செய்யு - 214
விகடு பயெ டீ, காபி குடிக்கிறதை நிறுத்திப்
பல நாளாச்சு. இப்போ கையில டீ கிளாஸூம், சமோசாவும் வந்ததும் யோசனையா இருக்கு அவனுக்கு.
இதைச் சாப்பிடுவோமா, வேணாமான்னு ரெட்டை மனசோடு, ரெண்டையும், ரெண்டு கண்களால் மாத்தி
மாத்திப் பாக்குறான். காலையில ஒரு வேகத்தில சாப்பிடாமல் கிளம்புனவனுக்கு இப்போ பசி
வேற தாங்க முடியல. வயித்த யாரோ போட்டு கிள்ளுறது போல இருக்கு. தொண்டையில கெண்டை
பெரளுறது போல வேற இருக்கு.
"டீயையும், சமோசாவையும் கொடுத்தா
ரண்டையும் கொடுக்குற வேகத்துல காலி பண்ணிப்புட்டு அடுத்த டீயும், சமோசாவும் எப்போ
கொடுப்பீங்கன்னு பாக்கணும் பிரதர். இப்படி கையில வெச்சுகிட்டு அழகு பாத்துட்டு இருக்க
படாது. நாம்ம பிடுங்கித் தின்னுடுவேம் பாத்துக்குங்க!" என்கிறார் விகடுவைப் பார்த்து
வெங்கடேசன்.
"பயப்படாம சாப்புடுங்க சார்! மேக்சிமம்
பேதிதாங் போவும். வேற ஒண்ணும் பண்ணிடாது." என்று சொல்லி விட்டுச் சிரிக்கிறார்
லெனின். எதைச் சொன்னாலும் அதைச் சொல்லிவிட்டு ஒரு சிரிப்புச் சிரிக்கிறார் லெனின்.
அவனோட தயக்கம் இப்போ விலகிப் போவுது.
பசி டீ கிளாஸை வாய்க்கு நேரா தூக்க வைக்குது. டீ கிளாஸை அப்படியே வாய்க்கு பக்கத்துல
கொண்டு போய் ஓர் இழுப்பு இழுத்துக்கிறான். டீயில போன்விட்டாவோ, பூஸ்ட்டோ போட்ட
வாசம் வருது.
"இது டீயா? பூஸ்ட்டா?" என்கிறான்
விகடு.
"அதுவா சார்! நம்ம மாஸ்டர் டீ போட்டா
சாதாரணமா குடிக்க முடியாது. அதாங்க டீயில லைட்டா பூஸ்ட்டோ, போனிவிட்டாவோ கலந்து
விட்டு நம்மள குடிக்க வெச்சிட்டு இருக்கார். நீங்க ஒண்ணும் கண்டுக்காம ஒரே கல்ப்பா
அடிச்சிடுங்க!" என்று சொல்லி விட்டு அதுக்கும் ஒரு சிரிப்பு சிரிச்சிக்கிறார்
லெனின்.
விகடு ஒரு மிடறு டீ குடிக்கிறது, கொஞ்சம்
சமோசாவைக் கொஞ்சம் வாயில வெச்சிக் கடிச்சிக்கிறதுன்னு மாத்தி மாத்தி பண்ணிட்டு இருக்கான்.
அவனோட பசிக்கு அது அமிர்தம் போல இருக்கு. பசி நேரத்துல எது கிடைச்சாலும் அது அமிர்தாம்
இல்லையா! அதுவும் இல்லாம இந்த டீக்கும், சமோசாவுக்கும் இன்னும் ரெண்டு நாளைக்குக்
கூட பசி தாங்கும்னு நெனைச்சுக்குறான். நாட்டுல டீக்கடையும், டீக்கடையில சமோசாவும்
ஏன் அதிகமா இருக்குங்ற விசயம் இப்போ அவனுக்குப் புரியுது. நாட்டுல பசியோட இருக்கறவங்களோட
எண்ணிக்கை அதிகம் இல்லையா. அவங்க கொறைஞ்ச காசுக்குப் பசிய ஆத்திக்கணும்னா ஒரு டீயும்,
சமோசாவும் போதும். ரொம்ப நேரத்துக்குப் பசி தாங்கும்ல.
"அப்புறம்! வெகடு பிரதருக்கு ஒரு
அக்கெளண்ட் ஆரம்பிச்சு டிரேட் பண்ண விட்டுடுவோமா?"ங்றார் வெங்கடேசன்.
நல்ல விதமாத்தான் சாப்பிட்டுட்டு இருந்தான்
விகடு. ஆனா இப்போ அவனுக்குப் புரை ஏறுது.
"ஏன் சார்! சின்ன புள்ளய பயமுறுத்துறீங்க?
பாருங்க புரை ஏறுது!" என்று அதற்கும் ஒரு சிரிப்புச் சிரிக்கிறார் லெனின்.
"என்ன பிரதர்! ஆயிரம் இருந்தா போதும்
அக்கெளண்ட் ஆரம்பிச்சி டிரேட் பண்ண ஆரம்பிச்சிடலாம்!" ங்றார் வெங்கடேசன்.
