16 Sept 2019

திருவிழாவ தாண்டுன கூட்டம்



செய்யு - 209
            ஊருக்குள்ள கிழக்கால ஓடுற ஒத்த பஸ்ஸூ! அதுவும் அந்த மார்க்கத்துல ஓடுற ஒரே பஸ்ஸூ! அது கவுந்துட்டா எப்படி இருக்கும்? ஊரு சனமெல்லாம் விழுந்தடிச்சு நாட்டியத்தான்குடியை நோக்கி ஓடுதுங்க.
            சுப்பு வாத்தியாரு வூட்டுக்கும் காத்து வாக்குல சேதி வருது. வீட்டுலயே கெடந்த ஒத்த மகன் கோவிச்சுகிட்டு வெளியில போறப்பயா இந்த சேதி வரணும்? போன மவென் அந்தப் பஸ்ல ஏறிப் போயிருந்தான்னா என்னாவுறதுங்ற சந்தேகம் வூட்டுல இருக்குறவங்களுக்கு வருது.
            "சேதி தெரியுங்களா! எட்டாம் நம்பரு பஸ்ஸூ கவுந்துப் போச்சாம். நெட்டுக்குத்தா நிக்குதாம். வாங்க வாத்தியாரே ஒரு எட்டுப் போயி பாத்துட்டு வாரலாம்!" அப்பிடின்னு வந்து நிக்குறாரு தாடி தாத்தா. அவருக்கு இதுக்கு முன்னாடி வூட்டுல நடந்து சங்கதி தெரியாது. எட்டாம் நம்பரு பஸ்ஸூ கவுந்த சங்கதி மட்டும்தான் தெரியும்.
            "எங்கேயோ ஓடிப் போன பயெ! நல்லபடியா திரும்பி வந்த பயெ! ஒண்ணுகெடக்கச் சொல்லி அவனெ எஞ்ஞ ஓட வெச்சியோ! எங்கயோ நல்லபடியா ஓடிப் போயிருந்தாலும் பரவாயில்ல. அந்த எட்டாம் நம்பரு பஸ்ல போயிருக்கக் கூடாது!"ன்னு சுப்பு வாத்தியாரு வெங்குவைப் பார்த்து முணுமுணுத்துக்கிறாரு.
            "அய்யோ! எம் புள்ளே! வூட்டோட கெடந்தாலும் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காதே! இன்னிக்குன்னு பாத்தா எம் வாயில கண்டமேனிக்கு வார்த்தை வாரணும்? நாம்ம ஒத்த ஆளா இந்தக் குடும்பத்துக்குச் சம்பாதிச்சுப் போடுவேமே. அவ்வேம் மனசுல சம்பாதிக்காம உக்காந்து இருக்காங்ற மாரில்ல பேசிப்புட்டேம். பஸ் ஸ்டாப்பிங்கு பக்கமா போயி விசாரிச்சுப் பாப்பேம்!"னு வெங்கு ஒண்ணும் சொலல முடியாம, மனசுல நெனைச்சுகிட்டு அந்தப் பக்கமா ஓடுது. யார கேட்டாலும் இந்த விகடு பயெ எட்டாம் நம்பரு பஸ்ல மட்டும் ஏறலன்னு சொல்லண்ணும்னு அது மாரியம்மன்ல ஆரம்பிச்சி, பொன்னியம்மன், பெரியாச்சி வரைக்கும் வேண்டிக்குது. அது நேரம் பாருங்க! அங்கனப் போயி விசாரிச்சா, ஒவ்வொருத்தரும் அவ்வேன் அந்த பஸ்லதான் ஏறுனாம் அப்பிடிங்கறாங்க. இதென்னடா நம்ம பொல்லாத நேரமா இருக்கேன்னு தலையில அடிச்சுகிட்டு வீட்டுக்கு ஓடியாந்து சேதியைச் சொல்லணும்னு காலு தரையில நிக்காம பறந்து வந்தா வண்டியைக் கெளப்பிக்கிட்டு சுப்பு வாத்தியாரு பின்னால தாடி தாத்தாவை உக்கார வெச்சிகிட்டு அதுக்கு முன்னாடி பறந்து போயிட்டு இருக்காரு.
