14 Sept 2019

தரமான சம்பவங்கள்!



செய்யு - 207
            யாருக்கும் தப்பாக பேச வேண்டும் என்றெல்லாம் நோக்கம் இருப்பதில்லை. கேட்பவர் அப்படி அர்த்தம் பண்ணிக் கொண்டால் யார் என்ன பண்ண முடியும்? தவிர சூழ்நிலை இருக்கிறதே அது மனசைக் குழப்பி விட்டு விடும். மனசோட நிதானத்தைப் பாதித்து எதைப் பேசக் கூடாதுன்னு நெனைச்சுகிட்டு இருக்கோமே அதைப் பேச வெச்சிடும். மத்தபடி யாரும் யாரையும் தப்பா பேசுறாங்கன்னு நெனைக்குறதுக்கு உலகத்துல எதுவுமே இல்ல. சூழ்நிலை உருவாக்குற மனநிலைதாம் மனசை வாய் வழியா சத்தம் போட வைக்குது. யார் மனசு எப்பிடின்னு புரிஞ்சு பேசுறது தனிக் கலைன்னு சொன்னாக்கா, பேசாம இருக்குறது இருக்கே அது ஒரு கலைகளுக்கு எல்லாம் பெரிய கலை.
            அப்பங்காரர் துவண்டு போயி படுத்த படுக்கையாய்க் கிடக்கிறாரே. இதைப் பத்தி இந்த விகடு பயெ ஒரு வார்த்தைக் கேட்கவில்லையே என்ற கோபம் வெங்குவுக்கு. அவன் இந்த வீட்டில்தான் இருக்கிறானா? இல்லை வேறொரு உலகத்தில் இருக்கிறானா? அவன் பாட்டுக்கு படிப்பதும், தின்பதும், தூங்குவதுமாய் உலகத்தில் ஒரு கவலையும் இல்லாதவனைப் போல இருக்கிறான் என்ற கடுப்பும் வெங்குவுக்கு இருக்கிறது. கோபமும், கடுப்பும் எத்தனை நாள் மனசுக்குள்ளேயே தங்கியிருக்கும் சொல்லுங்கள்? ஒரு நாள் வெடித்துக் கிளம்பி விட்டது.
            "ஏம்டா பெத்த தகப்பம்தான்னே. இப்படிக் கெடக்கறாரே. ஏன்னு என்னான்னு ஒரு வார்த்தைப் கேட்குறீயா? என்னவோ முற்றும் துறந்த முனிவன் மாரில்லடா இருக்கே போறே. என்னதாம்டா மனசுல நெனச்சுகிட்டு இருக்கே?" என்கிறது வெங்கு.
            "அதாங் போராட்டம் பண்றதா சொல்றாங்கள்ல." என்கிறான் விகடு.
            "ஏலே ஒங்க அப்பாவை வேலைய விட்டு தூக்கிப்புட்டாங்கடா! அந்தக் கவலையிலதாம்டா மனுஷம் இப்படி படுத்தப் படுக்கையா கெடக்குறாருடா! அவரு சம்பாதிச்சுப் போட்டாதாம்டா உண்டு. நீ இப்பிடி குந்தித் தின்னுகிட்டு இருக்குறதுக்கு யாருடா சம்பாதிச்சுப் போடுறது? இந்தக் கதியில ஒன்னோட சேர்த்து ஒரு பொண்ணையும் வேறல்லடா பெத்துப் போட்டு வெச்சுருக்கேம். எப்படி கரையேத்தப் போறோன்னு தெரியலயடா. ஒன்னய பாத்துக்கவே ஒனக்குத் தெரியலயடா. நீ எப்பிடிடா குடும்பத்த தாங்கப் போறீயோ?" என்று வெங்கு சத்தம் போட்டது.
            விகடு பயலுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. அவன் போக்குக்கு அர்த்தம் பண்ணிக் கொண்டு பேசுகிறான், "சம்பாதிக்கல. உக்காந்து சாப்பிடறேன். அதைக் குத்திக் காட்டுறீங்க இல்ல." என்கிறான்.
