19 Sept 2019

தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்



செய்யு - 212
            ஏ.சி. ரூமு.
            சொகமான சாய்வு நாற்காலி. நாலு பக்கத்துல எந்தப் பக்கம் வேணாலும் சுழன்டுக்கலாம்.
            பத்தரை பதினோரு மணி ஆனா போதும் டீ, காபி, பால், சமோசா, வடை, போன்டா, மெதுபகோடா என்ன வேணாலும் சாப்புட்டுக்கலாம். எத்தனை வேணாலும் சாப்புட்டுக்கலாம். கணக்கு வழக்குக் கெடையாது.
            மதியான சாப்பாடு மட்டும் கொண்டு போயிக்கணும். இல்லே பக்கத்துல நல்ல கடைக இருக்கு. அங்க போயிக் காசு கொடுத்துச் சாப்புட்டுக்கலாம்.
            மூணு மணிக்கெல்லாம் மறுபடியும் டீ, காபி சமாச்சாரங்கள். இஷ்டத்துக்கு எத்தனை வேணாலும் அடிச்சுக்கலாம். கணக்கே கிடையாது.
            மூணரைக்கு எல்லாம் முடிஞ்சிடும். நாலரைக்கு எல்லாம் கிளம்பிடலாம். விருப்பப்பட்டா அங்கேயே உக்காந்து ஆறு மணி வரைக்கும் அரட்டை அடிச்சிகிட்டும் இருக்கலாம். நேரம் போறதோ, பொழுது போறதோ தெரியாது. வெளியில வெயிலடிச்சாலும், மழை பேஞ்சாலும், ஏன் புயலே வந்தாலும் எதுவும் புரியாது. வேலை அப்படி திகில் படம் பாக்குறாப்புல திரில்லிங்கா போகும்.
            காலையில ஒன்பரைக்குள்ள அங்க இருந்தாகணும்.
            அப்பவே கம்ப்யூட்டரு ஸ்கீரின ஆன் பண்ணினா ஒம்போது ஐம்பதுக்கு அப்போ எல்லாம் லோடு ஆகி பத்து மணிக்கு யேவாராம் ஆரம்பிச்சிடும்.
            கம்ப்யூட்டரு ஸ்கிரீன்ல விலைங்க அது பாட்டுக்கு மாறிகிட்டே இருக்கும். வேகம்னா வேகம் மின்னல் வேகம்தான். வாடிக்கையாளர்னு சொல்லப்படுகிற கிளெய்ண்ட்ஸ் ப்ளாஸ்டிக் நாற்காலியில சுத்தி உக்காந்திருப்பாங்க.
            "ரிலையன்ஸ்ல தெளசண்ட் பையிங்க். சத்யம்ல பைவ் ஹண்ட்ரட் செல்லிங்."ன்னு குரல் வந்தா, குரல் வந்த வேகத்துல கம்ப்யூட்டர்ல கதையை முடிச்சிருக்கணும். இதுல பெசவுன்னா மேனேஜர் வந்து திட்டோ திட்டுன்னு திட்டுவார். அமைதியா கேட்டுக்கிட்டு முகத்தைப் பாவமா வெச்சிக்கணும். மறுபடியும் வேகம் குறையாதபடி கவனமா அலர்ட்டா இருந்துக்கணும்.
            "எஸ்.பி.ஐ. என்ன ரேட்டுக்கு டிரேட் ஆகுது?" அப்பிடின்னு ஒரு குரல் வந்தா டக்குன்னு பார்த்து அதை கண் இமைக்குற நேரத்துல சொல்லியாகணும். வேலை அப்படியே நெருப்பு மேல உக்காந்துருக்குறது போலத்தாம். அவ்வளவு விழிப்பா சுதாரிப்பா இருக்கணும். இல்லேன்னா வேலையை விட்டுத் தொரத்திடுவாங்க.
