15 Sept 2019

ஒரு பந்தயத்தில் சூரத் காபி கடையில் துண்டிக்கப்பட்ட தலை


ஒரு பந்தயத்தில் சூரத் காபி கடையில் துண்டிக்கப்பட்ட தலை
            வழக்கமான வாசகசாலை அனுபவத்திற்கு மாற்றாக ஒரு புதிய அனுபவத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறார் நரேன் கிருஷ்ணா. வழக்கமாக திருவாரூர் மைய நூலகத்தில் நடைபெறும் வாசகசாலைச் சந்திப்பில் ஒரு நூலை எடுத்துக் கொண்டு விவாதிப்பதும், அனுபவப் பகிர்வு செய்வதும் இதுநாள் வரை நடந்து வருகிறது.
            இப்போது மூன்று கதைக்கான சுட்டிகளைத் தந்திருக்கிறார் நரேன். ஒவ்வொரு சுட்டியையும் சொடுக்கிப் பார்த்தால் மூன்று கதைகள். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு தளத்தில் பயணித்தாலும் மூன்று கதைகளிலும் விவாதக் களம் இருக்கிறது. மூன்று கதைகளின் முடிவிலும் ஒரு தீர்ப்பு பேசப்படுகிறது. அந்த மூன்று கதைகள்,
            1. முகமது பராடாவின் துண்டிக்கப்பட்ட தலையின் கதை,
            2. லியோ டால்ஸ்டாயின் சூரத் காபி கடை,
            3. அன்டன் செகாவின் பந்தயம்  
            ஒரு வகையில் இது முற்றிலும் வித்தியாசமான வாசிப்பு அனுபவம். நூல்களைத் தாண்டி வலைப்பதிவுகளிலும் வாசிக்க நிறைய இருக்கின்றன என்பதை இந்த அனுபவம் உணர்த்துகிறது.
            மூன்றும் மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள். மூன்று கதைகளை எழுதிய எழுத்தாளர்களில் டால்ஸ்டாயும், செகாவும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். முகமது பராடா மொராக்கோவைச் சேர்ந்தவர். மூன்று கதைகளும் அவை விவாதிக்கும் தத்துவார்த்த தன்மையில் ஒன்றுபடுகின்றன.
            முகமது பராடாவின் துண்டிக்கப்பட்ட தலையில் துண்டிக்கப்பட்ட தலையின் நாக்கு பேச ஆரம்பிக்கிறது. தலையைத் துண்டித்ததோடு நாக்கையும் அறுத்திருக்க வேண்டும் என்ற தீர்ப்போடு கதை முடிகிறது. துண்டிக்கப்பட்ட தலை கருத்துச் சுதந்திரத்திற்கான குறியீடாக அந்தக் கதையில் வெளிப்படுகிறது. ஒரு மனிதன் இறந்த பிற்பாடும் அவன் தன் சிந்தனையின் வழியாகப் பேசிக் கொண்டிருக்கிறான். துண்டிக்கப்பட்ட தலையின் நாவை வெட்டி வீசுவது என்பதன் மூலமாக முகமது பராடா சமகாலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவாதங்கள் ஏதும் இல்லாமல் வரலாற்றை ஆதாரங்கள் இல்லாமல் மாற்ற முனைவது, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக புத்தகங்களைத் தடை செய்வது என்பதைப் பேச முனைகிறார் எனலாம்.
            லியோ டால்ஸ்டாயின் சூரத் காபி கடை எனும் கதை கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற தத்துவ விசாரத்தைப் பேசும் கதை. ஒரு காபி கடையில் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற விவாதம் தொடங்குகிறது. ஒவ்வொருவரும் தாங்கள் அறிந்ததைப் பேசுகிறார்கள். அது அறிவதற்கான அல்லது விவாதிப்பதற்கான ஒன்றா? அவரவர் ஒற்றைத் தன்மையோடு உணர்வதற்கான ஒன்றா? என்பதை விளக்கும் ஒரு சீனப் பயணியின் கதையின் முடிவில் எல்லாரும் அமைதியாகிறார்கள். மேற்கொண்டு அவர்கள் விவாதத்தைத் தொடரவில்லை என்பதாக கதையை முடிக்கிறார் டால்ஸ்டாய்.
