5 Sept 2019

குறுஞ்செய்தியும் பெரும் உரையாடலும்!



செய்யு - 198
            இங்கே சுந்தரியோட மனநிலைத் தெளிவா தெரிஞ்சுப் போயிடுச்சி. இதோட மனசை மாத்த முடியாதுங்றதும் எல்லாருக்கும் புரிஞ்சுப் போகுது. இப்படியே நிலைமைய விட்டுட முடியுமா? விட்டுட்டா சொந்த பந்தத்துல இருக்குற கெளரவம் என்னாவது? ஊர்ல இருக்கும் மதியாதை என்னாவது? இப்படியெல்லாம் ஒவ்வொருத்தருக்கும் யோசனை ஓடுது.
            மறுபடியும் ஒரு பஞ்சாயத்து வெச்சி சித்துவீரனோட சேர்த்து வெச்சி, சுந்தரி ஆதிகேசவனோட ஓடிப் போனா அதுக்கு எப்படிப் பஞ்சாயத்துப் பண்றதுன்னு லாலு மாமா உட்பட எல்லாருக்கும் குழப்பமா இருக்கு. இதுல என்ன முடிவுக்கு வாரதுன்னு புரியாம அதுவும் தவிக்குது.
            "அந்தப் போனக் கொண்டா! அந்தப் பயகிட்டேயே பேசிப் பாக்குறேம்!" என்கிறது வேலன் சுந்தரியைப் பார்த்து.
            "எந்தப் போனு?" என்கிறது சுந்தரி.
            "அதாங் எங்கிட்டேயிருந்து ஆட்டயப் போட்டியே! அந்தா போனுதாங்!"
            "எங்கிட்ட என்னாயிருக்கு? பத்து பைசா இல்ல. எங்கிட்ட போயிக் கேக்குறீயே? எங்கிட்ட எதுவுமில்ல!" என்கிறது சுந்தரி.
            "அடிச்சேன்னா பாரு!" என்று வேலன் எழுந்திரிக்க... ஏற்கனவே ஆத்திரத்தில் நின்று கொண்டிருந்த பாலாமணியின் கைகள் இரண்டும் சுந்தரியின் கன்னங்கள் இரண்டிலும் ஒரே நேரத்தில் பளிச்சென விழுகிறது. சுந்தரிக்கு அந்த ரெண்டு அறைகளும் பொறி கலங்கியது போன்ற நிலையை உண்டு பண்ணி விடுகிறது. அடி மரண அடியாகப் போவதற்குள் உசுரைக் காப்பாத்திக் கொள்ள வேண்டும் என்று உள்ளுணர்வு சுந்தரியை உசுப்பி விடுகிறது.
            சுந்தரி அப்படியே திரும்பிக் கொண்டு மார்புக்குள் செருகி வைத்திருந்த போனை எடுத்து திரும்பிப் பார்க்காமல் நீட்டுகிறது.
            வேலன் அந்தப் போனை வாங்கி, செல்போனில் உள்ள விவரங்களை எடுத்துப் பார்க்கிறது. கால் லிஸ்ட்டில் ஏகப்பட்ட போன் கால்கள் ஆதிகேசவ் என்று சேமிக்கப்பட்ட பெயருக்குப் போயிருக்கிறது. இன்பாக்ஸிலும் சென்ட் அயிட்டம்ஸிலும் பார்த்தால் ஏகப்பட்ட தங்கிலீஷ் மெசேஜ்கள். எல்லாரும் வேலன் செல்போனில் நோண்டி நோண்டிப் பார்ப்பதை ஆவலோடு பார்க்க ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் அப்படிப் பார்ப்பதைப் பார்த்து, இன்பாக்ஸூக்கும், சென்ட் அயிட்டம்ஸூக்கும் மாறி மாறிப் போய் ஒவ்வொரு மேசேஜாய்ச் சத்தமாகப் படிக்க ஆரம்பிக்கிறது வேலன்.
