13 Sept 2019

கூண்டோட கைலாசம்!



செய்யு - 206
            மன்னார்குடிக்கு கிழக்கே மல்லிக்குடி வாத்தியாரு பிச்சை. வயசு ஐம்பத்தஞ்சு இருக்கும். இன்னும் மூணே வருஷம். ரிட்டையர்டு ஆயிடுவார். நடுராத்திரி பன்னெண்டு மணி வாக்குல அவரோட மனைவிக்கு மூச்சுத்திணறலு ஆகிப் போவுது. அவசரம் அவசரமா ஆட்டோவைப் பிடிச்சு மன்னார்குடி தர்மாஸ்பத்திரிக்குக் கொண்டு போயிச் சேர்த்துருக்காரு. டாக்கடருமாருகப் பார்த்து கொஞ்சம் நிலவரம் சரியானதுக்குப் பெறவு, கொஞ்சம் ஆசுவாசம் பண்ணிக்குவோம்னு ஆஸ்பத்திரிக்கு எதுக்கே அந்த ராத்திரியில திறந்து இருந்த டீக்கடையில டீ அடிச்சிட்டு நின்னுருக்காரு. இவரு வாத்தியாருன்னு தெரிஞ்சுகிட்ட போலீஸ்காரங்க அரெஸ்ட் பண்ணிட்டுப் போயிட்டாங்க. ஆஸ்பத்திரில சேர்த்த அவரோட பொண்டாட்டிக்கு மூச்சுத் திணறலு சரியாயிடுச்சு. கொண்டு போயிச் சேர்த்த இவருக்கு இப்போ மூச்சுத் திணறலு ஆரம்பமாயிடுச்சு. மனுஷன அடிச்சா பிடிச்சு அரெஸ்ட் பண்ணிட்டுப் போவலாம். டீ அடிச்சதுக்குல்லாம பிடிச்சு அரெஸ்ட் பண்ணிட்டுப் போவாங்கன்னு கேட்காதீங்க. அந்நைய ராத்திரிக்கு வாத்தியார்ரா இருக்குறது குத்தமா போவுது தமிழ்நாட்டுலன்னு சொன்ன நம்ப மாட்டீங்க. இப்படி மன்னார்குடியில அரெஸ்ட் ஆன வாத்தியாருமாருக ஒண்ணா ரண்டா? நெறைய. மேலே சொன்னது ஒண்ணு. இன்னொன்னையும் கேளுங்க.
            மன்னார்குடி சுத்து வட்டாரத்துல கில்பர்ட் சுக்குமல்லிக் காபின்னா நாக்கைத் தொங்கப் போட்டுகிட்டு நாலு லோட்டா காபி அடிக்கலாம். வெளியில காபி கடையில டபரா செட்டுல சின்ன தம்ப்ளர்ல காபி குடிச்சாலும் வீட்டுல அப்படி யாரு காபி குடிப்பாங்க? எல்லா வீட்டுலயும் இதுக்குன்னே லோட்டா இருக்கு. அந்த லோட்டா நெறைய நிரப்பிக் அடிச்சாத்தான் காபி அடிச்ச திருப்தி இருக்கும். அதுவும் கில்பர்ட் சுக்குமல்லிக் காப்பின்னா ரெண்டு மூணு லோட்டா காப்பி அடிக்கிற ஆளெல்லாம் இருக்கு. அந்தோணி வாத்தியாரு பொண்டாட்டிக்கு ஒரு நாளுக்கு நாலு வேளை கில்பர்ட் சுக்குமல்லிக் காப்பி குடிக்காம இருக்க முடியாது. காலையில எழுந்திரிக்கிற அஞ்சரை மணி வாக்குல ஒரு தடவெ, காலம்பரைக்குப் பெறவு பத்து பதினோரு மணி வாக்குல ஒரு தடவே, சாயுங்காலத்த நேருங்கருப்ப நாலு மணி வாக்குல ஒரு தடவெ, சாயுங்காலத்துக்கு மேல ஆறு மணி வாக்குல ஒரு தடவேன்னு நாலு தடவைக்கு குறையாம அந்தம்மாவுக்கு காப்பி குடிச்சாவணும். அதுவும் கில்பர்ட் சுக்கு மல்லிக் காப்பிதான் குடிச்சாவணும். மத்த வகை காப்பியெல்லாம் ஆவாது.
