12 Sept 2019

துரும்பைப் போலங்றது சரியான உவமை இல்லை!



செய்யு - 205
            பூச்சுப் பூசப்படாத நடுக்கூடம். அது என்ன நடுக்கூடம் மட்டுமா பூச்சுப் பூசப்படாம கெடக்கு? ஒட்டு மொத்த வீடும் அப்படித்தான் இருக்கு. சுப்பு வாத்தியார் படுத்திருக்கிறார். அவருக்குக் கீழே ஒரு பிய்ஞ்சுப் போன கூரைப் பாயி அவர சுமந்துகிட்டு செவன்னேன்னு அதுவும் படுத்துக் கிடக்கு. மேலே காத்தாடி மெதுவாக சுத்திக்கிட்டு இருக்கு. வேகமாக சுத்த அதுகிட்ட திராணியில்ல. அதுவும் சுப்பு வாத்தியாரப் பார்த்து இந்த மாதிரி ஆனாலும் ஆயிருக்கும். அது தன்னோட வேகத்தை இழந்து ரொம்ப நாளாச்சு. ஒரு கன்டென்சர் மாத்துனா சரியாயிடும். அதையெல்லாம் மாத்துற மனநிலையில சுப்பு வாத்தியார் இல்ல. மாத்துறதுக்குக் காசு வேணுமே. அதுக்கு இப்போ எங்க போவாரு அவரு? வர்றப் போற ஒவ்வொரு நாளையும் நெனைச்சா அவருக்கப் பயமாக இருக்கு. எப்படி ஓட்டப் போறோம்னு கவலையா இருக்கு. மேலே மாட்டியிருக்குற அந்தக் காத்தாடி எப்படி இருக்கு தெரியுமா? அது மேற்குச் சுவத்தோட ஓரத்தோட ஓரமா ஒதுங்கியிருக்கு. ரூப் காங்கிரட் போட்ட போது காத்தாடிக்கான கொக்கியை அவ்வளவு வெவரமா போட்டுருக்குங்க நம்ம ஆட்களுங்க. அது ஓர் ஓரமாக சுவருக்குக் காற்றுக் கொடுத்தபடி சுத்திக்கிட்டு இருக்கு. நல்ல வேளையா இப்படியாவது போட்டானுங்களே. இன்னும் ரெண்டு விரக்கெடை தள்ளியிருந்தான்னுவோ காத்தாடியையே அந்தக் கொக்கியில போட்டுருக்க முடியாது. சுவத்துல போயி முட்டிக்கும்.
            கிழக்குப் பக்கத்துச் சுவத்துல கடியாரம் முட்களைச் சுழற்றிக்கிட்டு இருக்கு. ஐம்பத்தைஞ்சு ரூவாய்க்கு திருவாரூர்லேந்து வாங்கியாந்த அஜண்டா கடியாரம். டக் டக் டக்னு என்ற சத்தம் போட்டுக்கிட்டே அதோட நொடி முள்ளு நகர்ந்துகிட்டு கெடக்குது.
            மணி காலையில பத்துக்கு மேல் ஆகியிடுச்சு. சுப்பு வாத்தியார் இன்னும் சாப்பிடல. சாப்புட மாட்டேன்கிறார். வயிற்றைத் தடவிகிட்டே படுத்துக் கிடக்கிறார். இதே வழக்கமான நாள்னா அவர் பள்ளியோடத்துல இருப்பார். ஆன்னா ஆவன்னாவோ, அணிலோ, அம்மாவோ சொல்லிக் கொடுத்துகிட்டு இருப்பார். இல்லைன்னா ஏதாவது ஒரு ரிஜிஸ்டரை மேய்ஞ்சுகிட்டு கிடப்பார். அந்தந்த நேரத்துக்குக் கேட்கும் பள்ளிக்கூட மணி சத்தம் கேட்டுக் கூட நாளாச்சுன்னா பாத்துக்குங்களேன்.
            சுப்பு வாத்தியார் படுத்த படுக்கையாகி இருபது நாளுக்கு மேலவாவது இருக்கும். சொந்தக்காரன் ஒருத்தனவாது வந்து பார்க்கணுமே! ம்ஹூம். வருவதற்கான அறிகுறிகள் ஒண்ணும் தெரியல. வந்து ஆறுதல் சொன்னா பணம் கொடுக்கணுமோன்னு பயம் எல்லாத்துக்கும் இருந்தது. அப்படியில்லாம பணமோ, உதவின்னோ எதாச்சிம் கேட்டுப்புட்டா... போயிட்டுடா மோசம்னு யோஜனப் பண்ணிகிட்டு அவனவனும் சுப்பு வாத்தியாருன்னு ஒரு ஆளு இருக்காங்கறதையே ஞாபவத்துலேந்து கழட்டிப் போட்டுட்டானுங்க. ஏம்டா வந்துப் பார்க்கலேன்னு யாரக் கேட்க முடியும் சொல்லுங்க! யாரைக் கேட்டாலும் சாமர்த்தியமான ஒரு பதிலைச் சொல்லுவாங்க. அப்படியே கேட்டாலும் பார்க்கணும்னுதான் நெனைச்சுகிட்டே இருந்தேன் என்பானுங்க. எங்கே முடியுது சொல்லுங்க எப்ப பாத்தாலும் வேலை வேலைதான் போங்க அப்படிம்பானுங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட நெனைச்சுகிட்டு இருந்தேன் அதுக்குள்ள வெளியூரு பயணம் போக வேண்டியதாப் போச்சு அப்பிடின்னும் சொல்லுவாங்க.
