18 Sept 2019

விடுபடலுக்குப் பின்னிருக்கும் சுதந்திரமும் சக்தியும்



            மனம் வேக வேகமாக சென்று கொண்டிருக்கிறது. அதன் துரிதகதியான வேகமே அதைக் கவனிக்க விடாமல் செய்து விடுகிறது. கொஞ்சம் நின்றால் அது வேகமாகப் பயணிக்கச் செய்து அதைக் கவனிக்க விடாமல் செய்து விடுவதை நீங்கள் பார்த்து விட முடியும். மனதோடு விரைந்து கொண்டிருப்பவர்களுக்கு அது சவாலான விசயம். அதே நேரத்தில் அது பார்க்க முடியாத அதிசயமும் இல்லை.
            கொஞ்சம் நிற்பதற்கு உங்களுக்கு மனதைப் பற்றிக் கொஞ்சம் புரிந்து கொள்வது உதவலாம். அதற்குப் பின் நின்று பார்ப்பதை நீங்கள்தான் செய்தாக வேண்டும், அவரவர் பசிக்கு அவரவரே சாப்பிடுவதைப் போல.
            எதைச் செய்வதற்கும் ஒரு கருத்தியல் நமக்குத் தேவைப்படுகிறது. அந்தக் கருத்தியல்தான் நம் மனம்.
            இப்படித்தான் அதற்கு ஒரு கருத்தியல் தேவையா என்றால்... ஒரு வேலையைச் செய்வதற்கு நினைவு தேவை அவ்வளவுதான். அதற்கு மேல் ஒன்றும் தேவையே இல்லை. அதற்கான நினைவில் கொள்ளும் பணியை நீங்கள் நினைக்காமலே தன்னையறியாமல் செய்து கொள்வதற்கான உயிரியில் கட்டமைப்பு மனிதருக்கு இருக்கிறது. மனிதருக்கு அந்த நினைவு இருக்கும். அந்த நினைவை அத்தோடு பயன்படுத்தி அத்தோடு அவரால் விட்டு விட முடியாது. அதற்கு அவர் ஒரு தொடர்ச்சியைக் கொடுத்துக் கொண்டே இருப்பார். அங்குதான் மனம் உண்டாகிறது. தொடர்ச்சியைக் கொடுக்க கொடுக்க மனம் உண்டாகிக் கொண்ட இருக்கும்.
            ஏன் அந்தத் தொடர்ச்சி உண்டாகிறது என்ற கேள்வியை எழுப்பினால் காரணம் விளங்கி விடும். கோபம், தாபம், விருப்பு, வெறுப்பு, அவமானம், பெருமிதம் என்று ஏதோ ஓர் உணர்வு ஒரு தொடர்ச்சியை உண்டாக்கிக் கொண்டு இருக்கும். இந்த உணர்வுக்கு ஏதோ ஒரு விதத்தில் உடன்பட்டு மனதை உண்டாக்கிக் கொண்டே போகிறோம். இந்த உணர்வை அடக்கி விட்டால் மனம் செத்து விடுமா என்ற கேட்டால், அடக்க அடக்க அதுவும் ஒரு மனமாக தொடர்ந்து கொண்டே இருக்கும். அந்த உணர்வைப் புரிந்து கொள்வதன் மூலமாக அது அறுபடுகிறது. அவ்வளவுதான். கோபத்தைப் புரிந்து கொள்ளும் போது அது அறுபடுகிறது. வெறுப்பைப் புரிந்து கொள்ளும் போது அது அறுபடுகிறது. அவமானத்தைப் புரிந்து கொள்ளும் போது அது அறுபடுகிறது. பெருமிதத்தைப் புரிந்து கொள்ளும் போது அது அறுபடுகிறது.
            இத்தனை நாள் அதைப் புரிந்து கொள்ளாமலா இருந்தோம் என்றால் அதை அப்படியும் சொல்லலாம். புரிந்து கொண்டவர்களுக்கு அதன் அபத்தம் நன்றாகவே தெரியும். புரிந்து கொள்ளுதல் என்பது அந்த அபத்தத்தைப் புரிந்து கொள்வதுதான். உணர்ச்சிவசப்படாமல் அந்த அபத்ததைப் புரிந்து கொள்ள கூரிய மனம் வேண்டும். அப்படிப் புரிந்து கொள்ளும் அந்த கூரிய மனமே அதைப் புரிந்து கொண்டு தன்னைத் தானே அழித்துக் கொள்கிறது. மனதைப் புரிந்து கொள்வதற்கும் அந்த மனம்தான் பயன்படுகிறது. அதைக் கூர்மையாகப் புரிந்து கொள்ளும் போது அதுவே அதுக்குத் தேவையில்லை என்பதைப் புரிந்து கொண்டு விடுகிறது. அது ஒரு விடுதலையைத் தருகிறது. அதுதான் அங்கு நிகழ்கிறது.
            கோபப்படும் போது உங்களை உற்றுப் பார்த்தால் உங்களால் கோபப்பட முடியாது. அபத்தம் என்று தெரிந்த ஒன்றை அபத்தமாக செய்து கொண்டிருக்க முடியாது அல்லவா!
            நீங்கள் கோபப்படும் போது உங்களை உற்று நோக்கினால் சிரித்து விடுவீர்கள். உங்களைப் பெருமிதமாக நினைக்கும் தருணத்திலும் உங்களை நீங்கள் உற்றுநோக்கினால் அதுவே நிகழும். ஒன்றை ஆசைப்படும் தருணத்திலும், ஒன்றை வெறுக்கும் தருணத்திலும் உங்களை நீங்கள் உற்றுநோக்கினால் அதுவே நிகழும்.
            அப்படியெல்லாம் நினைப்பதற்கோ, அப்படியெல்லாம் ஆட்படுவதற்கோ எதுவுமில்லை. மனதில் உண்டாக்கி வைத்திருக்கும் கருத்தியல் தொடர்ச்சி அப்படி நினைக்க வைக்கிறது. அப்படி ஆட்பட வைக்கிறது. ஆழ்ந்த புரிதலுக்குப் பின் விடுபடுதலைத் தவிர எதுவும் இல்லை. அப்படி ஒரு விடுபடுதல் இல்லை என்றால் அது புரிதலும் இல்லை. மனம் கொண்ட கருத்தியலான புரிதலுக்கு அப்படி ஒரு நிலைதான் ஏற்படும். மனதைப் புரிந்து கொண்டு அடையும் மனமற்ற புரிதல் மட்டுமே உங்களை விடுவிக்க முடியும். நீங்கள் விடுபடுவது முக்கியம். எப்போதும் இருப்பதை விட உங்களைச் சுதந்திரமானவராக, சக்தி வாய்ந்தவராக அது உங்களை ஆக்குகிறது என்று சொன்னால் அதை நீங்களும் உணர்ந்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் அல்லவா!
            இப்போது சொல்லுங்கள்! துரித கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் உங்கள் மனதை நின்று பார்ப்பதற்கான தேவை எழுந்திருக்கிறதுதானே! நின்று பார்ப்பதோ, நிற்காமல் அதனோடு இயங்கிக் கொண்டிருப்பதோ இப்போது உங்களது முடிவு.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...