பிடிங்றார் வெங்கடேசன்.
            ஒன்றும் சொல்ல முடியாமல் அவர் போகும் திசையை நோக்கி அவரோடு நடக்கிறான் விகடு. அவர் டீ, காபி குடிப்போமா என்று கேட்டு விட்டு தொண்டாமுத்தூர் கேப்பிடலுக்குள் நுழைகிறார். விகடுவும் அவரோடு நுழைகிறான். கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் ஏ.சி. குளுகுளுவென அடிக்கிறது.
            "வாங்க வீசெவன் சார்! பையிங் பண்ணி செல்லிங் போட்ட ஸ்டாக் எல்லாம் சோல்டு ஆயிடுச்சு!" என்கிறார் அவரைப் பார்த்ததும் டை கட்டி, இன் பண்ணி, ஷூ போட்டவர்.
            "அடேங்கப்பா! தம்பீயைக் கொண்டு வந்த நேரம் பிராபிட் மேல பிராபிட்டால்ல வருது! லெனின் அப்படியே ரண்டு பேருக்கும் டீயும் சமோசாவும்!" அப்பிடிங்றார்.
            "ஒன் மினிட் சார்!" அப்பிடின்னு சொல்லி விட்டு கதவைத் திறந்து விட்டு வெளியே போய் விட்டு உள்ளே வருகிறார் லெனின் என்று சொல்லப்பட்ட அந்த ஆள்.
            "இப்பிடி உட்காருங்க வெகடு தம்பீ!" என்று ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலியைக் காட்டி விட்டு, அவர் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொள்கிறார்.
            "பை த‍ பை லெனின்! இவரு பேரு விகடு. பேரு டிபரெண்டா இருக்குல்ல. நமக்கு ஒரு ஹெல்ப் பண்ணிருக்கார். நம்ம வண்டிய ஒரே ஒதையில ஸ்டார்ட் பண்ணி சாதனை பண்ணிருக்காரு. அதுக்கு கெளரவம் பண்ணனும்ல. அதாங் அழைச்சிட்டு வந்திருக்கேம்!" என்கிறார் வெங்கடேசன்.
            "சூப்பர் சார்! அதுக்கு வெளியில அழச்சிட்டுப் போயி ஒங்க காசுல பெரிய ட்ரீட்டால்ல ‍வைக்கணும். அதுக்கு நம்ம கம்பெனியில ஒசி டீயூம், ஓசி சமோசவுமா?" அப்பிடின்னு கேட்டுகிட்டுச் சிரிக்கிறார் லெனின்.
            "எவன் எவனுக்கோ கிளையண்டைப் பிடிக்கிறேன், டிரேட் பண்ண வைக்கிறேன்னு உக்கார வெச்சி என்னென்னமோ வாங்கிக் கொடுப்பீங்க! நாம்ம ஒருத்தரை அழச்சிட்டு வந்தா... அதுக்கு யோசிப்பீங்க இல்லே!" அப்பிடிங்றார் வெங்கடேசன்.
            "ஒண்ணும் யோசனே இல்ல சார்! ட்ரீட் பெரிசா இருக்கணும்னு சொன்னேம். அவ்வளவுதாம். அப்படியே அந்த ட்ரீட்ல நம்மலயும் சேர்த்துக்குங்க சார்!" அப்பிடிங்றார் லெனின்.
            "அதான பார்த்தேம்! எங்க கைய வெச்சி எங்க வாறீங்கன்னு தெரியாதா?" அப்பிடின்னு சிரிக்கிறார் வெங்கடேசன்.
            "வண்டிய மொதல்ல மாத்துங்க சார்! நல்லா ஸ்டைலா பல்சர், அப்பாச்சி மாரி எடுங்க சார்!" என்கிறார் லெனின்.
            "வண்டி வாங்குனதுக்கு ஒரு ட்ரீட் கேட்பீங்க இல்ல!" என்கிறார் வெங்கடேசன்.
            "அதுக்குதானே வண்டிய வாங்கச் சொல்றேம்!" அப்பிடிங்றார் லெனின்.
            இப்பிடி பேசிக் கொண்டு இருக்கும் போதே சமோசாவும், டீயும் ரெண்டு பேருக்கும் வருகிறது.
            ‍லெனின் அதை வாங்கி விகடுவுக்கும், வெங்கடேசனுக்கும் கொடுக்கிறார்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...