            கஞ்சியையாவது அரை லோட்டா குடிச்சிட்டுப் படுத்தா என்ன என்று வெங்குவும் கேட்டாகி விட்டது. அதாங் வயிறு சரியில்லங்றேன்ல என்றபடி ஒரு முறைப்பு முறைக்கிறார் சுப்பு வாத்தியார். அவரு இருக்கற ஒடம்புக்கு இப்படி முறைச்சுகிட்டுச் சொல்றதப் பார்க்கிறப்பவே பயமா இருக்கு. உடம்பு அப்படியே துரும்புதான். இந்த துரும்பு ஒடம்புக்கு இவ்வளவு கெப்புறா அப்பிடின்னு வெங்குவுக்கு ஒரு பக்கம் எரிச்சல்தாம். இருந்தாலும் புருஷனாச்சேன்னு கெஞ்சிப் பார்த்தா அவரு மிஞ்சுறாரு. அவரு ஆளு ஒண்ணும் அப்படியொன்றும் ஆஜானுபாகுவான தோற்றம் இல்லதான்னாலும் இப்போ நீங்கள் அவரைப் பார்த்தால் பாக்க சகிக்காது. சொந்தக்காரனுங்களே வந்து பார்க்காத ஆள நாங்கள் ஏன் பார்க்கணுங்றீங்களா? அதுவும் சரிதான். சுருட்டி மடித்து கசக்கித் தூக்கிப் போட்ட துணியைப் போல இருக்கிறாரு சுப்பு வாத்தியார். அது கூட சரியான உவமையான்னு தெரியல. அதை விட மோசமா இருக்குறாரு. இடுப்புல முழங்காலு வரைக்கும் சுருட்டிகிட்ட வந்த ஒரு அழுக்கு வேட்டி. அதுக்கு மேல அங்கங்க ஓட்டை விழுந்த பனியனு. இத்து ரண்டும் அவரோட ஒட்டிகிட்டு இருக்கா, அவரைத் தாங்கிகிட்டு இருக்கான்னு சந்தேகமா இருக்கு.
            உண்மையில சுப்பு வாத்தியாருக்கு பிரச்சனை வயித்துல இல்ல. மனசில இருக்கு. மனசுல இருக்குற பிரச்சனை அப்படியே வயிற்றில் பிரதிபலிக்கும். பசிக்க விடாது. லேசா பசி எடுத்தாலும் இப்போது நீ சாப்பிட்டு என்ன பண்ணப் போற அப்பிடின்னு தடுக்கப் பார்க்கும்.
            வெங்குவுக்கும் மனசு கேக்கல. அது தம்மேந்தி ஆத்தா, முல்லேம்பா ஆத்தான்னு ஒவ்வொருத்தருக்கிட்டயும் கேட்டு கை வைத்தியமா என்னென்னமோ பண்ணப் பார்க்கது. அதுங்க சொன்ன மொறையில எல்லாம் கசாயம், கருக்குன்னு என்னென்னமோ வெச்சிக் கொடுக்கது. இந்த மனுஷன் குடிச்சாத்தானே. வெச்சிக் கொடுத்தா ஒரு வாயி எடுத்துக் குடிச்சிப் பாக்குறது. கொதிக்குற பாலுல வாயை வெச்சிட்ட பூனை கணக்கா அப்படியே திரும்பிப் படுத்துக்குறதுன்னு ரொம்பவே அழிச்சாட்டியும் பண்றாரு அவரு.
            வயித்துக் கொளாறுன்னா அதுக்குப் பெரண்டைதான் நல்ல மருந்து. அதுல கொஞ்சம் நல்லா இளசா நரம்பில்லாததா பாத்து பதனமா பறிச்சிக் கொண்டாந்து, நல்லெண்ணெய்ல விட்டு வதக்கி, அதோட உப்பு, புளி, மிளகா வெச்சி தொவையலா அரைச்சுக் கொடுத்தா எப்பேர்ப்பட்ட வயித்துக் கோளாறுன்னாலும் போயிடும். அவ்ளோ சக்தி வாய்ந்தது இந்தப் பெரண்டை. அதையும் செஞ்சுப் பார்க்குது வெங்கு. இந்த மனுஷன் அதையும்தான் எடுத்து வாயி வெச்சி சாப்புடணுமே. ம்ஹூம்! அம்மாம் நெஞ்சழுத்ததோட படுத்துக் கெடக்கறாரு. அவருக்கு ஒடம்புல கொறை ஒண்ணும் இல்ல. இப்போ முன்னய விட நல்லவே புரிஞ்சிப் போவுது அவருக்குக் கொறை மனசுலதாம்.
