14 Sept 2019

நாற்றாங்காலைப் பார்த்திருக்கிறீர்களா?

நாற்றாங்காலைப் பார்த்திருக்கிறீர்களா?
            தெளி விதை விதைக்கப்பட்டிருக்கும் ஒரு வயல் எப்படி இருக்கிறது என்பதை வார்த்தையில் வளர விட்டுச் சொல்வதை விட நீங்கள் புகைப்படத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். கீழே புகைப்படம்.

            ஒரு மா என்பது (மாம்பழம் அல்ல - நில அளவை) கீழத் தஞ்சைப் பகுதியில் இன்னும் சரியாகச் சொல்வதானால் திருவாரூர் மாவட்டப் பகுதியில் நூறு குழி அளவாகும்.
            ஒரு குழி என்பது 144 சதுர அடி அளவு கொண்ட சதுரம் ஆகும். அப்படியானால் ஒரு மாவுக்கான அளவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அதாவது 14,400 சதுர அடி அளவாகும்.
            இப்போதைய கணக்குப்படி ஒரு மாவுக்கு தெளிவிதை என்றால் நல்ல தரமான விதை என்றால் மூன்றரை மரக்கால் அளவு தெளிப்பார்கள். கொஞ்சம் விதையில் சந்தேகம் இருந்தால் நான்கு மரக்கால் வரையும் தெளிப்பது உண்டு. இது ஒரு பொதுவான கணக்கு. கொஞ்சம் கூட குறைச்சலும் தெளிப்பது உண்டு.
            நாற்றாங்கால் தயார் செய்து, விதை விட்டு, நாற்றுப் பறித்து நடவு செய்வதென்றால் ஒரு மாவுக்கு ஐந்திலிருந்து ஆறு மரக்கால் வரை விதை விடுகிறார்கள்.

            எனக்குத் தெரிந்த வரை இந்தச் சுற்றுவட்டப் பகுதியில் யாரிடமும் விதைநெல் இல்லை. உரம், பூச்சிமருந்து விற்கும் கடைகளில் விதைநெல்லை வாங்குகிறார்கள். முன்பு இந்தக் கடைகள் விதை மற்றும் பூச்சிமருந்து விற்கும் கடைகள் மட்டுமே. அப்போது எல்லாரிடமும் விதைநெல் இருந்தது. விதைநெல்லுக்கெனவே தனியாக சிறிய பத்தாயம்‍ வைத்திருந்த வீடுகளும் இருந்தன. இப்போது எந்த விதையாக இருந்தாலும் அது சாதாரண கீரை விதையாக இருந்தாலும் கடைகளில் வாங்கி விதைத்து விட்டு கைகழுவி விடுகிறார்கள். விதையை எடுத்து வைத்து அதை நேர்த்தியாக வைத்திருக்கும் பழக்கம் இல்லாமல் போய் விட்டது. அதற்கான பொறுமை இங்குள்ளவர்களிடம் அற்றுப் போய் விட்டது என்றும் சொல்லலாம். இப்படிச் சொல்வதற்காக நீங்கள் என் மீது கோபப்பட்டாலும் அதுதான் உண்மையாகத் தோன்றுகிறது.
            கடையில் வாங்கும் விதைநெல் மூட்டை முப்பது கிலோ இருக்கிறது. அதை ஒரு சிப்பான் என்கிறார்கள். அதை அளந்தால் ஏறக்குறைய பதினோரு மரக்கால் அல்லது பனிரெண்டு மரக்கால் வருகிறது. இந்த பதினோரு மரக்காலுக்கு நாற்றாங்கால் தயார் செய்தால் இரண்டு மா அளவுக்கு வயலை நடலாம். விதை நன்றாக முளை கண்டிருந்தால் இரண்டரை மா அளவுக்கும் நடலாம். அது விதை முளைப்பதைப் பொருத்தது. அத்தோடு வானம் காட்டும் தயவையும் பொருத்தது.

