இட்டிலி எப்போதும் தமிழ்நாட்டுக்கு ஸ்பெஷல்தாம்.
அரசியல் சென்சேஷன்லிருந்து அன்றாட சென்சேஷன் வரை இட்டிலிக்கு இருக்கும் இடம் ஒரு பெரும்
வரலாற்றைக் கொண்டது.
பிழைப்புத் தேடி வெளிநாடு போகுபவர்கள்
மத்தியில், ஒரு இட்டிலிக் கடைப் போட்டால் பிழைத்துக் கொள்ளலாம் என்று எத்தனை பேர்
பிழைத்திருக்கிறார்கள் நம் இன்பத் தமிழ் நாட்டில். இட்டிலிக் கடை போடுவதன் எளிமை அதற்கு
ஒரு காரணம். ஒரு அடுப்பு, ஒரு இட்டிலிப் பானை, ஊற்றுவதற்கு மாவு, சட்டினியோ துவையலோ
இது போதும் ஒரு இட்டிலிக் கடைக்கு. இட்டிலிக் கடை போடும் ஆளே இட்டிலியைச் சுட்டு
எடுத்து, சாப்பிட வருவோர்க்கும் இலையில் எடுத்துக் கொடுத்து, அவ்வபோது சட்டினியையோ
துவையலையோ வைத்து, சாப்பிட்டு முடித்த பின் அவர்கள் தரும் காசை வாங்கிப் போட்டு ஒத்தை
ஆளாய்ச் சமாளித்து விடலாம்.
ஊருக்கு ஓர் இட்டிலிக்கடை ஆத்தா அப்போது
உண்டு. வீட்டில் சுடும் போது வராத சுவை இட்டிலிக் கடை ஆத்தாவின் இட்டிலிக்கு எப்படியோ
வந்து விடும். கையை விரித்துப் பிடித்துக் கொள்ளச் சொல்லி தாமரை இலையில் அப்படியே
மல்லிகைப் பூவைப் போல அந்த இட்டிலியை வைத்து பொட்டுக்கடலை சட்டினியையும், ஒரைப்புத்
துவையலையும் அந்த ஆத்தா வைத்துக் கொடுத்தால் தேவாமிர்தத்தின் சுவை வந்து விடும் அந்த
இட்டிலிக்கு.
ஓர் அவசர கதியில் வீட்டில் சமைக்க முடியாத
நேரங்களில் ஒரு தூக்குப்பொசியை எடுத்துக் கொண்டு போனால் சுடச்சுட இட்டிலியை வாங்கிக்
கொண்டு வந்து காலைச் சாப்பாட்டை ஒரு குடும்பமே முடித்து விடலாம். அப்படித் தூக்குப்பொசியோடு
போகும் நாட்களில் ரெண்டு இட்டிலிகளைக் கூடுதலாக எடுத்துப் போடும் அந்த ஆத்தாவின்
மனசுக்கு ஆயிரம் கொடுக்கலாம்.
கல்லூரிகளில் படிக்கச் சென்ற நாட்களில்
பல நாட்கள் காலையில் சுட்ட இட்டிலியைத்தான் மதியமும் டிபன் பாக்ஸில் எடுத்துக் கொடுப்பார்கள்
நம் கிராமத்து தாய்மார்கள். மதியம் அதைச் சாப்பிடத் திறக்கும் முன்னே ஒரு சலிப்பு தட்டும்.
என் நண்பன் அன்புவுக்கு அப்படியில்லை. அவன் அதை அவ்வளவு ரசித்துத் திறப்பான். அந்த
இட்டிலிகளை ரைஸ் கேக் என்று பெருமிதத்தோடும், புளங்காகிதத்தோடும் சாப்பிடுவான். எப்படி
இது அவனால் முடிகிறது என்று பல நாட்கள் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அவன் அலுக்காமல்
சலிக்காமல், "இது என் அம்மா சுட்டுத் தந்த இட்டிலி!" என்று பெருமையாகச் சொல்லியிருக்கிறான்.
அவன் அம்மா மேல் அவ்வளவு பாசமாய் இருந்தான். அதை விட அவன் அம்மா சுட்டுத் தந்த இட்டிலி
மேல் அவ்வளவு பிரியமாய் இருந்தான். அவனுக்கு இட்டிலியைப் பெருமைபடுத்த தெரிந்திருக்கிறதே
என்று நான் அவன் மேல் பொறாமைப்பட்டிருக்கிறேன்.
என் மகளுக்கும் இட்டிலி என்றால் அவ்வளவு
பிடித்திருக்கிறது. ஓட்டலுக்குச் சென்றால் இட்டிலிதான் சாப்பிடுகிறாள். சப்பாத்தி,
பூரி என்று வேறு எதையாவது சாப்பிடு என்றாலும் இட்டிலிதான் அவள் ஒரே சாய்ஸ். இட்டிலி
ஏன் அவளுக்கு அவ்வளவு பிடித்திருக்கிறது என்று யோசித்துப் பார்த்து அது அப்படித்தான்
என்று இப்போது விட்டு விட்டேன்.
வெள்ளைப் பொன்னி என்ற ஓர் அரிசி வகை இருக்கிறது.
அதில் நீங்கள் இட்டிலிக்கு மாவரைத்துச் சாப்பிட்டு இருக்கிறீர்களா? அவ்வளவு ருசியாக
இருக்கிறது அந்த அரிசி மாவில் சுடும் இட்டிலி. அதை விட அந்த மாவில் சுடும் தோசை இன்னும்
ருசியாக இருக்கிறது. தொட்டுக் கொள்வதற்கு எதுவுமில்லாமல் தோசையைச் சாப்பிட்டாலும்
சாப்பிட்டு விடுவீர்கள். அவ்வளவு ருசி.
சோற்றுக்கென்று ஒரு அரிசி, இட்டிலிக்கென்று
ஒரு அரிசி என்று இருவகை அரிசிப் பாராம்பரியத்தை நம் தமிழக மக்கள் அண்மை காலமாக உருவாக்கி
வைத்திருக்கிறார்கள் இல்லையா! இந்த வெள்ளைப் பொன்னியை வாங்கினால் சோற்றிற்கும் அஃதே,
இட்டிலிக்கும் அஃதே என்று ஒரே அரிசியாக
வைத்துக் கொள்ளலாம்!
*****
No comments:
Post a Comment