            "எஜூகாம்ல நூறு ஷார்ட் போங்க! அப்டியே இருபது ரூவா கம்மி பண்ணி பையிங் போடுங்க!"ன்னு சொல்லுவாங்க. அவுங்க சொன்ன வேகத்துல செஞ்சு முடிச்சா செல்லிங்கும் ஆயி, பையிங்கும் ஆயிருக்கும். இதுல அவங்க சொன்னத மாத்தி செஞ்சா உண்டாகுற நஷ்டத்த சம்பளத்துல பிடிச்சிப் புடுவாங்க. அது ஒண்ணுதான் இந்த வேலையில இருக்குற கஷ்டம். மத்தபடி இந்த வேலையில சுவாரசியத்துக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது.
            'தொண்டாமுத்தூர் கேபிடல்' திருவாரூர் தெற்கு வீதி முனங்குல இருக்குற பங்குத் தரகு நிறுவனம். அதாவது ஷேர் டிரேடிங் பண்றதுக்கான புரோக்கிங் ஆபீஸ். அங்கதான் மேல சொன்ன அத்தன வசதிகளும். இப்போ அங்கதாம் வேல பாத்துட்டு இருக்கான் விகடு. அவன் அந்த சொகமான நாற்காலியில உட்கார்ந்தான்னா ஒரு சுத்து சுத்து சுத்திகிட்டு ஒலகமே தன்னைச் சுத்துறது போல மனசுக்குள்ள ஒரு மெதப்பு மெதந்துப்பான். பெறவுதான் வேலைய ஆரம்பிப்பான். அதுல ஒரு சந்தோஷம் அவனுக்கு.
            மேல சொன்னமே ஷேர் டிரேடிங் பத்தி. அதைப் பத்தி தெரிஞ்சவங்களும் இருப்பாங்க. தெரியாதவங்களும் இருப்பாங்க. நம்மக் கதையைத் தொடர்ந்து படிக்கிறவங்கள்ல இது பத்தி தெரியாதவங்களுக்காக கொஞ்சம் சொல்லிப்புடலாம்னு நெனைக்குறேன்.
            இந்தியா முழுக்க நிறைய ஸ்டாக் எக்சேன்ஜ்கள் இருக்கு. இந்தியாவுல ரொம்ப பிரபலமான ஸ்டாக் எக்சேன்ஜ்னு பார்த்தா நேஷனல் ஸ்டாக் எக்சேன்ஜூம், பாம்பே ஸ்டாக் எக்சேன்ஜூம்தான். பங்குகளை வாங்கி விக்குறத ஒரு தொழிலா பண்ணிகிட்டு இருக்குறவங்கள்ல பெரும்பாலான ஆட்கள் இந்த ரெண்டு எக்சேன்ஜ்ல ஏதாவது ஒண்ணுலதாம் பண்ணுவாங்க. தொண்டாமுத்தூர் கேபிடல் இதுல நேஷனல் ஸ்டாக் எக்சேன்ஜ்னு சொல்ற என்.எஸ்.இ.ல பங்குகள வாங்கி அல்லது வித்துத் தர்ற ஒரு தரகு நிறுவனம்.
            பங்குகள வாங்கி வித்து யேவாரம் பண்ணணும்னு நினைக்குறவங்க இங்க வந்தா போதும். அவுங்களுக்கு பேங்க் அக்கவுண்ட் ஆரம்பிச்சி, பங்கு யேவாரத்துக்குன்னு டீமேட் அக்கெளண்ட் பண்ணி, அதுக்கு அப்போ அவசியமா இருந்த பான் கார்டுல்லாம் வாங்கித் தந்து எல்லா வேலையையும் பக்காவா இருவது நாளுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சுக் கொடுத்து பங்குகள வாங்கவோ, விற்கவோ தயாரு பண்ணிப்புடுவாங்க தொண்டாமுத்தூரு கேப்பிட்டல்ல. அப்படிப் பண்ணதுக்குப் பிறவு தெற்கு வீதி முனங்குல இருக்குற தொண்டாமுத்தூர் கேபிடல் ஆபீசுக்கு வந்து பங்குகள வாங்கலாம், விற்கலாம். வித்துப்புட்டும் வாங்கலாம். வாங்கிப்புட்டும் விற்கலாம். அப்படி ஒவ்வொரு முறை வாங்குறப்பவும், விற்கறப்பவும் கமிஷன் உண்டு.
