24 Sept 2019

போராட்டத்தின் முதல் மரணம்


செய்யு - 217
            கூத்தாநல்லூரு வட்டாரத்துல இஸ்மாயிலு வாத்தியார தெரியாத ஆட்கள் இருக்க முடியாது. எங்க போனாலும் நடந்துதான் போவாரு. நடந்துதான் வருவாரு. அவருக்கு சைக்கிள் விடவும் தெரியாது. அதைக் கத்துக்கறதுலயும் விருப்பம் இல்ல. பள்ளிக்கூடம் விட்டா வீடு. வீட்டை விட்டா பள்ளிக்கூடம். இதுக்கு இடையில போறது பள்ளிவாசல் மட்டுந்தான். காலையில எட்டு மணிக்கெல்லாம் பள்ளிக்கூடம் வந்து பள்ளிக்கூடத்தைத் திறந்துடுவாரு. புள்ளைங்களும் அந்த நேரத்துக்கே வந்து அவரோட பேசிகிட்டு விளையாடிகிட்டு இருக்கும். வாத்தியாரு ரொம்ப குழந்தை மனசுக்காரரு. அவரோட பேச்சுக் கூட குழந்தைங்க பேசுற அளவுலதான் இருக்கும். கவனிச்சுக் கேட்டாக்க அதுல அவ்வளவு தத்துவங்கள் இருக்கும். அது எல்லாருக்கும் புரியாது. கேட்டாக்கா பெரிய மனுஷன் போல பேசி என்னவாகப் போகுது அப்பிடிம்பாரு. சமயத்துல பிள்ளைகளோட பிள்ளைங்களா ஓடிப் பிடிச்சி, ஒளிஞ்சாம் பிடிச்சி, நொண்டியாட்டம்லாம் விளையாண்டுட்டு இருப்பாரு.
            ஊருல அவருக்கு செம மதிப்பும் மரியாதையும் உண்டு. ஏதேனும் வீடுகள்ல பிரச்சனைனாலும் வாத்தியாரை சாயுங்காலமா கொண்டு போயி வெச்சி இந்த மக்கள் தீர்த்துக்கறதும் உண்டு. வாத்தியாரு ரெண்டு பக்கமும் பேசி அசமடக்குறதுல ரொம்பவே கெட்டிக்காரரு. புள்ளைங்களோட புள்ளைங்களா விளையாண்டுகிட்டு இருந்த ரெண்டுங்கெட்டான் ஆளு போல இருந்த இவரா இப்படிப் பேசுறாரு அப்பிடின்னு அப்போ பார்க்குறவங்களுக்குத் தோணும். இவருகிட்ட பாடம் படிச்சி பெரிய ஆளா ஆனவங்க கூத்தாநல்லூரு பக்கம் வந்தா இஸ்மாயிலு வாத்தியார்ரைப் பார்க்காம போக மாட்டாங்க.
            இஸ்மாயிலு வாத்தியாரு நல்லா கவிதையும் எழுதுவாரு. நபிமணி அப்பிடிங்ற பேர்ல தத்துவக் கவிதைகள் எழுதுனார்னா அதைப் போடாத பத்திரிகைங்க அப்போ கிடையாது. ஆனா அவரு கவிதை எழுதுறார்ங்ற விசயம் யாருக்கும் தெரியாது.
            "புழுவும் பூச்சியும்தான்
            பிறக்குது இறக்குது
            மனுஷப் பயலும்தான்
            பிறக்குறான் இறக்குறான்
            புழுவையும் பூச்சியையும் விட
            மனுஷன் என்ன பெரிசா உசந்துட்டான்?
            மண்புழு கூட மனுஷனுக்கு
            மண்ணுக்கு மகத்துவம் பண்ணுது
            வண்ணத்துப் பூச்சி எல்லாம்
            மனுஷ மனசுக்கு மகிழ்ச்சித் தருது
            மனுஷப் பய மனுஷனுக்கு
            என்ன பெரிசா நல்லது பண்ணிட்டான்?
            புழுவையும் பூச்சியையும் விட
            மனுஷன் என்னா பெரிசா உசந்துட்டான்?"
அப்பிடிங்ற வரிகளை நீங்க எங்காவது படிச்சிந்திருங்கீன்னா அது இஸ்மாயிலு வாத்தியாரோட வரிகள்தான். அந்த வரிகளுக்குக் கீழே நபிமணின்னு பேரு போட்டிருந்திருக்கும்.