"நானே வேலை எதாவது கிடைக்குமான்னு
திருவாரூருக்கு வந்திருக்கேன்ங்கய்யா! எங்கிட்ட அவ்ளோ பணம்லாம் கிடையாது!" என்கிறான்
விகடு.
"ஓ! நீங்க அன்எம்ப்ளாய்டு பார்ட்டியா?
நல்லதாப் போச்சு. மிஸ்டர் லெனின்! ஆபிஸ்ல ஆபரேட்டர் பத்தலன்னு சொல்லிட்டு இருக்கேன்ல!
எப்பதாம் இன்னொரு ஆபரேட்டர் போடுவீங்க?
டிரேட் பண்ற எங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு? பிரதர ஒரு ஆபரேட்டரா போட்டுக்குங்க!"
என்கிறார் வெங்கடேசன்.
"நாங்க என்ன ஆபரேட்டர் போட மாட்டேம்னா
சொல்றோம்? போடுற ஆபரேட்டர்ங்க நீங்க பண்ற அலம்புல சொல்லாம கொள்ளாம ஓடிக்கிறாங்க.
ஒங்களுக்குகிட்ட தங்கித் தாக்குப் பிடிச்ச ரண்டு ஆபரேட்டரு மட்டும் இருக்காங்க. அதான
சார் மேட்டர்!" என்று அதற்கும் சிரிக்கிறார் லெனின்.
"அப்போ பிரதருக்கு வேல ரெடிதானே!"
என்கிறார் வெங்கடேசன்.
"தொண்டாமுத்தூர் ஹெட் ஆபீஸ்ல ஒரு
வார்த்தைக் கேட்டுக்கணும்ல சார்!" என்கிறார் லெனின்.
"ஒடனே கேளுங்க! அத விட வேற ன்னா வேல?"
லெனின் விகடுவிடம் படிப்பைப் பற்றி விசாரிச்சுகிறார்.
அவருக்குத் திருப்தியா படுது. அப்படியே ஹெட் ஆபீஸ்க்கு போன் போட்டு பேசுறார். பேசிட்டு,
"ஓ.கே. டன் சார்!" அப்பிடிங்றார்.
"மன்த்லி சேலரி பைவ் தெளசண்ட். நீங்க
ஒர்க் பண்றத வெச்சி இன்சென்டிவ், போனஸ்லாம் தனி. ஓ.கே.தானே?" என்கிறார் லெனின்
விகடுவைப் பார்த்து.
"இந்த வேலை..." என்றபடி இழுக்குறான்
விகடு.
"ஒண்ணும் பயப்படாதீங்க. ரண்டு நாள்தான்.
என்னா ரெண்டு நாள்? ரெண்டு நிமிசம்தான். பிராக்டீஸ் ஆயிடுவீங்க. அப்புறம் நீங்களே ஒரு
ஆபீஸ் போட்டு புரோக்கர் ஆயிடலாம். அவ்வளவுதாம் சார் இதுல மேட்டர்!" என்கிறார்
லெனின்.
"பிரதர நடுவுல உட்கார வெச்சி இன்னிக்கே
வேலய ஆரம்பிங்க!" என்கிறார் வெங்கடேசன்.
வரிசையா மூணு டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்கள்
அங்க இருக்கு. இடது பக்கம் ஒரு பெண்ணும், வலது பக்கம் ஓர் ஆணும் ஆபரேட்டராய் உட்கார்ந்திருக்கிறார்கள்.
அவங்க ரெண்டு பேரச் சுத்தி ப்ளாஸ்டிக் நாற்காலியில நாலஞ்சு பேரு உட்கார்ந்துகிட்டு
இதெ வாங்குங்க, அதெ வித்துடுங்கன்னு ஸ்டாக்கோட பேரு சொல்லி ஆர்டர்கள போட்டுகிட்டே
இருக்காங்க. நடுவுல இருக்குற டெஸ்க்டாப்ல லெனின் எப்பொப்பலாம் ப்ரீயா இருக்காரோ அப்பப்பல்லாம்
அவரும் உட்கார்ந்து அவ்வபோது ஆர்டர் போடுவார் போல இருக்கு. அவர்தான் இந்த ஆபீஸ்க்கு
மேனேஜர். இப்போ அந்த எடத்துல விகடுவைக் கொண்டு போயி உக்கார வைக்கிறார். எப்படி ஆர்டர்
போடணுங்றதைச் சொல்லிக் காட்டுறார்.
"வீசெவன் சார்! ஒங்க அக்கெளண்ட்ல
ஒரே ஒரு ஸ்டாக்கைப் பையிங் பண்ணி, செல்லிங் போட்டு லைவ் பிராக்டிகல் பண்ணி விட்டுடறேன்
சார்!" என்கிறார் லெனின்.
"தாராளமா பண்ணுங்க. பிரதருக்குப்
பண்ணாம யாருக்குப் பண்ணப் போறேன்!" என்கிறார் வெங்கடேசன்.
