16 Sept 2019

மனமற்ற நிலைக்கான ஓர் எளிய வழி



            புரிந்து கொள்ளுதல்,
            புரிந்து கொண்டதை ஏற்றுக் கொள்ளுதல்,
            ஒரு சின்ன சிரிப்பு. அவ்வளவுதான் வாழ்க்கை.
            வாழ்க்கை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சிக்கலாக இருக்கிறது என்பது உண்மை. அது புரிந்து கொள்வதற்கு அவ்வளவு எளிமையாக இருக்கிறது என்பதும் உண்மை. ஒரே நேரத்தில் இரண்டு முரண்கள் உண்மையாக இருக்க முடியாது என்று தோன்றலாம். அது தோற்றம்தான். மனதின் தோற்றம்.
            மனதின் தோற்றம்தான் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்குச் சிக்கலாகவோ, எளிமையாகவோ காட்டுகிறது.
            வாழ்க்கைச் சிக்கலாக இருப்பதாகத் தோன்றினால் அது மனதின் அடையாளம். எளிமையாக இருப்பதாகத் தோன்றினால் அதுவும் மனதின் அடையாளம்தான். மனம் எப்படி இருக்கிறது என்பதுதான் வாழ்க்கைப் பற்றிய பார்வைக்கான குறியீடு.
            சிக்கலான மனதால் எளிமையாகப் பார்க்க முடியாது. எளிமையான மனம் சிக்கலாகப் பார்க்காது.
            வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அது அப்படித்தான் இருக்கிறது. அதை மனம் கொண்டு நாம் பார்க்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளும் போது, வாழ்க்கைக்கு நாம் ஓர் அடையாளத்தை வழங்குகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அது நாம் நம்மையறியாமல் உண்டாக்கிக் கொண்ட அடையாளம். இதைப் புரிந்து கொள்ளும் போது முதல் மாற்றம் உண்டாகிறது. இது அப்படித்தான் உண்டாகியிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளும் போது இரண்டாவது மாற்றம் உண்டாகிறது. இப்படி ஓர் அபத்தத்தை உண்டாக்கிக் கொண்டு அதையா சாசுவதம் என்று நம்பிக் கொண்டிருந்தோம் என்பதை நினைக்கும் பாது ஒரு சின்ன சிரிப்பு நம்மை அறியாமலே உண்டாகும் பாருங்கள். மூன்றாவது மாற்றம் அந்த இடத்தில் உண்டாகிறது.
            அதற்கு மேல் வாழ்க்கையைச் சர்வ சாதாரணமாகப் பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள். நாம் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் பார்வையின் அடிப்படையில் ஒரு கற்பிதத்தை உருவாக்கிக் கொள்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளும் போதும், அந்த மனதின் சிறுபிள்ளைத் தனத்தைப் புரிந்து ஏற்றுக் கொள்ளும் போதும், அப்போது நம்மையறியாமல் உண்டாகும் சிரிப்பை ரசிக்கும் போதும் மனமற்ற நிலையை அடைந்து விடுகிறோம். அதுவரை கனத்த எடையோடு இருந்த மனம் லேசாகி விடும்.
            மனம்தான் எல்லாவற்றையும் இதுநாள் வரைப் பார்த்துக் கொண்டிருந்தது என்ற மனதை நாம் இப்போது பார்த்து விடுகிறோம். உண்மை வெளிவந்து விட்டது. உண்மை தெரிந்த பின் விடுதலைதான் இல்லையா!
            மேலும் இது குறித்த உங்களின் ஐயப்பாடுகளுக்கு நீங்கள் எனக்கு எழுதலாம்! அப்படி எழுதினால் அது நீங்களா? உங்கள் மனமா?
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...