13 Sept 2019

தெளி விதை விட்டாச்சு!



            மேட்டூரு அணை நிரம்பியும் வெண்ணாத்துல இங்க ரொம்ப நாளைக்கு பொக்லைன்தான் ஓடிகிட்டு இருந்துச்சு. தண்ணி வந்து பாடில்ல. வெண்ணாத்துல மராமத்து வேலைக அங்கங்க நடந்துகிட்டு இருந்துச்சு. இப்போ தண்ணி வந்திடுச்சு. வாய்க்கால்கள்ல சுத்தம் பண்ணி தண்ணிய வயலுக்குக் கொண்டு வாரத்துக்குள்ள பெரும்பாடு ஆயிப் போச்சு.
            வாய்க்கால்கள் முழுக்க குவார்டடரு பாட்டிலுக. பாட்டிலுக உடையாம கெடந்தா பொறுக்கியாவது எடுத்துப்புடலாம். மொத்தத்துல உடையாம கெடந்தது பாதி பாட்டில்கள்னா, உடைஞ்சு கெடந்தது பாதி பாட்டில்கள். எல்லாத்தையும் கவனமா அள்ளி அப்புறப்படுத்துறதுக்கு அது ரெண்டு நாளு ஆயிப் போச்சு. வாய்க்கல்ல தண்ணி வாராதப்ப உடைஞ்ச பாட்டிலு, உடையாத பாட்டிலு எல்லாத்தையும் அள்ளிப்புடலாம். அதுவே தண்ணி வந்திடுச்சுன்னா சேறாகி பாட்டிலோட சிதறல்கள்ல ஒண்ணும் பண்ண முடியாது. மடை போடறது, மடையை அடைக்குறதுன்னு வாய்க்கால்ல எறங்குனவே பாட்டிலு சில்லு கால்ல பேத்துப்புடும். கிளாஸூ கிழிச்ச காயம் அவ்வளவு சீக்கிரம் ஆறும்கிறீங்க?
            இங்க வாய்க்காலும் வாய்க்காலு மதகுகள கட்டி வெச்சிருக்கிறதும் எதுக்குங்றீங்க? குவார்ட்டரு அடிக்கிறவங்க உக்காந்து தண்ணி அடிக்கத்தாம் போலருக்கு. நாட்டுல வாய்க்காலு வரப்புல தண்ணி வாராட்டியும் இவங்களுக்கு தண்ணி வாரது கொறைஞ்ச பாடில்ல.
            வயல்கள்ல விதை வுட்டாகணும். இனுமே விதை விட்டு நாத்துப் பறிச்சி எப்போ அறுவடை பண்றதுன்னு யோசிச்சவங்க தெளி விதையா விதைச்சு வெச்சிருக்காங்க. அதாவது வயல நல்லா மண்ணு பவுடர் ஆவுற அளவுக்கு உழுதுபுட்டு, நெல்லு விதைய தெளிச்சி, டிராக்டர்ல பின்னாடி கருவ அலம்பையைக் கட்டி விட்டு ஒரு ரெண்டு ஓட்டு ஓட்டி விட்டுடுவாங்க. இப்பதாம் ராத்திரிக்கு ராத்திரி மழை பிடிக்குதுல்ல. அதுல தெளிச்சு விட்ட வெதை முளைச்சு வந்துடும். இந்தத் தெளி விதையில என்னா பிரச்சனைன்னா களைகள்தாம். களை மண்டுனுச்சுன்னா வெச்சிக்குங்க அதை எடுத்துக் கட்டுபடியாகாது. இதுக்குன்னே நெல்லு முளைச்சு கெளம்புன பிற்பாடு நம்ம விவசாயப் பெருங்குடி மக்களு களைக்கொல்லிய வாங்கி அடிச்சுப் பார்க்கும். அப்படி வாங்கி அடிச்சா களை நல்லா கெளம்பி, நல்லா கெளம்ப வேண்டிய நெற்பயிரு நெரங்கிப் போயி நிற்கும். அப்புறம் ஒரு கிராமத்துல இருக்குற அத்தனை நடவாட்களையும் விட்டு களை பறிச்சாத்தாம் உண்டு. இது தெளி விதையோட பிரச்சனை.
            நாளைக்கு விதை வுட்டு நாத்துப் பறிச்சி நடுறதப் பத்தி பார்ப்போமே!
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...