கம்ப்யூட்டரோட கீ போர்ட்ல ஆர்டர் போட
எத அழுத்தணும், ஸ்டாக் கோடை கொண்டு வர்றததுக்கு என்ன பண்ணும், பையிங், செல்லிங் போடுறதுக்கு
என்னென்ன பண்ணணும்னு சொல்லிட்டு, ஆர்.என்.ஆர்.எல். அப்பிடிங்ற ஸ்டாக்கை விகடுவை விட்டு
பையிங் போட வைக்கிறார் லெனின். அவன் அப்போ அந்த ஸ்டாக் டிரேட் ஆகிக் கொண்டிருக்கும்
எழுபத்து ரெண்டு ரூவா இருபது பைசாவுக்குப் ஒரு ஸ்டாக்கைப் பையிங் போட்டதுமே அந்த ஸ்டாக்
எழுபத்து ரெண்டு ரூவா எழுபது பைசாவுக்குப் போவுது. உடனே செல்லிங்கும் போட வைக்கிறார்
லெனின்.
"வீசெவன் சார்! பிப்டி பைசே பிராபிட்!
ஆள தயாரு பண்ணியாச்சு. இனுமே நீங்க இங்க இவர்கிட்டயே டிரேட் பண்ணிக்கலாம்." என்று
வெங்கடேசனைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறார் லெனின். அப்படியே விகடுவைப் பார்த்தும்,
"என்னா வேல செம ஈஸியா இருக்குல்ல. அவ்வளவுதான் வேல. ஆனா ஆளாளுக்கு எல்லாரும் ஒரே
சமயத்துல சேர்ந்துகிட்டு ஆர்டர் போடச் சொல்வாங்க பாருங்க அப்பதாம் ஏன்டா இந்த வேலயில
சேந்தோம்னு இருக்கும். பரவாயில்ல. அதயும் சமாளிச்சுக்கலாம் இல்ல." என்கிறார்.
விகடுவுக்கு இந்த வேலை கிடைச்சது என்னவோ
கனவு கண்டு கனவுல முழிச்சது போல இருக்கு. நடக்குறது கனவா? நிசமா?ன்னு புரியாம குழப்பமா
இருக்கு. நாட்டுல அவனவனும் வேலை கெடைக்குறதுக்கு எவ்ளோ கஷ்டப்படுறாங்க. அப்படி இருக்குறப்ப
இப்படியா அதுவா தேடி வந்தது போல ஒரு வேலைக் கெடைக்கும்னு யோசிச்சு யோசிக்கு ஒரு
விடை கண்டுபிடிக்க முடியாத ஆள போல கம்ப்யூட்டரோட ஸ்கீரினைப் பார்க்கறான். அங்க ஸ்டாக்குகளோட
வெலை நொடிக்கு நொடி மாறிகிட்டே இருக்கு. விலை ஏறுனா அதோட நிறம் பச்சையாவும், விலை
இறங்குனா அதோட நிறம் சிவப்புமா மாறிகிட்டே இருக்கு. பச்சையும், சிவப்பும் ஓடி பிடிச்சு
விளையாடுறது போலவே இருக்கு அதைப் பார்க்கையில.
"வாழ்க்கையில சில விசயங்க என்னதான்
முயற்சி பண்ணினாலும் இழுத்துகிட்டே போவுது. சில விசயங்க முயற்சி பண்ண ஆரம்பிக்கிறதுக்கு
முன்னாடியே தேடி வந்து சேருது. இதை எப்படிப் புரிஞ்சிக்கிறதுன்னு தெரியலயே. மெட்ராஸூக்குப்
போயி எவ்வளவோ முயற்சிப் பண்ணியும் சினிமாவுக்குப் பாட்டெழுதுறது முடியாமலே போயிடுச்சி.
இங்க திருவாரூருக்கு வந்து வேலை தேட ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அதுவாவே ஒரு வேலை தேடி
வருது. வாழ்க்கையில இப்படியும் சில விசயங்கள் இருக்கு. அப்படியும் சில விசயங்கள் இருக்கு.
எதையும் ஒண்ணு பண்ண முடியாது போலருக்கு. இந்தப் பூமிக்கு மட்டுமா வடதுருவம், தென்துருவம்னு
ரெண்டு எதிரெதிர் துருவங்கள் இருக்கு? இந்தப் பூமியில வாழுற மனுஷனுக்கும்தாம் இப்பிடி
ஒவ்வொரு விசயமும் எதிரெதிரா ரெண்டு துருவங்களா இருக்கு. திடீர்னு நல்லது நடக்குறதும்,
திடீர்னு கெட்டது நடக்குறதும், நெனைச்சது நடக்காமப் போறதும், நெனைக்காதது தானா நடந்து
போறதும்னு இந்த வாழ்க்கையே துருவ வாழ்க்கைதாம்! இந்த ரெண்டு துருவங்களுக்குள்ளதாம்
மனுஷன் இருதலை கொள்ளி எறும்புன்னு சொல்லுவாங்க இல்ல அது போல சந்தோஷப்படவும் முடியாம,
துக்கப்படவும் முடியாம மாறி மாறி அல்லாடிட்டு இருக்கணும் போலருக்கு!" இப்படியும்
ஒரு நெனைப்பு ஓடுது விகடுவோட மனசுக்குள்ள.
*****
No comments:
Post a Comment