18 Sept 2019

ஆத்தூரு ரோட்டு வழி நடக்கையிலே...



செய்யு - 211
            ராத்திரிக்குன்னு இருக்குற அமைதி இருக்கே அது பயங்கரமா இருக்கும். அமைதி எப்படி பயங்கரமா இருக்கும்னு கேட்க தோணுது இல்லையா! அமைதியான நேரத்துல மனசு அமைதியாத்தானே இருக்கணும். அந்த அமைதியான நேரத்துல அமைதியா இருக்க விடாது அந்த அமைதி. ஒங்களுக்குச் சந்தேகமா இருந்தா நடுராத்திரியில மனுஷ நடமாட்டமே இல்லாத அமைதியான இடத்துல இருந்து பாருங்க. பயமா இருக்கும். இடம் அமைதியாத்தானே இருக்கு. ஆனா மனசு பூரா ஏம் பயமா இருக்கு? அமைதி பயமுறுத்தும்னு சொன்னா நம்புவீங்களா? மனசுல ஒரு வெறுப்பு புகுந்துகிட்ட ஒருத்தனுக்கு அந்த வெறுப்புலயே மனசு இருக்கும். அவனுக்கு மட்டும் அந்த ராத்திரியோட அமைதி அவ்வளவு பிடிச்சுப் போகும். மனசுல இருக்குற வெறுப்புக்கு அந்த அமானுஷ்ய அமைதி இதமா இருக்கும். இந்த ஒலகமே இப்படியே அமைதியா மனுஷங்களே இல்லாம இருந்துட்டா எப்படி இருக்கும்னு வேற யோசிக்கும். அதுவே மனுஷங்களோட அன்போடும், அரவணைப்போடும் இருக்குற ஒருத்தனுக்கு தனிமையான அந்த ராத்திரி பாதுகாப்பில்லாத உணர்வைக் கொடுத்து பயத்தை அதிகப்படுத்தும். ஒரே ராத்திரின்னாலும் மனசுல இருக்குற நெனைப்புக்கு ஏற்ப அந்த ராத்திரியோட முகம் விதவிதமா தெரியும்.
            திருவாரூர்லேந்து திருத்துறபூண்டி போற பஸ்ல விகடு ஏறுறப்ப ராத்திரி மணி எட்டுக்கு மேல இருக்கும். பஸ்ஸ டிரைவரு உருட்டிகிட்டே கிளப்புறாரு. திருவிழா நாடகத்துல அசைஞ்சு அசைஞ்சு நடை நடப்பாங்க பாருங்க! அந்த மாதிரி அசைஞ்சு அசைஞ்சு போய்கிட்டு இருக்கு பஸ்ஸூ. இருவது நிமிஷத்துல வந்து சேர்ற வேலங்குடி பஸ் ஸ்டாப்புக்கு பஸ்ஸூ வந்து சேர்றப்ப முக்காலு மணி நேரத்துக்கு மேல ஆயிருக்குது. பஸ்ஸூ நின்னதும் நாலஞ்சு பேரு இறங்குறாங்க. விகடுவும் அதுல ஒருத்தனா இறங்குறான். இறங்குனவங்க அவங்கவங்க திசைய பாத்துப் போறாங்க. விகடு அவனோட திசையைப் பார்க்குறான். அவன் அங்கேயிருந்து மேற்கால அஞ்சாறு கிலோ மீட்டாராவது நடந்தாத்தான் வீடு வந்து சேர முடியும். இவன் ஊர்லேந்து கிளம்பி வந்த பஸ்ஸூ இவனை உருட்டித் தள்ளிவிட்டு அதுவும் போயி உருண்டுகிட்டதால ஊருக்குப் பஸ்ஸூ இல்லாம போயிடுச்சு இல்லையா! அதால இவன் திருத்துறைப்பூண்டி பஸ்ல வேலங்குடி வரைக்கும் வந்து அப்படியே குறுக்கால நடையைக் கட்டுனா கருக்கங்குடி, ஆத்தூரு, ஊட்டியாணி, நெடுங்கரை வழியா வூடு போயி சேர்ந்தலாங்ற நம்பிக்கையில இறங்குறான். அவன் இப்போ போறப் போகுற அந்த ரோட்டுக்கு ஆத்தூரு ரோடுன்னு பேரு. ரோடுன்னா ரோடு அது போல ஒரு ரோட நீங்க ஒலகத்துல பார்த்திருக்க முடியாது.
