நம்ம ஊரு கிராமத்துல விதை வுடுற வேலையெல்லாம்
நடந்துகிட்டே இருக்கு. அது என்ன ஊரு? அது என்ன கிராமம்? அப்பிடின்னு கேக்காதீங்க. நம்ம
ஊரு கிராமத்துல அப்படிச் சொல்றதுதாம் வழக்கமுங்கோ.
கொஞ்சம் முன்னமே விதை விட்டவங்க தப்பிச்சுட்டாங்க.
இப்போ ஒரு வாரத்துல விட்டவங்களுக்குக் கொஞ்சம் சிக்கல்தாம். ராத்திரிக்கு ராத்திரி
மழை பிடிச்சி விதைச்ச வெதைய குவிச்சிப்புடுது. இப்படி விதையைக் குவிச்சா கால் பங்கு
நாற்றுங்க இழப்புதாம். அதாவது நாற்றாங்கள்ல விட்ட நாத்துங்க ஒரு பங்குன்னு கணக்கு வெச்சகிட்டா,
விதை குவிஞ்சதால கால் பங்கு நாற்றுங்க கொறைஞ்சுப் போயிடும். நாலு மா அளவு நெலத்தைக்
கணக்குப் பண்ணி விதை விட்டவங்களுக்கு மூண மா அளவு நெலத்துக்குத்தாம் நாற்றுங்க கிடைக்கும்.
ராத்திரிக்கு ராத்திரி மழை பெய்யுறதால நாத்தாங்கால்ல தண்ணி வேற வெள்ளமா நிக்குது. காலையில
காலையில ஒரு ஏந்தலான தட்டை எடுத்துகிட்டுப் போயி நம்ம விவசாயிங்க தண்ணிய இறைச்சிகிட்டு
நிக்குறாங்க.
போன வருஷம் முக்கொம்புல அணை உடைஞ்சதால
தண்ணி வராம நாற்றுங்க காய்ஞ்சிப் போச்சு. இந்த வருஷம் ஆத்துலயும் தளும்ப தண்ணி வருது.
மழையும் அது பாட்டுக்குப் பேய்ஞ்சிக் கொட்டுது. ஒண்ணு தண்ணி வந்தா ஒரே நேரத்துல ஆத்துலேந்தும்,
வானத்துலேந்து வருது.இல்லேன்னா ரெண்டுலேந்தும் ஒரு சொட்டு தண்ணி கூட வர மாட்டேங்குது.
எவ்வளவோ வருஷ விவசாய அனுபவத்துல இது நம்ம
விவசாயக் குடிகளுக்குப் பழகிப் போச்சு. ஒண்ணு காய்ஞ்சு கெடுக்கும், இல்லே பேய்ஞ்சு
கெடுக்கும்னு அசால்ட்டா சொல்லிட்டுப் போயிட்டு இருப்பாங்க. அதுவும் இல்லாம விவசாயத்தை
இங்க 'சாவடி'ன்னு சொல்லுவாங்க. அதாவது 'சாகுபடி'ங்ற வார்த்தைய அப்படி வழக்குக்குக்
கொண்டு வந்துட்டாங்க. அதெ வெச்சி, "அது பேரே சாவடிதான்ன மாப்ளே! அதாஞ் சாவடிக்குது"ன்னும்
சிரிச்சிகிட்டே சொல்லிட்டுப் போவாங்க.
விவசாயத்தைத் தாண்டி கிராமத்து ரோடுகளை
இந்த மழைக்காலத்துலதான் போடணும்னு நாட்டுல முடிவு பண்ணியிருக்காங்க போலருக்கு. பொக்கலைன்னை
வெச்சு மண்ணை அந்தாண்டையும், இந்தாண்டையும் அள்ளிக் கொட்டி, நல்லா இருந்த மதகு பாலங்களையெல்லாம்
ஒடைச்சிப் போட்டு வேலை செய்ய ஆரம்பிச்சு இருக்காங்க. அதுல பாத்தீங்கன்னா... நம்ம ஊரு
கிராமம் எல்லாம் களிமண்ணு. அதுல நம்ம மக்கள் ஸ்கேட்டிங் வுடுற கணக்கா கால வெச்சி வழுக்கிகிட்டு,
வண்டிய விட்டு வழுக்கிக்கிட்டு போயிடுதுங்க. வெளியில வர்ற மக்கள்தாம் பாவம். வண்டியோட
வழுக்கிக்கிட்டுக் கீழே விழுந்து கை, காலு எலும்ப முறிச்சிக்கிடறாங்க.
நல்லவேளையா இப்போ ஹெல்மெட் போடுறது கட்டாயம்னு
சொல்லிட்டதால வண்டியில வர்ற வெளியூரு மக்கள் ஹெல்மெட்டோட வர்றாங்களா. அதால தலையில
அடிபடாம தப்பிச்சிடுறாங்க. பின்ன நம்ம ஊரு கிராமத்து ரோடுகளப் பத்தி நல்லா தெரிஞ்சி
நாட்டுல நல்ல சட்டமாத்தாம் போட்டு இருக்காங்க. அதால நம்ம கிராமத்து ஊருக்கு வர்றவாங்க
ஹெல்மெட் இல்லாம வந்திடாதீங்க. அப்படி வந்து கை, காலோட மண்டையும் அடிபட்டுச்சுன்னா
அதுக்கு நம்ம ஊரு கிராமம் பொறுப்பு ஏத்துக்காது பாத்துக்குங்க. அதுலயும் நம்ம ஊரு
கிராமத்து பள்ளிக்கூடங்களுக்கு வர்ற டீச்சரம்மாக்கள் எல்லாம் சேத்துல வுழுந்து எழுந்திரிச்சி
சேத்துல குளிச்சது போல வாராங்க. நம்ம ஊரு கிராமத்தோட மண்ணு பாசம் அவங்களயும் அப்பிடி
ஒட்டிக்குது.
நம்ம ஊரு கிராமத்தோட விவசாயத்தப் பத்தி,
ரோடுகளப் பத்தி சொல்ல நிறையவே இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா சொல்றேன்!
*****
No comments:
Post a Comment