25 Sept 2019

தமிழர்கள் - சினிமாவுக்கான ரொமாண்டிசப் பிரதிகள்



            சினிமாவைப் பற்றி எழுதி நாட்களாகி விட்டது. சினிமாவுக்குமான நமக்குமான பந்தம் குறைந்து வருகிறது. அந்த இடத்தை பேஸ்புக், வாட்ஸப், யூடியூப், டிவிட்டர் போன்றவை பகிர்ந்து கொண்டு வருகின்றன. அதிலும் சினிமா குறித்த உரையாடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. எனினும் அதில் அவரவர்களாக உருவாக்கிக் கொள்கின்ற குழுக்கள் மூலம் அவரவர்களுக்கு விருப்பமான அரசியல் சார்ந்தோ, சமூகம் சார்ந்தோ, இலக்கியம் சார்ந்தோ இன்ன பிற துறைகள் சார்ந்தோ தீவிரமாக விவாதிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
            நமக்கும் சினிமாவுக்குமான விலக்கம் இன்ன பிற கவனங்களால் முன்னை நாட்கள் போல அவ்வளவு தீவிரமாக இல்லாவிட்டாலும் அதற்கும் நமக்குமான பந்தம் முற்றிலும் அறுந்து விடவில்லை. தீபாவளியோ, பொங்கலோ, கோடை விடுமுறையோ வந்து சினிமாவோடு நம்மை இணைத்து விட்டுப் போகிறது. மாதத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ சினிமாவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. தொலைக்காட்சியிலோ, செல்பேசியிலோ ஏதோ ஒரு சினிமாவைப் பார்த்து விடச் செய்கிறது. சினிமாவின்றி நம் வாழ்க்கை எது?
            நம் வாழ்வின் முதல் சிந்தனை சினிமாவிலிருந்துதாம் தொடங்குகிறது. சினிமாவைப் பார்த்தே நாம் சிந்திக்கக் கற்றுக் கொண்டோம். சினிமாவைப் பார்த்தே நாம் உணர்ச்சிவசப்பட கற்றுக் கொண்டோம். சினிமாவைப் பார்த்தே நாம் சிரிக்க கற்றுக் கொண்டோம். பாசம் வைக்க, காதல் செய்ய, குரோதம் வளர்க்க, பழி தீர்க்க என்று பற்பல சங்கதிகள் சினிமா மூலமே நம் ரத்தத்தில் ஊடுருவியது. பிற்காலத்தில் அந்த இடங்களை மெகா சீரியல்கள் பிடித்துக் கொண்டாலும் அதன் முன்னோடி வடிவம் சினிமாதாம்.
            நம் தந்தையர்களை, தாய்மார்களை எடுத்துக் கொண்டால் எம்.ஜி.ஆர். படம், சிவாஜி படம், சரோஜா தேவி, சாவித்திரி, பானுமதி என்று பார்த்துதான் அவர்களின் சிந்தனையே தொடங்குகிறது. அவர்களின் வாழ்வின் நல்லது, கெட்டது, சிந்தனை, உணர்வுகளில் எம்.ஜி.ஆரோ, சிவாஜியோ, சாவித்திரியோ, பானுமதியோ ஏதோ ஒரு வடிவத்தில் கலந்து இருக்கிறார்கள். அதற்கு எடுத்த தலைமுறையில் ரஜினியோ, கமலோ, ஸ்ரீதேவியோ, குஷ்பூவோ அந்த இடத்தை எடுத்துக் கொள்கிறார். இந்தத் தலைமுறையில் விஜய்யோ, அஜித்தோ, சிம்ரனோ, நயன்தாராவோ அந்த இடத்தை எடுத்துக் கொள்கிறார். கூடுதலாக அந்த இடத்தை வடிவேல் பிடித்துக் கொண்டது தனித்திரைக்கதை. வடிவேலு இல்லாமல் ஒரு சொல்லையோ, வாக்கியத்தையோ, சம்பவத்தையோ விளம்ப முடியாத அளவுக்கு போன சினிமா உருமாற்றமும் நம் சமூகத்தில் நடந்தது, நடக்கிறது. அவர்களால்தான் அதாவது நமது சினிமாக்காரர்களால்தான் தலைமுறைகளை வலிய சிந்திக்கச் செய்ய முடிகிறது. சரியோ, தப்போ அந்த இடத்திலிருந்துதான் அடுத்தகட்ட சிந்தனையை, எண்ண வடிவத்தை முன்னெடுக்க முடிகிறது. அதாவது ஒன்று ஏற்று அல்லது மறுத்து. எப்படியோ அதுவே துவக்க இடமாக இருக்கிறது.