            அன்னைக்கே வாங்கி அன்னைக்கே விற்குறதை அல்லது அன்னைக்கே வித்து அன்னைக்கே வாங்குறதை டே டிரேடிங் அதாவது தினசரி வர்த்தகம் அப்பிடின்னு சொல்லுவாங்க. அதுக்கு நூறு ரூவாய்க்கு மூணு பைசா கமிஷன். அதாவது வாங்குறப்பவும் நூறு ரூவாய்க்கு மூணு பைசா கமிஷன், விற்கறப்பவும் நூறு ரூவாய்க்கு மூணு பைசா கமிஷன்.
            அன்னைக்கே கதைய முடிக்காம பங்குகள வாங்கிப் போட்டா அதுக்கு டெலிவரி எடுக்குறதுன்னு பேரு. அதுக்கு நூறு ரூவாய்க்கு முப்பது பைசா கமிஷன். டெலிவரி எடுத்த பங்குகள விற்குறப்பவும் அது போலவே நூறு ரூவாய்க்கு முப்பது பைசா கமிஷன். இந்த கமிஷன்ல கம்பெனி நடத்துறாங்க. அந்த கமிஷன்லதாம் அங்க வேலைப் பார்க்குற விகடுவுக்குச் சம்பளம் போட்டுத் தர்றாங்க. அப்பிடின்னா ஒவ்வொரு நாளும் எவ்வளவு ரூவாய்க்கு யேவாரம் நடக்கும்ணு பார்த்துக்குங்க.
            இதுல டே டிரேடிங்ற தினசரி வர்த்தகத்துல மட்டும்தான் வித்துப்புட்டு வாங்க முடியும். ‍டெலிவரி டிரேடிங்ல வாங்குறது மட்டும்தான் முடியும். விற்குறதுன்னா கையில அந்த ஸ்டாக்கை முன்னாடியே வாங்கிப் போட்டுருக்கணும். கையில ஸ்டாக் இல்லாம வித்து அதெ அதெ மூணு நாளைக்குள்ள நேர் பண்ணாம விட்டா வித்த ஸ்டாக்குக்கான தொகையோட அபராதத் தொகையையும் சேர்த்துக் கட்டியாகணும்.
            சரியா செஞ்சா ஸ்டாக் மார்க்கெட்டுல ஒரே நாள்ல கூட ஒத்த காசு இல்லாதவங்க கோடி கோடியா காச அள்ளிப்புடலாம். தப்பா செஞ்சா கோடி கோடியா காசு இருக்குறவங்க ஒத்த காசு கூட இல்லாம கோடிக்கு ஆசைப்பட்டதுக்குத் தண்டனையா தெருக்கோடியில நிக்க வேண்டியதுதான்.
            ‍டே டிரேடிங்கைப் பொருத்த வரைக்கும் சரியா செய்யறதுங்றது குறைஞ்ச விலையில வாங்கி அதிக விலையில விற்குறது அல்லது அதிகமான விலையில வித்து குறைவான விலையில வாங்கிடறது. இதுல அந்த இடைப்பட்ட விலை இருக்கே அது லாபம். இத மாத்தி செஞ்சா அந்த இடைப்பட்ட விலை இருக்கே அது நஷ்டம். லாபம் ஆனா அந்தத் தொகையை மூணு நாள்ல கிளையண்ட்ஸூக்கு தொண்டாமுத்தூர் கேபிடல் செக் போட்டு கொடுக்கும். நஷ்டமா போனா கிளையண்ட் மூணு நாளைக்குள்ள தொண்டாமுத்தூர் கேபிடலுக்கு செக் போட்டுக் கொடுக்கணும்.
            டெலிவரி டிரேடிங்கைப் பொருத்த மட்டில என்ன விலைக்கு வேணாலும் வாங்கிப் போட்டுகிட்டு விலை அதிகமாப் போறப்ப வித்துக்கலாம். அதிகமான விலை லாபம். ஒருவேளை வாங்கிப் போட்ட பங்குகள் விலை இறங்குனதுன்னா நட்டத்தை வாங்குனவங்கதான் சுமந்தாகணும். ஸ்டாக்கை டெலிவரி எடுத்தா அதிகபட்சமா மூணு நாளைக்குள்ள அதுக்குரிய செக்கைக் கொடுத்தாகணும்.