            "ஏலே கூறு கெட்டப் பயலே! ஒம் வயசுக்கு ஊர்ல போயிப் பாருடா! ஒண்ணொண்ணும் என்னம்மா சமத்தா வேல செஞ்சு சம்பாதிச்சு வாரதை. இவம் என்னான்னா பொழுது கண்ட நேரத்துக்கும் புத்தகத்தோடயே உக்காந்து இருக்கானேன்னு கேட்டாக்கா கோவம் பொத்துக்கிட்டுல்ல வாரது. ஒங்க அப்பம் வேலைக்குப் போன நாளு வரைக்கும் யாருடா ஒன்னய என்னடா கேட்டது? இந்த வூட்டுல இந்தாண்ட கெடக்குறத அந்தாண்ட தூக்கிப் போட்டுருப்பீயா? வாய்க்கா வரப்புக்குப் போயி ஒரு எட்டு பாத்துட்டு வந்திருப்பீயா? ஏம்டா நம்ம வயலு எஞ்ஞ இருக்குன்னு தெரியுமாடா ஒனக்கு? நம்ம வூட்டுல மாடு கண்ணு இருந்துச்சே. அதெப் பிடிச்சாவது கட்டியிருப்பீயா? இப்போ இருக்குற நெலமையக் கூட புரிஞ்சிக்க தெரியலன்னா நீயி ன்னடா புள்ளே? இத்தோ நாளைக்கி காய்கறி, மளிகை சாமான்னு வாங்க ஒத்த பைசா இல்ல. இருக்குற அரிசிய பொங்கித் தின்னு அப்படியே சாப்பிட வேண்டியத்தாம். அதுக்குப் போட்டுத் திங்க உப்பு வாங்கக் கூட காசில்ல. இம்மாம் புத்தகம் படிக்குறீயே ஒனக்கெல்லாம் பொதுஅறிவே இருக்காதா? கொஞ்சம் கூட யோஜனையே வாராதா? அப்பிடி ன்னடா படிக்கிறீங்க? சுத்தில ன்னா நடக்குது? ஏது நடக்குதுன்னு எதுவுமே புரியாமா? போங்கடா ஒங்க படிப்பும், கூறு கெட்ட பொழப்பும்!" என்கிறது வெங்கு.
            "வூட்டுல இருந்தா இப்படித்தாம் பேச்சு வரும். நாம்ம கெளம்புறேன்!" என்று சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்புகிறான் விகடு.
            "எங்கடா கெளம்புறே? ஒங்க அப்பம் இப்படிக் கெடக்குற நெலயில?" என்கிறது விகடு.

            "எங்கேயோ போறேன். உங்களுக்கென்ன?"
            "இவ்வேம் புத்தித் தெரியாமா பேசித் தொலஞ்சிட்டேனே! நின்னுத் தொலைடா!" என்கிறது வெங்கு.
            இப்படிச் சொல்லவும் அவன் வேகமாக கிளம்ப எத்தனிக்கிறான். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு படுத்துக் கொண்டிருந்த சுப்பு வாத்தியார் எழுந்து வந்து விகடுவின் கையைப் பிடிக்கிறார். விகடு வேக வேகமாக கையை உதறுகிறான்.
            "நாம்ம இருக்குற நெலமையில அவ்வேன் எஞ்ஞயாவது போனான்னா எங்க போயி தேடுறது? நீயி வாய வெச்சுகிட்டு சித்தே சும்மா இருந்தா ன்னா? அவ்வேன் கொணம் தெரியாதா ஒனக்கு? மறுபடியும் பாட்டுப் படிக்கப் போறேம்னு மெட்ராஸூக்குக் கெளம்பிப் போய்ட்டான்னா குடும்பம் இப்போ இருக்குற நெலமைக்கு நாம்ம ன்னா பண்ணுவேம்?" என்கிறார் சுப்பு வாத்தியார் வெங்குவை நோக்கி. அவர் குரலில் சுரத்தே இல்லை. குரல் தழுதழுத்து விட்டது. கண்களின் ஓரத்தில் கண்ணீர் எட்டிப் பார்க்காத குறைதாம்.