            மனசுக்கு வைத்தியம்னா ஆறுதல்தான். சுத்தியிருக்கிறவங்க என்னதான் ஆறுதல் சொன்னாலும் சம்பந்தப்பட்டவங்க ஆறுதல் பட்டால்தான் போச்சு. வீட்டில இருக்குறவங்க சொல்லுற ஆறுதலுக்குக் குறைச்சல் இல்லை. சுப்பு வாத்தியாரு குடும்பத் தலைவராச்சே. அதுதாம் பிரச்சனையாகுது. அவரு நெலையில அவரு மற்றவர்களுக்கு ஆறுதல் சொன்னா அது எடுபடும். அவருக்கே சொன்னால்... அவரை விட பெரிய தலை சொன்னாதான் எடுபடும். ஆனா நெலைமை பாருங்க... வீட்டுக்கு வர எல்லா பெரிய தலைகளும் பணம் கிணம் கேட்டுடுவாரோன்னு யோசிக்குதே. அதுதான் இங்க இப்போ பிரச்சனை. இருவது நாட்களுக்கு முன்னால் எல்லாம் உற்சாகமாகத்தான் இருந்தாரு சுப்பு வாத்தியாரு. இப்போது அப்படி இல்ல. ஒரு இருவது நாளைக்கு முன்னாடி அவரோட ஒரு நாளு பொழுத நீங்களும்தான் பார்த்தீங்களே. இருவது நாளுக்குள்ள அப்படி ன்னா மாறிப் போயிடுங்றீங்களா?
            சுப்பு வாத்தியாருக்கு அப்படி என்னதான் கவலை? என்று நீங்கள் கேட்பது புரியுது. உங்களது கணிப்பைத் தாண்டுன கவலையில இருக்கிறாரு அவரு. அவருக்குக் கடன் பிரச்சனை இருக்குறதும், விகடு இப்படி வெட்டியா இருப்பதும், சில நாட்களுக்கு முன்னாடி அவரோட மவள் செய்யு வயசுக்கு வந்ததும்... ஆம்மா அவ்வே வேற வயசுக்கு வந்துட்டா... அதெல்லாம் ஒரு வகைக் கவலைன்னாலும்... வீட்டைக் கட்டிய நேரந்தான் இப்படி ஆகியிடுச்சுன்னு அக்கம் பக்கத்தில சொல்றாங்க பாருங்க அதைத்தான் அவரால தாங்கிக்க முடியல. வீடு கட்டுன நேரம் சுப்பு வாத்தியாரை அது இப்படிச் சாய்ச்சிடுச்சுன்னு சொல்றத அவரால பொறுத்துக்க முடியல. அதெ அவரால சசிச்சுக்கவும் முடியல.
            அக்கம் பக்கத்தில, சொந்த பந்தத்தில அப்படிச் சொல்றதையும் குறை சொல்ல முடியாது. வீடு கட்டிக் குடி வந்து ஒரு சில மாசங்கள்ல பாத்துகிட்டு இருந்த அரசாங்க வேலை பறி போனா அப்படித்தானே பேசுவாங்க. வேலை போனது ஒரு கவலன்னா... அந்த வேலை பறி போனதை விட வூடு கட்டி குடி வந்த நேரந்தாம்தான் இப்பிடின்னு பேசுறாங்க பாருங்க அதுதான் சுப்பு வாத்தியாருக்கு பசி எடுக்க விடாம பண்ணுது. அவரைச் சாப்பிட விடாமல் பண்ணுகிறது.
            வேலை போச்சுன்னா... சுப்பு வாத்தியாரு வேலையிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுட்டாரு. அப்படி டிஸ்மிஸ் பண்ற அளவுக்குல்லாம் சுப்பு வாத்தியாரு அடாவடி ஆளில்லங்றது ஒங்களுக்கே தெரியும். டிஸ்மிஸ் பண்றதுக்குலாம் ஒர்த்து இல்லாத ஆளுதாம். ஆனா டிஸ்மிஸ் பண்ணப்பட்டுட்டாரே!
            வேலைப் போனா எந்த மனுஷனும் சாய்ஞ் ஓஞ்சிட மாட்டான்னா? அதாம் சுப்பு வாத்தியாரும் சாய்ஞ் ஓஞ்சிட்டாரு! அவர நிமுத்திக் கொண்டாந்தாகணும்!
*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...