            அந்தோணி வாத்தியாரு காலைச் சாப்பாடு சாப்புட மாட்டாரு. காலையில எழுந்திரிச்சதும் பல்ல வெளக்குனாருன்னா சர்க்கரை கம்மியா ரெண்டு லோட்டா கில்பர்ட் சுக்குமல்லி காப்பியைப் போட்டு வெச்சி, எண்ணிக்கையில சரியா எட்டு மேரி பிஸ்கெட்டை எடுத்து வெச்சிடணும். அதுதாம் அவருக்குக் காலைச் சாப்பாடே. வேற ஆகாரமெல்லாம் கிடையாது. அவருக்கு சுகரு வந்த நாள்லேர்ந்து என்னென்னமோ வைத்தியமோ பண்ணிப் பார்த்து எதுவும் சரிபடாம ஒரு நாளு இப்படி எட்டு மேரி பிஸ்கெட்டையும், ரெண்டு லோட்டா கில்பர்ட்டு காபியையும் குடிச்சிப் பாத்துருக்காரு. அது என்னமோ அவருக்கு ஒத்துப் போனது போல போயிருக்கு. உலகத்துல எவனும் இது போல சுகருக்கு ஒரு வைத்தியத்தைக் கண்டுபிடிச்சிருக்க மாட்டான். நம்ம அந்தோணி வாத்தியாரு கண்டுபிடிச்சிட்டாரு. அன்னைலேந்து அதெ ஒரு வைத்தியமுறையா எடுத்துகிட்டு சுகருக்குன்னு வாங்கி வெச்ச மாத்திரை மருந்தையெல்லாம் குப்பைத்தொட்டியில வீசி எறிஞ்சிட்டு நாலைஞ்ச வருஷமா இப்படியே வாழ்ந்துகிட்டு இருக்காரு. இதெ அவரு கடைபிடிக்கிறதோட இல்லாம சுகரு வந்திருக்கிற மத்த வாத்தியாருமாருகளையும் செஞ்சு பாருங்கன்னு ரெகமண்ட்டு பண்ணுவாரு.
            ஒரு மனுஷனுக்கு வியாதின்னு வந்துபுட்டா அவனுக்கேத்த வைத்திய முறையே அவனே கண்டுபிடிக்கணும்னு போலருக்கு. இப்போ நீங்க அந்தோணி வாத்தியார பாத்தீங்கன்னா சுகரு வந்த ஆளுன்னே சொல்ல மாட்டீங்க. ஆளு சும்மா ஜம்முன்னு இருக்காரு. சுகரு வந்தப்ப நீங்க அவரெ பாக்கணுமே. ஒடம்புல எலும்பு மட்டுந்தான் இருந்துச்சு. அப்படி எளைச்சு இருந்தாரு.
            ஆக இப்போ ஒங்களுக்குப் புரிஞ்சிப் போயிருக்கும். அந்தோணி வாத்தியாரு வூட்டைப் பொருத்த மட்டில கில்பர்ட்டு சுக்குமல்லிக் காப்பி இல்லாம இருக்க முடியாது. இதுக்குன்னே அவரு பந்தலடில இருக்குற அந்தக் காப்பித் தூளு கடைக்கு டிவியெஸ்ஸூ சாம்ப் வண்டியை எடுத்துட்டு வந்து வாங்கிட்டுப் போவாரு. அவரு இருந்த ஊரு மன்னார்குடிக்குப் பக்கத்துல இருந்த கர்ணாவூரு.
