17 Sept 2019

தேடலுக்கு அகப்படாதவன்!



செய்யு - 210
            "ஏம்ப்பா! நம்ம சுப்பு வாத்தியாரோட மவன இஞ்ஞ பாத்தீங்களா? இந்த பஸ்லதாம் வந்திருக்காம்!" என்கிறார் தாடி தாத்தா.
            "தம்பிய கேட்குறீயளா? இந்தப் பஸ்லதாம் வந்துச்சு. கடைசியால நின்னுகிட்டு இருந்துச்சு. மெதுவா போற பஸ்ஸூலய ஆள தூக்கிட்டுப் போறதா நெனச்சுகிட்டு கம்பிய கெட்டியா பிடிச்சுக்குற ஆளுல்ல. பஸ்ஸூ கவுந்ததும் மொத்தல வெளியில வந்த பத்து ஆளுங்கள்ல அதுவும் ஒண்ணு. ஒண்ணும் பெரிசா அடிபடல. ரொம்ப நேரம் இஞ்ஞதாம் நின்னுகிட்டு சனங்க எல்லாரும் பஸ்லேந்து வெளியில வர வரைக்கும் உதவி பண்ணிகிட்டு நின்னுச்சு. பெறவு இப்படியே சின்னமாவூரு ரயில்வே கேட்டு பக்கமா போச்சு. நாங்க கூட பஸ்ஸூ கவுந்து போச்சு. வூட்டுப் பக்கமா போன்னு சொன்னோம். சொன்னது கேக்காத மாரி அது பாட்டுக்கு போய்ட்டே இருந்துச்சு." அப்பிடிங்றாங்க அங்க நின்ன நம்மூரு ஆளுங்க.
            "பய நல்லாத்தாம் இருக்காம். பெறவென்ன?" அப்பிடிங்றார் தாடி தாத்தா சுப்பு வாத்தியார் பக்கமா திரும்பி.
            "அப்டியே நாமளும் அவம் போன தெசையில கெழக்கால போயி ஆளு கெடைச்சான்னா கொண்டாந்து போடுவோமா?" என்கிறார் சுப்பு வாத்தியார்.
            "வண்டி அந்தக் கடைசியிலல கெடக்கு. இந்தக் கூட்டத்தைத் தாண்டி கொண்டார முடியுமான்னு தெரியலயே!" என்று தாடியைத் தடவுகிறார் தாடி தாத்தா. அதுவும் சரிதாம். எட்டாம் பஸ்ஸை மேலே இழுத்து கொண்டு போகும் வரை இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் வந்து பார்த்து விட்டுப் போகும் கூட்டம் குறையப் போறதில்ல. 
            ஒரு யோசனை வந்தவரைப் போல, "யே யப்பாடிகளா! ஒரு ஒதவிப் பண்ணுங்க! வாத்தியாரோட டிவியெஸ்ஸூ வண்டி அந்தப் பக்கம் கெடக்கு. இம்மாம் கூட்டத்துல முண்டிகிட்டுப் போய் அதெ கொண்டார நம்மாள முடியாது. கொஞ்சம் அஞ்ஞயிருந்து இஞ்ஞ தள்ளிகிட்டு கொண்டாந்து கொடுத்துட்டுப் போங்கப்பா! புண்ணியமா போவும். புள்ளய பாக்காம வூட்டுக்குப் போனா வாத்தியாருக்கு மனசு நெல கொள்ளாது!" என்கிறார் தாடி தாத்தா.
            இதென்ன பிரமாதங்றது போல அந்த ஆட்களில் ரண்டு பேர் சுப்பு வாத்தியாரிடம் சாவியை வாங்கிக்கிட்டு கொண்டு அந்தப் பக்கம் போய் ஒரு பத்து நிமிஷத்தில் டிவியெஸ்ஸூ பிப்டியைத் தள்ளிக் கொண்டு வந்து இந்தப் பக்கம் தர்றாங்க அசால்ட்டாய்.
            "எப்படிய்யா பண்ணீங்க இந்தக் காரியத்தை?" என்கிறார் தாடி தாத்தா.
            "அதல்லாம் கெடக்கட்டும். நீங்க மொதல்ல கெளம்புங்க. வாத்தியாரு வெடவெடத்துப் போயி நிக்குறாரு!" என்கிறார்கள் அவர்கள்.
            "யே யய்யா! நீங்களாம் ஊரு பக்கம் கெளம்புலயா?" என்கிறார் தாடி தாத்தா.