            நல்லா நடக்குற மனுஷனும் ஆத்தூரு ரோட்டுல நடந்தான்னா கொடை அடிச்சுகிட்டு விழுவான். நல்லா போற வண்டியில ஆத்தூரு ரோட்டுல போனாக்கா வண்டியோட நாசமா போயித்தான் திரும்பணும். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைன்னு சொல்லிகிட்டு ஐயப்ப பக்தமாருக போவாங்க பாருங்க, அந்த மாதிரி நெனைச்சுகிட்டா ஆத்தூரு ரோட்டுல‍ போறது சுலுவுதாம். ஆத்தூரு ரோடுன்னா பேருக்கு ஏத்த மாதிரி ஆத்துக்குள்ளார இருக்குற ரோடு மாதிரிதாம் மண்ணும், சகதியுமா இருக்கு.
            ரோட்டுல அங்கன ஒண்ணு, இங்கன ஒண்ணுன்னு பள்ளங்க இருக்கும்தான். பள்ளத்துலயே ஒரு ரோடு இருக்குன்னா அது இந்த ஆத்தூரு ரோடுதான். அங்கங்க கப்பிக் கல்லு பெரண்டு கிடக்குறத பார்த்தா கலவரம் நடந்த பிற்பாடு கப்பிக்கல்லு கெடக்கும் பாருங்க அந்த இடம் போல இருக்கு. மழை பேய்ஞ்சதுல ரோட்டுல தண்ணி நிக்குதா, தண்ணியில ரோடு நிக்குதான்னு அதுவும் சந்தேகமா இருக்கு.
            அமைதியான ராத்திரிதான். இருந்தாலும் அப்பைக்கப்போ தவளைங்க கொர்ட்டு கொர்ட்டுன்னு கொறட்டை விடுறது போல சத்தம் போட்டுகிட்டு கெடக்குது. திடீர் திடீர்னு ஊவ் ஊவ்னு நரியோட ஊளைச் சத்தம் வேற கேட்குது. இந்தச் சத்தமும் ஒரு தொணைதான்னு நெனைச்சு நடந்தா திடீர்னு எல்லா சத்தமும் நின்னு அமைதியாகுது. இந்த அமைதியும் நல்லாத்தான் இருக்குன்னு நெனைச்சு முடிக்கிறதுக்குள்ள உஷ் உஷ்னு சத்தத்தோட காத்துக் கெளம்புது.
            பஸ்ஸூ கவுந்த சேதி தெரிஞ்சுப் போயி டவுனுக்குப் போன சனங்க எல்லாம் வந்த வேலையை அப்படியே போட்டுட்டு பொழுதுக்கு முன்ன ஊரு போயிச் சேரணும்னு அதது மூட்டையைக் கட்டிகிட்டு கெளம்புனதுல ஆளு நடமாட்டமே இல்லாம அனாதையா கெடக்குதுங்க வடவாதி பக்கம் போற எல்லா ரோடுகளும்.
            கருக்கங்குடி வர்றப்ப ஒரு சில வீடுக கண்ணுல தட்டுப்படுது. அந்த வீடுகள்லயும் படுத்துருப்பாங்க போலருக்கு. லேசா வெளிச்சம் எட்டிப் பார்த்துட்டு எனக்கு வேற வேலைக்கு இருக்குன்னு சொல்லிட்டு அணைஞ்சுக்குது. கருக்கங்குடி ஆலமரத்தடியில கெடக்குற பாறைக்கல்லுல உக்காந்துகிட்டு பீடி வலிச்சுகிட்டு இருக்கற ஒரு பெரிசு இந்த விகடு பயெ போறதப் பாத்துட்டு, "யாருப்பா இந்த நேரத்துல ஒத்தையில போறது?" அப்பிடின்னு சவுண்டு கொடுக்குது. பீடி வலிக்குறதோட யாராவது ரெண்டு வார்த்தை நின்னு பதிலு சொல்லிட்டுப் போனா அது ஒரு இதமா இருக்கும்னு நெனைக்குது அந்தப் பெரிசு. அது புரியாமா பதில் சொல்ல எரிச்சல் பட்டுகிட்டு விகடு நடக்குறான்.