            தான் ஒரு கவிஞர்னு அவரு வெளியில காட்டிக்கிட்டது கிடையாது. காட்டிக்கவும் மாட்டாரு. "ஏம் வாத்தியாரே! இப்பிடின்னா?" "ஆமா! அழகா ஆடுற மயிலும், இனிமையா பாடுற குயிலும் கழுத்துல விளம்பர போர்ட்டு மாட்டிக்கிட்டா அலையுது?" அப்பிடிம்பாரு. "குயில பார்த்தா குயிலுன்னு தெரியுது. மயில பார்த்தா மயிலுன்னு தெரியுது. கவிஞரா பார்த்தா கவிஞருன்னு தெரிய வேண்டாமா?" அப்பிடின்னு கிடுக்கிப் பிடி போட்டா, "அத்து சரிதாங்க! குயில பார்த்தா குயிலுன்னு தெரியதுல்ல. மயிலப் பார்த்தா மயிலுன்னு தெரியுதுல்ல. அது போல கவிஞரா பார்த்தா கவிஞர்னு தெரியணும்ல. நம்மளப் பாருங்க. தெரியுதா? தெரியலல்ல. அதாங்!" அப்பிடின்னு சொல்லிட்டுச் சிரிப்பாரு. பேச ஆரம்பிச்சார்னா சிரிக்க சிரிக்கப் பேசுவாரு.
            அவருக்கு சாமி, மதம், பெரியவன், சின்னவன், ஏழை, பணக்காரன்ங்ற எந்த வேறுபாடும் கிடையாது. யாரா இருந்தாலும் வாங்கன்னு கூப்புடுவாரு. அஞ்சு வயசு குழந்தையா இருந்தாலும், "இங்க வாங்க! என்ன பண்றீங்க? அய்யாவோட பேரு என்னங்க?" அப்பிடின்னுதான் அந்தக் குழந்தைகிட்டப் பேசுவாரு. பிள்ளைகளை அடிக்க மாட்டாரு. வீட்டுப்பாடம் செய்துட்டு வரலைன்னா அந்தப் பிள்ளைங்க பக்கத்துல உட்கார்ந்து இவரு வீட்டுப்பாடம் செஞ்சு கொடுப்பாரு. செஞ்சிக் கொடுத்துட்டு, "நாளைக்கும் இந்த மாதிரி நம்மள கஷ்டப்படுத்திடாதீங்க! ன்னா புரிஞ்சுதுங்களா?" அப்பிடிம்பாரு. அவரு சொல்ற அந்தத் தொனியில வீட்டுப்பாடம் செய்ய அடம் பிடிக்குற குழந்தையும் செஞ்சிட்டு வந்து மொத ஆளா அவருகிட்டக் காட்டும்.
            ரொம்ப இனிமையான ஆளு, வாத்தியாரு, மனுஷன் அப்பிடின்னு எப்பிடி வேணும்னாலும் இஸ்மாயிலு வாத்தியார சொல்லலாம். அதனால என்னவோ பாருங்க! இஸ்மாயிலு வாத்தியாருக்கும் சர்க்கரை நோயி வந்துப்புடுச்சி. "ன்னா நடையா நடக்குற வாத்தியாருக்கே சர்க்கரை நோயா?"ன்னு கேட்டாக்கா போதும், "யப்பா! அதெல்லாம் ஆண்டவனோட சித்தம்ப்பா! இன்னும் நாம்ம நெறைய நடக்கணும்னு அவரு ஆசைப்படுறாருப்பா! நடந்துட்டுப் போவோம். நம்மள நடக்க விட்டு பார்க்குறதுல அவருக்குக் கொள்ளை ஆசைப்பா! நாம்ம சின்ன குழந்தைகளை நடக்க விட்டு, ஓட விட்டுப் பார்க்க ஆசைப்படுறதில்லையா! நாமெல்லாம் ஆண்டவனோட பிள்ளைகளப்பா! அதாம்ப்பா கூடுதலா நம்ம நடக்கவிட்டு ஆசைப்படுறாரு!" அப்பிடிம்பாரு. இந்தப் பதிலுக்கு என்ன பதிலு சொல்றதுன்னு சொல்லுங்க!