            இதுல இருக்குற ஒரு பயங்கரம் என்னான்னா பங்கை வாங்குன கிளையண்ட் செக்கைச் சரியா கொடுக்குற ஆளா இருக்கணும். டே டிரேடிங்க்ல ஒரு கிளையண்ட் நட்டத்தை உண்டு பண்ணிட்டு அவர் பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம ஓடிட்டார்னா அதுக்குரிய நட்டத்தை கம்பெனிதான் கட்டியாகணும். அதுக்காக ஒவ்வொரு கிளைண்ட்டுக்கு லிமிட்னு ஒண்ணு கொடுப்பாங்க. ஒரு கிளையண்ட் தன்னோட பேங்க் அக்கவுண்ட்லேந்து தொண்டாமூத்தூர் கேபிட்டல் அக்கெளண்ட்டுக்கு எவ்வளவு செக் போட்டுக் கொடுக்குறாரோ அந்த அளவோட பத்து மடங்குக்கு லிமிட் கொடுப்பாங்க கம்பெனியில.
            அதாவது ஒருத்தர் ஐயாயிரத்துக்கு செக் போட்டுக் கொடுத்தா ஐம்பதாயிரத்துக்கு டிரேட் பண்ணலாம். அப்படி டிரேட் பண்றப்ப லாபம் வந்தா பிரச்சனையில்ல. நஷ்டம் அவரு கொடுத்த ஐயாயிரத்த தாண்டுனா அதாவது பத்து சதவீதத்தைத் தாண்டுனா கம்பெனியில ஸ்கொயர் ஆப் பண்ணச் சொல்லிடுவாங்க. ஸ்கொயர் ஆப்னா வாங்குன ஸ்டாக்கை உடனடியா விக்கிறது அல்லது வித்த ஸ்டாக்கை வாங்குறது. அதாவது அந்த கிளையண்ட் வெச்சிருந்த காசுக்கு கணக்கை நேர் பண்ணி விட்டுட்டு போய்ட்டு வாடா ராசான்னு அத்தோட அனுப்பி விட்டுடறது. மறுபடியும் அவர் டிரேட் பண்றதுன்னா செக் போட்டுக் கொடுத்தாதான். அப்படி ஸ்கொயர் ஆப் பண்ணக் கூடாதுன்னா அந்த கிளையண்ட் உடனடியா வாங்குன ஸ்டாக்குகளை டெலிவரி எடுக்கறதுக்கான தொகையை செக் போட்டுக் கொடுக்கணும். ஒருவேளை வித்திருந்தார்னா எந்த ஸ்டாக்குகளை வித்தாரோ அந்த ஸ்டாக்குகள் அத்தனை எண்ணிக்கையில அவரோட அக்கெளண்ட்ல இருந்தாகணும். இல்லேன்னா ஸ்கொயர் ஆப்தான். அதாவது கட்டம் கட்டி காலி பண்றதுதான். இது என்னா சூதாட்டம் போல இருக்குன்னு கேட்காதீங்க. ஏன்னா இது சூதாட்டம் போலல்லாம் இருக்குன்னு சொல்றதுக்கு இல்ல, இது சூதாட்டம்தாமேதான்.
            இந்தச் சூதாட்டத்துக்கு ஆபீஸ்ல குவியுற கூட்டம் இருக்கே காலையில ஆபீஸ் திறக்குறதுக்கு முன்னாடியே பிசினஸ் லைன் பேப்பரையோ, டலால் ஸ்ட்ரீட் இன்வெஸ்ட்மென்ட் ஜர்னலையோ கையில வெச்சிகிட்டு தவியாய்த் தவிச்சுகிட்டு நிப்பாங்க. ஆபீஸைத் திறந்த உடனே, டாஸ்மாக்கு திறக்குறதுக்காக காத்திருந்த கூட்டம் அள்ளும் பாருங்க அதே கணக்குக்குக் கூட்டம் இந்த ஸ்டாக் மார்கெட்டுக்கும் அள்ளு கிளப்பும்.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...