            அன்னைக்கு அப்படித்தான் காப்பிப் பொடி இல்லாமப் போச்சேன்னு அவரோட பொண்டாட்டி சத்தம் போட, அடடா இது என்னடா குடும்பத்துக்கு வந்த சோதனைன்னு டிவியெஸ்ஸூ சாம்ப எடுத்துகிட்டு அய்யரு சமாது வழியா குறுக்குப் புகுந்து உப்புக்கார தெரு வழியா மன்னார்குடியில இருக்குற பந்தலடி பக்கமா வண்டியை வுட்டுருக்காரு. சுகரு வந்து அதெ காப்பித் தண்ணியிலயும், மேரி பிஸ்கட்டலுயும் சரி பண்ண ஆளுன்னு இவருக்கு மன்னார்குடி முழுக்கு பேரு வேற ஆயிப் போச்சா. அந்த வகையில மன்னார்குடி முழுக்க பிரபலமா வேற போயிட்டாரா. இவரு டிவியெஸ்ஸூ சாம்புல போயிட்டு இருக்குறப்போ அந்த நேரம் பார்த்து ரோட்டுல போன ரெண்டு பேரு பேசிட்டு இருந்துகிட்டு இருக்கானுவோ, "அவருதாம்டா அந்தோணி வாத்தியாரு! சுகர்ர காப்பியிலயும், மேரி பிஸ்ட்டுலயும் சரி பண்ண ஆளு!" அப்பிடின்னு. இவனுங்க வாத்தியார்னு சொல்லிப் பேசுனது பக்கத்துல இருந்த போலீஸ்காரங்களுக்கு விழுந்துச்சோ இல்லையோ கப்புன்னு பாய்ஞ்சு வந்து வாத்தியார்ர கோழி அமுக்குறது போல அமுக்கிப் போட்டாங்க. டிவியெஸ்ஸூ சாம்புல போயிட்டு இருந்த வாத்தியாரு இப்போ அரெஸ்ட் ஆயி போலீஸூ ஜீப்புல போயிட்டு இருக்காரு. நாட்டுல சுகர்ர காப்பியல கொணப்படுத்திகிட்டது ஒரு குத்தமா? இல்ல பொண்டாட்டிச் சொன்னாளேங்றதுக்காக காப்பி பொடி வாங்க வந்தது ஒரு குத்தமா?ன்ன யோசிச்சுகிட்டே அவரு ஜீப்புல போயிட்டு இருக்காரு.
            "அய்யோ! நம்ம அந்தோணி வாத்தியார்ர அரெஸ்ட் பண்ணிட்டுப் போறாங்க!"ன்னு அதுக்கு நாலு பேரு சத்தம் போட சுத்தி நின்ன ஆளுங்க போயிட்டு இருக்குற ஜீப்பை மறைச்சா...
            "மரியாதியா வழிய வுடுங்க. வாத்தியார்ர எஸ்மா சட்டத்துல அரெஸ்ட் பண்ணிருக்கோம். மறிச்சீங்க ஒங்கள எல்லாத்தியும் அரெஸ்ட் பண்ணிப்புடுவோம்!"ன்னு போலீஸ்காரங்க சொல்ல, இது என்னடா புது சட்டமா இருக்குன்னு ஜீப்பை மறிச்சவங்க பயந்து போயி விலகிகிட்டாங்க. அப்புறம் பேர்ர கேட்டால ச்சும்மா அதிருதில்ல. எஸ்மா அப்பிடின்னுச் சொல்லிப் பாருங்க. பயங்கரமாத்தான இருக்கு.
            அது என்ன அப்பிடி பயங்கரமான சட்டம்னு கேக்காதீங்க. Essential Service Maintaneces Act அப்பிடிங்றதுல உள்ள ஒவ்வொரு வார்த்தையிலயும் மொத எழுத்தைப் பிடுங்கிப் போட்டு வாசிச்சீங்கன்னா ESMA - எஸ்மா அப்பிடிங்றது வந்துடும். இது பார்லிமெண்டுல அரசாங்க ஊழியருங்க அவங்க கடமையைச் செய்யாம வேலை நிறுத்தம் பண்ணா பிடிச்சு உள்ள போட வகை செய்யுற ஒரு சட்டம். இந்தச் சட்டத்த தமிழ்நாடு அரசாங்கம் அப்போ அதுக்கு ஏத்த மாதிரி தமிழ்நாடுங்றதுல அதுக்கு இங்கிலீஷ்ல வர்ற மொத எழுத்தான்ன Tங்ற எழுத்த முன்னாடிச் சேர்த்து TESMAன்னு நிறைவேத்தி அதுலதாம் பொண்டாட்டிக்கு வைத்தியம் பார்க்க வந்த பிச்சை வாத்தியாரு, பொண்டாட்டிக்காக காப்பிப் பொடி வாங்க வந்த அந்தோணி வாத்தியாரு, இன்னபிற வாத்தியாருன்னு போலீஸ்காரங்க கண்ணுல பட்டவங்க எல்லாம் அரெஸ்ட் ஆவுறாங்க.