            சர்க்கரை நோயி வர்றதுக்கு முன்னாடி எட்டு மணிக்கு வந்துகிட்டு இருந்த இஸ்மாயிலு வாத்தியாரு, அதுக்கு அப்புறம் ஏழரை மணிக்கெல்லாம் வந்து பள்ளிக்கூடத்தைத் திறந்துடுவாரு. அஞ்சாவது வகுப்புல மட்டும்தான் அப்போ புள்ளைகள் உட்கார்றதுக்கு பெஞ்சு. அங்க போயி அந்தப் பெஞ்சுல அப்படியே படுத்துடுவாரு. சர்க்கரை வந்ததுக்குப் பெறவு ஒடம்பு அவருக்குக் கொஞ்சம் சுணக்கமாத்தான் இருக்கு. ஒரு அரைமணி நேரம் படுத்து எட்டு மணிக்கெல்லாம் எழுந்திரிச்சிடுவாரு. ஏன்னா அவரோட கணக்கு எட்டு மணிக்கெல்லாம் பள்ளிக்கூடத்துல தயாரா இருக்கணுங்றது. பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிறது ஒன்பதரை மணின்னாலும் அவரோட கணக்கு வேறதான். இப்படியுமா வாத்தியாரு இருப்பாருன்னு கேட்டா அப்படித்தான் இருந்தாரு இஸ்மாயிலு வாத்தியாரு. அவருக்கு எல்லா வாத்தியாரோடயும் நல்ல பழக்கம். யார்கிட்டயும் சின்ன சண்டை கூட கிடையாது. வட்டாரத்துல உள்ள எல்லா வாத்தியார்களோடயும் நல்ல தொடர்புல இருந்த ஒரே ஆளு அவரு மட்டும்தான்னு சொன்னா அதாஞ் சரி. மத்த வாத்தியார்களுக்கு மத்தவங்களோட கொஞ்சம் முன்ன பின்ன ஏதோ சின்ன சின்ன மனஸ்தாபமாவது இருக்கும். இஸ்மாயிலு வாத்தியாருக்கு அதுவும் கிடையாது.
            இஸ்மாயிலு வாத்தியாரு தமிழ்ப்பாடம் நடத்துறப்ப பக்கத்துல இருந்து பார்க்கணும். செய்யுளை எல்லாம் ராகம் எடுத்துதான் பாடுவாரு. அவரு குரலு அப்படியே நாகூரு அனிபா குரலு போலவே இருக்கும். அப்படி அவரு பாடுறப்பவே செய்யுள் அப்படியே பச்சக்னு மனசுல ஒட்டிக்கும். அதுவும் பிள்ளைங்க மனசுல அது ஒட்டிகிட்டு அதுங்க பாடுறதைக் கேட்டா அதுவும் இஸ்மாயிலு வாத்தியாரு பாடுறது போலவே இருக்கும். அப்படி புள்ளைங்க அவரு பாடம் நடத்தி முடிச்சத்துக்கு அப்புறம் இஸ்மாயிலு வாத்தியாராவே ஆயிடும். அவரும் பிள்ளைங்க மாதிரி மாறக் கூடிய ஆளுதானே.
            இஸ்மாயிலு வாத்தியாருக்கு மூணு பொண்ணுங்க. மூணுக்கும் நல்ல எடமா பார்த்துட்டு இருக்காரு. சொத்து பத்தும் பெரிசா அவரு எதுவும் சேர்த்து வைக்கல. கூத்தாநல்லூரு சார் பதிவாளரு ஆபீஸ்க்குப் பக்கத்துல இருக்குற கூரை வீடுதாம் அவரோட வீடு. அவரோட வீட்டுக்கு யாரு போனாலும் காபித்தண்ணி குடிக்காம வர முடியாது. அப்படி ஒரு உபசரிப்பு. சுப்பு வாத்தியாருக்கு இஸ்மாயிலு வாத்தியாரு மேல தனிப்பிரியம். அந்தப் பக்கம் போனாக்கா அவரு பள்ளிக்கூடத்துல இருந்தாலும் சரிதாம், விடுமுறைன்னு வூட்டுல இருந்தாலும் சரிதாம் ஒரு எட்டுப் போயி பார்த்துட்டு வந்துடுவாரு. குடும்பத்தைப் பத்தியெல்லாம் விசாரிச்சு யாரு யாரு எப்படி இருக்கணும், எப்படி நடந்துக்கணும்ங்றதையெல்லாம் பக்குவமா சொல்வாரு இஸ்மாயிலு வாத்தியாரு. அப்ப மட்டுந்தாம் பெரிய மனுஷம் போல பேசுவாரு. மத்த நேரங்கள்ல குழந்தைக் கணக்காத்தாம் பேசுவாரு. அவரோட சுபாவம் அப்படி. சுப்பு வாத்தியாரு மவன் விகடுவைப் பத்திக் கூட அவரு அடிக்கடி விசாரிப்பாரு. அவ்வேம் பின்னாடி நல்லா வருவான்னு நம்பிக்கையா சொன்னா ஆளுங்கள்ல இஸ்மாயிலு வாத்தியாரும் ஒருத்தரு.