            "சாப்டியா - இது அந்தப் பயெ
            சாப்ட்டேம் - இது நம்ம வூட்டுக் கழுதெ. அப்படியே மாத்தி மாத்திப் படிக்கிறேம் பாருங்க.
            என்ன பண்றே
            பீவரா இருக்கு
            டேப்லெட் எடுத்துகிட்டியா
            ம்
            ரெஸ்ட் எடு
            ஒகே
            தூக்கம் வரல
            மனசுல என்னய நெனைச்சுக்கோ. தூக்கம் வரும்.
            அப்பவும் வரல.
            அடிக்கிறாங்களா
            ம்
            என்ன பண்ணலாம்
            இருக்க முடியல. சீக்கிரம் அழச்சிட்டுப் போ
            கொஞ்சம் பொறுமையா இரு
            சீக்கிரம் வந்திடுவீல்ல
            ம்
            பயமா இருக்கு
            ஒருத்தர் நம்ம எதுக்குறார்னா நாம்ம வளர்றோம்னு அர்த்தம். ஒரு கூட்டமே
நம்மள எதுக்குதுன்னா நாம்ம வளர்ந்துட்டோம்னு அர்த்தம்.
            புரியல.
            நம்ம லவ் வளந்திடுச்சின்னு அர்த்தம்
            எதாச்சும் உளறு.
            நைட் மீட் பண்ணலாமா
            இனுமே மீட்டிங்கே வேணாம். அழச்சிகிட்டுப் போயிடு.
            கொஞ்சம் வெயிட்
            இன்னும் ஒரு நாளு இருந்தாலும் செத்துடுவேன்
            என்ன சொல்றே
            அடிச்சே கொன்னுடுவாங்க
            ஏற்பாட்டு பண்ணிட்டிருக்கேன்
            ஓடி வந்திடவா
            சொல்றேன். அது வரைக்கும் வேணாம்." படித்து முடித்து விட்டு, "யப்பாடா! இது ன்னா உலக மகா காதல் காவியாமால இருக்குது! ஊரு உலகத்துல இப்படி ஒரு காதல் கதையெ கேட்டுருக்கீங்களா மக்களே நீங்க? ரொம்ப பெரிய சாட்டிங்கில்லே நடந்திருக்கு!"  அப்பிடிங்குது வேலன்.
            "இத்து ன்னடா நோண்ட நோண்ட அசிங்கமா போயிட்டே இருக்குது? இப்ப ன்னதான்டா பண்றது?" என்கிறது லாலு மாமா.
            "அந்தப் பயெகிட்டேயும் பேசிப் பார்ப்பேம்! அவ்வேம் ன்னா சொல்றான்னு பார்ப்பேம்!" என்கிறது வேலன்.
            "யார்டா பேசுறது?" என்கிறது லாலு மாமா.
            "யார் பேசுறது? நாமளே பேசுறேம்!" என்கிறது வேலன்.
            "ன்னா பேசப் போறே?"
            "பேசறேம் பாருங்க!" என்று வேலன் சொல்ல, "நீயிப் பேச வாணாம். அதெக் கொடு. நாம்ம பேசறேம்!" என்கிறது பாலாமணி.
            "நீ ன்னா பேசப் போறே?" என்கிறது வேலன்.
            "பேசறேம். பாரு!" என்று பாலாமணி சொல்ல வேலனிடமிருந்து செல்போன் பாலாமணியின் கைகளுக்குப் போகிறது. பாலாமணி ஆதிகேசவனுக்குப் போனைப் போட்டுகிறது.
            அங்கே ஆதிகேசவனுக்கு ரிங் போனதும் போனை எடுக்கும் ஆதிகேசவன், "சுந்தரி! சொல்லு! எதாச்சிம் முக்கியமான விசயமா?" என்கிறான்.
            "முக்கியமான விசயம்தாம்டா நக்குப்பொறுக்கி!" என்று ஆரம்பிக்கிறது பாலாமணியின் வாய்.