            நல்ல விதமா சாப்பிடாம கொள்ளாம கெடந்ததுல சுப்பு வாத்தியாரால்ல எழுந்து உக்கார கூட முடியல. அவரு பெத்த புள்ள அந்தப் பஸ்ல போயிருப்பானோ என்னான்னு சந்தேகம் வந்த பிற்பாடு அவரால அங்க உக்கார முடியல. தாடி தாத்தா வேற வந்துருந்தாரா. அதாங்க அவரெ கெளப்பிக்கிட்டு, ஒரு சட்டையை மேலுக்கு மாட்டிகிட்டு டிவியெஸ் பிப்டியை எடுத்துகிட்டுப் பறந்துட்டு இருக்காரு. அப்படி பறந்து போயிட்டு இருக்கிறப்பவே வூட்டுல நடந்த சமாச்சாரத்தையெல்லாம் கண்ணுல தண்ணி வழிய சொல்றாரு. தாடி தாத்தாவுக்கு அதைக் கேட்க கேட்க பொறி கலங்குது. "ன்னா வாத்தியாரே! இப்பிடிச் சொல்றீங்களே! அதெல்லாம் ஒண்ணும் ஆவாது. மனசப் போட்டுக் கொழப்பிக்காம வண்டிய சூதானமா வுடுங்க!" அப்பிடிங்றாரு தாடி தாத்தா.
            வண்டியில போயிட்டு இருக்குற அவங்களோட நெலமை இப்பிடின்னா, இங்கே...
            "ஏட்டி செய்யு! வூட்டைச் செத்தப் பாத்துக்கோடி! ஒம் அண்ணம் என்ன ஆனான்னோ? ஏது ஆனான்னோ? நாம்ம இப்பிடியே ஓடிப் போயி பாத்துட்டு வந்துடறேம்!"ன்னு சொல்லிட்டு வெங்கு கெளம்பப் பார்த்தா, "யய்யே யம்மா! நம்மால வூட்டுல இருக்க முடியாது. நாமளும் வார்ரேம்!" அப்பிடின்னு அடிச்சுப் பிடிச்சுட்டுக் கெளம்புறா செய்யு.
            "ஏம்டி நீயி வேற படுத்துறே! ஒன்னய அழச்சிட்டுப் போயி ஒனக்கு ஏதும் ஒன்னுகெடக்க ஆனா அந்த மனுஷன் நம்மள உசுரோட வுட மாட்டாம்டி. உசுர எடுத்துட்டுதாம் மறுவேல பார்ப்பாருடி. ஏங் கண்ணுல. ஒம் அண்ணனுக்கு ஒண்ணும் ஆயிருக்காது. அவ்வேம் அந்தப் பஸ்லயெல்லாம் போயிருக்க மாட்டாம். சொன்னா கேளு. நல்ல புள்ளையில. வூட்டோட கொஞ்சம் தங்கு. வூடு கட்டுன நேரமே சரியில்லன்னு ஊருல அவனவனும் சொல்லிகிட்டுத் திரியுறானுங்க. இதுல நீயி வேற வந்து... வேணா ஆயி! சொன்னா கேளு. நீயி இரு. ரண்டு நிமிஷந்தாம். ஒரு எட்டுதாம். இப்பிடிங்றதுக்குள்ள போயி அப்பிடிங்றதுக்குள்ள திரும்பிடுறேம். யம் ஆயி தங்கமுல்ல. அடம் பண்ணாம சித்தே வூடு தங்கு!"ன்னு சொல்லிட்டு அதுக்கு மேல செய்யு சொல்லப் போற பதில எதிர்பார்க்காம வெங்கு விழுந்தடிச்சு ஓடுது. செய்யுவுக்கு வீடு தங்க மனசில்ல. தெருவைச் சுத்திப் பாக்குது. தெருவுல ஒரு ஈ காக்கா கூட காணல. எல்லாம் எட்டாம் நம்பரு பஸ்ஸூ கவுந்த சேதி கேட்டதும் அதெப் பார்க்க சிட்டா பறந்திடுச்சுங்க. இதுல இந்தத் தெருகார பயெ விகடு வேற அதுல போயிருக்காங்ற சேதி கெடைச்சதும் அததுக்கும் ஒரு பீதி கெளம்ப கால்நடையாவும், சைக்கிள்ல ஓட்டமாவும் கெளம்பிடுச்சுங்க.