            அது 2003 வது வருஷம்.
            தமிழ்நாட்டுல இருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எல்லாரும் சேர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்குச் சமமான சம்பளம் தங்களுக்கும் வேணும்னு ஒரு கோரிக்கைய வைக்கிறாங்க. அத்தோட மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் முன் வைக்குற புதிய ஓய்வூதியம் திட்டங்ற ஒரு திட்டத்தோட முன் வைப்புகள திரும்ப பெற்றுக்கணும்னுங்றதையும் அழுத்தமாக முன் வைக்குறாங்க. அவங்களோட கோரிக்கை ஏத்துக்ப்படலன்னு தெரிஞ்சதும் அவங்க எல்லாரும் போராடுறதுன்னு ஒண்ணா சேருறாங்க. அப்படி அவுங்க ஒண்ணா சேர்ந்த அமைப்புக்குப் பேரு ஜாக்டோ ஜியோ.  The Joint Action Council of Tamil Nadu Teachers Organisations and Government Employees Organisation அப்பிடிங்றதோட சுருக்கம்தான் ஜாக்டோ ஜியோ அப்பிடிங்றது. அதாவது தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு அப்பிடின்னு அதைச் சொல்லலாம்.
            தமிழ்நாடு முழுக்க ஜாக்டோஜியோவோட போராட்டம் ஆரம்பமாகுது. தமிழ்நாடு அரசாங்கத்துல போராட்டத்துல ஈடுபட்டு இருக்குற ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் வேலைக்குத் திரும்புமாறு எச்சரிக்கை பண்றாங்க. அதெ இவங்க ஏத்துக்க மாட்டேங்றாங்க. அதால போராட்டத்துல இருக்குற ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் கைது பண்ணச் சொல்லி உத்தரவாகுது. முக்கியமான போராட்டத் தலைவருங்க பல பேரு ராத்திரியோட ராத்திரியா வீடு புகுந்து அரெஸ்ட்  பண்ணப்படுறாங்க. எல்லா தலைவர்களையும் அரெஸ்ட் பண்ணா போராட்டத்தை நடத்த ஒரு சிலராவது வேணும்னு தலைவர்கள்ல சில பேரு தலைமறைவு ஆவுறாங்க. தலைமறைவு ஆயிட்டா அவுங்கள எப்படிப் பிடிக்கிறது? அதால வேலைக்குப் போவாம இருக்குற எந்த ஆசிரியரா இருந்தாலும் சரிதாம், அரசு ஊழியரா இருந்தாலும் பிடிச்சு அரெஸ்ட் பண்றாங்க போலீஸ்காரங்க. அப்படி பிச்சை வாத்தியாரும், அந்தோணி வாத்தியாரும் அரெஸ்ட் ஆக வாத்தியாருமாருக வீடு தங்காம எங்கெங்கேயோ அநாதியா தெறிச்சி ஓடுறாங்க. அப்பயும் வேலைநிறுத்தப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்ததா தெரியல.
            அன்னைக்கு ராத்திரி ஒரே நாள்ல பணிக்குத் திரும்பாம போராட்டத்துல ஈடுபட்டதாகச் சொல்லி ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் பேரு தமிழ்நாடு அரசாங்கத்தால டிஸ்மிஸ் பண்ணப் படறாங்க. அதாவது பணிநீக்கம் பண்ணப் படறாங்க. இதென்னடா கூண்டோட கைலாசம்னு சொல்லுவாங்களே! அது மாரில்லா இருக்குன்னு வாத்தியாருமாருக மத்தியில அதிர்ச்சியாவும், தெகைப்பாவும் போவுது.
            இந்தச் செய்தியைக் கேட்டு பிய்ஞ்சுப் போன கோரைப் பாயை எடுத்துப் போட்டு நடுக்கூடத்துல படுக்கையில விழுந்தவர்தாம் சுப்பு வாத்தியாரு. அவர்ர எழுப்ப முடியலங்ற சங்கதியத்தாம் நேற்று பார்த்தோம்ல.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...