            விதைநெல்லை விதைத்து குறைந்தது நான்கு நாட்களுக்காவது கனமழை இல்லாமல் இருக்க வேண்டும். அந்த நான்கு நாட்களுக்குள் கனமழை வந்தால் விதையைக் கொண்டு போய் குவித்து விட அந்த மழையே போதும். விதைநெல் குவிந்தால் நாற்றில் பற்றாக்குறை ஆகி விடும்.
            விதைப்பதற்கு முன் நாற்றாங்காலைத் தயார் செய்தாக வேண்டும். அப்படியே ரசமட்டம் வைத்து சிமெண்ட் பூசியது போல சேற்று வயலில் தேவையான அளவுக்கு தயார் செய்வார்கள். பின்பு அதில் தண்ணீரை விட்டு நிறுத்தினால் ரெண்டு விரக்கடை தண்ணீர் நிற்கிறது என்றால் எல்லா இடங்களிலும் அப்படித்தான் தண்ணீர் நிற்கும். அப்படி ஒரு நேர்த்தி அதில் இருக்கும். அப்படி இருந்தால்தான் அது தகுதியான நாற்றாங்கால். ஒரு குடும்பமே இறங்கிப் பாடுபட்டால்தான் அது சாத்தியம். ஆட்கள் என்றால் இரண்டு மூன்று பேரிலிருந்து நான்கு பேர் வரை தேவைப்படும்.

            ஒரு மா அளவுக்கு நட வேண்டும் என்றால் ஆறு குழியிலிருந்து பத்து குழி வரை அளவுள்ள நிலத்தைத் தயார் செய்வார்கள். நாற்றுப்பறி கூலி அதிகமாகும் என்று ஆறு குழி தயார் செய்பவர்களிலிருந்து, நாற்றுநன்றாக கிளம்பி வர வேண்டும் என்று பத்து குழி வரை தயார் செய்யும் ஆட்கள் வரை ஆளுங்களுக்குத் தகுந்த மாதிரி பலவிதமாக நாற்றாங்கால் தயாராகிறது இங்கு. பொதுவாக எட்டுக் குழி நில அளவு ஒரு மா அளவுக்கு நாற்று விடுவதற்குப் போதுமானது. சுப்பு வாத்தியாரின் கணக்கு ஒரு மா நிலத்துக்கு நாற்று விட எட்டுக் குழி என்பதாகும். அவர் மேம்பார்வைப் பார்த்து நாற்றாங்கால் தயாரானால் அப்படித்தான் தயாராகும். இதுவே சுப்பு வாத்தியாரின் வீட்டுக்காரம்மா வெங்கு நின்று நாற்றாங்கால் தயார் ஆனால் ஒரு மா நிலத்துக்கு பத்து குழி என்ற அளவில் நாற்றாங்கால் தயாராகும். இதுவும் ஒரு காலத்தில் நடந்ததுதான்.
            இந்த வருஷம் சுப்பு வாத்தியாருக்குத் தயார் ஆகியிருக்கும் நாற்றாங்கால் மாவுக்கு ஐந்து குழி தேறினால் பெரிய விசயம். சுப்பு வாத்தியார் மாவுக்கு எட்டுக்குழி நாற்றாங்கால் தயார் செய்ய சொன்னால் சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்கள் சிரிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து இவரும் சொல்வதை விட்டு விட்டு அதுதான் சரியான அளவாக இருக்கும் போல என்று நினைத்துக் கொள்கிறார்.
            பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ஏக்கரா நிலத்துக்கு ஒரு கோட்டை விதைநெல்லை விட்டு, எட்டு சென்ட் நிலத்தை நாற்றாங்காலுக்காக தயார் செய்திருக்கிறார்கள்.
            ஒரு கோட்டை விதைநெல் என்பது பதினெட்டு மரக்கால் அளவு கொண்டதாகும்.
            ஒரு ஏக்கரா என்பது மூன்று மா அளவு கணக்காகும்.
            ஒரு சென்ட் என்பது மூன்று குழி அளவாகும்.
            கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு மாவுக்கு ஆறு மரக்கால் விதை நெல்லை எட்டு குழி அளவுக்கு விட்டிருக்கிறார்கள்.
            இங்கு எல்லாம் மா கணக்குதான். ஏர்ஸ், ‍ஹெக்டேர் கணக்கு பத்திரங்களில்தான் இருக்கிறது.
            பாரதி பாடுவாரே, 'காணி நிலம் வேண்டும்' என்று. காணி நிலம் என்றால் மா கணக்கில் நான்கு மா ஆகும். ஒரு மாவுக்கு 14,400 சதுர அடி என்றால் நான்கு மாவான காணி நிலத்துக்கு 57,600 சதுர அடி கணக்கு வரும்.

           இப்போதுதான் நாற்றாங்காலில் விதைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். நாற்றுபறி, நடவு, களைபறி என்று இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அதையும் அவ்வபோது நடக்க நடக்க பார்ப்போம்.
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...