கம்பு, கேழ்வரகு, தினை விற்பதற்கென ஒரு
தாத்தா தலையில் மூட்டைகளைச் சுமந்தபடி வருவார் கிராமத்துத் தெருக்களில் ஒவ்வோர் ஆண்டும்
வருவார். ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் கிழவிகள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து கொண்டு
பேரம் பேசி கம்பு ஒரு படி, கேழ்வரகு இரண்டு படி, தினை மூன்று படி என்று அவரவர்களின்
தேவைக்கேற்ப வாங்கிப் போடுவார்கள்.
வாங்கிய சிறுதானியங்களை நன்றாகக் கழுவி
காய வைத்து மில்லில் கொண்டு போய் அரைத்து வரச் சொல்வார்கள். அந்த மாவு வகையறாக்களை
வைத்துக் கொண்டு அவர்கள் பண்ணும் ரசவாதம் இருக்கிறதே அதில் வீடே மணக்கும்.
கோடைக்காலம் என்றால் கம்பங்கூழ் இல்லாமல்
விடியாது. இரவில் கம்பைக் கஞ்சியாக்கி வைத்து காலையில் எழுந்ததும், மோரை ஊற்றி, கொஞ்சம்
பழைய சோறைப் போட்டு, வெங்காயத்தை அரிந்து போட்டு, அத்தோடு கொத்துமல்லித் தழைகளைக்
கிள்ளிப் போட்டு செம்பிலோ, லோட்டாவிலோ கொண்டு வந்து வைக்கும் போது வாசம் அப்படியே
மூக்கைத் தூக்கும். இரண்டு செம்போ, மூன்று லோட்டாவோ குடித்தால் காலைப் பசிக்கு எதுவும்
சாப்பிட வேண்டாம்.
பள்ளிக்கூடம் விட்டு சாயுங்காலம் வந்தால்
கேழ்வரகுக் கொழுக்கட்டை, கம்பு கொழுக்கட்டை, தினை கொழுக்கட்டை என்று எதையாவது செய்து
அசத்துவார்கள். கொஞ்சம் மாவை அள்ளிப் போட்டு அத்தோடு தேவையான நாட்டுச் சர்க்கரையைச்
சேர்த்து தண்ணீரை ஊற்றிக் கையால் அப்படியே ஒரு பிடி பிடித்து இட்டிலி பானையில் வைத்து
அவிழ்த்து எடுத்தால் கொழுக்கட்டை தயார்.
ஒரு நேரம் போல் ஒரு நேரம் இல்லாமல்...
சமைக்க முடியாமல் போகும் சமயங்களில் கேழ்வரகு மாவை தண்ணீர் விட்டு கலந்தால் தோசை
ஊற்ற மாவு தயாராகி விடும். அதில் கொஞ்சம் கொழுந்து முருங்கை இலைகளாய் உருவிப் போட்டு
மணமணக்க தோசையாய்ச் சுட்டுத் தரும் போது அந்த ருசி நாக்கை விட்டு அகல நாளாகும். இந்தக்
கேழ்வரகு அல்லது கம்பில் செய்யும் வகையறாக்களைச் சாப்பிட்டால் பசிக்க நேரமாகும். அந்த
அளவுக்குப் பசி தாங்கும்.
வீட்டில் எந்தத் தின்பண்டங்களும் இல்லாவிட்டாலும்
கொஞ்சம் தினை மாவை எடுத்துப் போட்டு தேனை ஊற்றிப் பிசைந்தால் சுவையான தின்பண்டம்
தயார். தேன் இல்லாவிட்டால் நாட்டுச் சர்க்கரையே போதும். அதைப் போட்டு கொஞ்சம் தண்ணீர்
விட்டுப் பிசைந்தால் அதுவும் சுவையாகத்தான் இருக்கும்.
சித்திரையிலோ, வைகாசியிலோ ஊருக்குத்
தகுந்தாற் போல மாரியம்மன் கோயில் திருவிழா வந்தால் மாவிளக்கு மாவும், அரிசி அடையும்
தெருவெங்கும் மணமணக்கும். அந்த மாவிளக்கு மாவை இந்தக் கிழவிகள் திருவையில் வைத்து அரைக்கும்
அழகு இருக்கிறதே! உட்கார்ந்து கொண்டு காலை ஒரு பக்கமாய் நீட்டி நாலு படி அரிசி என்றாலும்
அரைத்து தள்ளுவார்கள். அப்படி மாரியம்மனுக்குச் செய்யும் மாவிளக்கு மாவு சரியாக ஒரு
வார காலம் ஆகும். அந்த மாவிளக்கு மாவில் தேங்காயைத் துருவிப் போட்டு கொஞ்சம் சர்க்கரைச்
சேர்த்து சாப்பிடும் போது அட்டகாசமாய் இருக்கும்.
இப்போது போலவா நிறைய காற்றை அடைத்து
அதில் கொஞ்சமே கொஞ்சம் இருக்கும் தீனியோடு கூடிய தின்பண்ட பைகள் அப்போது இருந்தன?
இந்தச் சிறுதானியங்களில் எதாவது செய்தால் அதுவே பலகாரம் போல இருக்கும். கடைகளில் சாப்பிட
நிலக்கடலை, பட்டாணிக் கடலை, உப்புக் கடலை, கடலை உருண்டை, அவல், பொரி, பொட்டுக்கடலை,
தேங்காய்ப் பிண்ணாக்கு, வாழைப்பழங்கள் இவை எல்லாம் இருந்தன. இப்போது போல காரமும்,
உப்பும் நிறைந்த எண்ணெய்ப் பலகாரங்கள் அப்போது இல்லை.
அந்தக் கிழவிகள் இப்படிப் பிள்ளைகளை பார்த்துப்
பார்த்து, ஊட்டி ஊட்டி வளர்த்த வரை எந்தப் பிள்ளையும் டாக்டர்களைப் பார்த்ததில்லை.
ஊசி பற்றியோ மாத்திரை பற்றியோ கேள்விப்பட்டதில்லை. இன்றைய பிள்ளைகள் அப்படியா? டாக்டர்கள்,
ஊசிகள், மருந்துகள், மாத்திரைகள் பற்றி அறிந்திருக்கின்றன. பாட்டிமார்கள் எனும் கிழவிகளைப்
பற்றிக் கேள்விப்படாதவைகளாய் உள்ளன. வீட்டில் கிழவிகள் இருந்தால்தானே கேள்விப்படுவதற்கு?
பிள்ளைகளின் உடல் மற்றும் உள ஆரோக்கியம்
எல்லாம் பாட்டிமார்கள் எனும் கிழவிகளின் வடிவில் பாதுகாப்பாய் வீட்டோடு வீடாய் இருந்தன.
என்று அவர்கள் வீட்டை விட்டுத் தொலைந்தார்களோ அன்றே பிள்ளைகளின் ஆரோக்கியமும் தொலைந்து
விட்டது.
கிழவிகளைத் தொலைத்து விட்டு பிள்ளைகளின்
ஆரோக்கியத்தை மருத்துவ மனைகளில் நாம் தேடிக் கொண்டிருக்கிறோம். இன்றிருக்கும் காலக்
கட்டத்தில் குழந்தை நல மருத்துவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொலைந்து
போன கிழவிகளின் வடிவங்கள். அவர்கள் மருந்துகளைக் கொடுக்கலாம். நம் கிழவிகளைப் போல
மருந்தையும் பாசத்தையும் கொடுப்பது என்பது கஷ்டம்தான் இல்லையா!
*****
No comments:
Post a Comment