            சுருக்கமாக தமிழர்களின் வாழ்வைச் சினிமா கலந்த சித்தரிப்பான ரொமான்டிசமான வாழ்வு என்று சொன்னால் அதில் பெரும்பிழை இருக்காது. சினிமா தமிழர்களுக்கான பொழுதுபோக்குச் சாதனம் என்று சொன்னது, அதுவே அவர்களுக்கான அறிவு புகட்டும், அரசியல் புகட்டும், உணர்வு புகட்டும் சாதனமாகி நாட்களாகி விட்டன என்பதால்தான்.
            இப்போது அதற்கான விலக்கம் சமூக ஊடக சாதனங்களால் ஏதோ கொஞ்சம் நடந்து கொண்டிருக்கிறது. வாட்ச அப்பை எடுத்துக் கொண்டால் தமிழ் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு செல்பேசி எண்ணிற்கும் ஒன்றோ, இரண்டோ, அதையும் தாண்டியோ குழுக்கள் இருக்கின்றன.
            சுருக்கமாக என்னை எடுத்துக் கொண்டால் என்னோடு தொடர்பு கொண்டுள்ள 264 செல்பேசி எண்களை உடையவர்களும் ஒரு குழு வைத்திருக்கிறார்கள். அந்த 264 குழுக்களிலும் நான் உறுப்பினராயிருக்கிறேன். இன்னும் ஒரு எண்ணைக் கூடுதலாக இணைத்தாலும் அந்த எண்ணிலிருந்து இன்னும் ஒரு குழு என் வாட்ஸப்பில் உண்டாகலாம். அந்தக் குழுக்களின் மூலம் தங்கள் நோக்கங்களை, இலக்குகளை, தாங்கள் முன்னெடுக்கும் மாற்றங்களை அவர்கள் அந்தக் குழுவின் மூலம் சொல்ல வருகிறார்கள். முன்பைப் போல ஒரு தகவலை, கருத்தை, எண்ணத்தைப் பகிர்ந்து கொள்வதில் தற்போது சிரமம் குறைந்து இருக்கிறது. அந்தச் சிரமம் குறைந்திருந்தாலும் பகிரும் கருத்துகள் ஏற்படுத்தும் பரவலான தாக்கமும் குறைந்திருக்கிறது.
            மேடைப் பேச்சிலிருந்து அண்ணா போன்ற தலைமை உருவானது போல வாட்ஸ்ப்பிலிருந்து, பேஸ்புக்கிலிருந்தோ, டிவிட்டரிலிருந்து உருவாகுவார்களோ? மாட்டார்களோ? என்னவோ!
            பேஸ்புக் இதில் இன்னும் பெரிய ஊடகம். அங்கு ஐயாயிரம் பேர் வரை இணைத்துக் கொள்ள முடிகிறது. விதவிதமான விவாதப் பொருட்கள் காரசாரமாக அங்கு விவாதிக்கப்படுகின்றன. நெடி தூக்கலான விசயங்கள் தொடங்கி, உப்புச் சப்பில்லாத கார சாரமாற்ற விசயங்கள் வரை இங்கே விவாதங்கள் உண்டு.
            பேஸ்புக்கைக் கொஞ்சம் வடிகட்டியது போல இருக்கிறது டிவிட்டர்.
            இன்னும் இன்ஸ்டாகிராம், டெலிகிராம் என்று என்னென்னவோ பகிர்தலுக்கான சாதனங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.
            என்ன ஒன்று... எல்லாம் முடிவில் சினிமா சார்ந்த உரையாடலோடு அல்லது விவாதத்தோடு ஒரு வகையில் நிறைவு பெறுகின்றன. தமிழர்களின் தலையில் பதிந்துள்ள சினிமாச் சிந்தனைகள் இன்னும் மறைந்து விடவில்லை. அது மறையவும் மறையாது. சினிமாவை வைத்தே தமிழர்களால் எதையும் புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் அதுவே அவர்களுக்கான புரிதல் விளக்கச் சாதனம். அச்சாதனம் தலைமுறைத் தாண்டிய தொடர்ச்சியைக் கொண்டுள்ளது. அது ஒரு மரபாக அவர்களின் எண்ண ஓட்டத்தில் கலந்திருக்கிறது. இரத்த ஓட்டத்திலும் கலந்து இருக்கிறது. கூடுதலாக இப்போது அவர்கள் சர்வதேச சினிமாக்களையும் பயன்படுத்துகிறார்கள். சர்வதேச சினிமாக்கள் தமிழ் சினிமாவில் எங்கெங்கு எல்லாம் வந்து போகின்றன பேசுகிறார்கள். அது ஒன்றே நடந்திருக்கும் மாற்றம் எனலாம் என்று நினைக்கிறேன். நாளைக்கும் சினிமாவையே தொடர்வோம்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...