            இப்போது அந்தப் பக்கம் ஆதிகேசவனிடமிருந்து பதில் வர வேண்டுமே. பதில் வரவில்லை. பெருமூச்சிடும் ஓசைதான் வருகிறது.
            "பேசுறா நாயே! நாம்ம டாக்கடரு பாலாமணி பி.ஏ.எம்.எஸ்., பேசுறேம்." என்று பாலாமணியிடமிருந்து ஒரு உறுமல்.
            "சொல்லுங்க!" என்று ஒரு பவ்வியம் ஆதிகேசவனிடமிருந்து.
            "நீதாம்டா சொல்லணும். கலியாணம் ஆயிடுச்சின்னு தெரிஞ்ச பிற்பாடு நீயி அஞ்ஞ போகலாமாடா? இப்போ அவ்வே புருஷங்காரம் இஞ்ஞ கொண்டாந்து வுட்டுட்டான். இத்தெல்லாம் தர்மமாடா?"
            "தப்புதாங்க! தப்பு நடந்துப் போச்சிங்க!"
            "இப்ப சொல்லுடா தப்பு நடந்துப் போச்சி, நொப்பு நடந்துப் போச்சின்னு! இனுமே எப்பிடிடா அவளெ வாழ வைக்கிறது? அவளெ எப்பிடிடா கொண்டு போயி அஞ்ஞ விடுறது? அவ்வே வாழ்க்கைக்கு வழி ன்னடா?"
            "சாரிங்க! சாரிங்க! எக்ஸ்ட்ரீம்லி சாரிங்க!"
            "ஒனக்கு இங்கிலிபீசு வேற கேட்குதாடா பன்னாடெ! நாங்கதாம் கலியாணம் பண்ணி வுட்டுட்டோம்ல. நீயி அஞ்ஞ போயிருக்கக் கூடாது. எல்லாம் ஒன்னாலதாம். எல்லாத்துக்கும் நீந்தாம் பொறுப்பு."
            "நாம்ம எங்கங்க போனேம்? கலியாணத்துக்கு முன்னாடியே ஒங்ககிட்டு வந்து சொல்லலியா? பெறவு கலியாணம் ஆயிடுச்சேன்னு ஒதுங்கித்தாம் இருந்தேம். நீங்க நம்மள போட்டு ஒதைச்சதுக்கு அப்புறம் நானு உண்டு, வேலையுண்டுன்னுதாம்ங்க இருந்தேம். ஒங்க தங்காச்சிக்கும், நமக்கும் எந்தத் தொடர்பும் கெடையாதுங்க. ஒங்க தங்காச்சித்தாம் ஒரு நாளு பக்கத்து வூட்டுல இருக்குற போனுக்கு போனு பண்ணி... அதுல ஆரம்பிச்சதுதாம்."
            "ஏம்டா அவ்வே கூப்புட்டா நீயி நாக்கைத் தொங்கப் போட்டுகிட்டு ஓடியாந்திடுவீயா? ஒனக்குப் புத்தி இல்ல! நீயி ன்னா தெரு நாயாடா?"
            "நாம்ம ன்னாங்கப் பண்றது? நடந்தது நடந்துப் போச்சி?"
            "எல்லே! நடிக்காதடா! இனுமே எந் தங்காச்சிக்கு நீந்தாம் பொறுப்பு. நீதாம் அவளெ வெச்சிக் காப்பாத்தணும்!"
            "நாந்தாம் முன்னயிலேந்து அதைத்தாம் சொல்லிட்டு இருக்கேம். நீங்கதாம் நம்மளப் போட்டு அடிச்சீங்க. நீங்க போட்டு அடிச்ச அடியில எலும்பெல்லாம் ஒடஞ்சிப் போயி ஆறு மாச காலமா ஆஸ்பத்திரில கெடந்து, பொழப்புப் போச்சிங்க. இப்பதாம் தலையெடுத்திருக்கேம்."
