எல்லாருக்கும் நகைச்சுவை ரொம்ப பிடிச்சிருக்கு.
சிரிக்க சிரிக்க பேசுறவங்க பின்னாடி ஒரு கூட்டமே நிக்குது. அது அவங்க சேர்த்த கூட்டம்
இல்லே, அதுவா சேர்ந்த கூட்டம்.
சிரிப்புங்றது ஒரு உணர்ச்சியா மட்டுமில்லாம
ஒரு மருந்தா இருக்கு. பொதுவா மருந்துன்னாவே கசப்பா சாப்பிட பிடிக்காமல்ல இருக்கும்!
ஆனா இந்தச் சிரிப்பு மருந்து இருக்கே சிரிச்சே சிரிச்சே வயிறு வலிச்சாலும் இன்னும்
தேவைன்னு இல்லையா தோணுது.
பொதுவா காயம் படுறத யாரு விரும்புவா?
ஆனா சிரிப்புல மட்டும்தாம், சிரிச்சு சிரிச்சே வயிறு புண்ணாப் போயிடுச்சுன்னு காயம்
படுறத ரொம்ப சந்தோஷமா சொல்லுவோம்.
சினிமா பாக்கப் போற இடத்துலயும் அதுல
கொஞ்சம் சிரிப்பு இருந்தாத்தான்னே மனசுக்குக் கொஞ்சம் நிறைவா இருக்கு. சினிமாவுக்காக
சினிமா பாக்குறதுக்குலாம் யாரும் இப்போ தயாரா இல்ல. ஆனா சிரிப்புக்காக சினிமா பார்க்க
தயாரா இருக்கோம்.
சிரிக்கும் போது முகத்துல ஏகப்பட்ட நரம்புகள்,
தசைகள் எல்லாம் வேலை செஞ்சு முகம் பொலிவா ஆகுதுன்னு வேற சொல்றாங்க. அப்படிச் சிரிச்சுகிட்டே
இருக்குறவங்களுக்கு முகத்துக்கான பசை, புட்டா மாவு, அழகு சாதனங்கள் வாங்குற செலவு வேறல்ல
மிச்சமாவுது. சிரிப்புங்றது விலையில்லா மருந்து. விலை மதிக்க முடியாத மருந்தும் கூட.
இப்படி எல்லாருக்கும் நகைச்சுவை பிடிக்கும்
போது பிள்ளைகளுக்கும் அதுதானே பிடிக்கும். அவங்ககிட்ட நகைச்சுவையா பேசுறது ரொம்ப
முக்கியம். அவங்க மனசு கள்ளங்கபடம் இல்லாத மனசு இல்லையா. அவங்க விரும்புறது போல நகைச்சுவையா
பேசுறப்போ நாம்ம சொல்றதையெல்லாம் கேட்க அவங்க தயாரா இருக்காங்க.
அறிவுரைன்னு எதாவது சொல்லணும்னு நெனைச்சாலும்
அதுலயும் ஒரு நகைச்சுவையைக் கலந்து வெச்சிகிட்டுச் சொன்னோம்னா அவங்க அதைக் கேட்டுக்குறாங்க.
அதை விட்டுட்டு எவ்வளவுதாம் நல்ல அறிவுரைன்னாலும் அதை நேரடியா சொன்னாக்கா அதை அவங்க
மனசுலயே வெச்சிக்கிறதில்ல. அது அவங்களுக்குப் பிடிக்கவே மாட்டேங்குது.
பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கறப்புயம்
இதுதாம் சங்கதி. கொஞ்சம் நகைச்சுவையா அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி சொல்லிக் கொடுத்துட்டா,
சொல்றதெல்லாம் அவங்க மனசுல பதிஞ்சிடுது. அதை வுட்டுட்டு எவ்வளவுதாம் நல்லா சொல்லிக்
கொடுத்தாலும், என்னதான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரமாண்டப்படுத்துனாலும் அது
அவங்க மனசுல ஏற மாட்டேங்குது. மாறா அது அவங்க மனசுல ஒரு சுமையைத்தான் ஏத்தி பாடங்றதை
ஒரு சுமையா சுமக்க வைக்குது.
பொதுவா மனசு எதையும் சுமக்க விரும்பாது.
எரிச்சலாயிடும். அதைத்தாம் நாம்ம மனஉளைச்சல்னோ, மண்டை காயுறதுன்னோ சொல்றோம். மனசுக்கு
விடுபடுதல் எப்போதும் தேவை. சிரிப்புங்றது மனசோட விடுபடுதல். அது மனசைச் சுதந்திரப்படுத்திடுது.
அந்தச் சுதந்திரம்தான் மனசோட விரும்பம். அதுல அறிவுரையோ, பாடத்தையோ எதைக் கலந்து
கொடுத்தாலும் அது மனசுக்குள்ள போயி ஒட்டிக்கிறது தெரியாம ஒட்டிக்கிது. இதைத்தாம்
நம்ம முன்னோர்களும் சங்கடப்படுத்துற ஒண்ணைச் சூதானமா செய்யுறதை வாழைப்பழத்துல ஊசி
ஏத்துறதுன்னும், ஏத்துக்காத ஒண்ணை ஏத்துக்க வைக்கிறதைக் கசப்பு மருந்தை வாழைப்பழத்துல
வெச்சி கொடுக்குறதுன்னும் சொல்லியிருக்காங்க. இந்த வேலையைச் செய்ய வைக்க நகைச்சுவை
நல்லாவே உதவும்.
படிக்கிறது தெரியாம படிக்க வைக்கிறதுக்கும்,
வேலை செய்யுறது தெரியாம வேலை செய்ய வைக்கிறதுக்கும் இந்தச் சிரிப்பு உதவுறது போல உலகத்துல
வேற ஏதாவது உதவுதான்னு தெரியல.
சிரிப்பா பேச முடியாட்டியும் சிரிச்சுகிட்டே
இருக்குறதும் ஒரு நுட்பம்தான். அதுக்கும் சிரிப்பா பேசுறதைப் போல மாற்றத்தை உண்டு
பண்ணுற சக்தி இருக்கு. மனுஷன் சிரிக்க தெரிஞ்ச விலங்கு அப்பிடிங்றப்ப நாம்ம சிரிப்பை
விட்டுடக் கூடாது. சிரிக்கிறப்ப முகமும், உதடும் எவ்ளோ அழகா இருக்குத் தெரியுமா! அந்த
அழகு எப்பவுமே நம்மோட இருக்கிறதோட, ஆக வேண்டிய காரியமும் ஆவுதுங்றப்போ, கவலைப்படுறதை
விட்டுட்டு சிரிச்சுகிட்டே இருக்கிறதுல ஒண்ணும் தப்பே இல்ல!
*****
No comments:
Post a Comment