            சுப்பு வாத்தியாரும், தாடி தாத்தாவும் டிவியெஸ்ல போனவங்க நாட்டியத்தாங்குடி வண்டி கவுந்து எடத்த நெருங்க முடியல. கூட்டம்னா கூட்டம் அப்படி அள்ளுது. நம்ம திருவாரூ தேரோட்டத்துல கூட அம்மாம் கூட்டத்தப் பாத்திருக்க முடியாது. பஸ்ஸூ கவுந்ததைப் பார்க்க ஊரு ஊரா திரண்டு வந்திருக்கு. திருவாரூ தேரோட்டாமாவது வருஷத்துக்கு ஒரு தடவே பார்க்கலாம். இப்படி பஸ்ஸூ கவுந்து கிடக்கிறதை வருஷா வருஷமா பார்க்க முடியும்? எப்பயாவது இப்பிடி கவுந்தப்ப பார்த்தாத்தானேங்ற மாரி இருக்கு அங்க கூடுற கூட்டம். இந்தக் கூட்டத்தை வெலக்கி விட்டு பஸ்ஸை நெருங்கிப் போயி பார்க்கணும்னா ஒரு பர்லாங்கு தூரமாவது போயாகணும். ஆனா இங்க நின்னு பாக்குறப்பவே பஸ்ஸோடு பின்னாடி டயருக அந்தரத்துல நல்லா தெரியுது. பஸ்ஸு அப்படியே நெட்டுக்குத்தா நிக்குது. பஸ்ஸோட முன்பக்கம் பூமிய நோக்கிக் கீழேயும், பின்பக்கம் ஆகாசத்த நோக்கி மேலயும் இருக்கு.
            "ன்னா வாத்தியார்ரே! இந்த மாரி பஸ்ஸூ கவுந்து நாம்ம பாத்ததில்ல. எப்பிடி இப்பிடி கவுந்துருக்கேன்னே புரியலயே!" அப்பிடிங்றாரு தாடி தாத்தா. சொன்னவரு அதையுஞ் சொல்லிட்டு, "இத்து வேலைக்கு ஆகாது. வாத்தியார்ரே வண்டிய அப்பிடி ஓரங் கட்டுங்க. கூட்டத்துக்குள்ள புகுந்துதாம் போயாகணும்!" அப்பிடிங்றாரு. சுப்பு வாத்தியாருக்கும் அதுதாம் சரின்னு படுது. டிவியெஸ்ஸை அப்படியே ஓரத்துல ஒரு கருவ குத்துகிட்ட நிப்பாட்டிட்டு ரெண்டு பேரும் கூட்டத்துல புகுந்து புறப்படுறாங்க. கூட்டத்தைத் தள்ளி நெருக்கடிச்சுகிட்டு எப்படியே கிட்டப் போயி பார்த்தா எட்டாம் நம்பரு பஸ்ஸூ கெடக்குற நெலய பார்த்தா ஆச்சரியமா இருக்கு.