            எப்பேர்பட்ட மனுஷன் இஸ்மாயிலு வாத்தியாரு. அவரு ஆளு மெளத் ஆயிட்டார்ங்ற சங்கதி வந்தப்போ இங்க சுப்பு வாத்தியாரு, விநாயகம் வாத்தியாரு எல்லாரும் அப்படியே உடைஞ்சுப் போயிட்டாங்க. ரொம்ப அனுபவப்பட்டவரு. ரொம்ப பக்குவப்பட்டவரு. அவராலேயே இந்த ஜாக்டோ - ஜியோ போராட்டத்துல டிஸ்மிஸ் செய்யப்பட்டதைத் தாங்கிக்க முடியலன்னா மத்த வாத்தியார்களோட நிலைமைய என்னன்னு சொல்றது? பொண்ணுக்கு வேற கல்யாண ஏற்பாடுகள செய்யணும்னு இருந்தாரா. அந்த நேரம் பார்த்து வேலை போயிடுச்சின்னுச் சொன்னா எப்படி இருந்திருக்கும் அவருக்கு? அதைப் பத்தியெல்லாம் அவரு பெரிசா அலட்டிகிட்டது போலவே, கவலைபட்டது போலவோ வெளியில காட்டிக்கல. ஆனாலும் மனசுக்குள்ள ஒரு கவலை இருந்திருக்கத்தானே செய்யும். ராத்திரி படுத்தவர்தான். காலையில ஒடம்புல ஒரு அசைவும் இல்ல. உறக்கத்துலயே மாரடைப்புல உசுரு பிரிஞ்சிருக்கணும்னு பேசிகிட்டாங்க.
            பிச்சை வாத்தியாரோட நடுராத்திரி கைது, அந்தோணி வாத்தியாரோட நடுரோட்டுக் கைது, ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் பேரு டிஸ்மிஸ்ஸூ, இப்போ இஸ்மாயிலு வாத்தியாரோட மரணம்னு அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால வாத்தியாருங்க ரொம்ப கலங்கிப் போனாங்க. எல்லாருக்கும் வேலை கிடைக்குமா? கிடைக்காதா?ங்ற பயம் மண்டைக்கும், தொண்டைக்குமாய் உருள ஆரம்பிச்சிடுச்சு.
            அந்த நேரம் பார்த்து அரசாங்கம் வேற மாசம் மூவாயிரம் சம்பளத்துக்கு வாத்தியாருக்குப் படிச்சவங்க பள்ளிக்கூடத்துக்கு வந்து பள்ளிக்கூடத்த தொறக்கலாம்னு ஆணைப் போட்டாங்க. வேலை பறிபோன வாத்தியாருங்க இதைக் கேள்விப்பட்டதும் அப்படியே சொணங்கிப் போயிட்டாங்க. அப்படி கூத்தாநல்லூருல இஸ்மாயிலு வாத்தியாரு வேலை பார்த்த பள்ளிக்கூடத்தை வாத்தியாரு படிப்பு படிச்சு‍ வேலையில்லாம இருந்த சில பேருங்க மாசம் மூவாயிரம் சம்பளத்துக்கு ஆசைப்பட்டுத் திறந்தப்போ, ஊரு மக்கள் ஒண்ணுகூடி பள்ளிக்கூடத்தைத் திறக்கக் கூடாதுன்னு தொறத்தி தொறத்தி அடிச்சாங்க பாருங்க! அது ஒண்ணுதாங் வேலை பறி போயிருந்த வாத்தியார்களுக்கு ஆசுவாசமா இருந்துச்சி. அதே நேரத்துல எல்லா இடங்கள்ளயும் இப்படி நடக்கல. சில ஊர்கள்ல பள்ளிக்கூடத்தை வேலை கிடைக்காத வாத்தியாரு படிப்ப படிச்சவங்கத் திறக்க ஆரம்பிச்சாங்க. அப்படித் திறக்க ஆரம்பிக்க ஆரம்பிக்க அது வேலை பறிபோன வாத்தியாருங்க மனசுல திக் திக் திக்குன்னு இறங்குது. எல்லாருக்கும் இஸ்மாயிலு வாத்தியாரோட மாரடைப்பை நெனைச்சி பயமாவும், பீதியாவும் இருக்கு.
            இது தொடர்பான கேஸூ அப்போ ஹை கோர்ட்டுல நடக்குது, சுப்ரீம் கோர்ட்டுல நடக்குதுன்னு சொன்னாலும் கேஸூ நல்ல விதமா முடிஞ்சு திரும்ப வேலைக்குப் போறது சாத்தியமாங்ற நடுக்கமும், சந்தேகமும் ஒவ்வொரு வாத்தியாரு மனசுலயும் வர அப்போ ஒவ்வொரு பொழுதும் ஒரு யுகமாத்தான் போனுச்சு வாத்தியாருங்களுக்கு.
*****


No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...