            அன்டன் செகாவ்வின் பந்தயம் சிறுகதையில் மரண தண்டனை, தூக்குத் தண்டனை குறித்த விவாதம் ஒரு தீயைப் போல பற்றிக் கொள்கிறது. வங்கியாளர் ஒருவர் ஆயுள் தண்டனையை விட தூக்குத் தண்டனைச் சிறந்தது என்று தன்னுடைய வாதத்தை முன் வைக்கிறார். இளம் வழக்கறிஞர் ஒருவர் தூக்குத் தண்டனையை விட ஆயுள் தண்டனை பரவாயில்லை என்று தன் வாதத்தை முன் வைக்கிறார். இந்த விவாதம் ஒரு பந்தயத்திற்கு இட்டுச் செல்கிறது. ஐந்து வருடங்கள் ஒருவர் ஆயுள் தண்டனையில் இருக்க முடியுமானால் அவருக்கு ரெண்டு மில்லியன் ரூபிள் கொடுக்க தயார் என்கிறார் வங்கியாளர். வழக்கறிஞர் ஐந்து வருடங்கள் அல்ல, பதினைந்து வருடங்கள் இருக்க தான் தயார் என்று அவரது பந்தயத்துக்குத் தயாராகிறார். யார் இந்தப் பந்தயத்தில் வெற்றி பெறுகிறார் என்பதை அன்டன் செகாவ் விவரிக்கிறார் என்று சொல்வதை விட விவாதிக்கிறார்.
            மூன்று கதைகளும் மூன்று வித விவாதங்கள்.
            1. கருத்துச் சுதந்திரம்,
            2. கடவுள்,
            3. தண்டனை
                        என்பவை குறித்த விவாதங்களாக முறையே அந்தக் கதைகளைப் பார்க்கலாம். மூன்று கதைகளையும் ஒரு நேர்க்கோட்டில் கொண்டு வந்து பார்க்கையில் முகமது பராடாவின் கதையில் ஒரு தீர்க்கமான தீர்ப்பு கூறப்பட்டு விடுகிறது - நாக்கை அறுப்பது என்று. டால்ஸ்டாயின் கதையில் அவரவர் கருத்துக்கு உரிய மதிப்பு தரப்படுகிறது. செகாவின் கதையில் பரிசோதனைக்குப் பின் தண்டனை குறித்த மாறுபட்ட முடிவு கூறப்படுகிறது.
            டால்ஸ்டாயையும், செகாவையும் விட முகமது பராடாவே அண்மைகால எழுத்தாளர். டால்ஸ்டாயும், செகாவும் சற்றேறக்குறைய சமகால பத்தொன்பதாம் நூற்றாண்டின் எழுத்தாளர்கள் எனலாம். பராடா இருபதாம் நூற்றாண்டில் தொடர்ந்து இருபத்தோராம் நூற்றாண்டைத் தொட்டவர். அவர்களின் கதைகளில் விவாதத்திற்கு இருக்கும் இடமும், நெகிழ்வும் முகமது பராடாவின் கதையில் கவனத்திற்கு உரியதாக இருக்கிறது எனலாம். கதைகளின் ஆன்மீகத்தனமான விவாதப் போக்கு டால்ஸ்டாயிலிருந்து, செகாவை நோக்கி நகரும் போது சற்று மாறுபட்டு முகமது பராடாவை நோக்கி வரும் போது ஒரு புரட்சிகரமான திசையை நோக்கிச் செல்கிறது எனலாம்.
            வாசிப்பில் உங்களது சொந்த முடிவுக்கு வருவதற்கான இடத்தைத் தருகிறார்கள் மூன்று எழுத்தாளர்களும். அந்த விதத்தில் மூன்று கதைகளும் வாசிக்கப்பட வேண்டியவையும், விவாதிக்கப்பட வேண்டியவையும் ஆகும் எனலாம்.
            நீங்களும் படித்துப் பாருங்கள்! உங்களது கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்!
            கதைக்கான சுட்டிகள் கீழே. அதைச் சொடுக்கி கதைகளைப் படித்துப் பாருங்கள்!
கதைக்கான சுட்டிகள் -
https://bit.ly/2My2RkF
முகம்மது பர்ராடா எழுதிய ‘துண்டிக்கப்பட்ட தலையின்’ கதை
https://bit.ly/2KbwLK7
லியோ டால்ஸ்டாய் எழுதிய "சூரத் காப்பி கடை"
https://bit.ly/2L9eJGF
அன்டன் செகாவ் எழுதிய ‘பந்தயம்
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...