            "அப்ப நீயி இவ்வே கூட வாழத் தயாரா இருக்கே?"
            "சத்தியமாங்க!"
            "அப்ப வந்து அழச்சிட்டுப் போடா பொறுக்கிப் பயலே!"
            "ஒடனேயே முடியாதுங்க!"
            "அதென்னடா ஒடனே முடியாது?"
            "புதுசா வூடு பாக்கணும்ங்க. இப்போ இருக்குற வூட்டுல அழச்சிட்டாந்து வெச்சிக்க அம்மா ஒத்துக்காதுங்க. புது வூடு பாத்துதான் வைக்கணும்."
            "எப்படா புது வூடு பார்ப்பே?"
            "ஒரு மாசமாவது டயம் கொடுங்க. அதுக்குள்ள ஏற்பாடு பண்ணிப்புடறேம்."
            "அது வரைக்கும் இத்தே வெச்சிகிட்டு நாங்க ன்னடா பண்றது?"
            "வூடு பிடிக்கணும்னா அட்வான்ஸ், வாடகை எல்லாம் இருக்குதுங்கள்ல. நீங்க அடிச்சி பெட்டுல போட்டுட்டதால வேலைக்கிம் போகல. கையில காசு இல்ல. காசு பணமெல்லாம் பெரட்டணும்ங்களா இல்லியா? கரெக்டா ஒரு மாசம் டயம் கொடுங்க. அதுக்குள்ள எல்லாத்தியும் பக்காவா பினிஷிங் பண்ணிப்புடறேம்!"
            "ஒன்னய எப்புடிடா நம்புறது? செல்போனு வாங்கலாம் காசு வருது. ஒரு வூடு பிடிக்க காசு வார மாட்டேங்குதா?"
            "நம்மகிட்டே காசிப் பணம் ஏதுங்க. எல்லாம் ஒங்க தங்காச்சி மூலமா வந்ததுதுங்க. நாம்ம பொய்யிச் சொல்ல மாட்டேம்ங்க. சொல்றதெல்லாம் உண்மைதாங்க. ஒங்க தங்காச்சிகிட்ட வாங்குனதையே மறைக்காம சொல்றோம் பாருங்க!"
            "ஒன்னய நம்ப மாட்டேம்டா! ஒரு பொட்டச்சிக் காசிப் பணம் கொடுத்துதுன்னு வாங்கியிருக்கீயே? வெட்கமா யில்லே ஒனக்கு! ஒன்னய நாம்ம நம்பவே மாட்டேம்டா!"
            "நீங்க நம்பி என்னாங்க ஆகப் போவுது? ஒங்க தங்காச்சி நம்புதுங்களா! அது போதும்ங்க. ஒரே மாசம்தான். அதுக்குள்ள முடிச்சிடலாம். நம்புங்க. நம்பினாரு கெடுவதில்லைங்க!"
            "ஏய்! தொலைச்சுக் கட்டிப்புடுவேம். நம்மளப் பத்திதான் தெரியுமே. ஒதைச்சேன்னா தெரியும்!"
            "மனுஷன நம்புங்க மச்சாம்!"
            "மச்சாம் கிச்சாம்னா செருப்பு பிய்ஞ்சிடும் நாயே!" என்று கோபமாய்ச் சத்தம் போடுகிறது பாலாமணி.
            "நாம்ம எம்மாம் பொறுமையா பேசுறேம். நீஞ்ஞ என்னான்னா டாக்கடருக்குப் படிச்சவங்க. பொறுமையே இல்லாம பேசுறீங்களே! நாமளும் ஒங்க லெவலுக்கு எறங்கிப் பேசுனா ந்நல்லா இருக்குமா? போனுன்னாலும் எம்மாம் மரியாத குனிஞ்சு நின்னு பேசுறேம் தெரியுமா" என்கிறது ஆதிகேசவன்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...