            பஸ்ஸூ குளத்தாங்கரையில இருக்குற பனைமரத்துல மோதி அப்படியே ஆளு ஒருத்தன் தலைகீழா நின்னா எப்படி இருக்குமோ அப்படி நிக்குது. அந்த பனைமரம் மட்டும் இல்லேன்னா பஸ்ஸூ அப்படியே சொருவு குத்து வுட்ட மாரி குளத்துல போயிருக்கும். பஸ்ஸோட பாதி பாடி சரிவான குளத்துக் கரையிலயும், பாதி பாடி கரைக்கு மேலயும் அண்ணாந்த கணக்கா ஆகாசத்துல நீட்டிகிட்டு நிக்குது. டிரைவரு சீட்டுக்கு முன்னாடி இருக்குற கண்ணாடி மட்டும்தாம் உடைஞ்சிருக்கு. பஸ்ஸ மேல இழுத்துக் கொண்டாந்துட்டா வேற ஒண்ணும் பெரிசா சேதாரமில்ல.
            "யப்பா! பஸ்ல போனவங்களடோ நெலமைலாம் எப்டியிருக்கு?" அப்பிடின்னு ஒரு கேள்விய அங்க நிக்குறவங்களப் பார்த்துக் கொக்கிப் போட்டு பாக்குறாரு தாடி தாத்தா.
            "யோவ் பெரிசு! அதல்லாம் யாருக்கும் ஒண்ணும் இல்ல. எல்லாம் பஸ்ல முன்ன பின்ன விழுந்ததுல காயம் ஆகிப் போச்சு. செலதுங்க பஸ்ஸூ கவிந்த வேகத்துல மயக்கம் போட்டு விழுந்துடுச்சுங்க. அவ்ளதாம். உசுருக்கு யாருக்கும் எந்த சேதாரமும் இல்ல. ன்னா ஒண்ணு. அத்தனை சனத்தையும் வண்டி கவுந்துக்காம வெளியில கொண்டாறதுக்குள்ளதாம் போதும் போதும்னு ஆயிப் போச்சு!" அப்பிடிங்குது அங்க இருந்த இளந்தாரி செட்டு ஒண்ணு.
            சுப்பு வாத்தியாரு எப்பிடி கேட்பது, என்ன கேட்பது என்று புரியாமல் தடுமாறுன நெலையில நிக்குறதப் பாக்குறாரு தாடி தாத்தா. அவருக்குப் புரிஞ்சிப் போச்சு. நம்ம ஊருக்கார, தெருக்கார ஆளுங்க யாரும் நிக்குறாங்களான்னு சுத்திலும் பார்வைய ஓட்டி விடுறாரு. அப்படி யாரும் அவரு கண்ணுக்குத் தட்டுபடல.
            "வாங்க வாத்தியாரே!" அப்பிடின்னு சுப்பு வாத்தியாரு கையைப் பிடிச்சுகிட்டு நாட்டியத்தான்குடி பெட்டேம் பக்கமா இருக்குற ரோட்டுப் பக்கமா வர்றாரு.
            அங்க நம்ம ஊருக்கார தெரிஞ்ச முகங்கள் ரெண்டு மூணு தட்டுப்படுது. சுப்பு வாத்தியாரு மவன தெரிஞ்ச ஆட்கதான் அவுங்க. அவுங்ககிட்ட நெருங்குனா விசயம் தெரிஞ்சுப் போகும்னு அவங்கள நோக்கி வேக வேகமா நகர்றாரு தாடி தாத்தா. கையில சுப்பு வாத்தியார பிடிச்சப் பிடியோட அவரு போறதைப் பார்க்கிறப்ப வெவரம் தெரியாத பிள்ளைய பாத்துப் பதனமா திருவிழா கூட்டத்துல அழச்சிட்டுப் போறது போல இருக்கு. கூட்டமும்  திருவிழா கூட்டத்த தாண்டுன கூட்டமால்ல இருக்கு. அதுவுமில்லாம சுப்பு வாத்தியாரு இருக்கற நிலமையில அவர தாங்கலா கூப்பிட்டுப் போகலன்னா ஒண்ணு அவரு மயக்கம் போட்டு விழுந்தாலும் விழுந்துடுவாரு. இல்ல கூட்டத்துல காணாம போனாலும் போயிடுவாரு.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...