            "ஊருப் பக்கம் போயி ன்னா பண்றது? இன்னிய பொழுதுக்கு இஞ்ஞதாம் டேரா!" என்று சொல்லிவிட்டு அவர்களுக்குள், "டேய் மச்சான்! ஒரு டீக்கடைய இந்நேரத்துக்குப் போட்டா கூட யேவாரம் அள்ளும்டா!" என்கிறார்கள் சிரித்துக் கொண்டே.
            "நீங்க வுடுங்க வாத்தியாரே! பாத்துப்போம்!" என்கிறார் தாடி தாத்தா. டிவியெஸ்ஸைக் கிளப்பிக் கொண்டு ரெண்டு பேரும் கெளம்புறாங்க மாவூரு பக்கமாய்.
            சின்னமாவூரு ரயில்வே கேட்டைக் கடந்து சித்திரையூரு போயி மாவூரு கடைத்தெருவில் வண்டியை நிப்பாட்டி, அப்படியே கடைத்தெருவைச் சுற்றிலும் கண்களைச் சுழல விடுகிறாங்க. விகடு கண்ணுக்கு அகப்படுவது போல தெரியல. கிழக்கு நோக்கிப் போன அந்த ரோடு அங்க வடக்குத் தெற்காகப் போகும் திருத்துறைப்பூண்டி ரோட்டோடு சேரும். தெற்கால போனா திருத்துறைப்பூண்டி. வடக்கால போனா திருவாரூர். இந்தப் பய வடக்கால போயிருப்பானா? தெற்கால போயிருப்பானா? ங்கிற குழப்பம் வருகிறது ரெண்டு பேருக்கும். வடக்கால இருக்குற திருவாரூரு இந்தப் பயெ காலேஜ் போயி பழக்கமான ஊரு. தெற்கால இருக்கற திருத்துறைப்பூண்டியும் இந்தப் பயலுக்கு வெங்குவை ஆஸ்பிட்டல்ல சேர்த்தப்ப இருந்து பழக்கமான ஊரு. ரெண்டு ஊர்ல எந்த ஊருக்கு வேணாலும் போயிருக்க வாய்ப்பு இருக்கு. ரெண்டு வாய்ப்புகளும் இருக்குறதுங்றதுக்காக ஒரே நேரத்துல ரெண்டு பயணம் எப்படி பண்ணு முடியும்? ஒண்ணு வடக்கால போகணும். இல்லேன்னா தெற்கால போகணும். இவ்வேன் எட்டாம் நம்பரு பஸ்ல ஏறியிருக்கிறதால அது போற திருவாரூர கணக்குப் பண்ணித்தாம் போயிருக்கணும்ங்ற முடிவுக்கு அவங்க வர்றாங்க.
            அப்படியே மாவூர்லேர்ந்து திருவாரூருக்கும் விட்டா பயல எப்படியும் பிடிச்சிடரலாங்ற நம்பிக்கையில ரெண்டு பேரும் டிவியெஸ்ஸை மறுபடியும் கெளப்பிகிட்டு மாவூர்லேர்ந்து வடக்க நோக்கிப் போறாங்க. அதிகபட்சமா இருபத்தஞ்சோ முப்பதோ அந்த கிலோ மீட்டர் வேகத்துல போனாலும் அரை மணி நேரத்துல திருவாரூருக்குப் போயிடலாம். அப்படி அவங்க அரை மணி நேரத்துல அங்க போன பெற்பாடுதான் அங்க எங்க தேடுறதுன்னு அடுத்தக் குழப்பம் வருது அவங்களுக்கு. பஸ் ஸ்டாண்டு முழுக்க தேடிப் பார்க்குறாங்க. அது முடிஞ்சுதா. அடுத்ததா கடைத்தெருவு முழுக்க அங்கங்க வண்டிய நிப்பாட்டிப் பார்வையை வுட்டுப் பார்க்குறாங்க. திருவாரூரு வந்தப் பயெ இங்கதான் இருக்கணும்னு நிச்சயம் இருக்கா ன்னா? அவ்வேன் இங்கயிருந்து தஞ்சாவூரு, திருச்சி, நாகப்பட்டிணம், மாயவரம், வேளாங்கண்ணி, மெட்ராஸ்னு போறதுக்கா பஸ்ஸூ இங்கயில்ல. அதுவும் இல்லாம பஸ் ஸ்டாண்டுக்கு எதுத்தாப்புலதாம் ரயில்வே ஸ்டேஷன். ஒரு தடவெ மனசுல என்ன நெனச்சான்னோ அவ்வேம் பாட்டுக்கு மெட்ராஸ்க்கு ரயிலு ஏறிப் போன பயதானே அவ்வேன். இப்போ மனசுல வேற தெளிவா எதையோ நெனைச்சுகிட்ட கணக்கால்ல கெளம்பியிருக்கான்.