            "கேட்குறோம்ல. யாருப்பா நீயி? எந்த ஊருப்பா நீயி?" என்று அந்தப் பெரிசு கேட்க கேட்க விகடு வேக வேகமாக நடக்குறான்.
            "பதிலு பேசுறானா பாரு!" என்று அந்தப் பெரிசு அலுத்துக் கொள்வது விகடுவின் காதுகளுக்குக் கேட்கிறது. அவன் வேக வேகமாக நடையைக் கட்ட, இனுமே நடக்க நடக்க ரோட்டின் ரெண்டுப் பக்கமும் வயல்கள்தான். இருட்டு நல்ல இருட்டு. இருட்டுலயே நல்ல இருட்டு, கெட்ட இருட்டுன்னு இருக்கான்னு கேட்டீங்கன்னா அப்படியும் இருக்கத்தானே செய்யுது. மனுஷ நடமாட்டமே இல்லாம எந்த வித அசம்பாவிதமும் நடக்காம இருந்தா அது நல்ல இருட்டுதானே. மனுஷ நடமாட்டம் இருந்து அதால ஏதோ அசம்பாவிதம் நடந்தா அது கெட்ட இருட்டுதானே.
            இருட்டைப் பார்த்து பார்த்து நடந்து அந்த இருட்டுக்கென இப்போ ஒரு பார்வை வந்தது போல இருக்கு விகடுவுக்கு. இப்படியே வாழ்க்கை முழுக்க ராத்திரியா இருந்து ஒரு மனுஷன் கூட இல்லாம, பசிக்காமா, தூங்காம கொள்ளாம நடந்துகிட்டே இருந்தா எப்பிடி இருக்கும்?னு யோசிக்குது அவனோட மனசு. அந்த ராத்திரியும், அதோட அமைதியும் ரொம்ப பிடிச்சுப் போகுது அவனுக்கு.
            பஸ்ஸூ கவுந்து போனதும் நல்லதாப் போச்சு. அப்படி அது மட்டும் கவுந்துப் போகலைன்னா இப்படி ஒரு ராத்திரி நடையை அவன் கனவுலயும் அனுபவிச்சிருக்க முடியாதில்ல. மனசோட அமைதியைப் புரிஞ்சுக்க மனுஷன் அனுபவிக்கிற அத்தனை வசதிகளும் இல்லாம போக வேண்டியதா இருக்கு. வானத்த அண்ணாந்துப் பார்த்தா அங்கங்க நட்சத்திரங்க கண் சிமிட்டுறது அழகா இருக்கு. ஒத்தையில இவன் நடந்துப் போறதை அதுங்க வேடிக்கைப் பார்க்குறது போல இவனுக்குத் தோணுது. நிலா எங்கன்னு தேடிப் பார்த்தா அது என்னவோ வெட்டிப் போட்ட தக்கனோண்டு நகத்துண்டு போல பரிதாபமா எங்கயோ ஓரத்துல கெடக்கு. இந்த நடை நிக்காம நீளணும்னு தோணுது. அதே நேரத்துல நடந்து வந்ததுல ஆத்தூரு வந்து பாலத்துல ஏறுனா பாலத்து மேல அங்கங்க இளந்தாரி செட்டு ஆளுங்க உக்காந்து பேசிட்டு இருக்காங்க. இவனும் அவனுங்கள கண்டுக்கல. அவனுங்களும் இவன கண்டுக்கல. அவம் பாட்டுக்கு நடந்து வந்து நெடுங்கரையைத் தாண்டி வந்தா ஊரே அடங்கிக் கிடக்கு.
            அப்படியே நடந்து வந்து திட்டைக் கடைத்தெரு வழியா குறுக்க நடந்து வீட்டுக்கு வந்தா வூட்டுல இன்னும் லைட்டு எரியுது. உள்ள வந்து கதவைத் தெறந்தா கதவு படக்குன்னு திறந்துக்குது. கதவைத் தாழ்ப்பாள் போடாமலேயே வெச்சிருக்காங்க. வீட்டுல யாருக்கும் தூக்கம் வரல. இவ்வேம் வருவானா மாட்டான்னான்னு யோசனையிலயே இருக்காங்க.