            "நாமளும் எத்தனை நாளுதாம் பாத்துகிட்டே இருக்குறது? ஏம் நீஞ்ஞ கொஞ்ச நஞ்சம் சாப்புட்டாத்தாம் ன்னா? இந்தப் பயெதாம் அப்பங்காரு இப்பிடி சாப்புடாம கெடக்குறாரே! ஒரு வாயி சாப்புடுங்கன்னு சொன்னா ன்னா? கொறைஞ்சாப் போயிடுவாம். அப்பிடியே கல்லுளிமங்கன் மாரியிருந்தா ன்னத்தாம் பண்ண சொல்றீங்க? சமயத்துல ஆத்திரமா வந்துப் போவுது? மனசு கேக்க மாட்டேங்குது! அதாங் கேட்டுப்புட்டேம். நாம்ம கேட்டதுல ன்னா தப்பு?" என்று வெங்கு இப்போ அழ ஆரம்பிக்கிறது.
            "ஏம்ண்ணே இப்பிடிப் பண்ணி எல்லாரையும் அழ வுட்டுகிட்டு இருக்கே. பேசாம ரூமுக்குள்ளப் போயி படி. போ!" என்கிறாள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் செய்யு.
            "அவ்வேம் பாட்டுக்கு சும்மா இருக்குறவனையும் ஒண்ணு கெடக்க ஒண்ணு சொல்லி கெளம்பி விட்டுடாதீங்க! போடா உள்ளே போ! வேலை போனா ன்னா? புள்ளே நீயி இருக்கீல்ல. நீயும் போயிடக் கூடாது." என்கிறார் சுப்பு வாத்தியார்.
            "இல்லேப்பா!" என்று தலையை மறுத்து ஆட்டுகிறான் விகடு.
            இந்தப் பயல் மறுபடியும் எங்கே ஓடப் போகிறான் என்று குழப்பமாய் இருக்கிறது சுப்பு வாத்தியாருக்கு.
            "ஏலே ஒங்கப்பா சொன்னா கேளுடா! நாம்ம பேசுனது தப்புதாம்டா! மன்னிப்பு கேட்டுக்கிறேம்டா! நீயி எப்படி இருக்கணும்னு நெனைக்குறீயோ அப்படியே இருந்து தொலைச்சுக்கோ! அவர்ர கொஞ்சம் நிம்மதியாவது படுக்க வுடுடா!" என்கிறது வெங்கு.
            "பேசறதையும் பேசுறீங்க! சமாதானமும் பண்ணுறீங்க!" என்கிறான் விகடு.
            "யாருடா பேசுனது ஒன்னய! ஒன்ன பெத்தவதானே பேசுனேம். அதுக்குக் கூட உரிமை யில்லையாடா எங்களுக்கு?" என்கிறது வெங்கு அழுது கொண்டு.
            "வேண்டாம். இதே பேச்சுதான் நாளைக்கு வரும். நாளைக்கு மறுநாள் வரும்." என்கிறான் விகடு.
            "அய்யோ! எந் தெய்வமே! இவ்வேம் பிடிச்ச பிடியால்ல நிப்பாம்! இன்னிக்குப் பாத்து எம் வாயில இப்பிடி பொறப்பட்டு வாரணுமா? போடா! உள்ளே போயித் தொலையிடா! எம் பிராணனைய எடுக்காதடா!" என்கிறது வெங்கு.
            "முடியாது!" என்று பலம் கொண்ட மட்டும் கத்துகிறான் விகடு.‍ வெளியே காலடி எடுத்து வைக்கிறான். செய்யு ஓடி வந்து, "யண்ணே!" என்று ‍கையைப் பிடிக்கிறாள். அவன் உதறி விட்டு விட்டு விடு விடுவென வாசலைத் தாண்டி தெருவில் இறங்கி நடக்கிறான். சுப்பு வாத்தியார் எழுந்து நின்றவர் அப்படியே சோர்ந்து போய் உட்காருகிறார். வெங்குவுக்கு பிரமை பிடித்தது போல இருக்கிறது. இப்படித்தாம் அடிக்கடி நல்ல தரமான சம்பவமா ஒண்ணொண்ணா நடந்துகிட்டு இருக்கு சுப்பு வாத்தியார் வீட்டுக்குள்.
*****


No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...