            சுப்பு வாத்தியாரும், தாடி தாத்தாவும் அங்க இங்க முடிஞ்ச வரைக்கும் தேடிப் பார்த்துட்டு அசந்து போனாங்க. இதுல அங்கங்க பார்க்குற ஊரு காரங்க எட்டாம் நம்பரு பஸ்ஸூ கவுந்ததைப் பத்தி வேற விசாரிக்கிறாங்க. எப்படி ஊரு திரும்புறதுங்ற கவலை அவங்களுக்கு. ரெண்டு மூணு பேர்னா அலுத்துக்காம சொல்லலாம். பார்த்த வரைக்கும் பத்து பதினைஞ்சு பேரைத் தாண்டி சொன்ன விசயத்தையே திரும்பத் திரும்பச் சொன்னா எப்பிடி இருக்கும்? தாடி தாத்தா சுப்பு வாத்தியார்கிட்ட சொல்றார், "வாத்தியாரே! நம்மூரு பய எவம் கண்ணுல பட்டாலும் வண்டிய நிப்பாட்டாதீங்க. கண்டுக்காத கணக்கா போய்ட்டே இருங்க." அப்பிடின்னு.
            அவங்க ரெண்டு பேரும் இங்க டவுனுக்கு வந்தப்ப மத்தியானத்துக்கு மேல இருக்கும். அதிலேந்து நாலஞ்சு மணி ஆவுற வரைக்கும் திருவாரூரையே அவங்களால முடிஞ்ச அளவுக்குச் சல்லடைப் போட்டுச் சலிச்சாச்சு. அவங்களுக்கும் உடம்பும், மனசும் சோர்ந்து போவுது. ஒரு டீக்கடைப் பக்கமா ஒதுங்கி ஆளுக்கு ரெண்டு பன்னையும் டீயையும் வாங்கிச் சாப்பிட்டுட்டுக் கெளம்புறதுன்னு முடிவு பண்றாங்க.
            "ஆளு நல்லபடியா இருக்காம் வாத்தியாரே! பெறவென்ன கவலே? ஒண்ணும் வெவரம் தெரியாத பய கெடையாது. மெட்ராஸூ வரைக்கும் போயி சுத்தி வந்தப் பயதாம். ஒண்ணு ராத்திரிக்குள்ள வூடு வருவாம். இல்லேன்னா மெட்ராஸூ கிட்ராஸூ போயிருப்பாம். அதாங் விநாயகம் வாத்தியாரு தம்பிமாருக அஞ்ஞ இருக்காங்கள்ல. பயலெ பிடிச்சுக் கொண்டாந்துடலாம் வாங்க!" என்கிறார்.
            சுப்பு வாத்தியாருக்குத் திருவாரூரை விட்டு வர அரை மனசுதாம். தாடி தாத்தாவை ஊருக்குப் பஸ் ஏத்தி விட்டு இன்னும் கொஞ்ச நேரம் தேடிப் பார்க்கலாம் என்றால் பஸ்தான் அங்கு கவிந்து கிடக்கிறதே. ஊருக்கு வர பஸ்ஸூம் இல்ல. இந்தப் பயெ ஊருக்குத் திரும்புறதுன்னா எப்படித் திரும்புவாம்? என்றெல்லாம் யோசனைகள் சுப்பு வாத்தியாரின் மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.
            "ஒண்ணும் கவலைப்படாதீங்க வாத்தியாரே! எல்லாம் நல்லபடியா நடக்கும். வூட்டுக்குப் போவேம். அஞ்ஞ பொண்டு புள்ள என்ன நெனச்சிகிட்டுக் கெடக்கோ. அதப் போயி மொதல்ல பாக்கணும். தேத்தணும். கெளம்புவோம் இருட்டுறதுக்கு மின்னாடி!" என்கிறார் தாடி தாத்தா.
            சுப்பு வாத்தியாரின் டிவியெஸ்ஸூ இப்போ ஊரு பக்கம் பார்க்கத் திரும்புகிறது.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...