            கூடத்துல கோரைப்பயோட பாயாய் படுத்துக் கெடக்குற சுப்பு வாத்தியாரு சுவத்துல சாஞ்சிகிட்டு உட்காந்துருக்காரு. பக்கத்துல வெங்குவும், செய்யுவும் உட்காந்திருக்காங்க.
            அவன் வர்றதைப் பார்த்துட்டு வெங்கு ஓடி வந்து, "எங்கய்யா போயித் தொலைஞ்சே? ஒன்னய ‍தேடிகிட்டு ய்ம்மா நானு நாட்டியத்தாங்குடி போயி அலைஞ்ச அலைச்சலு ன்னா? தேடுன்ன தேடலு ன்னா? தவிச்ச தவிப்பு ன்னா? சாப்பிட்டியாய்யா?" அப்பிடிங்குது.
            "யண்ணே!" அப்பிடின்னு ஓடி வந்து செய்யு விகடுவோட கையைப் பிடிச்சுக்குது.
            "யாரும் ஒண்ணும் பேச வாணாம். சாப்பாட்டைப் போடுங்க மொதல்ல!" அப்பிடிங்றார் சுப்பு வாத்தியார்.
            "எங்கப் போனன்னு கூடயா கேக்கக் கூடாது? நாம்ம மனசு ன்னா கல்லா?" அப்பிடிங்குது வெங்கு.
            "ஒண்ணும் பேச வாணாம். பேசிப் பேசித்தாம் ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆவுது." என்கிறார் சுப்பு வாத்தியார்.
            "வாய்யா! வந்துச் சாப்புடு!" என்கிறது வெங்கு.
            "வேண்டாம். சாப்பிட்டாச்சு!" என்கிறான் விகடு.
            "நீ எங்கய்யா சாப்புட்டு இருக்குப் போறே? மூஞ்செல்லாம் ஓய்ஞ்சுப் போயிக் கெடக்கு! இன்னிக்கு முழிச்ச மொகமே சரியில்ல." அப்பிடிங்குது வெங்கு.
            "வாண்ணே! வந்துச் சாப்புடுண்ணே!" என்று கெஞ்சுகிறது செய்யுவும்.
            அதற்கு மேல் ஒன்றும் சொல்ல விருப்பம் இல்லாதவனைப் போல அப்படியே விலகிப் போய்ப் பாயைப் போட்டுப் படுத்துக் கொள்கிறான் விகடு.
            "யே யய்யா!" என்றபடி வருகிறது வெங்கு.
            என்ன நினைத்தாரோ, "வாணா வுடு! காலயில பாத்துக்கலாம்! போயிப் படுங்க எல்லாரும்!" என்கிறார் சுப்பு வாத்தியார். அவரோட குரல்ல ஒரு கடுமையும், ஒரு நடுக்கமும் தெரியுது. அப்படி ஒரு குரல் அவர்கிட்டேயிருந்து வந்துச்சுன்னா அதுக்குப் பிற்பாடு யாரும் பேசக் கூடாதுன்னு அர்த்தம். பேசுனா ரொம்ப கோபமா எறங்கிப் பேசுவாரு. ஒடம்பெல்லாம் நடுங்க பயங்கரமா டென்ஷன் ஆயிடுவாரு. அதெப் புரிஞ்சுகிட்டு பாயக் கூட போடாம அப்படியே படுத்துக்குதுங்க வெங்குவும், செய்யுவும்.
            என்னடா இப்படி ஆக்கி வெச்சுகிட்டு ஒருத்தரும் சாப்புடாம படுத்துக்கிறாங்களே அப்பிடின்னு சோத்துப் பாளையும், கொழம்பு சட்டியும் அடுப்பாங்கரையிலேந்து ஏக்கமா பாத்துகிட்டு கெடக்குதுங்க. இங்க பாயிலயும், பாயில்லாமயும் படுத்த சனங்க அலைஞ்ச அலுப்புல, மனசு கெடந்து சலம்புன சலம்பல்ல அசந்துப் போயித் தூங்குதுங்க. இதுங்களுக்காகவா கொதிச்சுப் போயி, வெந்துப் போயி கெடந்தோம் அப்பிடின்னுதாம் நெனைச்சிருக்கும் ஆக்கி வெச்ச சோறும், கொழம்பும்!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...